Thursday, April 9, 2015

சுக்டி சாப்பிடலையோ சுக்டி!!!


குஜராத் பயணத்தில் தான் சாப்பிட்ட ”சுக்டி” என்ற இனிப்பை பற்றி என் கணவர் பகிர்ந்து கொண்டதிலிருந்தே செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்து கொண்டேயிருந்தது. மகளின் பிறந்தநாளுக்கு இம்முறை இதை செய்து ,இருவரும் ருசித்தோம். சுவையோ அபாரம். செய்ய மிகவும் எளிமையாகவும் இருந்தது.

இந்த இனிப்பு ராஜஸ்தான், குஜராத் என இரு மாநிலங்களிலும் பிரபலமானது. நான் இந்த இனிப்பை செய்ய நினைத்த அன்று மிகவும் பரபரப்பான சூழ்நிலை. அலைச்சல், தொடர்ந்த அலைபேசி அழைப்புகள் என்று இருந்த போதிலும் என்னால் செய்ய முடிந்தது என்பதனால் எளிமையானது என்று சொல்கிறேன். தவிர்க்க முடியாத அலைபேசி அழைப்பிலும் பேசிக் கொண்டே செய்த இனிப்பு இதோ… பாகு வைக்க வேண்டிய அவசியமே இல்லை…J

தேவையானப் பொருட்கள்:-

கோதுமை மாவு – 1 கப்
நெய் – அரை கப்
வெல்லம் – கால் கப்
ஏலக்காய்த்தூள் – ½ தேக்கரண்டி
முந்திரி, பாதாம், பிஸ்தா – அலங்கரிக்க

செய்முறை:-

அடுப்பில் வாணலியை வைத்து கொடுத்துள்ள அரை கப் நெய்யையும் விட்டு நன்கு சூடுபடுத்தவும். அதில் கோதுமை மாவை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும். சிவந்ததும் அதில் கொடுத்துள்ள கால் கப் வெல்லத்தை சேர்த்து அடுப்பை நிறுத்தி விட்டு வெல்லம் உருகும் வரை கலக்கவும், இதில் ஏலக்காய் பொடி சேர்த்து இந்த கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி மேலே பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவற்றை தூவி சற்று கரண்டியால் அழுத்தி விட்டு ஐந்தே நிமிடத்தில் வில்லைகள் போட்டு விடலாம்…சுடச் சுட சுக்டி தயார்.

என்ன உங்கள் வீட்டிலும் செய்து பார்ப்பீர்கள் தானே!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

டிஸ்கி:-

செய்து பார்த்த குறிப்புகளின் படங்கள் ஏராளமாக காத்து கொண்டிருப்பதனால் தொடர்ந்து இன்னும் சமையல் குறிப்புகள் வரலாம்….:))


16 comments:

 1. வெங்கட்டும் அவர் பதிவில் பகிர்ந்திருந்தாரோ... சுவையான குறிப்பு.

  ReplyDelete
 2. பாகு செய்ய வேண்டியதில்லை என்றால் எளிது தான்... நன்றி...

  ReplyDelete
 3. சுவையான, ருசியான 'சுக்டி'! இதே போல வெல்லத்திற்கு பதிலாக சீனியை சேர்த்து செய்யலாம். ருசி வேறு மாதிரி இருக்கும்!

  ReplyDelete
 4. இதையே கடலை மாவு போட்டுச் செஞ்சு உருண்டை பிடிச்சா.... பேஸன் லாடு!

  சுக்டி செஞ்சாச்சு ரெண்டே ஸ்பூன் கோதுமை மாவில்!

  ReplyDelete
 5. சுலபமான செய்முறை ....செய்ய வேண்டும் ..

  ReplyDelete
 6. ஒரு கப் கோதுமை மாவுக்கு கால் கப் வெல்லமே போதுமா ஆதி??! [செய்யறமோ இல்லையோ...டவுட்டு கேட்டு வைக்கணும்ல? ;) இல்லன்னா இமேஜு:):);) என்ன ஆகறது? ஹிஹிஹி...]

  ReplyDelete
 7. சுக்டி சாப்பிடலையோ சுக்டி!!!

  படங்களும் செய்முறைக்குறிப்புகளும் செய்து சாப்பிட்ட திருப்தியை அளித்து விட்டன.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 8. அதுக்குள்ள பண்ணி பார்த்தாச்சா?? சூப்பர்.

  ReplyDelete
 9. செய்து பார்த்து சொல்கிறேன். நன்றி

  ReplyDelete
 10. // கொடுத்துள்ள அரை கப் நெய்யையும் விட்டு //
  // கொடுத்துள்ள கால் கப் வெல்லத்தை சேர்த்து //
  Did you send it by courier? We are yet to receive it. BTW, why didn't you send us, 'wheat' ?

  # I sent this link to my house boss.

  ReplyDelete
 11. தங்கள் கணவர் பகிர்ந்திருக்கும் சுர்மா, சுக்டி எங்கள் வீட்டில் வெண்ணை காச்சும் போது செய்வதுண்டு முன்பு. இப்போது குறைந்துவிட்டது வீட்டில் எல்லோரும் பெரியவர்கள் ஆகிவிட்டதால்....இதில் சர்க்கரை சேர்த்தும் செய்யலாம். வெல்லம் அப்படியே போடுவது பல சமயங்களில் அதில் மண் இருந்தால் சொதப்பிவிடுவதுண்டு அதனால்....

  மிக்க நன்றி சகோதரி! சுவையோ சுவைதான்.....

  கீதா

  ReplyDelete
 12. வணக்கம்
  செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமையாக உள்ளது நிச்சயம் செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி த.ம5

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 13. பகிர்வுக்கு நன்றி! படத்தை பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுகிறது!

  ReplyDelete
 14. அனைவரின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 15. செஞ்சுட்டா போச்சு.. த ம +

  ReplyDelete
 16. ரொம்ப எளிதாக இருக்கும் போல நாளை என் மகனின் பிறந்த நாளுக்கு செய்து பார்த்துவிட வேண்டியதுதான்...

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…