Friday, May 13, 2016

சிறுமலை – ஒரு த்ரில் அனுபவம்-பகுதி-2

சிறுமலை....

திண்டுக்கல் அருகே இருக்கும் சிறுமலை சென்றபோது எங்களுக்குக் கிடைத்த அனுபவம் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். இதோ அனுபவம் தொடர்கிறது.

கரடு முரடான மலைப்பாதை....
    
வெள்ளிமலை நாதரை நோக்கிய எங்கள் பயணம் துவங்கியது. கரடு முரடான மண் சாலை, முதல் நாள் மழை பெய்த சேறும் சகதியுமாக இருக்க, அதில் நடக்கத்துவங்கினோம். நடக்க, நடக்க எங்கே கோவில் உள்ளது என்ற எங்கள் ஆவலும் கூடியது. பாறைகள் முன்னுக்கு பின்னாகவும், நடக்கவே பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டியதாகவும் இருந்தது. நேரம் கடந்து கொண்டே இருந்தாலும். கோவில் வந்தபாடில்லை. பத்து நிமிடம் என்ற சொல்லால் உந்தப்பட்டு வண்டியிலேயே வைத்து விட்டு வந்த தண்ணீர் பாட்டில் நினைவுக்கு வர, எங்களை நாங்களே நொந்து கொண்டோம்.

குறுகிய மலைப்பாதை....

மேலே செல்லச் செல்ல பாறைகள் சரிவாகவும், பெரிதாகவும், பாதை குறுகலாகவும் இருந்தது. இயற்கையாக மழை பெய்து பாறைகள் உருண்டும், உடைந்தும் தானே அமைத்துக் கொண்ட பாதையைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதை நாங்கள் மெல்ல புரிந்து கொள்ளத் துவங்கினோம். அரை மணி கழிந்த பின் வழியில் திரும்பி வந்து கொண்டிருந்த ஓரிருவரை கேட்க, இன்னும் அரை மணியாகும் என்றும் ஒரு மணி நேரம் ஆகும் எனவும், என் மாமனார், மாமியாரை பார்த்து இவர்கள் எல்லாம் ஏறுவது சிரமம் என்று சொல்லவும் எங்களுக்குக் கொஞ்சம் தடுமாற்றம்...  பூசாரி சொல்கேட்டு மேலே செல்ல நினைத்தது தவறோ எனத் தோன்றியது.  வெள்ளிமலை உச்சி நோக்கிய எங்களது பயணத்தில் நாங்கள் நிறைய அனுபவங்களை பெறப் போகிறோம் என்று உள்ளுணர்வு கூறியது...

மேற்கொண்டு செல்வதா? வேண்டாமா? என்னவர் மட்டும் சென்று தரிசனம் செய்து வருவதா? என்று பலவித குழப்பங்கள். செல்வோம் என்று முடிவெடுத்து சிவசிவ! தென்னாடுடைய சிவனே போற்றி! நமச்சிவாய! என்று இறைவனின் நாமங்களை சொல்லிக் கொண்டு எங்கள் பாதையை கடக்கத் துவங்கினோம். சிரமப்பட்டு எங்கள் வீட்டுப் பெரியவர்கள் ஏறுவதை பார்க்கவும், சங்கடமாகவும் இருந்தது. ஆனால் அவர்களுக்கு இருந்த உத்வேகத்தில் தான் சென்று வர முடிந்தது எனலாம்.

சிறிது தூரத்தில் கருப்பண்ண சாமியின் சிலை எங்களை வரவேற்றது. வருபவர்களுக்கு காவலாக துணை இருப்பதற்காக இங்கே வீற்றிருக்கிறார் போலும். அங்கே பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்த இரு பெண்மணிகள் அமர்ந்திருக்கவே அவர்களிடம் விசாரித்தேன். நிச்சயம் சென்று வாருங்கள். வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.  மேலே செல்லச் செல்ல பாதை மிகவும் குறுகலாகவும், கடினமாகவும் இருக்கும். ஆனாலும் சென்று வாருங்கள் என்றார்கள்.

ஒருபுறம் பாறை, ஒருபுறம் சரிவும் அதல பாதாளமும், விதவிதமான பூச்சிகளின் சப்தங்களும், வனாந்திர அமைதியும், சில்லென்ற காற்று, மிதமான வெயில் என்று வித்தியாசமான அனுபவம்... அங்கங்கே சந்தித்த ஓரிரு மனிதர்களும் அவர்களின் அனுபவங்களும், நல்வார்த்தைகளும் என புதியதோர் இட்த்தில் வழி தெரியாமல் செல்வதைப் போன்ற உணர்வு தான் எங்களிடத்தில்....

அங்கங்கே அமர்ந்து சில நிமிடம் இளைப்பாறி விட்டு தொடர்ந்தோம். அப்போது ஒரு பொந்தின் உள்ளேயிருந்து ஏதோ நெளிவதாக என் மாமியார் சொல்ல, எழுந்திருங்கோம்மா என்று நான் அலற பார்த்தால், அணிலின் வால் மட்டும் தனியாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படியொரு தோற்றத்தில் மெரூன் நிறத்தில் ஒரு புழு! கடவுளின் படைப்புகள் தான் எத்தனை எத்தனை??  பெரிய பெரிய மரவட்டைகள், கட்டெறும்புகளின் வரிசை, புதருக்குள்ளிலிருந்து பலவித சப்தங்கள்.! திடீரென்று ஒரு பாம்போ, புதருக்குள்ளிலிருந்து யானை போன்ற மிருகங்களோ வந்திருந்தாலும் ஓட முடியாத சூழல்... பாறைகளை பிடித்துக் கொண்டு தவழும் நிலையில் அடுத்த அடியை வைக்க வேண்டும்.

வழிகாட்ட காத்திருக்கும் பைரவர்.....

ஏறக்குறைய ஒரு மணி நேரம் கடந்த பிறகு ஒரு இடத்தில் நாய் ஒன்று பெரிய பாறையின் மேல் அமர்ந்து மலை உச்சி நோக்கி வரும் பாதையைப் பார்த்துக் கொண்டிருந்த்து. நாயைப் பார்த்ததும் என்னுடைய பயம் கூடிப் போனது. சாதாரணமாக நாயைப் பார்த்தால் பயப்படும் எனக்கும், இம்மடி மலையில் அமர்ந்திருக்கும் நாயைப் பார்த்ததில் கிலி அதிகமாக இருந்தது. அமர்ந்து கொண்டிருந்த நாயை பொறுமையாக நாங்கள் கடக்க, விலுக்கென்று அதுவும் எங்களை தொடர்ந்தது. அதனிடம் கொடுக்க கையில் எங்களிடம் ஒன்றுமில்லையே என்று சொல்லிக் கொண்டே ஏறினோம். அதுவும் எங்களைக் கடந்து எங்களை வழி நடத்தியது. ஒரு சப்தமில்லை அதனிடம். நாங்கள் நின்றால் அதுவும் நின்றது, நாங்கள் நடந்தால் அது எங்களை வழி நடத்தியது. இப்போது என் நினைவில் வந்தது நான் படித்த விஷயம்தான்.

மலை உச்சியிலிருந்து இயற்கை எழில்.....

இந்திரா செளந்தர்ராஜன் கதைகளில் சிவ தரிசனத்துக்கு கருப்பன் துணை வருவார் என்றும், சித்த புருஷர்களே எந்த வடிவிலும் வருவார்கள் என்றும் பல கதைகளில் சொல்லியிருப்பார். அது போல் இப்போது எங்களை வழி நடத்தும் இந்த நாய் கூட ஒரு சித்தராயிருக்கலாம் என்று நினைத்து பிரார்த்தித்துக் கொண்டே மேற்கொண்டு ஏறத் துவங்கினோம். ஒரு கட்டத்தில் என் மாமியாருக்கு மூச்சிரைத்து அமர்ந்து விட்டார். என்னவர் மேலே ஏறிப் போய் ஏதாவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்து வருவதாகச் சொல்லி தனியே முன்னேறினார். ஒரு தம்ளர் தண்ணீர் தான் கிடைத்தது அங்கே என்று கொண்டு வந்தார். அதிலேயே மாமியாரும் குடித்து விட்டு நாங்கள் அனைவரும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் அருந்தி எங்கள் நாவை ஈரப்படுத்திக் கொண்டோம்.

வரவேற்கும் பிள்ளையார் மற்றும் நாகர் சிலைகள்....

இன்னும் கொஞ்சம் தான்,  மேலே நெல்லி மரத்தடியில் சிவனை தரிசிக்கலாம் வாருங்கள் என்று தெம்பைத் தந்து எங்களை வழி நடத்தினார் என்னவ்ர். அப்படி இப்படி தத்தி தத்தி முன்னேறி உச்சியில் முதலில் வினாயகனை தரிசித்தோம். வெள்ளி மலை என்பதால் வெள்ளி நிறத்தில் வலம்புரி விநாயகன் தரிசனம் தருகிறார் போலும். அந்த நாய் எங்களை வழி நடத்தி சிவன் சன்னதியின் அருகே படுத்துக் கொண்டது. வலது புறம் முருகனின் தரிசனம். நடுவே நெல்லி மரத்தடியில் வெள்ளிமலை நாதரின் தரிசனம். அகத்தியர் அபிஷேகம் செய்த ஈசன். தரிசித்து விட்டு அப்படியே சில மணித்துளிகள் அங்கே அமர்ந்திருந்தோம்.

மலையில் வைத்திருந்த ஒரு சிவன் சிலை....  
அகத்தியர் பூஜித்தது இந்தச் சிலையல்ல.....

தண்ணீருக்கு sintex தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தண்ணீர் வருவதில் பிரச்சனை போலும். அங்கே இருந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் மனமுவந்து அவர்கள் வைத்திருந்த தண்ணீரில் மீண்டும் இரண்டு தம்ளர் தண்ணீர் தர, அதை பகிர்ந்து பருகிவிட்டு மலையடிவாரம் நோக்கி புறப்பட ஆயத்தமானோம். மேலே ஏறுவது ஏறி விட்டோம். எப்படி இந்த சறுக்கும் பாறைகளில் இனி இறங்குவது என்று என்னுள்ளே பயம். ஈசனை பிரார்த்தித்துக் கொண்டு இறங்கத் துவங்கினோம். கால்களில் பயங்கர நடுக்கம், தடுமாற்றம். நாம் நின்றாலும் கால்கள் தானாகவே நடக்கும் போல.... அங்கங்கே உட்கார்ந்து, பாறைகளை பிடித்துக் கொண்டும், என்னவரின் கையை பிடித்துக் கொண்டும் இறங்கினேன். எப்படியோ மலையடிவாரத்துக்கு வந்து சேர்ந்தோம். அந்த ஈசன் தான் எங்களை வழிநடத்தி இருக்கிறார் என்று தோன்றுகிறது தான்.

மலையடிவாரத்தில் உள்ள அகத்தியர் சன்னிதியின் முன் எல்லோரும் கொண்டு வந்திருந்த மதிய உணவை உண்டோம். அப்படியே எங்கள் வாகனத்தில் ஏறி அமர்ந்து புறப்பட்டோம். வழியில் வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டு, இறங்கத் துவங்கினோம். படகு சவாரி செய்யலாம் என்று சென்றால், தண்ணீர் குறைவாக இருந்த காரணத்தால் மூடி வைத்திருக்கிறார்கள். 18வது கொண்டை ஊசி வளைவின் அருகே JMA GARDEN RESORTS இருந்தது. அங்கே சென்று ஐஸ்க்ரீமை ருசித்து விட்டு அப்படியே அந்த காட்டேஜையும் சுற்றிப் பார்த்தோம். நாளொன்றுக்கு 2000 ரூபாய் தங்குவதற்கு என்று தெரிவித்தார்கள். அமைதியான சூழலில் இருக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம் இந்த சிறுமலை. திடீரென்று சூழும் கருமேகங்கள், தூறல், மிதமான வெயில் என்று கவர்கிறது. டிசம்பர், ஜனவரியில் வந்தால் முற்றிலுமாக பனிமூட்டம் இருக்கும் என்று தெரிவித்தார்கள். அடுத்த முறை திட்டமிட்டு வந்து இரண்டு நாட்கள் தங்கலாம் என்று நினைத்துக் கொண்டு கிளம்பினோம்.

சென்று வந்த இந்த பயணத்தில் எங்கள் எல்லோர் மனதிலும் ஒரு இனம் புரியாத அமைதி, த்ருப்தி, சந்தோஷம், சாகசம் செய்து வந்த எண்ணம், சிவ தரிசனம் என்று பலவித உணர்வுகள்... சுற்றிப் பார்க்க இடங்கள் என்று இல்லாவிட்டாலும், இயற்கையை ரசிக்கலாம். இரண்டு மூன்று காட்டேஜ்கள் உள்ளன. பூக்களையும், எஸ்டேட்களில் காணப்படும் பலா மரங்களையும், மிளகு, போன்றவற்றை கண்டு ரசிக்கலாம். நகரத்து நெரிசல், மாசுப்பட்ட காற்று, சப்தங்கள் போன்றவை இல்லாமல் இயறகையோடு ஒன்றிப் போகலாம். அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் நல்ல ஒரு சுற்றுலாத் தலமாக மாறும் என்பது உறுதி. நிச்சயம் எல்லோரும் ஒருமுறையாவது சென்று வாருங்கள்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்

Thursday, May 12, 2016

சிறுமலை – ஒரு த்ரில் அனுபவம்-பகுதி-1

 சிறுமலை.....

கோடை விடுமுறைப் பயணத்தில் இந்த ஆண்டு திண்டுக்கல் 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிறுமலைக்கு சென்று வரலாம் என்று முடிவு செய்தோம். சென்ற ஆண்டு கொடைக்கானலும், அதற்கு முந்தைய ஆண்டு ஏற்காடும் சென்று வந்தோம். அதனால் சிறுமலை பற்றிய தகவல்களை இணையத்திலிருந்து சேமித்துக் கொண்டோம். இயற்கையை ரசித்து அங்கே நாள் முழுவதும் அமர்ந்து இளைப்பாறி விட்டு வரலாம் என்பது எங்களது இலக்கு..

காலை 6 மணிக்கு திருச்சியிலிருந்து குடும்பத்துடன் காரில் புறப்பட்டோம். முந்தைய நாள் நல்ல மழை பெய்திருந்ததால் சில்லென்ற குளிருடன் எங்கள் பயணம் துவங்கியது. திருச்சியிலிருந்து 2 மணி நேரத்தில் திண்டுக்கல்லை சென்றடையலாம். எங்கள் ஓட்டுனர் கார்த்திக் வாகனத்தினை மிகவும் லாவகமாகச் செலுத்த, எங்கள் பயணம் சுகமாக இருந்தது. காலை 8 மணிக்கு திண்டுக்கல்லை சென்றடைந்தோம்.  நாங்கள் நெடுஞ்சாலையிலிருந்து திண்டுக்கல் நகருக்குள் செல்லும் சாலையில் நுழைந்து ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் சிறுமலை செல்லும் வழி கேட்டோம். நகருக்குள் சென்று நத்தம் செல்லும் சாலை வழியே செல்ல வேண்டும் என்பதைக் கேட்டுக் கொண்டு திண்டுக்கல் நகருக்குள் நுழைந்தோம். காலை எட்டு மணிக்கும் திண்டுக்கல் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.

நத்தம் சாலையில் ஒரு தேநீர் கடையில் வாகனத்தினை நிறுத்தி, தேநீர்/காப்பி குடித்து, மீண்டும் ஒரு முறை சிறுமலைக்கான வழியைக் கேட்க, அவர் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சிறுமலை பிரிவு வரும் அங்கிருந்து இடது புறம் திரும்பினால் சிறுமலை செல்லும் பாதை வரும் என்று சொல்ல, அங்கிருந்து சிறுமலைக்கு புறப்பட்டோம். எங்கள் ஓட்டுனர் கார்த்திக்குக்கு சிறுமலை என்ற ஊர் திண்டுக்கல் அருகே இருக்கிறது என்பதே நாங்கள் சொல்லி தான் தெரியும் என்றார்!

கொண்டை ஊசி வளைவுகளில் ஒன்று.....

18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது சிறுமலை. கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் இந்த மலை அமைந்துள்ளது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் கேரளா சென்றிருந்த போது அங்கே பொன்முடி என்ற மலை வாசஸ்தலத்துக்கு சென்ற அனுபவம் நினைவில் வந்தது. அதுவும் 21 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட சிறு மலை வாசஸ்தலம் தான். சரி சிறுமலைக்கு வருவோம்.

கொண்டை ஊசி வளைவுகளை ஒவ்வொன்றாக கடந்து கொண்டும் இயற்கையை ரசித்துக் கொண்டும் சிறுமலைக்கு வந்து சேர்ந்தோம். 17வது கொண்டை ஊசி வளைவில் ஒரு வாட்ச் டவர்இருக்கவே, நாங்கள் வண்டியிலிருந்து இறங்கி படிகள் ஏறி டவரிலிருந்து இயற்கையை ரசித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். வழியெங்கும் பெயர் தெரியாத மலர்கள் பலவும், பலா மரங்களும், தேக்கு மரங்களும் காணவே கண்கொள்ளாக் காட்சி!

சிறுமலையில் பழையூர், புதூர் என்று இரு இடங்களும், அந்த கிராமத்து மனிதர்களும் தான். ஊரின் மக்கள் தொகை 8000 என்பது தகவல். கிராமத்து மனிதர் ஒருவரிடம், சுற்றிப் பார்க்க இங்கு என்ன உள்ளது என்று விசாரிக்க, அவர் சிவன் கோவில் ஒன்றும் படகுத் துறையும் தவிர வேறு ஒன்றும் பெரிதாக இல்லை என்றார். நாங்களும் ஓரளவு இந்த தகவல்களை தெரிந்து வைத்திருந்ததால் கோவிலுக்கு சென்று வந்து காலை உணவை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். இங்கு ஹோட்டல்கள், கடைகள் என்று வியாபார நிறுவனங்கள் இருக்காது என்று தெரிந்ததால் உணவு மற்றும் தண்ணீர் கொண்டு வந்திருந்தோம்.

கோவில் செல்லும் முன்னர் எங்கள் எல்லோருக்கும் முக்கிய வேலை ஒன்று இருந்தது. காலையில் வீட்டிலிருந்து புறப்பட்ட எங்களுக்கு சில்லென்ற காற்றும், வண்டியின் குலுக்கலும் சேர்ந்து இயற்கை அழைப்பிற்காக ஒரு இடம் கிடைக்காதா என்று தேட வேண்டியிருந்தது. கோவில் செல்லும் வழியில் அங்கே இருந்த பெண்மணி ஒருவரிடம் விசாரிக்க, அவர் புதிதான ஒரு விஷயத்தை கேட்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு, இங்கு அதெல்லாம் இல்லை.. மலையடிவாரத்தில் கோவில் இருக்கு அங்கே கேட்டுப் பாருங்க என்றார். சரி! அங்கே போய்க் கொள்ளலாம் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டோம்!!

சிறுமலை வாழைப்பழம்..... எடுத்துக்கோங்க....

சிறுமலைப் பழம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அளவில் சின்னதாக இருந்தாலும், மிகவும் ருசியாக இருக்கும் என்று தோன்றிய அந்த பழத்தை பற்றி கேட்டதும், அந்த வீட்டு பெரியவர் இரண்டு பழங்களைத் தந்து சாப்பிடச் சொன்னார். நாங்கள் எல்லோரும் பகிர்ந்து உண்டோம். மிகவும் சுவையாக இருந்தது. விலையை கேட்டவுடன், கோவிலுக்கு போயிட்டு வாங்க தரேன் என்றார். சரியென்று சொல்லி, கோவிலை நோக்கி செல்லத் துவங்கினோம்.

சிவசக்தி ரூபிணி.....

பத்து நிமிட தூரத்தில் அகத்தியர் சிவசக்தி பீடம் என்ற தகவல் பலகை எங்களை வரவேற்றது. சிறிய கோவிலும், வெளியே நவக்கிரகங்களும் காணப்பட்டன. அக்கோவில் இருப்பது வெள்ளிமலை எனும் சிறிய மலையில் அடிவாரத்தில்.  வெள்ளிமலையின் கதையைப் பார்க்குமுன்னர், அடிவாரத்தில் இருக்கும் சிவசக்திரூபிணியை தரிசித்து விடுவோம்.  பூசாரி நமச்சிவாய என்ற நாமத்தை சொல்லி தீபாராதனை காட்ட நிதானமாக தரிசித்தோம். இந்த கோவிலில் வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு ஒன்று உள்ளது. அதாவது லிங்கம் தனியாகவும் அம்பாளை தனியாகவும் தரிசித்திருப்போம். ஆனால் இங்கு லிங்கத்தின் உள்ளே அம்பாள் வீற்றிருக்கிறாள். சிவசக்தி ரூபிணி! தரிசனத்தை முடித்துக் கொண்டு உணவை முடித்துக் கொண்டு அப்படியே ஊரை சுற்றி வந்து இளைப்பாறலாம் என்று நினைத்தோம்.

ஆனால் அந்த பூசாரி, பத்து நிமிட நடையில் வெள்ளிமலை உச்சி வந்து விடும். அங்கே வெள்ளிமலை நாதராக ஈசன் அருள்பாலிக்கிறார். அவரையும் தரிசனம் செய்து விட்டு வாருங்கள். இங்கு நாள் முழுவதும் அன்னதானம் செய்கிறோம். சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்றார். வந்தது வந்து விட்டோம். பத்து நிமிடம் தானே தரிசித்து விட்டே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அவரிடமும் என்னவர் எங்களுக்காக பாத்ரூம் விசாரிக்க, அவரோ, இன்னும் இந்த கிராமம் அந்தளவு முன்னேறவில்லை என்றார். அட ராமா!!!

வெள்ளிமலை வரலாறு:

வெள்ளிமலை..... இந்த மலையின் உச்சிக்கு தான் செல்லப் போகிறோம்...

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை புதூர் அஞ்சல், அகஸ்தியர்புரம் எனும் கிராமத்தில் இருக்கிறது இந்த வெள்ளி மலை. இராமயண யுத்தம் நடைபெற்ற காலத்தில் சஞ்சீவி மலையை ஆகாய மார்க்கமாக ஹனுமன் எடுத்துச் சென்றபோது மலையின் ஒரு சிறு பகுதி இங்கே விழுந்ததாகவும், அதனால் இவ்விடம் சிறுமலை என்று அழைக்கப்படுவதாகவும், மேலும் அகத்திய மாமுனி இம்மலையில் தங்கி சிவபெருமானை வழிபட்டதால் இவ்விடம் அகத்தியர்புரம் என்று அழைக்கப்படுவதாகவும் நம்பிக்கை.

அகத்தியர் காலத்தில் இந்த மலை முழுவதுமே வெள்ளியாக இருந்ததாகவும் கலியுகத்தில் இப்படி வெள்ளியாக இருந்தால் மக்களால் சூரையாடப்படும் என்பதற்காகவே அகத்தியர் தன் தவப்பயனால் வெள்ளிமலையை கல்லாக உருமாற்றியதாகவும் சொல்கிறார்கள். இன்றும் வெள்ளிமலை வெள்ளையான நிறத்தில் காட்சி அளிக்கிறது.

வெள்ளிமலை உச்சி நோக்கிய எங்கள் பயணம் எப்படி இருந்தது என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன். சரியா?

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்