Thursday, January 22, 2015

அக்கா!! – என் பார்வையில்!


சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்ற போது கிடைத்த இரண்டு மணி நேரங்களில் பிரபலமான பதிப்பகங்களுக்கு சென்று வரலாம் என கணேஷ் சாரிடம் சொல்ல, அவர் உடனே ஓடோடிச்சென்று விகடன் பதிப்பகத்தார் வெளியிட்டிருந்த வழிகாட்டியை எடுத்து வந்தார். அதில் நான் சொன்ன பதிப்பகங்களின் எண்ணை பார்த்து எங்களை அங்கே அழைத்தும் சென்றார். எந்த வித திட்டமிடலும் இல்லாமல் சென்றதால் அங்கே கொட்டிக் கிடந்த புத்தகங்களில் எதை வாங்க? எதை விட? என்று தெரியவில்லை….:) என்னைக் கவர்ந்த சில புத்தகங்களை வாங்கிக் கொண்டேன். உதவி புரிந்த கணேஷ் சாருக்கு மிக்க நன்றி.நாங்கள் வாங்கிய புத்தகங்களுள் துளசி டீச்சரின் ”அக்காவும்” ஒன்று. திருச்சிக்கு வந்தவுடன் வாசிக்கத் துவங்கினேன். சிறுபிராயத்திலிருந்து தான் சந்தித்த அக்காக்கள் பற்றிய கதை இது. 

“கலி அவ்வளவா முத்தாத அந்தக் காலத்திலேயும் சரி இப்போ முத்திக்கிடக்கும் இந்தக் காலத்திலும் சரி, அக்காக்கள் அனைவருமே ஒரு விதத்தில் சின்னத்தாய்கள். நம்மில் சிலருக்குச் சொந்த அக்கா இல்லை என்றாலும்கூட பக்கத்து வீட்டு அக்காக்கள் பரிச்சயமாக இருப்பாங்கதானே? இந்த அக்கா உங்க அக்காக்களை ஒரு விநாடி நினைவுக்குக் கொண்டு வருவாங்க என்பது நிச்சயம்.”

இப்படி தன் நூலில் எழுதியுள்ள துளசி டீச்சர், அக்காக்கள் தன் வாழ்வில் இடம்பெற்ற விதத்தை கதை போல நமக்கு சொல்கிறார். சிறுபிராயத்திலிருந்து செய்து வந்த சுட்டித்தனங்களை சொல்லும் போது, வீட்டுக்கு அருகே இருக்கும் துவக்கப்பள்ளிக்கு காலையில் வாசல் வழியாக செல்வாராம். மாலைக்குள் யாரையாவது அடித்து விட்டு பின் வழியே சுவரில் இருக்கும் பெரிய ஓட்டை வழியாக தப்பித்து விடுவாராம். மறுநாள் பழி வாங்க காத்திருக்கும் பசங்களிடமிருந்து தப்புவதற்காக, மணி அடித்த பின்னர் பெரியவர்கள் யாரையேனும் துணைக்கு அழைத்துக் கொண்டு சென்று விட்டு, மாலை வாசல் அருகே அவர்கள் பழி வாங்க காத்திருக்கையில் சுவர் ஓட்டை வழியே தப்பித்து விடுவாராம்….:))

தான் ஒரு பூப்பிசாசு என்று சொல்லும் இவர், அக்காக்களுடன் தான் சண்டை போட்டு கூடுதலாக வைத்துக் கொண்ட பூக்கள் முதல் ஒவ்வொரு விஷயத்தையும் கதை போல சொல்லும் போது நாமும் இப்படியெல்லாம் நம்ம சிறுவயதில் இருந்திருப்போமா? தவறவிட்டுட்டோமோ என்று ஏக்கம் தான் மேலிடுகிறது…..:) தன்னுடைய பெரியக்காவுக்கு பிறந்த ஏழு குழந்தைகளும், அவர்களுடனான வாழ்க்கை ஓட்டத்தில் அக்காவே மாறிப் போன மாயத்தையும், சின்னக்கா கட்டு செட்டாக குடும்பம் நடத்திய அழகையும், இவர்களுக்கு நடுவில் ஆரோக்கியம் அக்கா, மதீனாக்கா, பாலாக்கா என்று அண்டை வீட்டு அக்காக்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்களை படிக்கையில் நமக்கும் நம் அண்டை வீட்டு அக்காக்களின் நினைவு வந்து தான் போகிறது.

ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொள்ளாத அண்ணனுக்கும், அக்காவுக்கும் நடுவில் இவர் மாட்டிக் கொண்டு தவித்ததை வாசிக்கையில் நமக்கு சிரிப்பு தான் வருகிறது. அண்ணன் அசிங்கமாக பின்னி விட்ட தலைமுடியை அவிழ்த்து விட்டு அக்கா பின்னி விடுவாராம். அக்கா பின்னியதால் அண்ணன் அதை அவிழ்த்து விட்டு மீண்டும் பின்னி விடுவாராம். இப்படியே பள்ளி நேரம் துவங்குகிற நேரம் வரையில் இருவரிடமும் மாட்டிக் கொண்டு இருந்து விட்டு போகும் வழியில் ஆயாவிடம் மீண்டும் ஒருமுறை பின்னிக் கொள்வாராம்….:))

வீட்டில் கடைக்குட்டியாக பிறந்த இவர் தன்னுடைய வாழ்நாளில் நடந்த ஒவ்வொரு சம்பவங்களையும் நினைவில் நிறுத்தி அச்சு பிசகாமல் சுவையுடன் தந்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது. சந்தோஷமாக கடந்து வந்த சிறுபிராயம் பின்பு காலத்தின் ஓட்டத்தில் நிதர்சனமான மனிதர்களால் மாறிப் போன விதத்தையும் நமக்கு சொல்லாமல் சொல்லிப் போகிறார்.

வீட்டில் மூத்தவளாக பிறந்து நிதர்சனத்தில் பல அனுபவங்களை சிறுவயதிலியே பெற்று விட்டு, திருமணம் கூட நானே பொறுப்பேற்று செய்து கொண்ட சமயத்தில் பலமுறை நினைத்ததுண்டு எனக்கும் ஒரு அக்காவோ அண்ணாவோ இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். சுமையை தோள் கொடுத்து ஏற்றிருப்பார்களே என்று??? ஆனால் அவர்களுக்கும் பொறுப்பு இருந்தால் தானே???? சரி! என் கதை இங்கெதற்கு……:))

சந்தியா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள துளசி டீச்சரின் அக்காவை நீங்களும் வாசித்து உங்கள் வாழ்வில் கடந்து வந்த அக்காக்களை நினைவு கூலாமே…. இவரின் பிற நூல்கள் ஃபிஜித்தீவு, என் செல்லச் செல்வங்கள், நியூசிலாந்து ஆகியவையாகும். இதில் ஃப்ஜித்தீவு குறித்த எனது பார்வை இங்கே….

இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு,
9வது அவென்யூ,
அசோக் நகர்,
சென்னை – 600083.
தொலைபேசி எண் – 044 24896979
நூலின் விலை –ரூ 100
மொத்த பக்கங்கள் – 136

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

Monday, January 5, 2015

முத்தங்கி சேவை!

இன்று வெற்றிகரமாக இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பின் மூலவர் ரங்கநாதரை முத்துக்களால் ஆன அங்கியுடன் தரிசனம் செய்தாச்சு.. 10.30 மணிக்கு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு 12.30 மணிக்கு தரிசனம் செய்தேன். ஆனா இரண்டு நிமிடம் கூட நின்று பார்க்கவிடவில்லை...:( 

திருவடியை பார்த்து விட்டு திருமேனியை பார்ப்பதற்குள் கருவறைக்குள்ளேயே இருக்கும் காவல்துறை பெண்மணிகள் இழுத்து வெளியே தூக்கி வீசிடறாங்க...:(

அதிலும் ஒரு காவல் துறை பெண்மணிக்கு என்னமோ சாமி வந்துட்டா மாதிரி போயிறு! போயிறு! போய்கிட்டே இரு! வேண்டிகிட்டது போறும்! உன் குடும்பமே நல்லாயிருக்கும்... பேரன் பேத்தி வரை நல்லா இருப்பாங்க! நடையை கட்டு என்று தொடர்ந்து அலறல்!

இங்கு நடக்கும் எல்லா கூத்துகளையும் புன்சிரிப்போடு பார்த்துட்டு கொண்டு ரங்கன் இருக்கார்... அவருக்கென்ன...:))

நடுவில் நம்பெருமாளின் புறப்பாடு. மூலஸ்தானத்திலிருந்து மண்டபத்துக்கு எழுந்தருளுகிறார் ராப்பத்து உற்சவத்துக்காக.. கூண்டுக்குள்ளேயே நின்று தரிசனம் செய்தேன். பெருமாளை தரிசனம் செய்த கையோடு அந்த வரிசை பரமபத வாசலை நோக்கி சென்றது. இன்றும் புண்ணியத்தை தேடிக் கொண்டாச்சு.

சந்திர புஷ்கரணி அருகில் நம்பெருமாள் முத்துக் கொண்டையோடு மீண்டும் தரிசனம்...அடுத்து கோதண்டராமர் குடும்பத்தை முத்தங்கியில் தரிசனம். சீதையின் வெல்வெட் பாவாடை ஜோர்.... :)

ஆண்டாள் கண்ணாடி அறை சேவையில் இன்றைய பாசுரப்படியும், காகாசுரன் சரண் புகுதலும் அழகா வடிவமைச்சிருந்தாங்க. எல்லாவற்றையும் பார்த்துட்டு வந்தாச்சு...ஆண்டாளின் கொலுசும், முத்து மாலையும் கொள்ளை அழகு போங்க...

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.