Friday, April 10, 2015

ஷாஹி பனீர்!





வட இந்திய உணவகங்களில் ”ஷாஹி பனீர்” என்றும் நம் தமிழகத்தில் ”பனீர் பட்டர் மசாலா” என்றும் அழைக்கப்படும் இந்த சப்ஜியை எப்படி செய்வது, என்று இன்று தெரிந்து கொள்ளலாம்.

தில்லியில் இருந்தவரை அருகிலுள்ள கோவிந்த் தாபாவில் பலமுறை ருசித்தும், நானே பலமுறை செய்தும் சாப்பிட்டிருக்கிறோம். இங்கே வந்ததிலிருந்து இந்த பனீர் கிடைப்பது அரிதாகி விட்டது. தில்லியில் பால் வாங்கும் கடைகளிலும், மதர் டைரி பால்பூத்களிலும் கிடைக்கும் பனீர், இங்கே ஐஸ்க்ரீம் பார்லரில் சொல்லிவைத்தால் எப்போதாவது கிடைப்பது உண்டு. 

தில்லியில் வாரத்தில் ஒருநாளாவது காலை உணவுக்கு ப்ரெட் சாப்பிட்டு பழகிய நாங்கள் இங்கு வந்த பின் திண்டாடித் தான் போகிறோம். என் மகள் கடைக்கு சென்றாலே ப்ரெட்டைத் தவிர வேற என்ன வேண்டும் என கேட்கத் துவங்கவே, ”அம்மா என்னை கடைக்கு அனுப்பாதே” என சொல்லத் துவங்கிவிட்டாள்….:)))

சரி! வாங்க! ஷாஹி பனீர் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்…

தேவையானப் பொருட்கள்:-

பனீர் – 100 கிராம்
மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – ½ தேக்கரண்டி
மஞ்சள்தூள்- ¼ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
சீரகம் – ½ தேக்கரண்டி

அரைக்க:-

வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 1
தனியா – 1 தேக்கரண்டி

செய்முறை:-

மிக்சியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் தாளிக்கவும். அடுத்து அரைத்த விழுதை சேர்த்த பின் கொதிக்க ஆரம்பித்ததும் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா என அனைத்தும் சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெய் பிரியத் துவங்கியதும் க்ரேவிக்கு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கும் போது, பனீரை தண்ணீரில் அலசி விட்டு துண்டங்களாக நறுக்கி க்ரேவியில் சேர்த்து இரண்டு நிமிடத்தில் இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.

சுவையான ”ஷாஹி பனீர்” சப்பாத்தி, பூரி, நாண் மற்றும் புலாவ் இவற்றுடன் சாப்பிட ஏற்றதாகும்.


டிஸ்கி:-
1)        பனீர் சேர்ப்பதற்கு முன்னால் இருக்கும் க்ரேவியில் காய்கறிகளையோ, பயறுகளையோ சேர்த்து ஏகப்பட்ட சப்ஜிக்களை செய்யலாம்.
2)  சப்ஜியை இறக்குவதற்கு முன்னால் ப்ரெஷ் க்ரீம் சேர்க்கலாம். வெண்ணெயும் சேர்க்கலாம்.
3) க்ரேவியில் சில முந்திரிகளை அரைத்தும் சேர்க்கலாம்.
4) கசூரி மேத்தி எனப்படும் காய்ந்த வெந்தயக்கீரையும் சேர்க்கலாம்.
5)        க்ரேவியில் தயிர் சிறிதும் சேர்க்கலாம்.
6) எக்காரணத்தை கொண்டும் பனீரை எண்ணெயில் பொரிக்கக் கூடாது. தாபாக்களில் பலமுறை பார்த்ததால் சொல்கிறேன். பனீரை கடைசியாக க்ரேவியில் சேர்த்த பின் ஒரு கொதி மட்டுமே விட வேண்டும்.

இப்படி விருப்பத்திற்கேற்ப எதை வேண்டுமானாலும் சேர்த்துச் செய்யலாம். என்ன! உங்கள் வீட்டிலும் செய்து பார்ப்பீர்கள் தானே….:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

30 comments:

  1. சூப்பர்! இங்கே இந்தியக்கடைகளில் (கள்! மூணு இருக்கே!) அமுல் பனீர் துண்டுகளாகவே பாக்கெட்டில் ஃப்ரோஸன் செக்‌ஷனில் கிடைக்குது. மட்டர் பனீர் அடிக்கடி செய்வேன். மகளுக்குப் பிடிக்கும் என்பதால்:-)

    ReplyDelete
  2. ஷாஹி பனீர் பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது.நானும் இப்படிதான் செய்வேன்.ஆனால் பனீரை பொரித்து தான் சேர்ப்பேன்.ஏன் பொரித்து சேர்க்க கூடாது ஆதி?

    ReplyDelete
    Replies
    1. பொரித்தால் பனீர் கெட்டிப்பட்டு விடும்.. ஷமீ.

      Delete
  3. முடிவில் உள்ள குறிப்புகள் கவனத்தில் கொள்ள வேண்டும்... நன்றிங்க...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்.

      Delete
  4. நல்ல மாடர்ன் ப்ரெட் அதுவும் ப்ரவுன் ப்ரெட் கிடைக்கிறதே! எங்க குடியிருப்பு வளாகத்தின் கீழே வந்திருக்கும் வணிக வளாகத்திலும் கிடைக்கிறது. மாடர்ன் ப்ரெட், சான்ட்விச் ப்ரெட், வெள்ளை ப்ரெட், ப்ரவுன் ப்ரெட் எல்லாமும் கிடைக்கிறது. உங்க வீட்டுக்குப் பக்கத்திலே என்றால் ஷாப் அன்ட் சேவ் வணிக வளாகத்தில் மாடர்ன் ப்ரெட் கிடைக்கிறது. எக்ஸ்பையரி தேதியோடு கிடைக்கும். மல்டி கிரெயின் ப்ரெட்டும் கிடைக்கும். நாங்க அடிக்கடி வாங்குவோம். அநேகமா வாரத்தில் இரண்டு நாட்கள் ப்ரெட் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஷாப் அண்ட் சேவ் பஸ் ஸ்டாண்டு பக்கத்தில்.... எங்களுக்கு அவ்வளவு தூரம் வரணுமே....:) உங்களுக்கு தான் கிட்ட மாமி...:)

      Delete
  5. குறித்து வைத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  6. இதுவரை பனீர் என்றால் என்னவென்றே எனக்குத்தெரியாது. நேரில் அதனை நான் பார்த்ததும் இல்லை. இதுபோல ஏதேதோ TV நிகழ்ச்சிகளில் அவ்வப்போது சொல்லுவார்கள் ...... அதில் மட்டுமே நான் பார்த்துள்ளேன்.

    நம்ம வீட்டு சமையலில் தான் இதுபோன்ற புதுமைகளுக்கோ, புரியாத பதார்த்தங்களுக்கோ இடமோ அனுமதியோ கொடுப்பது கிடையாதே ! :)

    ReplyDelete
  7. சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ் சார்.

      Delete
  8. பனீரை ஏன் பொரிக்கக் கூடாது?

    ReplyDelete
    Replies
    1. பனீரை பொரித்தால் அதன் மிருதுவான தன்மை அகன்று கல் போலாகி விடும் ஐயா..

      Delete
  9. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete
  10. அருமை.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலஷ்மி..தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete
  11. ஆஹா புகைப்படமே அழகு
    தமிழ் மணம் ஐந்தருவி
    நேரமிருப்பின் எமது குடிலுக்கும் வருகை தரவும்.
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி சார். அவசியம் பார்க்கிறேன்.

      Delete
  12. ரொம்ப நாட்களாகி விட்டது. வந்து. இப்போது மும்பை வந்து விட்டேன். ப்ரட் விஷயம் சென்னையில் வழக்கமில்லை. மற்ற இடங்களில் வழக்கம்தான். முந்திரி பருப்பை அரைத்து சேர்த்தால் ஷாஹி பன்னீர் என்றே சொல்வார்கள். ரொட்டிக்கு அருமையான இதை நன்றாகப் பகிர்ந்துள்ளாய்.
    பன்னீரைப் பொரித்தால் மிகவும் ஹெவியாகிவிடும் என்று சொல்வார்கள். எனக்குப் பச்சை பால் வாஸனை பிடிக்காது. ஆதலால் சற்று வறுத்தே போடுவேன். மற்றவர்களுக்குப் பச்சையாகப் பிடிக்கும். நல்ல குறிப்பு. கஸூரி மெத்தியும் ருசியைக் கூட்டும். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் குறிப்புகளுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா.

      Delete
  13. இதைச் செய்துபார்க்கப்போகிறேன். இதிலே, மட்டர் பனீர் என்றால், மட்டர் (of course நல்லா ஊறவைச்சது), சேர்த்தால் போதுமா? அல்லது அதற்கு வேறு செய்முறையா?

    ReplyDelete
  14. இங்கு செய்யும் முறை சிறிது வித்தியாசம் என்றாலும் தங்களது குறிப்பையும் குறித்துக் கொண்டோம்....

    ஷாஹி பனீரும், பனீர் பட்டர் மசாலா கொஞ்சம் வித்தியாசம் உண்டு இல்லையோ சகோதரி?!

    ReplyDelete
  15. நான் இஞ்சி பூண்டும் அரைப்பதில் சேர்ப்பேன் இல்லாமல் செய்து பார்க்கிறேன்.. நன்றி

    ReplyDelete
  16. சொன்ன விதத்திலேயே ருசி தெரிகிறது. செய்து பார்த்து விடுகிறேன். ரெசிபிக்கு நன்றி!

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…