Thursday, February 18, 2016

முகநூலில் என் கிறுக்கல்கள்!

முகநூலில் அவ்வப்போது பகிர்ந்த என் கிறுக்கல்களை இங்கே பகிர்கிறேன்..

1) 
வீட்டின் அருகில்ஒரு மரம்
ஈசனை தன்னுள்ளே
வைத்திருக்கும்
இதன் பூ!
பூத்த பின், மணம்
ஆளை மயக்குகிறது
நாகங்களுக்கும் இதன்
மேல் மயக்கமாம்!
ஆதலால் சூரிய
உதயத்திலும்
அஸ்தமனத்திலும்
பறிக்க இயலாது
உச்சி வேளையில்
சிவசிவ என்றே சொல்லி
பறித்து வந்து
வைப்பதுண்டு...
அடுத்த கட்டிடம்
வரும் வரை
இருக்கும் இந்த
நாகலிங்கமரம்!

2)
மாலை நேரங்களில்
கூட்டமாக தென்பட்டு
கண்களைக் கவர்ந்த
மயில் கூட்டங்கள்!
சின்னஞ்சிறு குழந்தையைப்
போன்ற சப்தங்களை
தந்து கொண்டிருந்த
மயில் கூட்டங்கள்!
தோப்புகளின் அழிவால்
கட்டிடங்களின் பெருக்கத்தால்
மனித நடமாட்டத்தால்
எங்கே சென்றனவோ!!!
3)
புத்தகங்கள் 
என் நட்புக்கான 
பாலங்கள்!
4)
புதியதோர் இடத்தில்
இன்னாருடைய மனைவி
மகள், மருமகள், அக்கா
என்றில்லாமல்
நான் நானாகவே
அறிமுகமாகி, நட்பு
வட்டத்தை பெற்றது
பெருமை கொள்ளச் செய்தது!
5)
கேட்ட கேள்விக்கு மட்டும் பதில்!
எதிரே இருவர் வாய் ஓயாமல்
பேசிக் கொண்டிருந்தாலும்
அவர்களை வாய் பிளந்தவாறு
பார்த்தே இருப்பவள்!
இன்று வாய்மூடாமல், எங்கோ
ஆரம்பித்து எங்கோ சென்றாலும்
முடிவற்ற பேச்சாக
பேசுபவளாக மாறிவிட்டேன்.....:)))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

Tuesday, February 9, 2016

எல்லாம் நன்மைக்கே!

அன்பு நட்புகளே,

எல்லோரும் நலம் என்று நினைக்கிறேன். ஏறக்குறைய பதிவுகள் எழுதி ஆறு, ஏழு மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். திருவரங்கத்தில் வேறு வீட்டிற்கு இடம்பெயர்ந்ததால் இணைய இணைப்பின்றி உங்க எல்லோருடைய பதிவுகளை படிக்க இயலாமல் போய்விட்டது. தற்சமயம் தான் இணைப்பு கொடுத்துள்ளோம். இனி முடியும் போது நட்புகளின் பதிவுகளை வாசிக்க முயல்கிறேன்.

நேற்று திருவரங்கத்திற்கு துளசி டீச்சர், கோபால் சாருடன் வருகை தந்திருப்பதையொட்டி கீதா மாமி வீட்டில் திருச்சி பதிவர்களின் சந்திப்பு இனிதே நடைபெற்றது. நேரம் போனதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தோம். புகைப்படங்களும், சந்திப்பு பற்றிய விவரங்களும் துளசி டீச்சரின் பதிவில் விரிவாக வரலாம். 

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.