Thursday, March 24, 2016

மதுரைக்கு ஒரு நாள் பயணம்!

சென்ற வாரத்தில் ஒரு நாள் பயணமாக மதுரைக்கு சென்று வந்தேன். மாமா பெண்ணுக்கு மதுரையில் திருமணம் என்றதும், சென்று வரலாமா என்று எண்ணம் இருந்தது.. தில்லியில் இருந்த போது இதற்காக வர முடியாது என்று பல விசேஷங்கள் விட்டு போய்விட்டது. இங்கு வந்த பிறகும் ஏதோ ஒரு சில காரணங்களால் செல்ல முடியாத சில திருமணங்கள். திருமணத்திற்கு பின் என் தாய் வழியில் நான் கலந்து கொண்ட முதல் திருமணம் இது தான்.


ரோஷ்ணிக்கு ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு ,முதல் மாலை பள்ளியில் இருந்து வந்ததும் நாங்கள் இருவரும் கிளம்பி திருச்சி ஜங்ஷனுக்கு சென்று சேர்ந்தோம். என் தம்பியும் குடும்பத்துடன் அங்கு வர  மாலை 6.30க்கு வர வேண்டிய வைகை விரைவு வண்டி எதிர்பார்க்கப்பட்டு 7.00 மணிக்கு வந்தடைந்தது. ஆனால் குறித்த சமயத்தில் மதுரையை சென்றடைந்தது. வெளியில் வந்து ஆட்டோ ஒன்றை பிடித்து பைபாஸ் ரோட்டில் இருந்த மண்டபத்தை அடைந்தோம்.


மாலை ரிசப்ஷன் நாங்கள் போவதற்குள்ளாகவே முடிந்து விட்டபடியால், ஒரு சில உறவுகளை மட்டுமே பார்த்து குசலம் விசாரித்து விட்டு, முதலில் பசி வயிற்றை கிள்ள, சாப்பிடச் சென்றோம். முன்பெல்லாம் மாப்பிள்ளை அழைப்பு இருக்கும். இப்போது அதற்கு பதில் ரிசப்ஷன்.. என் அப்பா சொல்வார். கல்யாண சாப்பாட்டை விட மாப்பிள்ளை அழைப்பு  டிபனும், சாப்பாடும் தான் நன்றாக இருக்கும் என்று. மாலை சேவை, போண்டா, அல்வா என்றும், இரவு போளியுடன். வடை, பால்பாயாசம் என்று பல வகையறாக்கள்.  இப்போது கலவை சாதங்களாகி விட்டன. வெஜிடபிள் பிரியாணியுடன், சாம்பார் சாதம், தயிர்சாதம், இவற்றுடன் வட இந்திய சங்கமமாக ருமாலி ரொட்டி குருமாவுடன்.... சாப்பிட்டு விட்டு அடுத்த வேலைக்கு சென்றோம்.

அடுத்து என்ன! உறக்கம் தான்...எங்களுக்கான இடத்தில் உறங்கச் சென்றோம்...:)) மதுரை கொசுக்கள், திருச்சி கொசுக்களை விட பலசாலிகளா??? பார்க்கலாம்..:)))

காலையில் திருமணம். தயாராகி மற்ற உறவுகள், ஊர்க்காரர்கள் என்று சந்திக்க வேண்டும். முடிந்தால் மீனாட்சியை தரிசிக்கணும் என்று எண்ணம். பார்க்கலாம்..

(தொடரும்)

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


Friday, March 11, 2016

சிறப்புமிக்க நாகலிங்கமரம்!


விசேஷமான மரம் இது. இந்த மரத்தின் இலை, பூ, காய், பட்டை என்று அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது. தென் அமெரிக்காவை தாயகமாக கொண்ட இந்த மரம், அரிதாக தமிழகத்தின் காவிரி கரையோரத்திலும் வளர்கிறது. சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதிலும் இந்த மரம் பெரும்பங்கு வகிக்கிறது. தூசிகளை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்துகிறது.

பட்டையும், இலையும், காய்களும் விஷ ஜூரம், தோலில் தோன்றும் சொறி, சிரங்கு போன்ற தொற்றுகளை குணப்படுத்துகிறது. பல் கூச்சம், சொத்தை போன்றவற்றையும் குணப்படுத்துகிறது என்பது கூடுதல் தகவல். பழங்கள் நச்சு தன்மை வாய்ந்தவையாகும்...


இதன் பூ மிகவும் சிறப்புத்தனமை வாய்ந்ததாகும்.  வானுலகிலிருந்து இறைவன் பூமிக்கு தந்த கொடை இந்த மலர். நாகம் குடைபிடிக்க , நடுவில் சிவலிங்கம் சுற்றிலும் நூற்றுக்கணக்கான முனிவர்களும், தேவர்களும் தவம் செய்வதைப் போன்ற தோற்றம். குங்கும சிவப்பாய் ஐந்து இதழ்கள் என்று வெகு அழகு. இதன் மணம் சுகந்தத்தை பரப்பும்.

அதிசயமாய் இந்த பூ செடியில் பூக்காமல் மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்களைத் தாண்டி, மர உச்சிக்கும் இடையில் தனியே கிளைகளைப் பரப்பி அதில் காய்க்கிறது. காய்கள் பந்து போன்று உள்ளது.

 இவ்வளவு சிறப்புமிக்க மரம் எங்கள் இல்லத்தின் வெகு அருகில் உள்ளது. இங்கு வந்த நாளாய் முடியும் போது மலர்களை பறித்து வந்து இறைவனுக்கு சூடுவதுண்டு. மஹாசிவராத்திரியன்று கோவிலுக்கு எடுத்துச் செல்லலாம் என்று பார்த்தால் கொத்து கொத்தான மலர்கள் எட்டா உயரத்தில் இருந்தன. என்னடா இது ! என்று மனம் துவண்டது... எனக்காகவே வைத்தது போல் இரண்டு மலர்கள் ஒரு கல்லின் மேல் இருந்தன. அவற்றை எடுத்துச் சென்று கோவிலில் கொடுத்தேன்.


வெள்ளிக்கிழமையான இன்று பார்த்தால் கீழாகவே நிறைய தென்பட்டன. சிவ சிவ என்று ஜபித்துக் கொண்டே பறித்து மடியில் எடுத்து வந்தேன். அக்கம் பக்கம் தோழமைகளுக்கும் கொடுத்து எங்கள் வீட்டின் பூஜையறையிலும் வைத்தேன்.  இன்றைய நாள் இனிதே துவங்கியுள்ளது.

ஆனால் பறிக்கும் போதே மனதுள் ஒரு கலக்கம். இவ்வளவு சிறப்புமிக்க மரம் அடுத்த கட்டிடம் வந்தால் காணாமல் போய்விடுமே என்று தான்...


நல்லதே நடக்கட்டும்.. எல்லோரும் ஆனந்தமாய் இருப்போம் நட்புகளே!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

(படங்கள் உதவி - இணையம்)