Thursday, February 5, 2015

சாப்பாட்டுப் புராணம்! – சமஸ்!
சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம் சமஸ் அவர்களின் சாப்பாட்டுப்புராணம். பாலஹனுமான் அவர்களின் பதிவுகளில் இந்த புத்தகத்தின் சில பகுதிகளை பகிர்ந்திருந்த போது வாசித்தவுடன் வாங்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் புத்தக கண்காட்சிக்கு சென்ற போது எதுவும் நினைவில் இல்லை. எதேச்சையாக ஒரு பதிப்பகத்தில் (எங்கு என்று நினைவில்லை! பாலகுமாரன் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தனவே? நர்மதாவா?) பார்த்தவுடன் வாங்கிக் கொண்டேன். (வாங்கிக் கொடுத்த சீனுவுக்கு நன்றி. காசு கூட வாங்கிக் கொள்ளவில்லை)


திருச்சி வந்தவுடன் என்னவரும் நானுமாக மாற்றி மாற்றி வாசித்து ருசித்தோம்! தினமணி கொண்டாட்டத்தில் ஈட்டிங் கார்னரில் கட்டுரையாக வந்ததை புத்தகமாக வெளியிட்டுள்ளார் சமஸ் அவர்கள். மன்னார்குடியைச் சேர்ந்த சமஸ் அவர்கள் தினமணி, விகடன், தி இந்து ஆகியவற்றில் பணியாற்றியவர். இந்த வருடம் சமஸ் அவர்களின் ”யாருடைய எலிகள் நாம்?” என்ற புத்தகம் வெளிவந்துள்ளது..

ஈட்டிங் கார்னரில் எழுதுவதற்காக தெரிந்த அளவு அல்லது ஏனோ தானோ என்று எழுதி விடாமல் வரையறைகளை வகுத்துக் கொண்டு, அதாவது பெரும்பாலானவர்களின் விருப்பமானதாக, செயற்கை பொருட்கள் கலப்படம் இல்லாதவையாக, முதல் தலைமுறை கடையாக இல்லாமல், தரத்தையும் சுத்தத்தையும் பேணுபவராக என ஒவ்வொரு விஷயத்திலும் மெனக்கெட்டு தகவல்களை சேகரித்துள்ளார்.

மாவட்டவாரியாக பட்டியலிட்டு முதல்முறை சாதாரணமாக சென்று உண்ட பின்னர், பட்டியலில் முதல் இடத்தை பெற்றிருப்பவர்களை மீண்டும் ஒருமுறை சென்று தரம், வரலாறு, பக்குவம் என அத்தனை தகவல்களையும் சேகரித்து சுவைப்பட சொல்லியுள்ளார். இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் உணவகங்கள் அனைத்தும் பெரியவை அல்ல. ரோட்டுக்கடை முதல் விடுதி வரை அனைத்து தரப்பும் இடம்பெற்றுள்ளது. ஒரு ஊருக்கு செல்லும் போது இந்த புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும்.

ஒரு கோப்பை டீயில் ஆரம்பித்து திருவையாறு அசோகா, நீடாமங்கலம் பால்திரட்டு, கும்பகோணம் பூரி பாஸந்தி, பாம்பே பாதாம்கீர், கமர்கட் கடலைமிட்டாய் பொரி உருண்டை என சகலமும் விருந்தாக படைக்கப்பட்டுள்ளது.


கோவை அன்னபூர்ணாவின் ரவா கிச்சடியும் சாம்பார் வடையும், கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மைசூர் பாகும் வாசிக்கும் போது கோவைக்காரியான எனக்கு பெருமையாக இருந்தது. தமிழக சமையல் முறைகளில் 1978ல் நீராவி முறையை அறிமுகப்படுத்தியவர்கள் கோவை அன்னபூர்ணாவை சேர்ந்தவர்கள் தானாம், அதே போல் நாட்டிலேயே முதல்முறையாக 1985ல் ஒரே மைய சமையலறை முறைக்கு மாறியதும் இவர்கள் தானாம்.


சிறுவயதில் அன்னபூர்ணாவின் ஃபேமிலி தோசையை பார்த்து பிரமித்ததும், அவர்களின் சாம்பார் இட்லி, சாம்பார் வடை, சேவை என அப்பா பார்த்து பார்த்து வாங்கித் தந்ததும், கிருஷ்ணா ஸ்வீட்ஸின் வாயில் போட்டாலே கரையும் மைசூர் பாகும் நினைவில் பசுமையாய் இன்றும் உள்ளன.

சமஸ் அவர்களின் கட்டுரைகள் பெரும்பாலும் தஞ்சை மாவட்டத்தை சுத்தியே உள்ளதும், ஆங்காங்கே இந்த வாரம் மிட்டாய் வாரம், ஐஸ்கிரீம் வாரம் என்று நாளிதழில் வந்தது என்பது தெள்ளத்தெளிவாக தெரிவதும் தான் திருஷ்டியாய் தெரிகிறது…:) மற்றபடி சமஸ் அவர்களின் ஈடுபாடு வரிக்கு வரி நமக்கு உணர்த்துகிறது.

பாராட்டுகள் சமஸ். மேலும் பல புத்தகங்கள் இவருடைய எழுத்தில் நாம் வாசிக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

இந்த புத்தகத்தை நீங்கள் வாங்க வேண்டிய முகவரி:- (சீனுவின் முகவரியைத் தந்துவிடலாமா!!!)

துளி வெளியீடு, சென்னை.
தொடர்புக்கு - thuliveliyeedu@gmail.com
தொலைபேசி எண் – 9444204501
புத்தகத்தின் விலை – ரூ 80.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

16 comments:

 1. மிகவும் ருசியான விமர்சனம். படங்களும் அழகு !

  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு என படிக்கும் போதே என் நாக்கினில் நீர் ஊறுகிறது. :)

  ReplyDelete
 2. //சீனுவின் முகவரியைத் தந்து விடலாமா//

  ஹா...ஹா....ஹா....

  சுவையான பதிவு.

  ReplyDelete
 3. ஹூம்! தில்லியிலிருந்து ஒரு பெருமூச்சுதான் விட வேண்டியிருக்கிறது.

  ReplyDelete
 4. அடடே புத்தக கண்காட்சியில் இந்த புத்தகம் பார்த்தேன்! நீண்ட நாளாக வாங்க ஆசைப்பட்ட நூலும் கூட! ஆனால் விலை இன்னும் கொஞ்சம் கூடுதலாக 200 ஐ தாண்டி பார்த்ததாக நினைவு! பட்ஜெட் உதைத்தமையால் வாங்கவில்லை!

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்வது 'நம்ம சாப்பாட்டுப் புராணம்' சந்தியா பதிப்பகம். விலை 210.

   சாப்பாட்டுப்புராணம் என்ற பெயரில் இந்த புத்தகம் தயாராகும்போது தற்செயலாக நான் அங்கே இருந்தேன். அப்பதான் இதே பெயரில் ஏற்கெனவே சமஸ்ஏழுதியிருக்கார்ன்னு சொன்னேன். அதன்பின் இதுலே நம்ம 'நம்ப' வைச் சேர்த்தாச்சு:-)))) எழுதுனவர் : போப்பு.

   Delete
 5. அருமை! என்னிடமும் இந்தப் புராணம் இருக்கு.

  ReplyDelete
 6. . பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது.படங்களும் பதிவும் அருமை

  ReplyDelete
 7. நானும் ரசித்துப் படித்த புத்தகம். ஆனால் வள்ளல் சீனு இந்த முறை எனக்கு எதுவும் புத்தகம் வாங்கித் தரலையே... இதுல எதோ வெளிநாட்டுச் சதி கலந்திருக்கு. சீனுவைக் ‘கவனி‘க்கணும்....

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா வாத்தியாரே... நான் வாங்கினது பூராவும் உங்களுக்குத் தான் :-)

   Delete
 8. சாப்பிட்டுப் பார்த்துற வேண்டியதுதான் புஸ்தகத்தை!

  ReplyDelete
 9. இப்படி ஒரு புத்தகம் வந்திருப்பது தெரியாது. அருமையான விமரிசனம். புத்தகம் வாங்க முயற்சிக்கிறேன். ஊர் ஊராப் போறச்சே வசதியா இருக்குமே! அதான். :)

  ReplyDelete
 10. 'நல்ல பெரிய புத்தகமாக, எல்லா ஊர்களையும் சேர்த்து இந்த மாதிரி சாப்பாட்டுப் புராணம் வந்தால் நன்றாக இருக்கும். இதைப் படித்தபின்புதான் (நெட்டில்) சென்றமுறை ஸ்ரீரங்கம் வந்தபோது திருவானக்கா நெய் தோசை சாப்பிட்டேன் (ஜோடி தரலை. சிங்கிள் தான்). மதிய நேரத்துல ஃபேமிலி தோசையைப் போட்டுப் பசியை உண்டாக்கிவிட்டீர்களே.

  ReplyDelete
 11. மைசூர்பா சென்னை,பெங்ளூரிலும் தவராமல் கிருஷ்ணா ஸ்வீட்ஸோடுடயது வாங்குவது தவறுவதில்லை. கோவை அன்ன பூர்ணாவில் இருபது வருஷங்களுக்குமுன்னர் சாப்பிட்டது ஆஹா என்ன ருசி. பெறிய உத்தியோகத்திலுள்ளவர்கள்,அவர்கள் மனைவி என அருமையாக சமைத்துப், பரிமாறி சாரிடிக்காக பொது சேவை செய்வதையும் கேள்விப்பட்டேன். சென்னயிலும் என் பிள்ளை போனதாகச் சொன்னான். நான் எர்ணாகுளத்திலிருந்து கோவை போன போது ஏற்பட்ட ருசி. வற்றக்குழம்பும்,பாகற்காய் வறுவலும். இன்னும் எவ்வளவோ? புத்தகமாவது படிக்க வேண்டும். அன்புடன். நேற்று கமென்ட் எழுதி போஸ்ட் செய்யும் போது கைகொடுத்து விட்டது.

  ReplyDelete
 12. //சீனுவின் முகவரியைத் தந்துவிடலாமா// அப்படியே பேங்க் டீடேயிலும் சேர்த்து... :-)

  கடல் பயணங்கள் சுரேஷ் இந்தப் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஊராகா சுற்றிக் கொண்டுள்ளார்...

  கோவை அன்னபூர்ணாவில் இதுவரைக்கும் சாப்பிட்டது இல்லை... ஆனால் எல்லாரும் ஆகா ஓகோ என்கிறீர்கள்.. ஒருமுறை செல்ல வேண்டும் :-)

  ReplyDelete
 13. யாருடைய எலிகள் நாம் என்ற இவரது புத்தகத்தை வாங்கியிருக்கிறேன். இன்னும் வாசிக்கத் துவங்கவில்லை. இந்தப் புத்தகமும் 'ருசிகரமாக' இருக்கும் என்பது உங்களது இந்தப்பதிவின் மூலம் தெரிகிறது. தெரிவித்தமைக்கு நன்றி ஆதி!

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…