Friday, February 13, 2015

பாலங்கள்! – சிவசங்கரி

சமீபத்தில் நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகம் தான் சிவசங்கரி அவர்களின் பாலங்கள்”. இந்த புத்தகம் மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண்களின் வரலாற்றை பறைசாற்றுகிறது. 1983ல் வெளிவந்த இந்த கதை ஆனந்த விகடனில் தொடராக வந்துள்ளது. அப்போது மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண்களையும் அவரவர் தனித்தன்மையோடு தெளிவாக காண்பிக்க திரு கோபுலு, திரு மாருதி, திரு ஜெயராஜ் என மூன்று ஓவியர்களும் இதில் வரைந்துள்ளனர்.

வானதி பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தின் பதினான்காம் பதிப்பை தான் நான் வாசித்திருக்கிறேன். கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் பத்தாயிரம் ரூபாய் பரிசு பெற்ற கதையாகும். சரி! இவ்வளவு சிறப்பு மிக்க கதையைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.முதல் தலைமுறையான 1907 லிருந்து 1931 வரை…. இந்த தலைமுறையைச் சேர்ந்த பெண்ணான சிவகாமுவைப் பற்றிய கதை. ஏழு வயதில் பதினோரு வயது சுப்புணியுடன் திருமணம். பதிமூன்று வயதில் பெரியவளாகி அடுத்தடுத்து வரிசையாக குழந்தைகள். இருபது வயதில் விதவையாகி நார்மடி உடுத்தி வாழ்ந்த அவலம். இதில் அன்றைய காலகட்டத்தின் வாழ்க்கை முறை, திருமண சடங்குகள், பிரசவம் என சகலமும் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

அடுத்த தலைமுறை 1940 லிருந்து 1964 வரை உள்ள காலகட்டம். இந்த தலைமுறையைச் சேர்ந்த மைதிலியின் வாழ்க்கை இங்கே சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பெண்களுக்கு படிப்பு அனுமதிக்கப்பட்டு விட்டதால் ஓரளவு படித்து, பதினெட்டு வயதில் வெங்கிட்டுவுடன் திருமணம். பிறந்த வீட்டில் கட்டுப்பாட்டுடன் வளர்ந்தாலும் புகுந்த வீட்டில் யதார்த்தவாதியான வெங்கிட்டுவால், வாழ்க்கை சுமூகமாக கடக்கிறது. தான் கற்றுக் கொள்ள விரும்பிய பரதத்தை தன் மகள் பத்மினியைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்கிறாள்.

அடுத்த தலைமுறை 1965 முதல் 1998 வரை. இந்த தலைமுறையைச் சேர்ந்த சாருவின் வாழ்க்கை இங்கே சித்திரிக்கப்பட்டுள்ளது. அப்பா தரும் சுதந்தரத்தால் நன்றாக படித்து நல்ல வேலையிலும் பணிபுரிந்து, சுரேஷை மணக்கிறாள். திருமணமான பத்து நாட்களிலேயே அவன் ஒரு மிருகம் எனப் புலப்பட, பொறுத்துக் கொண்டு சில மாதங்கள் வாழ்ந்து ஒரு கட்டத்தில், தன் இச்சைக்கு ஒத்து வராத இவள் முன்னேயே விலைமாதுவை கூட்டிக் கொண்டு  வர அவனை விட்டு பிரிகிறாள். இவளுக்கு அபர்ணா என்ற மகள் பிறக்கிறாள். பின்பு அவளுடைய வாழ்க்கை என்று கதை நகர்கிறது.

இப்படியாக மூன்று தலைமுறையிலும் உள்ள ஒவ்வொரு விஷயங்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் ஆசிரியர். மூத்த தலைமுறையில் உள்ள சடங்குகளும், சம்பிரதாயங்களும் வியக்க வைக்கிறது. பெண்களின் படிப்பு கேள்விக்குறியாக இருந்த காலமாதலால் பிறப்பு எடுத்திருப்பதே ஒரு வீட்டுக்கு மருமகளாக சென்று வாரிசை உருவாக்கத்தான் என்பது போல் சொல்லப்பட்டுள்ளது. அம்மாவுக்கும், மகளுக்கும் ஒரே சமயத்தில் பிரசவம். வரிசையாக பிறக்கும் பிள்ளைகள். சிறுவயதிலேயே விதவைக் கோலம்.

ஓரளவு செய்திகளும், அப்போது வழக்கிலிருந்த சொல்லாடல்களும் என் மாமியார் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த புத்தகத்தை வாசிக்கும் போது அவர் சொல்லியிருந்தது அத்தனையும் கண் முன்னே நிழலாடியது. அவருக்கு வீட்டுலேயே தான் மூன்று பிரசவங்களும்... ஜன்னி வந்துவிடும் என்று காலை உணவுக்கு பின் தரும் ஒரு குவளை தண்ணீர் தான் அன்று முழுவதற்குமாம்... இப்படி பல விஷயங்கள்..

மூன்று தலைமுறையிலும் சிவகாமு அப்பாவி, சாரு பாவப்பட்டவள், இதில் மைதிலி தான் கொடுத்து வைத்தவள் என்பேன். ஓரளவு படித்து, யதார்த்தவாதியான வெங்கிட்டுவால் கட்டுப்பாடுகளை புறந்தள்ளி வைத்து விட்டு எல்லா வசதிகளும் கிடைக்கப் பெற்று நன்றாக வாழ்ந்திருக்கிறாள். ஒரு பெண்ணுக்கு நல்ல துணை அமைந்து விட்டால் வாழ்க்கை சுமூகமாக இருக்கும்.. 

அம்மாவாக இருக்கும் போது எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும் கதாபாத்திரங்கள் பாட்டியானதும் பலவித கட்டுப்பாடுகளை விதிப்பதும், மாமியார் ஆனதும் அதட்டுவதும் என ஆச்சரியத்தைத் தருகிறது. இப்படிப்பட்ட கடந்த காலத்தையும், எதிர் காலத்தையும் இணைப்பது தான் பாலங்கள். 

நான் ரசித்த இந்த புத்தகத்தை நீங்களும் வாசித்து இன்புறலாமே…

இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

வானதி பதிப்பகம்
23, தீனதயாளு தெரு
தி.நகர், சென்னை – 600017.
மொத்த பக்கங்கள் – 340
2012ல் வெளிவந்த பதினான்காம் பதிப்பின் படி இதன் விலை – ரூ120.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

14 comments:

 1. பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் எழுதிய ‘பாலங்கள்!’ பற்றிய தங்களின் விமர்சனம் மிக அருமை. பாராட்டுக்கள்.

  BHEL திருச்சிக்கு வருகை தந்திருந்த பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்களை நானும் நம் ரிஷபன் சார் அவர்களும் நேரிலேயே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரைமணி நேரத்திற்கும் மேலான அவர்களின் இனிய சொற்பொழிவினைக் கேட்டு மகிழ்ந்தோம்.

  ReplyDelete
 2. ம்ம்ம்ம்..... முன்பு படிக்கவில்லை. இப்போது படிக்கத் தோன்றுகிறது.

  :)))

  ReplyDelete
 3. படிக்க தூண்டும் விமர்சனம் .. விரைவில் படிக்க வேண்டும் ....

  ReplyDelete
 4. புத்தக விமர்சனம் அருமை. ஏற்கனவே பலமுறை படித்திருந்தாலும் உங்களுடைய பதிவை படித்ததும் மறுபடியும் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 5. வணக்கம்
  புத்தக விமர்சனம் நன்று படிக்க தூண்டுகிறது..அப்படி சொல்லியுள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி த.ம 3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. மூன்று தலைமுறை வாழ்க்கையையும் அழகாக இணைத்துள்ள பாலங்கள் விமர்சனம் அருமை ஆதி. வாய்ப்பு அமையும்போது கட்டாயம் வாசிப்பேன்.

  ReplyDelete
 7. இன்றைய வலைச்சரத்தில் உங்களின் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வருகை தந்தால் மகிழ்வேன்.
  http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_14.html

  ReplyDelete
 8. பத்திரிகையில் தொடராக வந்தபோது வாசித்திருக்கிறேன். உங்கள் பார்வையில் அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள். மீண்டும் வாசிக்கும் ஆவலை ஏற்படுத்தியுள்ளீர்கள்.

  ReplyDelete
 9. அந்த ஆச்சரியம் இன்றும் தொடர்வது தான் ஆச்சரியம்...!

  ReplyDelete
 10. உங்கள் பார்வையில் நல்ல விமர்சனம்...

  ReplyDelete
 11. விமர்சனம் அருமை!
  விகடனில் தொடராக வந்த போதே படித்திருக்கிறேன். மிகவும் புகழ் பெற்ற நாவல் இது! என் நூலகத்தில் வைத்திருக்கிறேன். மறுபடியும் படிக்க வேண்டும் என்று வைத்திருக்கும் லிஸ்ட்டில் இதுவும் இருக்கிறது!

  ReplyDelete
 12. 3 தலைமுறைகளைப் பற்றி அவர் எழுதியபோது அந்த நாளில் அது ஒரு புதுமை !

  ReplyDelete
 13. சிவசங்கரியின் வேறு சில நாவல்களை வாசித்திருக்கின்றேன். இதனை வாசித்ததில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாக வாசிப்பேன். கதையைப் பற்றிய முன்னோட்டத்தைத் தந்து வாசிக்கத் தூண்டும் விமர்சனத்துக்குப் பாராட்டுக்கள் ஆதி!

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…