Wednesday, April 29, 2015

புதிதாக ஒரு பழக்கம்!!!

பட உதவி - கூகிள்!

காலையில் காபியோ தேநீரோ குடிக்காவிட்டால் ஏதாவது ஆகிவிடுமா????? ஒன்றும் ஆகாது….:)) எங்கள் வீட்டிலேயே அப்பா, அம்மா, தம்பி என அனைவருமே காபி பிரியர்கள்…..:)) ஒருவேளை குடிக்காட்டா கூட என் அம்மா தலையில் துண்டை இறுக கட்டிக் கொண்டு தலைவலியில் துடித்து போயிடுவார்….:))) ஆனா இவர்களுக்கு மத்தியில் காபியே குடித்திராத ஜீவன் ஒன்று இருந்ததென்றால் அது வேறு யாராக இருக்கும்???? அடியேன் தான் என்று சொல்லவும் வேண்டுமா?? எப்படியோ தப்பி பிழைத்து விட்டேன்…..:)))

மாலையில் தேநீர் அருந்த மட்டும் பழகினேன். அதுவும் கல்லூரிப்பருவத்தில். திருமணத்திற்குப் பின் யார் வீட்டுக்கு சென்றாலும் அவர்கள் கிச்சனுக்கு செல்லும் முன்பே எனக்கு முன்னே என்னவர் சொல்லிவிடுவார். இவள் காபியே குடித்திராதவள் என்று….:)) பிடிக்காத சிலதும் கர்ப்பகாலத்தில் பிடிக்கும்….:))) அதனால் அப்போ குடிக்க ஆரம்பிப்பே என்றும் சிலர் பயமுறுத்தினர்….:))) ஆனால் ம்ஹூம்ம்ம்….:))

சரி! இப்போ இந்தப் புராணம் எதற்கு???? இப்போ புதிதாக ஒரு பழக்கத்தை கடைபிடித்து வருகிறேன். அதை இனி என் வாழ்வில் தொடரவும் வேண்டும் என்பது என் விருப்பம்….:)) என்ன அது????

சென்ற வருடம் உடல்நலமின்மைக்காக மருத்துவரை சந்திக்க நேர்ந்தது. எல்லா டெஸ்டும் செய்து விட்டு உயரத்திற்கு ஏற்ற எடை இருந்தாலும் வயிறு குறைவதற்காக டயட் சார்ட் போட்டுக் கொடுத்தார். பிரசவத்திற்கு பிறகு கூட வயிறு கூடவில்லை…:)) தில்லி திரும்பிய பின் என் தோழிகள் கூட ஆச்சரியப்பட்டனர். தலைமுடியும் நன்கு வளர்ந்திருந்தது.. வயிறும் கூடவில்லை. குண்டாகவும் இல்லை….:)) ஆனால் HARMONAL IMBALANCEஆல் அவதிப்பட ஆரம்பித்ததும் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது…..:(( இப்போதும் அதே தான்…L

அந்த டயட் சார்ட்டில் இருந்ததை ஏறக்குறைய ஒரு வருடமாக முடிந்தளவு பின்பற்றுகிறேன். அதில் ஒன்று தான் இந்த பழக்கம். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேனும், அரைமூடி எலுமிச்சை சாறும் கலந்து பருகத் துவங்கினேன். இதை குடித்த பின் அப்படி ஒரு புத்துணர்ச்சி. முன்பு பாலோ, தேநீரோ குடிக்கும் போது கூட அதன் சுவை நாக்கில் சுழட்டிக் கொண்டேயிருக்கும்.. ஆனால் இப்போ அதெல்லாம் இல்லை….:))

இந்த பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்…J

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


Friday, April 10, 2015

ஷாஹி பனீர்!

வட இந்திய உணவகங்களில் ”ஷாஹி பனீர்” என்றும் நம் தமிழகத்தில் ”பனீர் பட்டர் மசாலா” என்றும் அழைக்கப்படும் இந்த சப்ஜியை எப்படி செய்வது, என்று இன்று தெரிந்து கொள்ளலாம்.

தில்லியில் இருந்தவரை அருகிலுள்ள கோவிந்த் தாபாவில் பலமுறை ருசித்தும், நானே பலமுறை செய்தும் சாப்பிட்டிருக்கிறோம். இங்கே வந்ததிலிருந்து இந்த பனீர் கிடைப்பது அரிதாகி விட்டது. தில்லியில் பால் வாங்கும் கடைகளிலும், மதர் டைரி பால்பூத்களிலும் கிடைக்கும் பனீர், இங்கே ஐஸ்க்ரீம் பார்லரில் சொல்லிவைத்தால் எப்போதாவது கிடைப்பது உண்டு. 

தில்லியில் வாரத்தில் ஒருநாளாவது காலை உணவுக்கு ப்ரெட் சாப்பிட்டு பழகிய நாங்கள் இங்கு வந்த பின் திண்டாடித் தான் போகிறோம். என் மகள் கடைக்கு சென்றாலே ப்ரெட்டைத் தவிர வேற என்ன வேண்டும் என கேட்கத் துவங்கவே, ”அம்மா என்னை கடைக்கு அனுப்பாதே” என சொல்லத் துவங்கிவிட்டாள்….:)))

சரி! வாங்க! ஷாஹி பனீர் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்…

தேவையானப் பொருட்கள்:-

பனீர் – 100 கிராம்
மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – ½ தேக்கரண்டி
மஞ்சள்தூள்- ¼ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
சீரகம் – ½ தேக்கரண்டி

அரைக்க:-

வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 1
தனியா – 1 தேக்கரண்டி

செய்முறை:-

மிக்சியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் தாளிக்கவும். அடுத்து அரைத்த விழுதை சேர்த்த பின் கொதிக்க ஆரம்பித்ததும் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா என அனைத்தும் சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெய் பிரியத் துவங்கியதும் க்ரேவிக்கு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கும் போது, பனீரை தண்ணீரில் அலசி விட்டு துண்டங்களாக நறுக்கி க்ரேவியில் சேர்த்து இரண்டு நிமிடத்தில் இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.

சுவையான ”ஷாஹி பனீர்” சப்பாத்தி, பூரி, நாண் மற்றும் புலாவ் இவற்றுடன் சாப்பிட ஏற்றதாகும்.


டிஸ்கி:-
1)        பனீர் சேர்ப்பதற்கு முன்னால் இருக்கும் க்ரேவியில் காய்கறிகளையோ, பயறுகளையோ சேர்த்து ஏகப்பட்ட சப்ஜிக்களை செய்யலாம்.
2)  சப்ஜியை இறக்குவதற்கு முன்னால் ப்ரெஷ் க்ரீம் சேர்க்கலாம். வெண்ணெயும் சேர்க்கலாம்.
3) க்ரேவியில் சில முந்திரிகளை அரைத்தும் சேர்க்கலாம்.
4) கசூரி மேத்தி எனப்படும் காய்ந்த வெந்தயக்கீரையும் சேர்க்கலாம்.
5)        க்ரேவியில் தயிர் சிறிதும் சேர்க்கலாம்.
6) எக்காரணத்தை கொண்டும் பனீரை எண்ணெயில் பொரிக்கக் கூடாது. தாபாக்களில் பலமுறை பார்த்ததால் சொல்கிறேன். பனீரை கடைசியாக க்ரேவியில் சேர்த்த பின் ஒரு கொதி மட்டுமே விட வேண்டும்.

இப்படி விருப்பத்திற்கேற்ப எதை வேண்டுமானாலும் சேர்த்துச் செய்யலாம். என்ன! உங்கள் வீட்டிலும் செய்து பார்ப்பீர்கள் தானே….:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

Thursday, April 9, 2015

சுக்டி சாப்பிடலையோ சுக்டி!!!


குஜராத் பயணத்தில் தான் சாப்பிட்ட ”சுக்டி” என்ற இனிப்பை பற்றி என் கணவர் பகிர்ந்து கொண்டதிலிருந்தே செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்து கொண்டேயிருந்தது. மகளின் பிறந்தநாளுக்கு இம்முறை இதை செய்து ,இருவரும் ருசித்தோம். சுவையோ அபாரம். செய்ய மிகவும் எளிமையாகவும் இருந்தது.

இந்த இனிப்பு ராஜஸ்தான், குஜராத் என இரு மாநிலங்களிலும் பிரபலமானது. நான் இந்த இனிப்பை செய்ய நினைத்த அன்று மிகவும் பரபரப்பான சூழ்நிலை. அலைச்சல், தொடர்ந்த அலைபேசி அழைப்புகள் என்று இருந்த போதிலும் என்னால் செய்ய முடிந்தது என்பதனால் எளிமையானது என்று சொல்கிறேன். தவிர்க்க முடியாத அலைபேசி அழைப்பிலும் பேசிக் கொண்டே செய்த இனிப்பு இதோ… பாகு வைக்க வேண்டிய அவசியமே இல்லை…J

தேவையானப் பொருட்கள்:-

கோதுமை மாவு – 1 கப்
நெய் – அரை கப்
வெல்லம் – கால் கப்
ஏலக்காய்த்தூள் – ½ தேக்கரண்டி
முந்திரி, பாதாம், பிஸ்தா – அலங்கரிக்க

செய்முறை:-

அடுப்பில் வாணலியை வைத்து கொடுத்துள்ள அரை கப் நெய்யையும் விட்டு நன்கு சூடுபடுத்தவும். அதில் கோதுமை மாவை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும். சிவந்ததும் அதில் கொடுத்துள்ள கால் கப் வெல்லத்தை சேர்த்து அடுப்பை நிறுத்தி விட்டு வெல்லம் உருகும் வரை கலக்கவும், இதில் ஏலக்காய் பொடி சேர்த்து இந்த கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி மேலே பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவற்றை தூவி சற்று கரண்டியால் அழுத்தி விட்டு ஐந்தே நிமிடத்தில் வில்லைகள் போட்டு விடலாம்…சுடச் சுட சுக்டி தயார்.

என்ன உங்கள் வீட்டிலும் செய்து பார்ப்பீர்கள் தானே!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

டிஸ்கி:-

செய்து பார்த்த குறிப்புகளின் படங்கள் ஏராளமாக காத்து கொண்டிருப்பதனால் தொடர்ந்து இன்னும் சமையல் குறிப்புகள் வரலாம்….:))


Wednesday, April 8, 2015

மாங்காய் தொக்கு!

மாங்காய் சீசனில் இந்த தொக்கு செய்து வைத்துக் கொண்டால் தயிர்சாதத்துக்கும், சப்பாத்தி, பராட்டா போன்றவற்றுக்கும் தொட்டுக்கையாக பயன்படுத்த ஏற்றதாகும். கிளிமூக்கு, குண்டு மாங்காய் என்று எதில் செய்தாலும் சுவையாக இருக்கும். நான் கிளிமூக்கு மாங்காயில் செய்திருக்கிறேன்.

தேவையானப் பொருட்கள்:-

மாங்காய் (பெரியது) – 1
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள்தூள் – சிறிதளவு
நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

மாங்காயை கழுவி தோல் சீவி விட்டு கேரட் துருவுவது போல் துருவிக் கொள்ளவும். வாணலியில் வெந்தயத்தை போட்டு நன்கு சிவக்க பொரிய விடவும். அதை ஆறிய பின் மிக்சியில் அரைத்து பொடியாக வைத்துக் கொள்ளவும். இப்போது வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும். அடுத்து பெருங்காயத்தூள் சேர்த்து பொரிந்ததும், துருவிய மாங்காயை சேர்த்து வதக்கவும். இதனுடன் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். கடைசியாக பொடி செய்த வெந்தயத்தை சேர்த்த பின் இறக்கவும்.

சுவையான, எளிதான மாங்காய் தொக்கு சுவைக்கத் தயார்…


நீங்களும் செய்து பார்த்து ருசியுங்கள்….:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

Monday, April 6, 2015

சிறுதானியப் பாயசம்!சிறுதானியங்கள் உடலுக்கு நன்மை விளைவிக்கக்கூடியது. நார்ச்சத்து நிறைந்தவை. அரிசிக்கு பதிலாக சிறுதானியங்களை பயன்படுத்தினால் ஆரோக்கியம் மேம்படும். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த சிறுதானியத்தில் செய்த பாயசம் இதோ… சென்ற மாதம் வந்த மகளின் நட்சத்திர பிறந்தநாளன்று செய்தது இது….:)

தேவையான பொருட்கள்:-

சிறுதானியம்சின்ன கிண்ணம்
சர்க்கரை – 8 தேக்கரண்டி
பால் – ½ லிட்டர்
ஏலக்காய் – சிறிதளவு
முந்திரி, திராட்சை – சிறிதளவு
நெய் – சிறிதளவு
எசென்ஸ் – தேவைப்பட்டால் ஒரு சில சொட்டுகள்
கண்டென்ஸ்டு மில்க் – விருப்பத்திற்கிணங்க சிறிதளவு

செய்முறை:-

வாணலியில் சிறுதானியத்தை போட்டு சற்று வறுத்துக் கொள்ளவும். பின் அதை தண்ணீரில் அலசி விட்டு, காய்ச்சிய பால் சேர்த்து வேகவிடவும். விரைவில் வெந்து விடும் என்பதால் நான் பாயசம் செய்த பாத்திரத்திலேயே வேகவிட்டேன். பின் அதனுடன் ஏலக்காய், சர்க்கரை சேர்க்கவும். கன்டென்ஸ்டு மில்க் சிறிதளவு வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். சற்று ஆறியதும் எசென்ஸ் ஓரிரு சொட்டுகள் சேர்த்துக் கொள்ளலாம்.

சுவையான சத்தான சிறுதானியப் பாயசம் தயார். வெள்ளை சர்க்கரையும் உடலுக்கு நல்லதல்ல என்பதால் அதற்கு பதிலாக வெல்லம் சேர்த்து செய்வது நல்லது.


என்ன! உங்கள் வீட்டிலும் செய்து பார்ப்பீர்கள் தானே!

சிறுதானிய உணவு - சிறுதானியப் பொங்கல்

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

Saturday, April 4, 2015

தேவதைக்கு பிறந்தநாள்!

எங்கள் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தையும், உத்வேகத்தையும் தந்து கொண்டிருக்கும் எங்கள் தேவதைக்கு இன்று பிறந்தநாள். பத்து வயது முடிந்து பதினோராம் வயதில் அடியெடுத்து வைக்கும் இவளுக்கு எல்லா வளமும் நலமும் கிடைத்து அன்போடும், ஆரோக்கியத்தோடும், அறிவுடனும் வைத்திருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்...

பிறந்தநாள் வாழ்த்துகள் கண்ணா!

அம்மாவும், அப்பாவும்.....பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வாழ்த்து சொல்லப் போகும் அனைவருக்கும் நான் செய்த ராஜஸ்தானிய மற்றும் குஜராத்திய இனிப்பான ”சுக்டி” இதோ.....:)


ஸ்வீட் எடு கொண்டாடு!


ஆதி வெங்கட்
திருவரங்கம்.