Tuesday, December 30, 2014

மாங்காய் இஞ்சி ஊறுகாய்!

மாங்காய் போன்ற மணத்துடன், இஞ்சி போன்ற காரம் இல்லாத மாங்காய் இஞ்சி கிடைக்கும் சீசன் இது. சென்ற வாரம் கடைத்தெருவுக்கு சென்ற போது வழக்கமாக எலுமிச்சம்பழம் வாங்கும் தாத்தாவிடம் மாங்காய் இஞ்சியை பார்த்தேன். கால் கிலோ ரூ20க்கு தருவதாகச் சொன்னார். நான் மட்டுமே போட்டுக் கொள்வேன் என்பதால் 100 கிராம் தருவீங்களா? என்றவுடன் கால் கிலோ எடுத்துக்கோ பாப்பா கொஞ்சமாகத் தான் வரும் என்றார். சரி குடுங்க என்று வாங்கி வந்து உடனடி ஊறுகாய் தயாரித்தேன். தயிர் சாதத்துக்கு நல்ல ஜோடி.

இஞ்சிக்கு உள்ள மருத்துவ குணங்களை போன்றே மாங்காய் இஞ்சியும் செரிமானத்திற்கும், கொலஸ்ட்ராலை குறைப்பதற்கும், குளிரிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கும் என பல நன்மைகளை நமக்குத் தருகின்றன.

இந்த ஊறுகாய் செய்முறையை என் தில்லித்தோழி ரமாவிடமிருந்து கற்றுக் கொண்டேன். அப்போது நான் தில்லியில் இருந்த போது ஊரிலிருந்து வந்த நண்பர் வாங்கி வந்ததாகச் சொல்லி என்னிடம் மாங்காய் இஞ்சியைத் தந்தார். ”புளி இஞ்சி” போல் தான் செய்யணுமா எனக் கேட்ட போது இந்த உடனடி ஊறுகாய் செய்முறையை சொல்லித் தந்தார். வாங்க அதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.தேவையானப் பொருட்கள்:-

மாங்காய் இஞ்சி – கால் கிலோ
பச்சை மிளகாய் – 2 அல்லது 3
கடுகு – ½ தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தாளிக்க தேவையான அளவு
எலுமிச்சம்பழம் – புளிப்புக்கு தகுந்தாற் போல் 2 அல்லது 3

செய்முறை:-

மாங்காய் இஞ்சியை தோல் சீவி நன்கு கழுவிக் கொண்டு, துண்டு துண்டாகவோ அல்லது காரட் துருவியால் துருவியோ எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் தாளிக்கத் தேவையான அளவு நல்லெண்ணெயை விட்டு, அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும். பெருங்காயத்தூளையும் சேர்த்து பொரிந்ததும் அடுப்பை நிறுத்தி நறுக்கி வைத்த மாங்காய் இஞ்சியுடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சம்பழத்தை பிழிந்து நன்கு கலந்து விடவும். உடனடி ஊறுகாய் தயார். இதை தயிர் சாதத்துடனோ உப்புமா போன்றவற்றுடனும் தொட்டுக் கொள்ள ஏற்ற ஜோடி. குளிர்சாதனப் பெட்டியில் பத்து நாட்கள் வரை வைத்துக் கொள்ளலாம்.

என்ன! இப்ப சீசன் தான் என்பதால் உங்க வீட்டிலும் வாங்கி செய்து பார்ப்பீர்கள் தானே…:)

என்னுடைய ”புளி இஞ்சி” செய்முறை இங்கே…

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

டிஸ்கி:-

இன்றைய வலைச்சரத்தில் ஜெய்ப்பூர் போலாமா! பார்த்து விட்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் நட்புகளே!

17 comments:

 1. வணக்கம் தோழி !

  நினைக்கும் போதே வாயூறுகின்றதே ...அப்படியே இதைக் கொஞ்சம்
  எனது முகவரிக்கு அனுப்பி விடுங்கள் தாயே :)) பகிர்வுக்கு மிக்க நன்றி
  தோழி .

  ReplyDelete
 2. ஸ்ஸ்... அருமையாக செய்துள்ளீர்கள்...

  ReplyDelete
 3. இங்கே மாங்காய் இஞ்சி கிடைக்காது. உங்க பதிவில் இருந்தே சாப்பிட்டுக்கறேன்!

  ReplyDelete
 4. மிக அருமையான மாஇஞ்சி.

  ReplyDelete
 5. எனக்கும் பிடிக்கும்.

  ReplyDelete
 6. கமகமவென்று மாங்காய் வாஸனையுடன் ருசிக்கிறது. அன்புடன்

  ReplyDelete
 7. மாங்காய் இஞ்சி எப்பொதோ சாப்பிட்டு இருக்கிறேன்! கிடைக்கிறதா என்று முயற்சிக்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 8. மாங்காய் இஞ்சி நிஜமாவே இருக்கா ரீல் விடறீங்கவிடறீங்களா? படத்துல உருளைக்கிழங்கு மாதிரியில்லே தெரியுது?

  ReplyDelete
 9. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி....

  ReplyDelete
 10. எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
  அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

  "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

  என்றும் நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
 11. மாங்காய் இஞ்சி எனக்குப் பிடித்தமானது. செய்து பார்க்கிறேன். நன்றி.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள், ஆதி.

  ReplyDelete
 12. ஆதி,

  எளிமையான செய்முறையில் ஒரு ஊறுகாய். ஹும், மா இஞ்சி கிடைத்தால் செய்யலாம்.

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்புடன் சித்ராசுந்தர்.

  ReplyDelete
 13. எனக்கு ரொம்ப பிடிச்சது.. அப்படியே சாப்பிடலாம்

  ReplyDelete
 14. மாங்காய் இஞ்சியை ருசித்த அனைத்து நட்புகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 15. இங்கே கிடைக்காதுன்னு சொன்னேனே... நேத்து அபூர்வமாக் கிடைச்சுருச்சு. கொஞ்சூண்டு வாங்கியாந்தேன். செஞ்சு பார்க்கணும் இனி :-)

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…