Friday, March 27, 2015

தென்னங்காற்று! – வித்யா சுப்ரமணியம்

சமீபத்தில் நூலத்திலிருந்து எடுத்து வந்து வாசித்த நூல் தான் வித்யா சுப்ரமணியம் அவர்களின் தென்னங்காற்று. குடும்பக் கதையாகவும், அதில் இயற்கையை போற்றியும், ஆங்காங்கே பாரதியாரின் பாடல்களும் என வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது.


கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞனின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களே கதையாக இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. படித்து விட்டு தக்க வேலைக்காக காத்திருக்கும் அவனுக்கு, வாஞ்சையாக பரிந்து பேசும் அம்மா, உடன்பிறந்தோர், கண்டிப்பான அப்பா, உற்ற நண்பனான சிகாமணி என உற்றார் உறவினர். அக்காப் பெண்ணை திருமணம் செய்து வைத்து அவர்களின் கடையை சீதனமாக தர முன் வர, பிடிக்காத பெண்ணை கட்டிக் கொள்ள மனமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

மனம் போன போக்கில் ஒரு கிராமத்தில் இறங்கிய அவனுக்கு அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டர் உதவுகிறார். அவரின் மகள் பாலாம்பிகா தான் கதையின் நாயகி. கொள்ளை அழகுக்கு சொந்தமான அவளுக்கு ஆயிரம் பிரச்சனைகள். கிருஷ்ணமூர்த்தி அங்குள்ள தென்னந்தோப்பை விலைக்கு வாங்குகிறான். கடை ஒன்றிலும் வேலை செய்கிறான். கிருஷ்ணமூர்த்திக்கும், பாலாம்பிகாவுக்கும் இடையில் காதல் மலர்கிறது. அந்த கிராமத்தில் முதியோர் கல்வியை துவக்கி பத்திரிக்கை உலகே பேட்டிக் காண தேடி வரும் அளவில் உயர்கிறான். இவனுடன் இந்து என்ற பெண்ணும் உற்ற துணையாக இருக்கிறாள்.

மகனின் புகழ் பத்திரிக்கை வரையில் வந்ததைக் கண்டு அப்பாவே தேடி வருகிறார். இனி என் வாழ்க்கை உன்னுடன் தான் என்று மகனை ஆரத்தழுவுகிறார். இந்து கிருஷ்ணமூர்த்தியை விரும்ப அவன் யாரை திருமணம் செய்து கொண்டான் என்பது தான் கதை…

ஆங்காங்கே சூழ்நிலைக்கு தகுந்தாற்போன்று பாரதியாரின் பாடல்களும், கிராமத்து சூழலை கண் முன்னே காண்பித்து இருக்கும் வரிகளும், அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இடையே இருக்கும் பாச பிணைப்பும், ”திருமணம் முடிந்து இந்த வேப்ப மரத்திடம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். என் மனைவியை இதற்கும் காண்பிக்க வேண்டும்” என்பது போன்ற ஆத்மார்த்தமான வரிகளும் புத்தகம் முழுவதும் நிரம்பியுள்ளன. பாராட்டுகள் மேடம்.

என்னைக் கவர்ந்த நூல், உங்களுக்கும் பிடிக்குமாயின் வாய்ப்பு கிடைக்கும் போது நீங்களும் வாசித்து மகிழுங்களேன்.

சென்ற மாதம் இவரை சந்தித்த அனுபவத்தை இங்கே எழுதியிருக்கிறேன்..

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

டங்கள் உதவி - கூகிள்.

Sunday, March 22, 2015

தீ ரண சஞ்சீவிக்கு நன்றி!இரண்டு வாரங்களுக்குப் பிறகு கைகள் ஏறக்குறைய குணமாகிவிட்டது. பின்னூட்டத்திலும், மின்னஞ்சலிலும் விசாரித்த நட்புகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதுத்தோல் வரத் துவங்கியுள்ளது. சென்ற பகுதியில் சொன்னது போன்று நான் பயன்படுத்திய தீ ரண எண்ணெய் பற்றிய சில தகவல்கள்….

திருச்சியில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு இந்த எண்ணெய் பற்றி தெரிந்திருக்கிறது. அக்கம் பக்கம் முதல் வெளியில் செல்லும் போது என்று எங்கு சென்றாலும் கைகளை பார்த்தவர்கள் அனைவரும் என்னிடம் இந்த எண்ணெய் உள்ளது தருகிறேன். தவறாமல் தடவிக் கொள் சரியாகிவிடும்என்று அத்தனை பேரும் பரிந்துரைத்தார்கள்.

எனக்கு வேதனையாக இருந்த போது தான் மகளுக்கும் நல்ல ஜுரமாக இருந்தது. அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று blood test எல்லாம் எடுத்து ஊசி போட்டு பின் குணமானது. அப்போது அந்த மருத்துவரிடமே கைகளை காண்பித்து கொப்புளங்கள் உடைகின்றன. மீண்டும் தண்ணீர் கோர்த்துக் கொள்கிறது, நடுவிரல் கொழகொழப்பாகவே இருப்பதாகவும் சொல்ல, மேல்தோலை கத்தரித்து எடுத்து விட்டு இந்த எண்ணெயைத் தான் தடவச் சொன்னார்…..:)

மருந்து கடைகளிலும் இதைத் தான் பரிந்துரைத்தனர். ஆக மொத்தம் இவ்வளவு பேரும் பரிந்துரைத்த, எனக்கும் நிவாரணம் கிடைத்த எண்ணெய் இதோ….


தீப்புண், சைலன்சர், குக்கர் ஆவி, கொதிக்கும் எண்ணெய், நாள்பட்ட காயங்கள் என அனைத்திற்குமே நிவாரணம் தரும் இந்த எண்ணெய். 70 சதவீத தீக்காயங்களைக் கூட குணமாக்கியுள்ளது.

தில்லியில் உள்ள தோழி ஒருவர் இங்கே ஒரு எண்ணெய் வேண்டும் என்று கேட்டிருந்தார். பல வருடங்களுக்கு முன்னர் வாங்கி சென்றிருக்கிறாராம். கிடைத்தால் வாங்கித் தருகிறோம் என்று சொன்னோம். அந்த எண்ணெயின் பெயர் ”வசந்த மாலதி”….:) தெரிந்த கடையில் கேட்கவே சற்று தயங்கினேன். ஒருவர் கேட்டிருந்தார் என்று தான் முதலிலேயே ஆரம்பித்து சொன்னேன். ஆமாங்க! அந்த எண்ணெய்க்கு காலாவதி தேதியே கிடையாது. அற்புதமான எண்ணெய், கிடைப்பது சற்று சிரமம் என்றார். அப்பாடா! உடனே நான் “அவசரம் இல்லை, கிடைக்கும் போது வாங்கித் தாங்க. தில்லியிலிருந்து ஒருவர் கேட்டிருந்தார் என்று சொல்லி புக் செய்து விட்டு வந்தேன்…..:)

ஆக, சித்த ஆயுர்வேத மருந்துகளுக்கு நல்ல சக்தி இருக்கிறது….

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


பின்குறிப்பு:- முகப்புத்தக பூதத்திடம் அகப்பட்டுக் கொண்டால் மீளவே முடிவதில்லை….:))

Tuesday, March 10, 2015

தண்ணில கண்டம்!!!!

சமீபத்தில் வெளியான ”தண்ணில கண்டம்” படம் பற்றி ஏதோ எழுதப் போறேன்னு யாரும் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல…. ஏறக்குறைய பத்து நாட்களுக்கு முன்னர் தண்ணீரால் என் கைக்கு ஒரு கண்டம் ஏற்பட்டதைத் தான் உங்களிடம் சொல்லப் போகிறேன். ஞாயிறான அன்று காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு மாசிமாத தெப்போற்சவத்தில் வீதியுலாவின் ஒரு நாளாக எங்கள் குடியிருப்புக்கு பெருமாள் வரவிருப்பதால் அதற்கு தயாராகி கும்பலில் முட்டி மோதி நம்பெருமாளை தரிசித்து விட்டு நானும் மகளும் வீட்டுக்கு வந்தோம்.

மதிய சமையலுக்காக குக்கரில் சாதமும் பருப்பும் வைத்து விட்டு, எப்போதும் எங்கள் வீட்டில் கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டிய நீர் தான் குடிக்க பயன்படுத்துவேன் என்பதால், ஒரு அடுக்கில் வெந்நீர் போட இண்டக்‌ஷன் அடுப்பில் வைத்தேன். ஏதோ வோல்டேஜ் தகராறு போல அது வேலை செய்யவில்லை…. சரியென்று கேஸ் டவ்வில் ஒரு புறம் குக்கரும் இன்னொருபுறம் வெந்நீரும் போட, சிறிது நேரத்தில் கொதித்ததும் நிறுத்தி விட்டு இறக்கி அந்த அடுப்பில் ரசம் வைக்கலாமென  இறக்கினேன். இரு கைகளாலும் அடுக்கை பிடித்து இறக்கும் போது குக்கரின் பிடி இடித்து தண்ணீர் கைகளில் தெளித்து கொட்ட……

அந்த நேரத்திலும் அடுக்கை பத்திரமாக மேடையில் இறக்கி தட்டை போட்டு மூடி விட்டு வேக வேகமாக பாத்ரூமில் பக்கெட்டில் பிடித்து வைத்திருந்த தண்ணீரில் இரு கைகளையும் வைத்து விட்டு அமர்ந்தேன். (திருச்சியில் இப்போதே அடிக்கும் வெய்யிலில் குழாய்களில் கொதிக்க கொதிக்க வெந்நீர் தான் வருகிறது) ஐந்து நிமிடம் ஆகியிருக்காது அந்த நீரும் எனக்கு எரிச்சலைத் தர ஃப்ரிட்ஜை திறந்து ப்ரீசரில் கைகளை வைத்துக் கொண்டேன். அப்போது தான் என் மகளுக்கே காயம் ஏற்பட்ட விஷயம் தெரியவந்தது. அவளை விட்டு ஃப்ரிட்ஜில் வைத்திருந்த இட்லி மாவை எடுத்து கைகளில் தடவ சொல்லி கத்திக் கொண்டிருந்தேன். அவளும் மாவை பதட்டத்துடன் கைகளில் தடவி விட்டாள். எல்லாம் ஐந்து நிமிடம் தான். மீண்டும் எரிச்சல்…. அவள் நான் துடிப்பதை பார்த்து பயந்து போய் அவள் அப்பாவுக்கு போன் செய்து விட்டாள்….:)

என்னையும் பேசச் சொல்கிறாள். நான் பேசக்கூடிய நிலையிலேயே அப்போது இல்லையே, முடியாது என்று சொல்ல…. அவளே பக்கத்து வீட்டில் இருந்த தோழியை அழைத்து அவரிடம் பேசச் சொல்லி என்னவரின் அறிவுரையின் பேரில் தேங்காயெண்ணையும் மஞ்சளும் குழைத்து கைகளில் தடவிவிட்டார்கள். ஃபேன் காற்றில் கைகளை காண்பித்து ஊதிக் கொண்டேயிருக்க, எரிச்சலும், வலியும் ஒன்று சேர ஒருமாதிரி மயக்கம் ஏற்பட, சற்று ஓய்வு எடுக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் முடியவில்லை.

மாலையில் எரிச்சல் கொஞ்சம் குறைய, வேலை செய்ய ஆரம்பித்ததும் கொப்புளங்கள் ஏராளமாக வரத் துவங்கவே.. அப்போது தான் தெரிந்தது. இடது கையில் நான்கு விரல்களிலும், வலது கையில் இரண்டு விரல்கள் என ஆறு விரல்களை இந்த வெந்நீர் குளிப்பாட்டியிருக்கிறது என….

தீ ரண சஞ்சீவி

மாலையில் பால்காரர் மூலம் தான் இந்த எண்ணையின் மகிமையைத் தெரிந்து கொண்டேன். 70 சதவீத தீக்காயத்தைக் கூட சரிசெய்யக்கூடியதாம்.  அவரது மகன் ப்ளாஸ்க்கில் வைத்திருந்த டீயை (மூடி சரியாக மூடாமல் இருந்ததை கவனிக்காமல் விளையாட்டாக) தோள்களில் சாய்த்து கொள்ள, கொட்டி வெந்து விட்டதாகவும் இந்த எண்ணெயின் மூலம் விரைவில் நிவாரணம் கிடைத்ததாகவும் சொல்லவே 100 மி.லி எண்ணெய் ரூ 150 எனச் சொல்லி அவரே வாங்கி வந்து தந்தார்.

ATS இன்ஜக்‌ஷன் போடலாம் என நினைத்தால் அன்று ஞாயிறு என்பதால் அருகில் மருத்துவர்கள் இல்லை. இந்த எண்ணையே போதும் என்று சொன்னார். அன்று முதல் கொப்புளங்கள் மேலேயே வேலைகளை முடித்துக் கொண்டு மீதி நேரங்களில் இந்த எண்ணையினை பயன்படுத்துகிறேன். வேலைகள் செய்யும் போது கொப்புளங்களில் ஓட்டை ஏற்பட்டு உடைந்து தண்ணீர் வருவதும், மீண்டும் தண்ணீர் ஊறிக் கொள்வதும் என வேதனை தான். இடது  கையின் நடுவிரலில் தான் மிகவும் மோசமாக இருந்தது. இப்போது அந்த விரல் தவிர மற்றவை பரவாயில்லை.

குக்கரில் கையை சுட்டுக் கொள்வதும், தோசைக்கல்லை காலில் போட்டுக் கொள்வதும் என இருந்த எனக்கு, எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து இதுவே எனக்கு ஏற்பட்ட பெரிய தீக்காயமாகும்…:)

திருச்சியில் எல்லோரும் பரிந்துரைத்த, எல்லோர் வீட்டிலும் கட்டாயம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய அருமையான இந்த தீ ரண எண்ணெயை பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன். சென்னையிலும் இது கிடைக்கிறது. விவரங்கள் அடுத்த பகுதியில்…. இப்போ கை வலிக்கிறது. எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்… பை….:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.