Thursday, January 22, 2015

அக்கா!! – என் பார்வையில்!


சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்ற போது கிடைத்த இரண்டு மணி நேரங்களில் பிரபலமான பதிப்பகங்களுக்கு சென்று வரலாம் என கணேஷ் சாரிடம் சொல்ல, அவர் உடனே ஓடோடிச்சென்று விகடன் பதிப்பகத்தார் வெளியிட்டிருந்த வழிகாட்டியை எடுத்து வந்தார். அதில் நான் சொன்ன பதிப்பகங்களின் எண்ணை பார்த்து எங்களை அங்கே அழைத்தும் சென்றார். எந்த வித திட்டமிடலும் இல்லாமல் சென்றதால் அங்கே கொட்டிக் கிடந்த புத்தகங்களில் எதை வாங்க? எதை விட? என்று தெரியவில்லை….:) என்னைக் கவர்ந்த சில புத்தகங்களை வாங்கிக் கொண்டேன். உதவி புரிந்த கணேஷ் சாருக்கு மிக்க நன்றி.



நாங்கள் வாங்கிய புத்தகங்களுள் துளசி டீச்சரின் ”அக்காவும்” ஒன்று. திருச்சிக்கு வந்தவுடன் வாசிக்கத் துவங்கினேன். சிறுபிராயத்திலிருந்து தான் சந்தித்த அக்காக்கள் பற்றிய கதை இது. 

“கலி அவ்வளவா முத்தாத அந்தக் காலத்திலேயும் சரி இப்போ முத்திக்கிடக்கும் இந்தக் காலத்திலும் சரி, அக்காக்கள் அனைவருமே ஒரு விதத்தில் சின்னத்தாய்கள். நம்மில் சிலருக்குச் சொந்த அக்கா இல்லை என்றாலும்கூட பக்கத்து வீட்டு அக்காக்கள் பரிச்சயமாக இருப்பாங்கதானே? இந்த அக்கா உங்க அக்காக்களை ஒரு விநாடி நினைவுக்குக் கொண்டு வருவாங்க என்பது நிச்சயம்.”

இப்படி தன் நூலில் எழுதியுள்ள துளசி டீச்சர், அக்காக்கள் தன் வாழ்வில் இடம்பெற்ற விதத்தை கதை போல நமக்கு சொல்கிறார். சிறுபிராயத்திலிருந்து செய்து வந்த சுட்டித்தனங்களை சொல்லும் போது, வீட்டுக்கு அருகே இருக்கும் துவக்கப்பள்ளிக்கு காலையில் வாசல் வழியாக செல்வாராம். மாலைக்குள் யாரையாவது அடித்து விட்டு பின் வழியே சுவரில் இருக்கும் பெரிய ஓட்டை வழியாக தப்பித்து விடுவாராம். மறுநாள் பழி வாங்க காத்திருக்கும் பசங்களிடமிருந்து தப்புவதற்காக, மணி அடித்த பின்னர் பெரியவர்கள் யாரையேனும் துணைக்கு அழைத்துக் கொண்டு சென்று விட்டு, மாலை வாசல் அருகே அவர்கள் பழி வாங்க காத்திருக்கையில் சுவர் ஓட்டை வழியே தப்பித்து விடுவாராம்….:))

தான் ஒரு பூப்பிசாசு என்று சொல்லும் இவர், அக்காக்களுடன் தான் சண்டை போட்டு கூடுதலாக வைத்துக் கொண்ட பூக்கள் முதல் ஒவ்வொரு விஷயத்தையும் கதை போல சொல்லும் போது நாமும் இப்படியெல்லாம் நம்ம சிறுவயதில் இருந்திருப்போமா? தவறவிட்டுட்டோமோ என்று ஏக்கம் தான் மேலிடுகிறது…..:) தன்னுடைய பெரியக்காவுக்கு பிறந்த ஏழு குழந்தைகளும், அவர்களுடனான வாழ்க்கை ஓட்டத்தில் அக்காவே மாறிப் போன மாயத்தையும், சின்னக்கா கட்டு செட்டாக குடும்பம் நடத்திய அழகையும், இவர்களுக்கு நடுவில் ஆரோக்கியம் அக்கா, மதீனாக்கா, பாலாக்கா என்று அண்டை வீட்டு அக்காக்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்களை படிக்கையில் நமக்கும் நம் அண்டை வீட்டு அக்காக்களின் நினைவு வந்து தான் போகிறது.

ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொள்ளாத அண்ணனுக்கும், அக்காவுக்கும் நடுவில் இவர் மாட்டிக் கொண்டு தவித்ததை வாசிக்கையில் நமக்கு சிரிப்பு தான் வருகிறது. அண்ணன் அசிங்கமாக பின்னி விட்ட தலைமுடியை அவிழ்த்து விட்டு அக்கா பின்னி விடுவாராம். அக்கா பின்னியதால் அண்ணன் அதை அவிழ்த்து விட்டு மீண்டும் பின்னி விடுவாராம். இப்படியே பள்ளி நேரம் துவங்குகிற நேரம் வரையில் இருவரிடமும் மாட்டிக் கொண்டு இருந்து விட்டு போகும் வழியில் ஆயாவிடம் மீண்டும் ஒருமுறை பின்னிக் கொள்வாராம்….:))

வீட்டில் கடைக்குட்டியாக பிறந்த இவர் தன்னுடைய வாழ்நாளில் நடந்த ஒவ்வொரு சம்பவங்களையும் நினைவில் நிறுத்தி அச்சு பிசகாமல் சுவையுடன் தந்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது. சந்தோஷமாக கடந்து வந்த சிறுபிராயம் பின்பு காலத்தின் ஓட்டத்தில் நிதர்சனமான மனிதர்களால் மாறிப் போன விதத்தையும் நமக்கு சொல்லாமல் சொல்லிப் போகிறார்.

வீட்டில் மூத்தவளாக பிறந்து நிதர்சனத்தில் பல அனுபவங்களை சிறுவயதிலியே பெற்று விட்டு, திருமணம் கூட நானே பொறுப்பேற்று செய்து கொண்ட சமயத்தில் பலமுறை நினைத்ததுண்டு எனக்கும் ஒரு அக்காவோ அண்ணாவோ இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். சுமையை தோள் கொடுத்து ஏற்றிருப்பார்களே என்று??? ஆனால் அவர்களுக்கும் பொறுப்பு இருந்தால் தானே???? சரி! என் கதை இங்கெதற்கு……:))

சந்தியா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள துளசி டீச்சரின் அக்காவை நீங்களும் வாசித்து உங்கள் வாழ்வில் கடந்து வந்த அக்காக்களை நினைவு கூலாமே…. இவரின் பிற நூல்கள் ஃபிஜித்தீவு, என் செல்லச் செல்வங்கள், நியூசிலாந்து ஆகியவையாகும். இதில் ஃப்ஜித்தீவு குறித்த எனது பார்வை இங்கே….

இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு,
9வது அவென்யூ,
அசோக் நகர்,
சென்னை – 600083.
தொலைபேசி எண் – 044 24896979
நூலின் விலை –ரூ 100
மொத்த பக்கங்கள் – 136

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

17 comments:

  1. சுவாரஸ்யமான விமர்சனம்...

    துளசி அம்மாவிற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Haiyyo!!!!

    You made my day Roshiniamma.

    Thanks a lot!

    ReplyDelete
  3. //தன்னுடைய வாழ்நாளில் நடந்த ஒவ்வொரு சம்பவங்களையும் நினைவில் நிறுத்தி அச்சு பிசகாமல் சுவையுடன் தந்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது. சந்தோஷமாக கடந்து வந்த சிறுபிராயம் பின்பு காலத்தின் ஓட்டத்தில் நிதர்சனமான மனிதர்களால் மாறிப் போன விதத்தையும் //

    ஆம், முன் பகுதி ஆச்சரியத்தை அளிக்கிறதென்றால் பின் பகுதி மனதைப் பாரமாக்கி விடும். அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கும் ஆசிரியர் துளசி கோபால் அவர்களுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. இவர்களுக்கு நடுவில் ஆரோக்கியம் அக்கா, மதீனாக்கா, பாலாக்கா என்று அண்டை வீட்டு அக்காக்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்களை படிக்கையில் நமக்கும் நம் அண்டை வீட்டு அக்காக்களின் நினைவு வந்து தான் போகிறது.//

    எனக்கு அண்டை வீட்டு அக்காவும், என் அக்காவும் நினைவுக்கு வருகிறார்கள்.

    நான் கல்யாணம் ஆகி முதன் முதலில் குடித்தனம் வந்த போது அந்த வீட்டுஉரிமையாளர்கள் எனக்கு அம்மா, அப்பாவாகினர் . அவர்களின் குழந்தைகள் என்னை கோமதி அக்கா என்று அழைத்தனர்.. அவர்களின் குழந்தைகளுக்கும் நான் கோமதி அக்கா. இப்போது அவர்களின் குழந்தைகளுக்கும் கோமதி அக்காதான். மூன்று தலை முறைகளாக அக்கா உறவு நீடிக்கிறது.

    உங்கள் விமர்சனம் அருமை. அக்கா புத்தகம் வாங்கி படிக்க வேண்டும்.


    ReplyDelete
  5. வணக்கம்
    விமர்சனத்தை பார்த்த போது புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்ற உணர்வு.. மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்
    துளசி அம்மாவுக்கு வாழ்த்துக்கள் த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. படிக்க தூண்டும் விமர்சனம் ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அட அதற்குள் படிச்சு சுட சுட விமர்சனமும் போட்டாச்சா.. அக்கா நாவல் என்று நினைத்தேன். நீங்கள் எழுதுய் இருப்பதாய் பார்த்தால் அக்கா பல அக்காக்களின் இவைவுகளின் வழியே கதை சொல்லும் ஒரு நூலா? அக்காக்களுடன் பிறந்த அத்தனை பேருக்கும் இது சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறன். மற்றவர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்...

    ReplyDelete
  8. நான் இன்னும் வாங்கலை. உங்க விளக்கமான விமர்சனத்தைப் படிச்சதும் உடனே வாங்கத் தோணுது. ஊருக்குப் போன சுருக்குல படிச்சுட்டு ஜோரா விமர்சனமும் எழுதின உங்க வேகத்துக்கு ஒரு ஜே!

    ReplyDelete
  9. நானும் ஒரு ”அக்கா” என்பதால், என்னைப் பத்தி எழுதுன மாதிரியே ஒரு ஃபீலிங். :-)

    என் கடைசி தங்கையின் தோழி ஒருமுறை என்னிடம் சொன்னாள், “அக்கா, உங்க தங்கச்சி உங்களைப் பற்றி நிறைய சொல்லிருக்கா. அதெல்லாம் வச்சு பாக்கும்போது, நீங்க அவளுக்கு அக்கா இல்லை, மாமியார்!!” என்றாள். அவ்வ்வ்வ்வ்... அம்புட்டு கொடுமையா பண்ணிட்டேன்...???!!!

    அம்மா வழி, அப்பா வழி இரண்டிலுமே நாந்தான் மூத்த பேத்தி என்பதால், அக்கா அண்ணன் இல்லாத குறையை நிறைய உணர்ந்திருக்கேன். உங்களைப் போல, என் கல்யாணத்திலும்கூட நானேதான் இறங்கி நிறைய வேலைகள் செய்தேன்.

    ஆனா, கடவுள் கருணை, எங்க வூட்டுக்கார் வீட்டில அவர் கடைக்குட்டி என்பதால் அவருக்கான செல்லம், “புல்லுக்கும் பொசிவது”போல அப்படியே எனக்கும்.... ஹி..ஹி...

    ReplyDelete
  10. வெளிநாட்டில் இருப்பதால் மிஸ் பண்ணுவதில் ஒன்று இந்த புத்தகங்கள். சிலவற்றை வாங்கிப் படிக்க ஆசையாக இருந்தாலும், “எடை” ப்ரச்னை காரணமா புத்தகங்களைத்தான் தியாகம் பண்ண வேண்டியிருக்கு. ஊரில் இருக்கும் ஒரு மாச காலத்துக்குள்ள எல்லா புத்தகத்தையும் வாங்கவோ படிக்கவோ நேரமும் இருப்பதில்லை. இந்த மாதிரி விமர்சனங்கள் படிப்பதுதான் ஆறுதல். :-)

    ReplyDelete
  11. ஆவலைத் தூண்டும் அழகிய விமரிசனம்...

    ReplyDelete
  12. சுவையான விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  13. அருமையான விமர்சனம்ங்க. பகிர்வுக்கு நன்றி . புத்தகத்தை வாங்கி படிக்க தூண்டுகிறது .

    ReplyDelete
  14. உங்கள் " அக்கா " வின் விமரிசனம் அருமை ஆதி. புத்தகம் வாங்கத் தூண்டும் விமரிசனம்.

    ReplyDelete
  15. உங்கள் விமர்சனத்திலேயே அக்கா எதிரில் வந்து விட்டாற்போல தோன்றுகிறது. நான் தங்கைதான்.
    அக்காவைப்பற்றி நன்கு அறிந்து அன்பை மனதில் சுமப்பவள். விமர்சனம் படிக்கத் தூண்டுகிறது.
    அக்காவைப் பார்க்க வேண்டும். நன்றி. அன்புடன்

    ReplyDelete
  16. அக்கா குறித்த விமர்சனம் அருமை...
    இது போன்ற சந்தோஷங்கள் என்றும் சுகமானவை...

    ReplyDelete
  17. அழகான விமரிசனம் ஆதி! படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி விட்டீர்கள்

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…