Wednesday, February 18, 2015

எங்க வீட்டு சாம்பார்பொடி!

சாம்பார்பொடி அல்லது குழம்பு பொடி, குழம்பு மிளகாய்த்தூள் என்று அழைக்கப்படும் பொடி, கடைகளில் கிடைத்தாலும் பெரும்பாலானவர்கள் வீட்டில் அரைத்து செய்வதை கடைபிடித்து வருகிறார்கள். அதில் நானும் ஒரு ஜீவன். கடைகளில் விற்பது ஏனோ எனக்கு பிடிப்பதில்லை. சிலசமயம் அதில் சோம்பு சேர்த்து விடுகிறார்கள்.

இங்கு திருவரங்கத்திலோ நான் எப்போதுமே ஆச்சரியப்படுவது என்னவென்றால் பொங்கல் முடிந்தவுடன் வாசலில் மஞ்சள் விற்க துவங்வார்கள். (அதாங்க! மஞ்சள்கொத்தில் இருக்குமே பச்சை மஞ்சள்) அதை வாங்கி துண்டு துண்டாக நறுக்கி வெயிலில் நன்கு காயவைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்வார்கள். வருடம் முழுவதற்கும் சமையலுக்கு, குளிக்க, கோவிலுக்கு கொடுக்க என்று எல்லாவற்றுக்கும் அந்த மஞ்சள்தூள் தான்.

தில்லியில் இருந்தவரை அங்குள்ள மிஷினில் கோதுமை மாவு மட்டுமே அரைத்து தருவார்கள் என்பதால் என் மாமியார் நாங்கள் இங்கு வரும் போதோ அல்லது அவர்கள் அங்கு வரும் போதோ அவர் அரைத்து வைத்திருக்கும் சாம்பார்பொடியை கொடுப்பார். நடுவில் ஒரு இரண்டு ஆண்டுகள் எங்களாலும் வர முடியவில்லை. அவர்களும் வராததால் தட்டுபாட்டில் EASTERN SAMBAR POWDER வாங்கி உபயோகப்படுத்தினேன்.

எங்கள் வீட்டு வழக்கப்படி தினமுமே சாம்பாருக்கு கொஞ்சமாக சாமான்கள் போட்டு வறுத்து அரைத்து தான் வைப்போம். அதனால் சாம்பார்பொடியின் உபயோகம் ரசத்துக்கும், வத்தக்குழம்பு போன்றவற்றுக்கும் தான்….:) இங்கு வந்த பின் மாமியாரிடம் அளவு கேட்டு எழுதி வைத்துக் கொண்டு நானே காயவைத்து மிஷினில் அரைத்துக் கொள்கிறேன்.

ஒரு விஷயம் தெரியுமா?? நான் மிஷினுக்கு போய் அரைப்பதே இந்த மூன்று ஆண்டுகளாகத் தான். அதுவரை நான் போனதேயில்லை…..:) கோவையில் இருந்தவரை எங்கள் பகுதியாம் ரேஸ்கோர்ஸ் அரசு குடியிருப்பில் மிஷின் கிடையாது. அப்பாவோ, தம்பியோ சைக்கிளிலோ, பேருந்திலோ ”புளியகுளம்” (19 அடி முந்தி விநாயகர் இருக்கிறாரே) என்ற இடத்திற்கு போய் அரைத்து வந்துவிடுவார்கள். என்னை எங்கேயுமே அனுப்ப மாட்டார்கள்….:)

சரி! விஷயத்துக்கு வருவோம்….


தேவையான பொருட்கள்:- (ஏறக்குறைய 1 கிலோ பொடிக்கு)

வரமிளகாய் – ¼ கிலோ
தனியா – 400 கிராம்
விரலி மஞ்சள் – 50 கிராம்
கடலைப்பருப்பு – 25 கிராம்
துவரம்பருப்பு – 50 கிராம்
மிளகு – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 25 கிராம்
வெந்தயம் – 2 டீஸ்பூன்


செய்முறை:-

எல்லாப் பொருட்களையும் வெயிலில் நன்கு காயவைத்து மிஷினில் கொடுத்து அன்றே அரைக்க வேண்டியது தான். விரலிமஞ்சளை நன்கு நசுக்கி விட்டு காயவைத்து அரைக்கணும். தனியா காரத்திற்கு தகுந்தாற்போல் கூடுதலாகவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ செய்யலாம். நானே நேற்று மிளகாய் பயங்கர காரம் என்பதால் 400க்கு பதிலாக 500 ஆக சேர்த்தேன்….:) அமாவாசை, சிவராத்திரி, ஏகாதசி போன்ற நாட்களில் காயவைத்து அரைத்தால் வண்டு வராது என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்வதுண்டு. ஈரம் படாமல் பாட்டிலிலோ, டப்பாவிலோ போட்டு வைத்துக் கொண்டு, அன்றாட உபயோகத்திற்கு மட்டும் கொஞ்சமாக ஒரு பாட்டிலில் போட்டு உபயோகித்தால் கடைசி வரை மணமாகவே இருக்கும்.

என்ன நட்புகளே! உங்கள் வீட்டிலும் இந்த செய்முறையில் அரைத்து பார்ப்பீர்கள் தானே…..:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.


44 comments:

 1. காரசாரமான ருசியான பதிவு. படங்களும் பக்குவமும் செய்திகளும் அருமை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்.

   Delete
 2. //அமாவாசை, சிவராத்திரி, ஏகாதசி போன்ற நாட்களில் காயவைத்து அரைத்தால் வண்டு வராது என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்வதுண்டு.// ithu theriyathe....superaaa irukku

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மேனகா.

   Delete
 3. நேற்று எங்கள் வீட்டிலும் இதே ஃபேக்டரி வேலைகள் பிரும்மாண்டமான அளவுகளில் துவங்கி வெற்றிகரமாக நிறைவடைந்தது. 2 மாதங்களுக்கு ஒருமுறை இந்த அமர்க்களம் நடைபெறுவது உண்டு. இதில் வெளிநாட்டிலும், உள்ளூரிலேயே தனியாக இருக்கும் இரு மருமகள்களுக்கும் பார்ஸல் வேறு அவ்வப்போது அனுப்பும்படியாக இருக்கும். :))))) இதில் உள்ள பக்குவத்தில் மட்டுமே சாம்பாரும் ரஸமும் நம் நாக்கைச் சுண்டி இழுக்கும் இல்லையா ! :)))))

  ReplyDelete
  Replies
  1. உங்க வீட்டிலும் அன்று தானா!!

   Delete
 4. ரெண்டு வித்தியாசம் நம்ம வீட்டில். மிளகாய் 100 கிராம் என்றால் தனியா 300கிராம். கடுகு சேர்ப்பதில்லை. நீங்க சொல்றமாதிரி இது குழம்புப்பொடியாத்தான் பயன்படுது.

  சாம்பாருக்கு அரைச்சு விடறதுதான். அதையும் கொஞ்சம் சுலபமா செஞ்சு வச்சுக்கிட்டேன். நம்மது கேரளா ஸ்டைல். மிளகாய், தனியா , வெந்தியம், உளுத்தம் பருப்பு, தேங்காய் எல்லாம் வறுத்து மிக்ஸியில் பொடியாக்கி எடுத்து ஃப்ரீஸரில் போட்டுருவேன். சாம்பார் வைக்கும் நாளில் அந்தப்பொடியில் (இது உறையாது) தேவைக்கு ஏற்றபடி மூணோ இல்லை நாலோ ஸ்பூன் எடுத்து சட்னி ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு வெழுமூணா அரைச்சுவிட்டால் ஆச்சு:-)

  ReplyDelete
  Replies
  1. நானும் தில்லியில் கொஞ்சம் பொடி பண்ணி இப்படித் தான் வைத்துக் கொள்வேன். அங்கே மின்சாரம் போனால் பல மணிநேரங்களுக்கு வராது. சில சமயம் அப்படியே கூட தூவி விட்டிருக்கிறேன். கடலைப்பருப்புக்கு பதிலா உளுத்தம்பருப்பு சேர்ப்பீர்களா?

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி டீச்சர்.

   Delete
 5. //கடைகளில் விற்பது ஏனோ எனக்கு பிடிப்பதில்லை. சிலசமயம் அதில் சோம்பு சேர்த்து விடுகிறார்கள்.//

  மிஷினில் போய் அரைக்கும் முன்பு அந்த மிஷினில் ஏற்கனவே என்ன அரைத்துள்ளார்கள், சோம்பு போட்டா அல்லது சோம்பு போடாமலா என மோப்பம் பிடித்த பிறகே, மிகவும் பயந்துகொண்டே, ஸ்வாமியை வேண்டிக்கொண்டு நாங்கள் அரைத்து வருவோம். இல்லாவிட்டால் அத்தனைப் பொருட்களையும் சேகரித்து, காய வைத்து, வறுத்து நாம் அத்தனை மெனக்கெட்டு செய்ததெல்லாம் [வாயில் வைக்க முடியாதபடிக்கு] வீணாகிப்போகுமே ! :)

  ReplyDelete
  Replies
  1. ஒருமுறை கோவையில் என் அம்மாவின் இறுதி கட்டத்தில் அவருக்கு உதவிக்கு சென்ற போது, என் தம்பி இப்படித் தான் சோம்பு போட்ட மிஷினில் அரைத்துக் கொண்டு வந்துவிட்டான்... தினமும் திட்டிக் கொண்டே இருந்தேன். அப்பப்போ அரைச்சு விட்டு தான் சமையல் பண்ணினேன்.

   Delete
 6. சும்மா சொல்லக்கூடாது. திருஷ்டியாகிப்போய்விடும். என் தாயாரின் பெயர் கொண்ட என் இரண்டாவது மருமகளைப்போல பொறுமையாகவும் திறமையாகவும் தோசை மிளகாய்ப்பொடியோ, சாம்பார்ப்பொடியோ இதர சமையல்களோ ருசியாக இந்த உலகில் யாராலுமே செய்ய் முடியாது. எல்லாம் என் மனைவியின் டிரெயினிங். ஏற்கனவே என் சில பதிவுகளில் இவற்றைப் படத்துடன் காட்டியுள்ளேன்.

  http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_10.html

  தலைப்பு:

  வெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை !
  மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை !!

  ReplyDelete
  Replies
  1. முன்பே உங்கள் பதிவுகளில் இந்த மாட்டுப்பெண்னை பற்றி சொல்லியுள்ளீர்கள். வாசித்துள்ளேன். மிக்க மகிழ்ச்சி சார்.

   Delete
 7. படமும் செய்முறை விளக்கமும்
  முன்னுரையும் அருமையிலும் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

   Delete
 8. என் ஒருசில சமையல் ரெஸிபிக்கள் நினைவுக்கு வந்தன:

  http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html
  அடடா .... என்ன அழகு ! ...
  ’அடை’யைத் தின்னு பழகு!!
  No. of Comments : 270

  -=-=-=-

  http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_10.html
  வெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை !
  மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை !!
  No. of Comments : 166

  -=-=-=-

  http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html
  உணவே வா! உயிரே போ !!
  No. of Comments : 107

  -=-=-=-

  :) இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே !

  அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே நான் வாசித்து மகிழ்ந்தவை தான்...:)

   Delete
 9. எனக்கும் அம்மாதான் செய்து தருவார்கள். அம்மாவிற்கு வயசானதால் இப்போ அம்மா இங்கு வரும்போது அளவு கேட்டு அரைத்து வைத்துக் கொள்வேன். நீங்கள் போடுவதே தான் கூட கொஞ்சம் பச்சரிசி சேர்ப்போம். மஞ்சள் சேர்க்க மாட்டோம் . பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. என் அம்மாவின் சாம்பார்பொடி பக்குவம் என்னவோ தெரியாது. கேட்டு இப்போ தெரிந்து கொள்ளவும் இயலாது...:) திருமணமானதிலிருந்து புகுந்த வீட்டு பக்குவங்கள் தான். அவ்வப்போது அம்மாவின் சமையலும், ருசியும் நினைவுக்கு வரும். அப்போ எதாவது செய்வேன்..:) சிலது மட்டுமே அம்மாவின் சமையல். பெரும்பாலும் புகுந்த வீட்டு சமையல் தான்....:)

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க எழில்.

   Delete
 10. நாங்களும் கடைகளில் வாங்குவதில்லை. கடுகு, சீரகம் சேர்க்க மாட்டோம். கால் கிலோ மி.வ என்றால் அரை கிலோ தனியா. மிளகு கொஞ்சம் கூட சேர்ப்போம்.

  சீரகம் தனியாகப் பொடி செய்து வைத்துக்கொண்டு கொண்டால், தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்!

  ரசத்துக்கு தனியாக பொடி என்று செய்து வைப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஆசீர்வாத் ஆட்டாவுக்கு கூட சில மாதங்களுக்கு முன்னால் சாம்பார்பொடி குடுத்தாங்க. சோம்பு போட்டிருந்தார்கள். அதை என் தம்பிக்குத் தான் குடுத்தேன்....:) ஈஸ்டர்ன் நல்லா இருந்தது.

   கடுகு சேர்க்க மாட்டோம் என்று எல்லாருமே சொல்லி இருக்காங்க. ..:)

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   Delete
 11. ரொம்ப நாளா இப்படி நானே செய்யனும் என்று இருந்தேன். அளவு சரியாக வராதாதல் விட்டுட்டேன்.இப்போ சரி. அது சரி பாலமகி பக்கங்கள் பக்கம் காணோம்.

  ReplyDelete
  Replies
  1. விரைவில் உங்கள் பக்கத்திற்கு வருகிறேன்.

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மஹேஸ்வரி.

   Delete
 12. சோம்பு போடாத சாம்பார்பொடிதான் நன்றாக இருக்கும். நீங்களெல்லாம் (வை.கோ மாமாவும்தான்) எங்களைமாதிரி forced bachellorக்கு ஆளுக்கு ஒரு பாக்கெட் கொடுத்தான் 'நன்றாகத்தான் இருக்கும். எப்பயாச்சும் வை.கோ அவர்களைப் பார்க்க நேர்ந்தால் தோசை மிளகாய்பொடி சாம்பிள் சாப்பிட்டுப் பார்க்கிறேன். எனக்கு நல்லா ருசி பார்க்கத் தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. ஒரு பாக்கெட் தானே அனுப்பி விடுகிறேன்...:) இப்போ என்னவரே forced bachelor தான்...:) அவருக்கும் இங்கிருந்து தான்...:)

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்.

   Delete
 13. எங்க வீட்டில் அரைச்சுவிட்ட சாம்பார் துளசி மேடம் சொன்ன ஸ்டைலில் அன்று அன்று வேண்டிய அளவு அரைத்து உபயோகிப்போம்.. என் மனைவிக்கு பிடித்தது சக்தி சாம்பார் பவுடர். ஆனால் நான் சாம்பார் வைக்கும் போது உபயோகிப்பது ஐயங்கார் சாம்பார் பவுடர். இது அரைச்சுவிட்ட சாம்பார் போல நல்ல டேஸ்டாக வரும்

  ReplyDelete
  Replies
  1. உங்க வீட்டு சாம்பார் ரகசியத்தை சொன்னதற்கு நன்றி மதுரைத் தமிழன் சகோ.

   Delete
 14. சரி எங்களுக்கு ஒரு கிலோ ஆதிவெங்கட் சாம்பார் பவுடர் தேவை. பார்சலில் அனுப்பி வையுங்க அது நல்லா இருந்தா மிச்சல் ஒபாமவுக்கு ரெகமண்ட் பண்ணுறேன்.....

  ReplyDelete
  Replies
  1. //ஒரு கிலோ ஆதிவெங்கட் சாம்பார் பவுடர் தேவை.//

   இதை என் மாமியார் பார்த்தா என்னாகறது.....:)))

   ஒபாமாவுக்கே சாம்பார் பவுடரா! சூப்பர் போங்க...:))

   Delete
 15. // விரலிமஞ்சளை நன்கு நசுக்கி விட்டு காயவைத்து அரைக்கணும்... // இதை மட்டும் செய்யணும் என்று வீட்டில் சொன்னார்கள்...

  நன்றி சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

   Delete
 16. ஆதி,

  நல்ல காரசாரமான பதிவு.

  நாங்களும் கடையில் வாங்கமாட்டோம். மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்வோம். மளிகைக்க் கடையில் கேட்டாலே சரியான அளவில் அவர்களே கொடுத்துவிடுவார்கள். சோம்பு கொஞ்சமே சேர்ப்போம். பெருங்காயம் சேர்ப்போம். கடுகு சேர்ப்பது கிடையாது.

  ReplyDelete
  Replies
  1. உங்க வீட்டு பொடி பக்குவத்தையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிங்க சித்ரா.

   Delete
 17. இந்தப் பிரச்சனையெல்லாம் எங்களுக்கு இல்லை, ஏனென்றால் எங்க வீட்டில சாம்பாரே கிடையாது. :-)

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நிம்மதி போங்க....:)))

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க வியாசன்.

   Delete
 18. கால்கிலோ மி.வத்தல் என்றால் நான் கிட்டத்தட்ட ஒரு கிலோ தனியா சேர்ப்பேன். :)))) அதோடு விரலி மஞ்சள் 200 கிராம், துபருப்பு 200 கிராம், கடலைப்பருப்பு ஒரு கைப்பிடி, (கடலைப்பருப்பு நிறையப் போட்டால் ரசம், சாம்பார் இரண்டுமே கெட்டியாகி விடும்.) மிளகு 100 கிராம், வெந்தயம் 50 கிராம்போடுவேன். மற்றப் பொருட்கள் சேர்ப்பதில்லை. இந்தப் பொடிதான் வற்றல் குழம்பு, ரசம், பொடி போட்ட சாம்பார், மற்றும் சப்பாத்திக்குப் பண்ணும் கூட்டு, கறி போன்ற அனைத்துக்கும் பயன்படுத்துவேன். சில சமயம் தனியாக ரசப் பொடி செய்து வைத்துக் கொள்வேன். அதற்கு ஒரு கைப்பிடி மிளகாய் வற்றல், கால் கிலோ தனியா, நூறு கிராம் து.பருப்பு, நூறு கிராம் மிளகு, 50 கிராம் விரலி மஞ்சள் போட்டுக் காய வைத்துக் கொண்டு தனியா, மிளகு, து.பருப்பை வெறும் வாணலியில் வறுத்துக் கொடுத்துவிடுவேன். அதில் ரசம் வைத்தால் நல்ல தெளிவாக ரசம் வரும். சில சமயம் வெந்தயக் குழம்பு என்று செய்தால் தாளிதத்தில் ஒன்றிரண்டு மி.வத்தல் போட்டுவிட்டுப் புளியைக் கரைத்து ஊற்றி மஞ்சள் பொடி உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்துக் கொண்டு இறக்கும்போது மி.வத்தல், துபருப்பு, வெந்தயம் வெறும் வாணலியில் வறுத்துப் பொடிசெய்து வைத்துக் கொண்டு போட்டு இறக்குவது உண்டு. இதைத் தான் வெந்தயக் குழம்பு என்று சொல்வோம். பொதுவாக சாம்பார் என்றால் அன்றன்று வறுத்து அரைத்துச் சேர்ப்பது தான்.

  ReplyDelete
  Replies
  1. எல்லாவற்றிலுமே மாமி வித்தியாசம் தான்....:) உங்க வீட்டு பொடி அளவுகளையும் இங்கே விலாவரியாக பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி கீதா மாமி.

   Delete
 19. வட மாநிலங்களில் இருந்தப்போ சாம்பார்ப் பொடி பிரச்னை தான். கையால் அரைக்கும் காப்பிக்கொட்டை மிஷின் மாதிரியான கிரைண்டரில் பொடியை அரைத்து வைத்துக் கொண்டது உண்டு. அப்போல்லாம் மிக்சி கிடையாது. பின்னால் மிக்சி பழக்கம் வந்ததும், மி.பொடி, தனியாப் பொடி, மஞ்சள் பொடினு தனித்தனியா விற்பதை வாங்கிக் கொண்டு சாமான்களை மட்டும் வெயிலில் காய வைத்து வறுத்து மிக்சியில் பொடித்துக் கொண்டு இவற்றோடு சேர்த்து மீண்டும் ஒரு சுற்றுச் சுற்றிக் கலந்து வைப்பேன். இப்போவும் அமெரிக்கா போனால் பெண்ணுக்கும், மருமகளுக்கும் இம்முறையிலேயே செய்து வைத்துவிட்டு வருவேன். :) நீ ஈ ஈ ஈ ஈ ஈ ண்ட பின்னூட்டம். தெரியாதவங்களும் தெரிஞ்சுக்கட்டுமேனு எழுதிட்டேன். :))))

  ReplyDelete
  Replies
  1. உங்க பதிவுகளில் படித்திருக்கிறேன் மாமி. மற்றவர்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

   Delete
 20. இந்தியாவில் இருந்தவரை இதே செய்முறைதான். ஆனால் கடுகு கிடையாது. ஆஸி வந்தபிறகு எல்லாம் கடைச்சரக்குதான். அரைத்த பொடிவகைகளை இங்கு கொண்டுவரமுடியாது.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா! கடுகு என்னமோ இங்கு சேர்க்கறாங்க...:) ஆனா எல்லாருமே சேர்க்க மாட்டோம் என்று தான் சொல்லியிருக்காங்க....:) தனித்து தெரியணும் என்றோ....:))

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க கீதா.

   Delete
 21. மிளகாய் மல்லி சீரகம் சோம்பு எல்லாம் வாங்கி காய வைத்து மில்லில் அரைத்து வைத்துக் கொள்வார்கள்... சாம்பார் பொடி அரைத்து வைத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும்...
  நல்ல பகிர்வு சகோதரி.

  ReplyDelete
 22. என்னுடைய கணக்கு என்ன தெரியுமா? மிளகாய் கால்கிலோ,அரைகிலோ தனியா, 200கிராம் துவரம்பருப்பு, விரளி மஞ்சள் 100கிராம்,கடலைபருப்பு 100 கிராம்,வெந்தயம் 50கிராம்,மிளகும் போடுவேன்.துளி கடுகு சேர்த்து அரைத்தால் பொடி நீண்டநாட்கள் இருந்தாலும் கெடாது என்பர்.
  மழைநாள்,வெயிலில் காய வைக்க வசதி இல்லா ஊராக இருந்தால், வெறும் வாணலியில் சற்று வருத்துக் கொடுப்பேன். மிஷினில்தான் அரைப்பது.. மயூர் விஹாரில்,லாஜ்பத்நகரிலெல்லாம் அரைக்க வசதி இருந்தது. நானே போய் அரைத்து வருவேன். இப்போது மும்பையிலிருந்து அரைத்து அனுப்புகிறேன். ப்ரீஸரில் வைத்து வெளிநாட்டில் அதிக மாதங்கள் உபயோகிக்கிறார்கள்.. பெருஞ்சீரகம் வழக்கமில்லை. ரஸப்பொடிக்கு வேறு கணக்கு.
  அவரவர்கள் வழக்கம். காய்ந்த கறிவேப்பிலை கூட போடுவதுண்டு. அரிசி சேர்த்து அரைப்பதும் சிலருக்கு வழக்கம். துளி மாறுதலே தவிர வேறு ஒன்றுமில்லை. தனியா அதிகம் சேர்த்து காரம் குறைவாகச் செய்தால் யாவரும் விரும்புவார்கள். மிக்ஸியில் அரைத்தால் அடிக்கடி அரைப்போம்.
  அதனால் அரைத்துவிட்ட ஸாம்பார் மாதிரி ருசி இருக்கும். ஆனால் திக்நெஸ் குறைவு.
  நானும் என்னுடையதை எழுதியிருக்கிறேன்.
  எல்லா மாதிரியும் ட்ரை செய்கிறேன்.
  பத்து நாள் முன்புதான் இரண்டு பொடியும் ஜெனிவாவுக்கு அனுப்பினேன். அமக்களமாக உள்ளது உன்னுடைய,மற்றவர்களுடயதும். மணக்கிறது மிளகாய்ப்பொடி. அன்புடன்

  ReplyDelete
 23. சாம்பார் பொடி அருமை. காமாட்சி அக்கா சொல்வது போல் என் அம்மாவும் கடுகு சேர்த்து அரைத்தால் சாம்பார் பொடி கெட்டு போகாது வண்டு வராது என்பார்கள். நாங்கள் கறுப்பு உளுந்தும், கொஞ்சம் அரிசியும் சேர்ப்போம்..

  ReplyDelete
 24. புதிய ப்ரொப்போஷன் இது. நாங்கள் கேரளா / மங்களூர் ஸ்டைலிலும் செய்வதுண்டு, அது சகோதரி துளசி கோபால் சொன்னது போலத்தான்...உளுத்தம்பருப்பு சேர்த்து...

  மற்றபடி சாம்பார் பொடி எப்போதுமே செய்து வைத்துக் கொள்வதுண்டு. ரசப்பொடி தனியாக....

  கடுகும், ஜீரகமும் சேர்ப்பதில்லை. இதே இரண்டு பருப்புகள் தான் ஆனால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்....வெந்தயமும் கூடுதலாகச் சேர்ப்பதுண்டு....இம்முறையிலும் செய்து பார்க்க வேண்டும்....

  - கீதா

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…