Thursday, May 12, 2016

சிறுமலை – ஒரு த்ரில் அனுபவம்-பகுதி-1

 சிறுமலை.....

கோடை விடுமுறைப் பயணத்தில் இந்த ஆண்டு திண்டுக்கல் 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிறுமலைக்கு சென்று வரலாம் என்று முடிவு செய்தோம். சென்ற ஆண்டு கொடைக்கானலும், அதற்கு முந்தைய ஆண்டு ஏற்காடும் சென்று வந்தோம். அதனால் சிறுமலை பற்றிய தகவல்களை இணையத்திலிருந்து சேமித்துக் கொண்டோம். இயற்கையை ரசித்து அங்கே நாள் முழுவதும் அமர்ந்து இளைப்பாறி விட்டு வரலாம் என்பது எங்களது இலக்கு..

காலை 6 மணிக்கு திருச்சியிலிருந்து குடும்பத்துடன் காரில் புறப்பட்டோம். முந்தைய நாள் நல்ல மழை பெய்திருந்ததால் சில்லென்ற குளிருடன் எங்கள் பயணம் துவங்கியது. திருச்சியிலிருந்து 2 மணி நேரத்தில் திண்டுக்கல்லை சென்றடையலாம். எங்கள் ஓட்டுனர் கார்த்திக் வாகனத்தினை மிகவும் லாவகமாகச் செலுத்த, எங்கள் பயணம் சுகமாக இருந்தது. காலை 8 மணிக்கு திண்டுக்கல்லை சென்றடைந்தோம்.  நாங்கள் நெடுஞ்சாலையிலிருந்து திண்டுக்கல் நகருக்குள் செல்லும் சாலையில் நுழைந்து ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் சிறுமலை செல்லும் வழி கேட்டோம். நகருக்குள் சென்று நத்தம் செல்லும் சாலை வழியே செல்ல வேண்டும் என்பதைக் கேட்டுக் கொண்டு திண்டுக்கல் நகருக்குள் நுழைந்தோம். காலை எட்டு மணிக்கும் திண்டுக்கல் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.

நத்தம் சாலையில் ஒரு தேநீர் கடையில் வாகனத்தினை நிறுத்தி, தேநீர்/காப்பி குடித்து, மீண்டும் ஒரு முறை சிறுமலைக்கான வழியைக் கேட்க, அவர் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சிறுமலை பிரிவு வரும் அங்கிருந்து இடது புறம் திரும்பினால் சிறுமலை செல்லும் பாதை வரும் என்று சொல்ல, அங்கிருந்து சிறுமலைக்கு புறப்பட்டோம். எங்கள் ஓட்டுனர் கார்த்திக்குக்கு சிறுமலை என்ற ஊர் திண்டுக்கல் அருகே இருக்கிறது என்பதே நாங்கள் சொல்லி தான் தெரியும் என்றார்!

கொண்டை ஊசி வளைவுகளில் ஒன்று.....

18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது சிறுமலை. கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் இந்த மலை அமைந்துள்ளது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் கேரளா சென்றிருந்த போது அங்கே பொன்முடி என்ற மலை வாசஸ்தலத்துக்கு சென்ற அனுபவம் நினைவில் வந்தது. அதுவும் 21 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட சிறு மலை வாசஸ்தலம் தான். சரி சிறுமலைக்கு வருவோம்.

கொண்டை ஊசி வளைவுகளை ஒவ்வொன்றாக கடந்து கொண்டும் இயற்கையை ரசித்துக் கொண்டும் சிறுமலைக்கு வந்து சேர்ந்தோம். 17வது கொண்டை ஊசி வளைவில் ஒரு வாட்ச் டவர்இருக்கவே, நாங்கள் வண்டியிலிருந்து இறங்கி படிகள் ஏறி டவரிலிருந்து இயற்கையை ரசித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். வழியெங்கும் பெயர் தெரியாத மலர்கள் பலவும், பலா மரங்களும், தேக்கு மரங்களும் காணவே கண்கொள்ளாக் காட்சி!

சிறுமலையில் பழையூர், புதூர் என்று இரு இடங்களும், அந்த கிராமத்து மனிதர்களும் தான். ஊரின் மக்கள் தொகை 8000 என்பது தகவல். கிராமத்து மனிதர் ஒருவரிடம், சுற்றிப் பார்க்க இங்கு என்ன உள்ளது என்று விசாரிக்க, அவர் சிவன் கோவில் ஒன்றும் படகுத் துறையும் தவிர வேறு ஒன்றும் பெரிதாக இல்லை என்றார். நாங்களும் ஓரளவு இந்த தகவல்களை தெரிந்து வைத்திருந்ததால் கோவிலுக்கு சென்று வந்து காலை உணவை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். இங்கு ஹோட்டல்கள், கடைகள் என்று வியாபார நிறுவனங்கள் இருக்காது என்று தெரிந்ததால் உணவு மற்றும் தண்ணீர் கொண்டு வந்திருந்தோம்.

கோவில் செல்லும் முன்னர் எங்கள் எல்லோருக்கும் முக்கிய வேலை ஒன்று இருந்தது. காலையில் வீட்டிலிருந்து புறப்பட்ட எங்களுக்கு சில்லென்ற காற்றும், வண்டியின் குலுக்கலும் சேர்ந்து இயற்கை அழைப்பிற்காக ஒரு இடம் கிடைக்காதா என்று தேட வேண்டியிருந்தது. கோவில் செல்லும் வழியில் அங்கே இருந்த பெண்மணி ஒருவரிடம் விசாரிக்க, அவர் புதிதான ஒரு விஷயத்தை கேட்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு, இங்கு அதெல்லாம் இல்லை.. மலையடிவாரத்தில் கோவில் இருக்கு அங்கே கேட்டுப் பாருங்க என்றார். சரி! அங்கே போய்க் கொள்ளலாம் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டோம்!!

சிறுமலை வாழைப்பழம்..... எடுத்துக்கோங்க....

சிறுமலைப் பழம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அளவில் சின்னதாக இருந்தாலும், மிகவும் ருசியாக இருக்கும் என்று தோன்றிய அந்த பழத்தை பற்றி கேட்டதும், அந்த வீட்டு பெரியவர் இரண்டு பழங்களைத் தந்து சாப்பிடச் சொன்னார். நாங்கள் எல்லோரும் பகிர்ந்து உண்டோம். மிகவும் சுவையாக இருந்தது. விலையை கேட்டவுடன், கோவிலுக்கு போயிட்டு வாங்க தரேன் என்றார். சரியென்று சொல்லி, கோவிலை நோக்கி செல்லத் துவங்கினோம்.

சிவசக்தி ரூபிணி.....

பத்து நிமிட தூரத்தில் அகத்தியர் சிவசக்தி பீடம் என்ற தகவல் பலகை எங்களை வரவேற்றது. சிறிய கோவிலும், வெளியே நவக்கிரகங்களும் காணப்பட்டன. அக்கோவில் இருப்பது வெள்ளிமலை எனும் சிறிய மலையில் அடிவாரத்தில்.  வெள்ளிமலையின் கதையைப் பார்க்குமுன்னர், அடிவாரத்தில் இருக்கும் சிவசக்திரூபிணியை தரிசித்து விடுவோம்.  பூசாரி நமச்சிவாய என்ற நாமத்தை சொல்லி தீபாராதனை காட்ட நிதானமாக தரிசித்தோம். இந்த கோவிலில் வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு ஒன்று உள்ளது. அதாவது லிங்கம் தனியாகவும் அம்பாளை தனியாகவும் தரிசித்திருப்போம். ஆனால் இங்கு லிங்கத்தின் உள்ளே அம்பாள் வீற்றிருக்கிறாள். சிவசக்தி ரூபிணி! தரிசனத்தை முடித்துக் கொண்டு உணவை முடித்துக் கொண்டு அப்படியே ஊரை சுற்றி வந்து இளைப்பாறலாம் என்று நினைத்தோம்.

ஆனால் அந்த பூசாரி, பத்து நிமிட நடையில் வெள்ளிமலை உச்சி வந்து விடும். அங்கே வெள்ளிமலை நாதராக ஈசன் அருள்பாலிக்கிறார். அவரையும் தரிசனம் செய்து விட்டு வாருங்கள். இங்கு நாள் முழுவதும் அன்னதானம் செய்கிறோம். சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்றார். வந்தது வந்து விட்டோம். பத்து நிமிடம் தானே தரிசித்து விட்டே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அவரிடமும் என்னவர் எங்களுக்காக பாத்ரூம் விசாரிக்க, அவரோ, இன்னும் இந்த கிராமம் அந்தளவு முன்னேறவில்லை என்றார். அட ராமா!!!

வெள்ளிமலை வரலாறு:

வெள்ளிமலை..... இந்த மலையின் உச்சிக்கு தான் செல்லப் போகிறோம்...

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை புதூர் அஞ்சல், அகஸ்தியர்புரம் எனும் கிராமத்தில் இருக்கிறது இந்த வெள்ளி மலை. இராமயண யுத்தம் நடைபெற்ற காலத்தில் சஞ்சீவி மலையை ஆகாய மார்க்கமாக ஹனுமன் எடுத்துச் சென்றபோது மலையின் ஒரு சிறு பகுதி இங்கே விழுந்ததாகவும், அதனால் இவ்விடம் சிறுமலை என்று அழைக்கப்படுவதாகவும், மேலும் அகத்திய மாமுனி இம்மலையில் தங்கி சிவபெருமானை வழிபட்டதால் இவ்விடம் அகத்தியர்புரம் என்று அழைக்கப்படுவதாகவும் நம்பிக்கை.

அகத்தியர் காலத்தில் இந்த மலை முழுவதுமே வெள்ளியாக இருந்ததாகவும் கலியுகத்தில் இப்படி வெள்ளியாக இருந்தால் மக்களால் சூரையாடப்படும் என்பதற்காகவே அகத்தியர் தன் தவப்பயனால் வெள்ளிமலையை கல்லாக உருமாற்றியதாகவும் சொல்கிறார்கள். இன்றும் வெள்ளிமலை வெள்ளையான நிறத்தில் காட்சி அளிக்கிறது.

வெள்ளிமலை உச்சி நோக்கிய எங்கள் பயணம் எப்படி இருந்தது என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன். சரியா?

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்

12 comments:

 1. பயணம் அருமையாகப்போய்க்கொன்டிருக்கிறது. புகைப்படங்களும் அருமை! தொடருங்கள் ஆதி!

  ReplyDelete
 2. மிகவும் அழகான பதிவு. சிறுமலை வாழைப்பழம் எனக்கு மிகவும் பிடித்தமானதோர் ஐட்டம். நம்மூர் பத்மா பழமுதிர்ச்சோலையில் அடிக்கடி வாங்கி வருவேன். ஒரு பழமே ரூ. 5 அல்லது 6 என்பார்கள். ஒரு டஜன் ரூ. 60 முதல் 70 வரை ஆகும். மிகவும் டேஸ்டாக இருக்கும். பழத்தை விட அதன் தோலி மிகவும் வெயிட்டாக இருக்கும்.

  அதனால் இங்கு பதிவினில் காட்டியுள்ள அந்த மூன்று நான்கு சீப்புக்களையும் நானே எடுத்துக்கொண்டு காலி செய்துவிட்டேன். :)

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. சிறுமலை போனதில்லை. தங்கள் பதிவு ஆசையை உண்டாக்கிவிட்டது. வெள்ளிமலைக்கு வரக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 4. நானும் போனதில்லை.. போக ஆசை வந்து விட்டது

  ReplyDelete
 5. இன்னும் கொடைக்கானலே பார்க்கலை. சிறுமலைக்குப் போக யோசனையாவும் இருக்கு! அதான் கழிவறைப் பிரச்னை இருக்குங்கறீங்களே! :) அதான் நமக்கு ஒத்து வராது! :)

  ReplyDelete
 6. மதுரையிலே குழந்தையா இருக்கிறச்சே நிறைய சிறுமலைப்பழம் சாப்பிட்டது. இப்போ வர பழங்களிலே அந்த ருசி இல்லை. இங்கேயும் மலைப்பழம்னு சொல்லிக் கொஞ்சம் பெரிசாக் கிடைக்குது. ரொம்பவே விபரம் தெரிஞ்சவங்க சம்பந்தி வீடுகளுக்குப் போகும்போது வாங்கும் பழங்களில் மலைப்பழத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்கிப் போவாங்க. மலைப்பழம் இல்லைனா மற்றப் பழங்கள்னு வாங்குவாங்களே தவிர பூவன் பழம் வாங்கிட்டே போகமாட்டாங்க. பாவம் பூவன் பழம்! :)

  ReplyDelete
 7. சிறுமலை, வெள்ளிமலை - இதுவரை போனதில்லை. கேள்விப் பட்டதுதான். அடுத்த பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

  ReplyDelete
 8. மலை உச்சிக்கு சிரமப் பட்டு போய் ,பொட்டலில் இருக்கும் லிங்கத்தைப் பார்த்து ஏமாந்து இருப்பீர்கள் !
  (வாழைப்)பழம் பெருமை வாய்ந்த இடம்தானே தவிர ,போகிறவர்களுக்கு எந்த வசதியும் அங்கில்லை !

  ReplyDelete
 9. பழனி பஞ்சாமிருதம் மிகவும் பாபுலரானதற்குக் காரணம், அதில் சிறுமலை வாழைப்பழம் சேர்க்கப்படுவதால்தான். இப்போதும் சிறுமலை வாழைப்பழம் சேர்க்குமளவிற்கு வாழைப்பழம் நன்றாக விளைகிறதா, அல்லது சிறுமலை வாழைப்பழம் என்று சொல்லிவிட்டு, கதலியிலிருந்து, கிடைக்கிற வாழைப்பழம் எல்லாம் போடுகிறார்களா என்று தெரியவில்லை.

  ReplyDelete
 10. சிறுமலைப் பயணத்தை விவரித்த விதம் அழகு!..

  வாழ்க நலம்..

  ReplyDelete
 11. சிறுமலை வாழைப்பழம் ஊரில் விற்பார்கள்... வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன்...
  சிறுமலை சென்றதில்லை...
  நத்தம் அருகிலா... பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 12. நான் சிறுமலையில் தான் வசித்துக் கொண்டிருக்கின்றேன்.இந்த பதிப்பை இன்று தான் பார்த்தேன்.நன்றாக உள்ளது.முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்பொழுது நிறைய வசதிகள் வந்து விட்டது.so many resorts and bungalows are available now.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…