Saturday, February 28, 2015

எதிர்பாராத சந்திப்பும்! சில நினைவுகளும்!நேற்று முன் தினம் திருச்சிஉத்தமர் கோவில்வழியே செல்ல நேர்ந்தது. இது மும்மூர்த்திகளின் ஸ்தலம். அப்பாவோடு வந்து நான் தரிசித்த கோவில். என்னுடைய வசதிக்காக, தில்லியிலிருந்து விடுமுறையில் வரும் போது புகுந்த வீட்டுக்கும், பிறந்த வீட்டுக்கும் செல்லத் தோதாய் தன்னுடைய ஓய்வு பெற்ற பணத்தில் இந்த இடத்தில் அழகான வீட்டை கட்டினார். அப்போது ஒரு இருபது நாட்கள் அப்பாவுக்கு சமைத்துப் போட்டுக் கொண்டு இங்கிருந்தேன்.

அந்த பசுமையான நாட்கள் மனதுள் கரைபுரண்டோடின.. வாசலில் உள்ள எனக்கு பிடித்த படிக்கட்டுகளும், திண்ணையும், வீட்டைச் சுற்றி வேப்பமரங்களும், அதிலிருந்து வீசுகின்ற இதமான காற்றும், எதிர்த்தாற் போன்று பெருமாள் கோவிலும், அதிகாலையில் சந்தையிலிருந்து கொண்டு வரும் பச்சைபசேலென காய்கறிகளும், மாலையில் காற்றாட நடந்து உத்தமர் கோவிலுக்கு சென்ற நினைவும், அங்கே வார சந்தையில் விற்ற சாமான்களும் என நினைவுகள் எல்லை கடந்து சென்றன….

அப்பாவோடு கடைசியாக வசித்த நாட்கள். என்னை தனியே குழந்தையுடன் அனுப்ப மனதில்லாமல் தானே உடன் தில்லிக்கு வந்து விட்டு விட்டு, ஒரு வாரம் சென்ற பின் புறப்பட்டு சென்றவர். தில்லியிலிருந்து கிளம்பும் முன்உன்னிடம் மனசு விட்டு பேசணும். ஒரு விஷயத்தை சொல்லணும்என்று சொல்லி சொல்லாமலேயே சென்று விட்டார். ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு பிறகு இந்த இடத்திற்கு சென்றிருக்கிறேன்.

சரி! இந்த இடத்திற்கு திடீரென செல்ல வேண்டியதன் அவசியம் என்ன???

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்என்று சொல்வார்கள் அல்லவா! அது என் வகையில் நிஜமே! ஒரு எழுத்தாளரை சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். அருமையான பெண்மணி. முற்போக்கு சிந்தனையாளர், ஓவியர், மிகவும் எளிமையானவர், நல்ல மனது படைத்தவர். இதை விட வேறு என்ன வேண்டும் இவரை சந்திக்க…… ஏராளமான கதைகளை படைத்தவர், தேசிய விருதும் பெற்றவர். அவர் எழுத்தாளர் வித்யா சுப்ரமணியன்அவர்கள். சென்னையில் வசிக்கும் இவர் ஒரு விசேஷத்துக்காக திருச்சி வந்திருந்தார்.

இந்த வாய்ப்பு ரிஷபன் சார் மூலமாக எனக்கு கிடைத்தது. இதைத் தான் பூவோடு சேர்ந்த நார் என்று சொன்னேன். என்னிடம் வருகிறீர்களா? என்று கேட்டதும், முதலில் மகளின் வகுப்பு ஒன்றுக்காக யோசித்து விட்டு பின்பு இந்த வாய்ப்பு நிச்சயமாக எனக்கு கிடைக்காது என்று வருகிறேன் என்று சொல்லி கிளம்பிவிட்டேன்.

எழுத்தாளர்கள் இருவர் பேசிக் கொண்டிருக்க நான்வென்று வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தேன்…..:) என்னைப் பற்றி சொல்லிக் கொள்கிற அளவில் ஒன்றும் எழுதவில்லையே! அதனால் நான் அறிமுகமானதேராஜி”(ரேவதி வெங்கட்)ன் தோழி என்று தான்…:) எளிமையானவர் என்று சொன்னேன் அல்லவா! சந்தித்த மறுநாளே முகப்புத்தகத்தில் என் தோழமையாகி விட்டார்.

இப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ரிஷபன் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகளை இங்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

Monday, February 23, 2015

திருவரங்கத்து குட்டி பதிவர் மாநாடு!!நேற்று திருவரங்கத்தில் அமர்க்களமாக நடைபெற்ற குட்டி பதிவர் மாநாடு பற்றிய பதிவு இது. ரஞ்சனிம்மா திருவரங்கம் வருவதாக சென்ற மாதம் தெரிவித்திருந்தார். இதையொட்டி திருச்சி பதிவர்கள் ஒன்றாக சந்திக்கலாம் என முடிவு செய்தோம். ருக்மணியம்மா நீண்ட நாட்களாக திருச்சி பதிவர்கள் எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரே 18ந்தேதி சென்னை செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த போது, ரஞ்சனிம்மா வருகை குறித்தும் பதிவர் சந்திப்பு குறித்தும் சொன்னதும், உடனே பயணத்தை ரத்து செய்து அவரது வீட்டிலேயே சந்திக்கலாம் என்று சொன்னதால் அவர் இல்லத்திலேயே பதிவர் மாநாடு ஏற்பாடானது.

மாலை 5 மணிக்கு எல்லோரும் அங்கிருக்க வேண்டும் என்றும் கிளம்புவது அவரவர் செளகர்யப்படி கிளம்பலாம் என்று திட்டம் தீட்டியானது. நானும் ரோஷ்ணியும் 4.30க்கு அங்கு செல்ல, அப்போது தான் வை.கோ சார், ராதா பாலு மேடம், தமிழ் இளங்கோ சார், கீதா மாமி எல்லோரும் உள்ளே சென்று கொண்டிருந்தார்கள். எங்களை வரவேற்றனர் ருக்மணியம்மாவும், ரிஷபன் சாரும்..

தமிழ் இளங்கோ சாரையும், ராதா பாலு மேடத்தையும் நான் சந்திப்பது இதுவே முதல் முறையாக இருந்த போதிலும், வை.கோ சாரின் பதிவுகள் வாயிலாக பார்த்திருந்த காரணத்தால் மிகவும் பரிச்சயமானவர்கள் போன்று தான் தோன்றியது. எல்லோரும் ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்தும், அறிமுகம் செய்து கொண்டும் பேசிக் கொண்டிருக்க, ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி சாரும் வந்தார். அடுத்து இந்த சந்திப்புக்கு காரண கர்த்தாவாய் இருந்த ரஞ்சனிம்மா அவரது கணவருடன் அங்கு வர, கூடவே மாதங்கி மாலியின் அப்பா திரு மாலி சாரும் அங்கு வருகை தந்தார்.

இந்தியா ஜெயித்து விட்ட சந்தோஷத்திலும், பதிவர் சந்திப்பு குறித்த சந்தோஷத்திலும் ”ஸ்வீட் எடு கொண்டாடு” என்று இனிப்புகளை பகிர்ந்து கொண்டு சுவைத்தோம். அடுத்து புகைப்பட படலம். க்ரூப்பாகவும், ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் என மாறி மாறி படம் பிடித்தோம். ஐந்து ஆண் பதிவர்களும், குட்டி பதிவரான ரோஷ்ணியை சேர்த்து ஆறு பெண் பதிவர்களும் என அந்த இடமே கலகலப்பாக இருந்தது. மெஜாரிட்டி இங்கு பெண்களே……:) ரோஷ்ணி தான் எங்களின் புகைப்பட கலைஞர்….:)


“ஆரண்யநிவாஸ்” சிறுகதை தொகுப்பை ராமமூர்த்தி சார் எல்லோருக்கும்  பரிசளிக்க, எனக்கு ஏற்கனவே ரிஷபன் சார் தந்து விட்ட காரணத்தால் என்னிடம் இருக்கிறது என்று சொல்லிவிட்டேன். ரஞ்சனிம்மா தன்னுடைய புத்தகங்களான ”மலாலா” மற்றும் ”விவேகானந்தரை” எல்லோருக்கும் கையெழுத்திட்டு பரிசளித்தார். ருக்மணியம்மா அவரது ”திருக்குறள் கதைகளை” பரிசளித்தார். ரோஷ்ணிக்கு கூடுதலாக சிறுவர் நெடுங்கதையொன்றையும் பரிசளித்தார்.


பதிவுகள் குறித்தும், அவரவர் குடும்பத்தை பற்றியும், அடுத்து எங்கு சந்திக்கலாம் என பல விஷயங்களை பேசினோம். ராதா பாலு மேடம் வெற்றிலை பாக்கு, ரவிக்கைத் துணியுடன் சிப்பியிலான குங்குமச்சிமிழ், பிள்ளையார், விஷ்ணு பாதம் போன்றவற்றை தாம்பூலத்துடன் வைத்து தர ரோஷ்ணிக்கு ஸ்பெஷலாக ஒரு பவுச்சில் காதணிகள், கழுத்துக்கு மணி, பேண்ட், க்ளிப் போன்றவற்றை தாம்பூலத்துடன் தந்தார்.

முதலில் கீதா மாமி உறவினரின் வருகையினால் சீக்கிரமே அங்கிருந்து கிளம்ப, நாங்கள் எல்லோரும் இன்னும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ருக்மணியம்மா தன் கையினால் சமைத்து வைத்திருந்த சிற்றுண்டிகளான இட்லி, சாம்பார், சட்னி, உருளைக்கிழங்கு போண்டா, பால் இனிப்பு ஆகியவற்றை சுவைத்தோம். காபி என்ற பேச்சு துவங்கும் முன்னரே வழக்கம் போல எனக்கு வேண்டாம் என அலற, ரஞ்சனிம்மா ”காபி குடித்தேயிராத நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அற்புத தருணங்களை இழந்துவிட்டீர்கள்” என்றார்……:)) என்ன செய்வது!!!

சுமார் ஏழு மணியளவில் அங்கிருந்து நாங்கள் கிளம்பத் துவங்க ஒவ்வொருவராக விடைபெறத் துவங்கினர். ருக்மணியம்மாவும் எல்லோருக்கும் தாம்பூலம் தர பெற்றுக் கொண்டு வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலையாக என்ன செய்தேன் தெரியுமா????


அலைபேசியில் தில்லிக்கு ஒரு அழைப்பை விடுத்து இனிமையான தருணங்களை என் துணையிடம் பகிர்ந்து கொண்டேன்…….:)))) மாலை சிற்றுண்டியே நிறைந்திருந்த காரணத்தால் இரவு ஆளுக்கொரு தம்ளர் பாலை குடித்து விட்டு உறங்கச் சென்றோம்.

இனிமையான மாலைப் பொழுது, சுவையான சிற்றுண்டி, மனதிற்கினிய மனிதர்கள் என எல்லாப் புகழும் ரஞ்சனிம்மாவுக்கே!! வை.கோ சார் தன்னுடைய பாணியில் இந்த சந்திப்பை பற்றி படங்களுடன் சுவையான தொடராக இன்று ஆரம்பித்திருக்கிறார்..

கீதா மாமி எழுதிய பதிவு - இதோ

ரிஷபன் சார் எழுதிய பதிவு - நட்பின் சந்திப்பு

தமிழ் இளங்கோ சார் எழுதிய பதிவு - ஸ்ரீரங்கம் - வலைப்பதிவர்கள் சந்திப்பு - 2015

ராதா பாலு மேடம் எழுதிய பதிவு - மூத்த பதிவர் ருக்மணி சேஷசாயி அவர்கள் வீட்டில் பதிவர் சந்திப்பு

ஆர்.ஆர்.ஆர் சார் எழுதிய பதிவு - ஸ்ரீரங்கம் பதிவர் மாநாடு!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


Wednesday, February 18, 2015

எங்க வீட்டு சாம்பார்பொடி!

சாம்பார்பொடி அல்லது குழம்பு பொடி, குழம்பு மிளகாய்த்தூள் என்று அழைக்கப்படும் பொடி, கடைகளில் கிடைத்தாலும் பெரும்பாலானவர்கள் வீட்டில் அரைத்து செய்வதை கடைபிடித்து வருகிறார்கள். அதில் நானும் ஒரு ஜீவன். கடைகளில் விற்பது ஏனோ எனக்கு பிடிப்பதில்லை. சிலசமயம் அதில் சோம்பு சேர்த்து விடுகிறார்கள்.

இங்கு திருவரங்கத்திலோ நான் எப்போதுமே ஆச்சரியப்படுவது என்னவென்றால் பொங்கல் முடிந்தவுடன் வாசலில் மஞ்சள் விற்க துவங்வார்கள். (அதாங்க! மஞ்சள்கொத்தில் இருக்குமே பச்சை மஞ்சள்) அதை வாங்கி துண்டு துண்டாக நறுக்கி வெயிலில் நன்கு காயவைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்வார்கள். வருடம் முழுவதற்கும் சமையலுக்கு, குளிக்க, கோவிலுக்கு கொடுக்க என்று எல்லாவற்றுக்கும் அந்த மஞ்சள்தூள் தான்.

தில்லியில் இருந்தவரை அங்குள்ள மிஷினில் கோதுமை மாவு மட்டுமே அரைத்து தருவார்கள் என்பதால் என் மாமியார் நாங்கள் இங்கு வரும் போதோ அல்லது அவர்கள் அங்கு வரும் போதோ அவர் அரைத்து வைத்திருக்கும் சாம்பார்பொடியை கொடுப்பார். நடுவில் ஒரு இரண்டு ஆண்டுகள் எங்களாலும் வர முடியவில்லை. அவர்களும் வராததால் தட்டுபாட்டில் EASTERN SAMBAR POWDER வாங்கி உபயோகப்படுத்தினேன்.

எங்கள் வீட்டு வழக்கப்படி தினமுமே சாம்பாருக்கு கொஞ்சமாக சாமான்கள் போட்டு வறுத்து அரைத்து தான் வைப்போம். அதனால் சாம்பார்பொடியின் உபயோகம் ரசத்துக்கும், வத்தக்குழம்பு போன்றவற்றுக்கும் தான்….:) இங்கு வந்த பின் மாமியாரிடம் அளவு கேட்டு எழுதி வைத்துக் கொண்டு நானே காயவைத்து மிஷினில் அரைத்துக் கொள்கிறேன்.

ஒரு விஷயம் தெரியுமா?? நான் மிஷினுக்கு போய் அரைப்பதே இந்த மூன்று ஆண்டுகளாகத் தான். அதுவரை நான் போனதேயில்லை…..:) கோவையில் இருந்தவரை எங்கள் பகுதியாம் ரேஸ்கோர்ஸ் அரசு குடியிருப்பில் மிஷின் கிடையாது. அப்பாவோ, தம்பியோ சைக்கிளிலோ, பேருந்திலோ ”புளியகுளம்” (19 அடி முந்தி விநாயகர் இருக்கிறாரே) என்ற இடத்திற்கு போய் அரைத்து வந்துவிடுவார்கள். என்னை எங்கேயுமே அனுப்ப மாட்டார்கள்….:)

சரி! விஷயத்துக்கு வருவோம்….


தேவையான பொருட்கள்:- (ஏறக்குறைய 1 கிலோ பொடிக்கு)

வரமிளகாய் – ¼ கிலோ
தனியா – 400 கிராம்
விரலி மஞ்சள் – 50 கிராம்
கடலைப்பருப்பு – 25 கிராம்
துவரம்பருப்பு – 50 கிராம்
மிளகு – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 25 கிராம்
வெந்தயம் – 2 டீஸ்பூன்


செய்முறை:-

எல்லாப் பொருட்களையும் வெயிலில் நன்கு காயவைத்து மிஷினில் கொடுத்து அன்றே அரைக்க வேண்டியது தான். விரலிமஞ்சளை நன்கு நசுக்கி விட்டு காயவைத்து அரைக்கணும். தனியா காரத்திற்கு தகுந்தாற்போல் கூடுதலாகவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ செய்யலாம். நானே நேற்று மிளகாய் பயங்கர காரம் என்பதால் 400க்கு பதிலாக 500 ஆக சேர்த்தேன்….:) அமாவாசை, சிவராத்திரி, ஏகாதசி போன்ற நாட்களில் காயவைத்து அரைத்தால் வண்டு வராது என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்வதுண்டு. ஈரம் படாமல் பாட்டிலிலோ, டப்பாவிலோ போட்டு வைத்துக் கொண்டு, அன்றாட உபயோகத்திற்கு மட்டும் கொஞ்சமாக ஒரு பாட்டிலில் போட்டு உபயோகித்தால் கடைசி வரை மணமாகவே இருக்கும்.

என்ன நட்புகளே! உங்கள் வீட்டிலும் இந்த செய்முறையில் அரைத்து பார்ப்பீர்கள் தானே…..:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.


Tuesday, February 17, 2015

சதுரகிரியும் சில தகவல்களும்!மஹாசிவராத்திரியான இன்று இப்பதிவை எழுதுவது சிறப்பு என்று நினைக்கிறேன். இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் ”தொடத் தொட தங்கம்” என்ற நாவலிலும், ”அவள் ஒரு சாவித்திரி” என்ற நாவலிலும் சதுரகிரியைச் சுற்றியே கதை. அங்கு வீற்றிருக்கும் மகாலிங்க சுவாமியும், சித்தர்களும் கதை முழுதும் வியாபித்திருக்க, சதுரகிரியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கூகிளில் தேடினேன். இமயமலைக்கு அடுத்ததாக ஈசன் வசிக்கும் இடம் எனவும் தென்னந்தியாவின் கயிலாயம் என்றும் போற்றப்படும் சதுரகிரி எங்கே உள்ளது? தெரிந்து கொள்வோம் வாருங்கள்…மதுரையிலிருந்து வத்திராயிருப்பு சென்று அங்கிருந்து தாணிப்பாறை என்ற இடத்தை அடைந்தால் அதுவே சதுரகிரியின் அடிவாரம் ஆகும். முதல் முறையாக ஏறுபவர்களுக்கு நான்கு முதல் ஐந்து மணிநேரம் ஆகலாம் எனவும், அடிக்கடி செல்பவர்களுக்கு இரண்டு முதல் மூன்று மணிநேரம் ஆகலாம் எனவும் சொல்லப்படுகிறது. மலை மேலே மின்சாரமோ, செல்ஃபோன் டவரோ கிடையாதாம். பெளர்ணமி, சிவராத்திரி போன்ற நாட்களில் மக்கள் கூட்டம் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

மலையே சிவரூபம் ஆதலால் காலணிகளை தவிர்த்து சிவ சிந்தனையோடு சென்று வருபவர்களுக்கு பயணமும் அதில் கிடைக்கும் அனுபவமும் ஆச்சரியமூட்டுவதாக அமையும் என்று சொல்லப்படுகிறது. அரிய வகை மூலிகைகளும், மரங்களும் இங்கு காணப்படுகிறது.

சித்தர்களைப் பற்றிய தகவல்கள் ஆச்சரியப்படுத்துகின்றது. 116 வயது வரை கூட வாழ்ந்துள்ளனர், கூடு விட்டு கூடு பாய்தல், இறந்தவனையும் பிழைக்க செய்தல், எப்பேர்ப்பட்ட நோயையும் குணமாக்குதல் என்று பல விஷயங்களை வாசித்தேன். சித்தர்கள் தங்கள் உண்டியை சுருக்கி ஆயுளை பெருக்குகின்றனர். நாம் அதற்கு எதிர்மாறாக செயல்படுகிறோம். உப்பு, புளி, காரத்தை முடிந்தளவு குறைத்து சாப்பிட்டால் ஆரோக்கியம் மேம்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

நான் வாசித்த சில தகவல்கள்:-

தினமும் ஒரு நெல்லிக்காய் வெறும் வயிற்றில் சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டுமாம். ஒருநாள் கூட தவறாமல் 1008 நெல்லிக்காய்களை நாம் சாப்பிட்டு முடிக்கும் போது வாழ்நாளில் நமக்கு கண்புரை வராதாம், தலைமுடி முதிராது, ஜலதோஷமே பிடிக்காது, பல்லும் விழுந்து பொக்கை ஏற்படாது, மூட்டுவலியும் வராது எனவும் சொல்லப்பட்டுள்ளது.

சிறியா நங்கை இலைகளையோ, வேர்த்தண்டையோ கைவசம் வைத்துக் கொண்டால் விஷப்பூச்சிகள் கிட்ட வரவே வராதாம்.

புங்கை மரக்கட்டையை கொளுத்தி பிடித்தால் அந்த புகைக்கு கொசு வரவே வராது.

அவுரிச் செடியை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டாலோ இல்லை இதன் சாற்றினை காயத்தின் மேல் பூசினாலோ காயம் ஆறும் என்றும், விஷக்காயங்கள் ஆறுவதோடு வெண் குஷ்டமும் குணமாகும் என்றும்,

புல்லாந்தியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதாகவும், வெயிலில் காயவைத்து பொடி செய்து கஷாயம் வைத்து 7 தடவை குடித்தால் தலைமுடியால் பாறையையும் கட்டி இழுக்கலாம் எனவும் உடம்பும் பொன்னாக மின்னும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மூலிகைகளின் சிறப்புகளையும் பயன்களையும் வாசிக்கும் போது எவ்வளவு ஆச்சரியம்.

ஒரு கோடி:-


சித்தர்கள் பற்றி நான் தேடிய போது கிடைத்த ஒரு கோவில் விழுப்புரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ”ஒரு கோடி” கிராமம். ஆமாங்க! ஊர் பெயரே ஒரு கோடி தான். அவ்வளவு சித்தர்கள் இங்கு வந்து பூஜித்துள்ளனராம். உலகிலேயே மிகச்சிறிய வாசல் உள்ள கோவில் என்ற பெயரும் இதற்குள்ளது. ஒரு கண்ணை வைத்து ஈசனை பார்க்குமளவு தான் வாசல். ஈசன் அபிராமேஸ்வரர் என்ற பெயரிலும், அம்மன் முக்தாம்பிகையாகவும் இங்கு அருள்பாலிக்கின்றனர். மேலும் பல சுவையான தகவல்களை இங்கு சென்று பாருங்கள்.

சதுரகிரியைப் போன்றே சிறப்புமிக்கது வெள்ளியங்கிரி. இது கோவையை அடுத்தே உள்ளது. திருவண்ணாமலையும் சித்த புருஷர்கள் வாழும் பூமி தான். 

இங்கேயெல்லாம் சென்று வந்தவர்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

படங்கள் உதவி -இணையம்


Friday, February 13, 2015

பாலங்கள்! – சிவசங்கரி

சமீபத்தில் நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகம் தான் சிவசங்கரி அவர்களின் பாலங்கள்”. இந்த புத்தகம் மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண்களின் வரலாற்றை பறைசாற்றுகிறது. 1983ல் வெளிவந்த இந்த கதை ஆனந்த விகடனில் தொடராக வந்துள்ளது. அப்போது மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண்களையும் அவரவர் தனித்தன்மையோடு தெளிவாக காண்பிக்க திரு கோபுலு, திரு மாருதி, திரு ஜெயராஜ் என மூன்று ஓவியர்களும் இதில் வரைந்துள்ளனர்.

வானதி பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தின் பதினான்காம் பதிப்பை தான் நான் வாசித்திருக்கிறேன். கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் பத்தாயிரம் ரூபாய் பரிசு பெற்ற கதையாகும். சரி! இவ்வளவு சிறப்பு மிக்க கதையைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.முதல் தலைமுறையான 1907 லிருந்து 1931 வரை…. இந்த தலைமுறையைச் சேர்ந்த பெண்ணான சிவகாமுவைப் பற்றிய கதை. ஏழு வயதில் பதினோரு வயது சுப்புணியுடன் திருமணம். பதிமூன்று வயதில் பெரியவளாகி அடுத்தடுத்து வரிசையாக குழந்தைகள். இருபது வயதில் விதவையாகி நார்மடி உடுத்தி வாழ்ந்த அவலம். இதில் அன்றைய காலகட்டத்தின் வாழ்க்கை முறை, திருமண சடங்குகள், பிரசவம் என சகலமும் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

அடுத்த தலைமுறை 1940 லிருந்து 1964 வரை உள்ள காலகட்டம். இந்த தலைமுறையைச் சேர்ந்த மைதிலியின் வாழ்க்கை இங்கே சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பெண்களுக்கு படிப்பு அனுமதிக்கப்பட்டு விட்டதால் ஓரளவு படித்து, பதினெட்டு வயதில் வெங்கிட்டுவுடன் திருமணம். பிறந்த வீட்டில் கட்டுப்பாட்டுடன் வளர்ந்தாலும் புகுந்த வீட்டில் யதார்த்தவாதியான வெங்கிட்டுவால், வாழ்க்கை சுமூகமாக கடக்கிறது. தான் கற்றுக் கொள்ள விரும்பிய பரதத்தை தன் மகள் பத்மினியைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்கிறாள்.

அடுத்த தலைமுறை 1965 முதல் 1998 வரை. இந்த தலைமுறையைச் சேர்ந்த சாருவின் வாழ்க்கை இங்கே சித்திரிக்கப்பட்டுள்ளது. அப்பா தரும் சுதந்தரத்தால் நன்றாக படித்து நல்ல வேலையிலும் பணிபுரிந்து, சுரேஷை மணக்கிறாள். திருமணமான பத்து நாட்களிலேயே அவன் ஒரு மிருகம் எனப் புலப்பட, பொறுத்துக் கொண்டு சில மாதங்கள் வாழ்ந்து ஒரு கட்டத்தில், தன் இச்சைக்கு ஒத்து வராத இவள் முன்னேயே விலைமாதுவை கூட்டிக் கொண்டு  வர அவனை விட்டு பிரிகிறாள். இவளுக்கு அபர்ணா என்ற மகள் பிறக்கிறாள். பின்பு அவளுடைய வாழ்க்கை என்று கதை நகர்கிறது.

இப்படியாக மூன்று தலைமுறையிலும் உள்ள ஒவ்வொரு விஷயங்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் ஆசிரியர். மூத்த தலைமுறையில் உள்ள சடங்குகளும், சம்பிரதாயங்களும் வியக்க வைக்கிறது. பெண்களின் படிப்பு கேள்விக்குறியாக இருந்த காலமாதலால் பிறப்பு எடுத்திருப்பதே ஒரு வீட்டுக்கு மருமகளாக சென்று வாரிசை உருவாக்கத்தான் என்பது போல் சொல்லப்பட்டுள்ளது. அம்மாவுக்கும், மகளுக்கும் ஒரே சமயத்தில் பிரசவம். வரிசையாக பிறக்கும் பிள்ளைகள். சிறுவயதிலேயே விதவைக் கோலம்.

ஓரளவு செய்திகளும், அப்போது வழக்கிலிருந்த சொல்லாடல்களும் என் மாமியார் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த புத்தகத்தை வாசிக்கும் போது அவர் சொல்லியிருந்தது அத்தனையும் கண் முன்னே நிழலாடியது. அவருக்கு வீட்டுலேயே தான் மூன்று பிரசவங்களும்... ஜன்னி வந்துவிடும் என்று காலை உணவுக்கு பின் தரும் ஒரு குவளை தண்ணீர் தான் அன்று முழுவதற்குமாம்... இப்படி பல விஷயங்கள்..

மூன்று தலைமுறையிலும் சிவகாமு அப்பாவி, சாரு பாவப்பட்டவள், இதில் மைதிலி தான் கொடுத்து வைத்தவள் என்பேன். ஓரளவு படித்து, யதார்த்தவாதியான வெங்கிட்டுவால் கட்டுப்பாடுகளை புறந்தள்ளி வைத்து விட்டு எல்லா வசதிகளும் கிடைக்கப் பெற்று நன்றாக வாழ்ந்திருக்கிறாள். ஒரு பெண்ணுக்கு நல்ல துணை அமைந்து விட்டால் வாழ்க்கை சுமூகமாக இருக்கும்.. 

அம்மாவாக இருக்கும் போது எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும் கதாபாத்திரங்கள் பாட்டியானதும் பலவித கட்டுப்பாடுகளை விதிப்பதும், மாமியார் ஆனதும் அதட்டுவதும் என ஆச்சரியத்தைத் தருகிறது. இப்படிப்பட்ட கடந்த காலத்தையும், எதிர் காலத்தையும் இணைப்பது தான் பாலங்கள். 

நான் ரசித்த இந்த புத்தகத்தை நீங்களும் வாசித்து இன்புறலாமே…

இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

வானதி பதிப்பகம்
23, தீனதயாளு தெரு
தி.நகர், சென்னை – 600017.
மொத்த பக்கங்கள் – 340
2012ல் வெளிவந்த பதினான்காம் பதிப்பின் படி இதன் விலை – ரூ120.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

Tuesday, February 10, 2015

சந்தேஷ் - ருசிக்கலாம் வாங்க!சமீபத்தில் குடும்ப நண்பரின் மகனுக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த வாரம் மணமக்களுக்கு விருந்து கொடுக்கலாம் என முடிவு செய்தேன். பாயசம் போக இலையில் பரிமாற வழக்கமாக செய்யும் மைசூர்பாகு போல் வேண்டாமென பாலில் செய்யும் இனிப்பாக இருக்கட்டும் என முடிவெடுத்தேன்.

நான் வழக்கமாக தொடரும் சமையல் தளமான GAYATHRI’S COOKSPOTல் தேடியதில் பெங்காலி இனிப்பான சந்தேஷ் என்னைக் கவர்ந்தது. செய்வதற்கும் எளிமையாக இருக்கவே குறித்துக் கொண்டேன். முதலில் 1 லிட்டர் பாலில் பிஸ்தா சந்தேஷ் செய்து அதை படம்பிடித்து முகப்புத்தகத்தில் பகிர்ந்திருந்தேன். அங்கு கருத்து சொன்ன துளசி டீச்சர் கலர் சேர்த்திருக்கலாமே எனச் சொல்ல, அதே சமயம் 1 லிட்டர் பாலில் சிறிய அளவிலான 7 சந்தேஷ் தான் வந்தது.
 பிஸ்தா சந்தேஷ்

மணமக்களோடு உறவினர் சிலரும் சேர்ந்து வருவதால் கூடுதலாக ஒன்று கேட்டால் கூட என்ன செய்வது என்று மீண்டும் அடுத்த நாள் 1 லிட்டர் பாலில் பாதாம் சந்தேஷ் செய்தேன். பாதாம் என்பதால் மஞ்சள் கலரும் துளி சேர்த்தேன். தூள் போங்க….

பகிர்ந்து கொண்ட காயத்ரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. படிப்படியான செய்முறை படங்களுடன் நீங்கள் அவர்களின் தளத்தில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

பால் – 1 லிட்டர்
சிட்ரிக் ஆசிட்– ½ தேக்கரண்டி (எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்)
சர்க்கரை – அரை கப்
பிஸ்தா (அ) பாதாம் – கால் கப்

செய்முறை:-

பாலை காய்ச்சிக் கொள்ளவும். பொங்கி வரும் போது தண்ணீரில் சிட்ரிக் ஆசிட்டை சேர்த்து பாலில் விட்டு அடுப்பை அணைக்கவும். ஒரு கரண்டியால் மெள்ளக் கிளறி விடவும். பால் திரிந்து பனீர் தனியாகவும் தண்ணீர் தனியாகவும் வந்திருக்கும். இதை மெல்லிய துணியில் வடிகட்டி சிறிது நேரம் தண்ணீரை வடிய விடவும். ஒரு வாணலியில் சர்க்கரையையும் பனீரையும் சேர்த்து ஐந்து நிமிடம் போல வதக்கவும். சர்க்கரை கரைந்து பனீரும் ஒன்றாக சேர்ந்திருக்கும். அடுப்பை நிறுத்தி ஆற விடவும்.

மிக்சி ஜாரில் பிஸ்தா பருப்பை பொடித்துக் கொள்ளவும். அதை தனியே வைத்துக் கொண்டு, அதே ஜாரில் பனீர் கலவையை விட்டு விட்டு அரைக்கவும். இப்போது அந்த பனீர் கலவையுடன் பிஸ்தா தூளையும் சேர்த்து பிசைந்து வேண்டிய வடிவத்தில் செய்து கொள்ளலாம். மேலே அலங்கரிக்க பொடியாக நறுக்கிய பிஸ்தாவை தூவினால் சந்தேஷ் தயார்.

பாதாம் சந்தேஷ்

செய்வதற்கு மிகவும் எளிமையாகவும், ருசியில் அபாரமாகவும் இருந்தது. தில்லியில் கொட்டிக் கிடக்கும் இனிப்புகளில் சந்தேஷை பலமுறை பார்த்திருந்தும் ருசித்ததில்லை. ஆனா பாருங்க! நானே செய்து தான் ருசிக்கணும்னு இருக்கும் போது மாற்றவா முடியும்!

இந்த சந்தேஷை நீங்களும் செய்து ருசிக்கலாமே…

விருந்துக்காக நான் செய்த எளிமையான சமையல் மெனு இதோ…குடமிளகாய், முள்ளங்கி, காரட் போட்டு அரைத்து விட்ட சாம்பார்
தக்காளி ரசம்
உருளைக்கிழங்கு கறி
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
சேமியா பாயசம்
கொண்டக்கடலை வடை
அப்பளம்
இவற்றுடன் சாதம், தயிர் மற்றும் ஊறுகாய்..

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

Thursday, February 5, 2015

சாப்பாட்டுப் புராணம்! – சமஸ்!
சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம் சமஸ் அவர்களின் சாப்பாட்டுப்புராணம். பாலஹனுமான் அவர்களின் பதிவுகளில் இந்த புத்தகத்தின் சில பகுதிகளை பகிர்ந்திருந்த போது வாசித்தவுடன் வாங்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் புத்தக கண்காட்சிக்கு சென்ற போது எதுவும் நினைவில் இல்லை. எதேச்சையாக ஒரு பதிப்பகத்தில் (எங்கு என்று நினைவில்லை! பாலகுமாரன் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தனவே? நர்மதாவா?) பார்த்தவுடன் வாங்கிக் கொண்டேன். (வாங்கிக் கொடுத்த சீனுவுக்கு நன்றி. காசு கூட வாங்கிக் கொள்ளவில்லை)


திருச்சி வந்தவுடன் என்னவரும் நானுமாக மாற்றி மாற்றி வாசித்து ருசித்தோம்! தினமணி கொண்டாட்டத்தில் ஈட்டிங் கார்னரில் கட்டுரையாக வந்ததை புத்தகமாக வெளியிட்டுள்ளார் சமஸ் அவர்கள். மன்னார்குடியைச் சேர்ந்த சமஸ் அவர்கள் தினமணி, விகடன், தி இந்து ஆகியவற்றில் பணியாற்றியவர். இந்த வருடம் சமஸ் அவர்களின் ”யாருடைய எலிகள் நாம்?” என்ற புத்தகம் வெளிவந்துள்ளது..

ஈட்டிங் கார்னரில் எழுதுவதற்காக தெரிந்த அளவு அல்லது ஏனோ தானோ என்று எழுதி விடாமல் வரையறைகளை வகுத்துக் கொண்டு, அதாவது பெரும்பாலானவர்களின் விருப்பமானதாக, செயற்கை பொருட்கள் கலப்படம் இல்லாதவையாக, முதல் தலைமுறை கடையாக இல்லாமல், தரத்தையும் சுத்தத்தையும் பேணுபவராக என ஒவ்வொரு விஷயத்திலும் மெனக்கெட்டு தகவல்களை சேகரித்துள்ளார்.

மாவட்டவாரியாக பட்டியலிட்டு முதல்முறை சாதாரணமாக சென்று உண்ட பின்னர், பட்டியலில் முதல் இடத்தை பெற்றிருப்பவர்களை மீண்டும் ஒருமுறை சென்று தரம், வரலாறு, பக்குவம் என அத்தனை தகவல்களையும் சேகரித்து சுவைப்பட சொல்லியுள்ளார். இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் உணவகங்கள் அனைத்தும் பெரியவை அல்ல. ரோட்டுக்கடை முதல் விடுதி வரை அனைத்து தரப்பும் இடம்பெற்றுள்ளது. ஒரு ஊருக்கு செல்லும் போது இந்த புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும்.

ஒரு கோப்பை டீயில் ஆரம்பித்து திருவையாறு அசோகா, நீடாமங்கலம் பால்திரட்டு, கும்பகோணம் பூரி பாஸந்தி, பாம்பே பாதாம்கீர், கமர்கட் கடலைமிட்டாய் பொரி உருண்டை என சகலமும் விருந்தாக படைக்கப்பட்டுள்ளது.


கோவை அன்னபூர்ணாவின் ரவா கிச்சடியும் சாம்பார் வடையும், கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மைசூர் பாகும் வாசிக்கும் போது கோவைக்காரியான எனக்கு பெருமையாக இருந்தது. தமிழக சமையல் முறைகளில் 1978ல் நீராவி முறையை அறிமுகப்படுத்தியவர்கள் கோவை அன்னபூர்ணாவை சேர்ந்தவர்கள் தானாம், அதே போல் நாட்டிலேயே முதல்முறையாக 1985ல் ஒரே மைய சமையலறை முறைக்கு மாறியதும் இவர்கள் தானாம்.


சிறுவயதில் அன்னபூர்ணாவின் ஃபேமிலி தோசையை பார்த்து பிரமித்ததும், அவர்களின் சாம்பார் இட்லி, சாம்பார் வடை, சேவை என அப்பா பார்த்து பார்த்து வாங்கித் தந்ததும், கிருஷ்ணா ஸ்வீட்ஸின் வாயில் போட்டாலே கரையும் மைசூர் பாகும் நினைவில் பசுமையாய் இன்றும் உள்ளன.

சமஸ் அவர்களின் கட்டுரைகள் பெரும்பாலும் தஞ்சை மாவட்டத்தை சுத்தியே உள்ளதும், ஆங்காங்கே இந்த வாரம் மிட்டாய் வாரம், ஐஸ்கிரீம் வாரம் என்று நாளிதழில் வந்தது என்பது தெள்ளத்தெளிவாக தெரிவதும் தான் திருஷ்டியாய் தெரிகிறது…:) மற்றபடி சமஸ் அவர்களின் ஈடுபாடு வரிக்கு வரி நமக்கு உணர்த்துகிறது.

பாராட்டுகள் சமஸ். மேலும் பல புத்தகங்கள் இவருடைய எழுத்தில் நாம் வாசிக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

இந்த புத்தகத்தை நீங்கள் வாங்க வேண்டிய முகவரி:- (சீனுவின் முகவரியைத் தந்துவிடலாமா!!!)

துளி வெளியீடு, சென்னை.
தொடர்புக்கு - thuliveliyeedu@gmail.com
தொலைபேசி எண் – 9444204501
புத்தகத்தின் விலை – ரூ 80.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.