Saturday, February 28, 2015

எதிர்பாராத சந்திப்பும்! சில நினைவுகளும்!நேற்று முன் தினம் திருச்சிஉத்தமர் கோவில்வழியே செல்ல நேர்ந்தது. இது மும்மூர்த்திகளின் ஸ்தலம். அப்பாவோடு வந்து நான் தரிசித்த கோவில். என்னுடைய வசதிக்காக, தில்லியிலிருந்து விடுமுறையில் வரும் போது புகுந்த வீட்டுக்கும், பிறந்த வீட்டுக்கும் செல்லத் தோதாய் தன்னுடைய ஓய்வு பெற்ற பணத்தில் இந்த இடத்தில் அழகான வீட்டை கட்டினார். அப்போது ஒரு இருபது நாட்கள் அப்பாவுக்கு சமைத்துப் போட்டுக் கொண்டு இங்கிருந்தேன்.

அந்த பசுமையான நாட்கள் மனதுள் கரைபுரண்டோடின.. வாசலில் உள்ள எனக்கு பிடித்த படிக்கட்டுகளும், திண்ணையும், வீட்டைச் சுற்றி வேப்பமரங்களும், அதிலிருந்து வீசுகின்ற இதமான காற்றும், எதிர்த்தாற் போன்று பெருமாள் கோவிலும், அதிகாலையில் சந்தையிலிருந்து கொண்டு வரும் பச்சைபசேலென காய்கறிகளும், மாலையில் காற்றாட நடந்து உத்தமர் கோவிலுக்கு சென்ற நினைவும், அங்கே வார சந்தையில் விற்ற சாமான்களும் என நினைவுகள் எல்லை கடந்து சென்றன….

அப்பாவோடு கடைசியாக வசித்த நாட்கள். என்னை தனியே குழந்தையுடன் அனுப்ப மனதில்லாமல் தானே உடன் தில்லிக்கு வந்து விட்டு விட்டு, ஒரு வாரம் சென்ற பின் புறப்பட்டு சென்றவர். தில்லியிலிருந்து கிளம்பும் முன்உன்னிடம் மனசு விட்டு பேசணும். ஒரு விஷயத்தை சொல்லணும்என்று சொல்லி சொல்லாமலேயே சென்று விட்டார். ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு பிறகு இந்த இடத்திற்கு சென்றிருக்கிறேன்.

சரி! இந்த இடத்திற்கு திடீரென செல்ல வேண்டியதன் அவசியம் என்ன???

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்என்று சொல்வார்கள் அல்லவா! அது என் வகையில் நிஜமே! ஒரு எழுத்தாளரை சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். அருமையான பெண்மணி. முற்போக்கு சிந்தனையாளர், ஓவியர், மிகவும் எளிமையானவர், நல்ல மனது படைத்தவர். இதை விட வேறு என்ன வேண்டும் இவரை சந்திக்க…… ஏராளமான கதைகளை படைத்தவர், தேசிய விருதும் பெற்றவர். அவர் எழுத்தாளர் வித்யா சுப்ரமணியன்அவர்கள். சென்னையில் வசிக்கும் இவர் ஒரு விசேஷத்துக்காக திருச்சி வந்திருந்தார்.

இந்த வாய்ப்பு ரிஷபன் சார் மூலமாக எனக்கு கிடைத்தது. இதைத் தான் பூவோடு சேர்ந்த நார் என்று சொன்னேன். என்னிடம் வருகிறீர்களா? என்று கேட்டதும், முதலில் மகளின் வகுப்பு ஒன்றுக்காக யோசித்து விட்டு பின்பு இந்த வாய்ப்பு நிச்சயமாக எனக்கு கிடைக்காது என்று வருகிறேன் என்று சொல்லி கிளம்பிவிட்டேன்.

எழுத்தாளர்கள் இருவர் பேசிக் கொண்டிருக்க நான்வென்று வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தேன்…..:) என்னைப் பற்றி சொல்லிக் கொள்கிற அளவில் ஒன்றும் எழுதவில்லையே! அதனால் நான் அறிமுகமானதேராஜி”(ரேவதி வெங்கட்)ன் தோழி என்று தான்…:) எளிமையானவர் என்று சொன்னேன் அல்லவா! சந்தித்த மறுநாளே முகப்புத்தகத்தில் என் தோழமையாகி விட்டார்.

இப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ரிஷபன் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகளை இங்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

13 comments:

 1. அப்பாவின் நினைவுகள் மனதை ஏதோ செய்கிறது.
  வித்யா சுப்பிரம்ணியன் அவர்களுடன் நட்பு பெற்றவிதம் அருமை.

  ReplyDelete
 2. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  //அதனால் நான் அறிமுகமானதே ”ராஜி”(ரேவதி வெங்கட்)ன் தோழி என்று தான்…:) //

  எனக்கும் நம் ‘கற்றலும் கேட்டலும் - ராஜி - திருமதி ரேவதி வெங்கட்’ அவர்களின் வலைத்தளத்தின் மூலமாகவே இவர்களுடன் கொஞ்சம் பழக்கம் ஏற்பட்டது. அவ்வப்போது என் சில பதிவுகளுக்கு எனக்கு பின்னூட்டமும் எழுதி மகிழ்வித்துள்ளார்கள்.

  அப்போதெல்லாம் நானும் வியப்பதுண்டு. அந்த அளவு புகழ்பெற்ற எழுத்தாளரும் + அதே சமயம் நம் ரிஷபன் சார் போல மிகவும் எளிமையானவரும்கூடத்தான்.

  இந்த இரு பிரபல எழுத்தாளர்களும் சந்தித்துப்பேசியதை தாங்கள் உடன் இருந்து சிந்தித்துப்பார்த்தது கேட்க மிக்க மகிழ்ச்சி. அதுவும் எனக்கு மிகவும் பரிச்சயமான பிக்ஷாண்டார் கோயில் / உத்தமர் கோயிலில் ......

  இதைக் கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. இனிய சந்திப்பு... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. சந்திப்பு வாரமாகி விட்டது ! இனிமையான மனிதர்கள்.. அழகிய அறிமுகங்கள் என்று மகிழ்ச்சி பொங்கும் தினங்கள் !

  ReplyDelete
 5. அருமையான சந்திப்பு. வாழ்த்துக்கள், ஆதி.

  ReplyDelete
 6. எழுத்தாளர்களின் சந்திப்பை இனிமையாக பகிர்ந்து தந்தையின் நினைவலைகளில் மூழ்கி சோகமாகிவிட்டீர்களே!

  ReplyDelete
 7. அன்பு ஆதி,
  வாழ்க்கையில் நல்ல சந்தரப்பங்கள் கடவுளால் கொடுக்கப் படுகின்றன.
  அதே போல உங்களுக்கு. எழுத்தாளர் வித்யா சுப்ரமணியத்துடன்
  ஏற்பட்ட சந்திப்பும் அது தந்த நல்ல நினைவுகளும் அருமை..உங்கள் அப்பாவைச் சந்திக்கும்
  வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லையே என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 8. ஒரே சந்திப்பாய் கலக்கறீங்க

  ReplyDelete
 9. நன்றி .இப்போதுதான் பார்க்கிறேன் இந்தப் பதிவை. ரிஷ்பனுக்கு நானும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். உங்களை அறிமுகப்படுத்தியமைக்காக.

  ReplyDelete
 10. கிடைக்கப் பெறாத அரிய இனிய சந்திப்புதான் இல்லையா! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. கருத்து தெரிவித்துள்ள அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
  வித்யா மேடம் - மிக்க நன்றி. தங்களுடைய நட்பு கிடைத்தமைக்காக மிகவும் பெருமை கொள்கிறேன்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…