Monday, December 29, 2014

டெசிபல் இம்சைகள்!!!!பட உதவி - இணையம்

இன்றைய நாகரீக காலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் பலர் வசிக்கின்றோம். வசிக்கவும் விரும்புகிறோம். நல்ல விஷயங்கள் பல இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தாலும் சில பல இம்சைகளும் இருக்கின்றனவே…. அப்படிப்பட்ட எல்லை மீறிய தொல்லைகள் தான் நான் இப்பதிவு எழுத காரணம்…:)

ஒற்றைக் கல் சுவர் தான் எல்லா இடத்திலும் என்பதால், அடுத்தவர் வீட்டில் நடக்கின்ற எல்லா கூத்துகளும் நம் வீட்டுக்கும் தெரியவருகின்றது. எங்கள் வீட்டின் ஹாலில் உள்ள ஜன்னல், எதிர் ப்ளாக்கின் பால்கனிக்கு நேரே வருகிறது. அந்த வீட்டில் உள்ளவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள். அவர்களும் யாருடனும் பேச மாட்டார்கள், அவர்கள் வீட்டுக்கும் இதுவரை ஒருவரும் வந்ததில்லை. வெளியில் போகும் போது கூட நாம் ஒருபுறம் என்றால் அவர்கள் எதிர்புறத்தில் தான் செல்வார்கள். அப்படியே யாருடன் பேசினாலும் சண்டையில்லாமல் முடிந்ததில்லை. மனித ஒவ்வாமை போலிருக்கு???

இவர்கள் தங்களை யாரும் பார்த்து விடக்கூடாது என்றோ, தங்களுக்கு யாரையும் பார்க்கப் பிடிப்பதில்லை என்றோ பால்கனிக்கும் திரைச்சீலைகளை தொங்க விட்டிருப்பார்கள். ஒருவிதத்தில் நமக்கும் நல்லது தான்….. ஏன் என்று நான் சொல்லச் சொல்ல உங்களுக்கே புரிந்து விடும்…:)

அந்த வீட்டில் இருக்கும் ஆளுக்கு காலையில் எழுந்ததிலிருந்து மூக்கை உறிஞ்சிக் கொண்டேயிருக்க வேண்டும். அதுவும் அதிகபட்சமான ஒலியெழுப்பி, ஐந்து நிமிடத்துக்கொரு முறை, ”வீல்” என்ற சப்தத்துடன்..... அடுத்து அடுக்கு தும்மல் ப்ளாட்டே அதிர்கிறார் போல்…… சரி! சைனஸ் பிரச்சனையாயிருக்கும்.

அவர்கள் வீட்டில் பல் தேய்த்து துப்புவது ஏதோ காட்டுக்குள் நுழைந்து சிங்கம் புலி போன்றவற்றின் கர்ஜனைகளை தொடர்ந்து கேட்பது போன்று இருக்கும். சரி! காலை வேளையோடு இவைகளை முடித்துக் கொண்டுவிட்டால் மதிய வேளை நிம்மதியாக கழியும் என்று நீங்கள் நினைத்தால் அது தான் தவறு…..:)

பால்கனியில் ஒரு பாலித்தீன் கவரில் ஏதோ வைத்துக் கொண்டிருப்பார் போல, கையை ”கொசா முசா” என்று ஒலியெழுப்பி உள்ளே நுழைத்து ஏதோ எடுப்பார். ஒரு தடவை இரு தடவை என்றால் பரவாயில்லை. தொடர்ந்து இதே சத்தம். என்ன தான் அந்த கவருக்குள்ளே இருக்குமோ தெரியவில்லை??? பார்க்கத் தான் முடியாமல் திரைச்சீலைகள் தடுக்கின்றனவே….:( தொடர்ந்து சத்தம் வரும் எரிச்சலில் பாய்ந்து சென்று, என்ன தான் நடக்கிறது? என்னய்யா பண்ற? என்று கேட்டுவிடலாமா என்று பலநாள் தோன்றும். நான் ஒரு சூப்பர்மேன் போல் சூப்பர்உமனாக மாறமுடியுமா என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்…..:)))

ஒன்றா! இரண்டா தொல்லைகள் எல்லாம் சொல்லவே ஓர்நாள் போதுமா? அடுத்து மேல் வீட்டில் இருந்து. அங்கு இரண்டு சின்னஞ்சிறு வால் பசங்களை வைத்துள்ள குடும்பம். அந்த வீட்டு சிறுவர்கள் அவர்கள் வீட்டின் சமையலறையில் உள்ள பாத்திரங்களை தூக்கி வந்து ஹாலில் வீசுவதும், நாற்காலிகளை ”டொர் டொர்” என்று நகர்த்துவதும், கீழே நம் வீட்டில் செங்கலை தரையில் வைத்து தேய்த்தால் எப்படியிருக்குமோ அப்படியொரு சப்தத்தை தரும்…..:)) நடு ராத்திரி வரை தூங்காமல் அந்த பசங்க ஓடுவதும், குதிப்பதுமாக ”நாங்க இங்க தான் இருப்போம்” என்று அவர்களின் இருப்பை நமக்கு தெரியப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள்….:)

நாமளும் நம்முடைய சிறுவயதில் இப்படித்தான் இருந்திருப்போம். நம் வீட்டுக் குழந்தைகளும் இப்படித் தான் இருந்திருப்பார்கள் என்று பலநாள் நான் என்னையே சமாதானம் செய்து கொள்வேன்….:) ஆனால் என்னை இவ்வளவு தூரம் புலம்ப வைப்பது அந்த குழந்தைகளின் அம்மா தான். குழந்தைகளையும் கண்(டி)டுக்காது, தொலைக்காட்சியில் திரையிசைப் பாடல்களை அலற விட்டுக் கொண்டு அது தரும் ஒலியை விட என்னுடையது தான் அதிகம் என்று போட்டி போட்டுக் கொண்டு பாடிக் கொண்டிருப்பாள்….:)

அவர்கள் வீட்டுக்கு எதிர் ப்ளாக்கில் உள்ளவர்களை உச்சபட்ச அலறலில் அழைத்து பேசிக் கொண்டிருப்பாள். பேசிக் கொண்டிருப்பது என்று சொல்வதே தவறு. அவளது மொழியில் பேச்சு. என்னுடைய மொழியில் கத்திக் கொண்டிருப்பது.

அவர்கள் பேசுவதற்கு நேர் கீழே உள்ள ஜன்னல் அருகே தான் என்னுடைய கணினியை வைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டும், டைப் செய்து கொண்டிருப்பேன். பலநாட்கள் நான் நினைப்பதை டைப் செய்வதற்கு பதிலாக அவர்கள் பேசுவதை அப்படியே டைப் செய்து விடுவேன். பின்பு ஒருமுறை சரிபார்க்கும் போது தான் நான் செய்த தவறு தெரியும்…..:)) வாசிப்பதும் இதே போல் தான் கணினித்திரையில் தோன்றும் எழுத்துக்களும் அவர்கள் பேச்சுமாக கலந்து கட்டி இருக்கும்.

தாங்கள் செய்வது அடுத்தவர்களுக்கு இடைஞ்சலாக இருக்குமோ என்று ஒருநொடி நினைத்திருந்தாலும் பரவாயில்லையே. இவர்களிடம் சண்டை போடுவதெல்லாம் வீண். நாம் தான் அசிங்கப்பட்டு போவோம்….:)) இதைவிட வேறு அறைக்கு என்னுடைய கணினியை இடம் மாற்றிவிடலாமா??? அல்லது ஜன்னலை மூடியே வைத்திருக்கலாமா??? அல்லது வீட்டையே காலி செய்துவிடலாமா???? என்று தீவிரமாக யோசனை செய்து கொண்டு வருகிறேன்…..:))

இன்னும் இந்த டெசிபல் தொல்லைகள் ஏராளம் உள்ளன. அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற நினைக்கும், மாறத் துடிக்கும் உள்ளங்களுக்கு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்….:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

டிஸ்கி:-

இன்று முதல் வலைச்சரத்தில் பணியாற்ற அழைப்பு. அங்கும் வருகைத் தந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.

10 comments:

 1. விதவிதமான இம்ஸைகள் பலவிதங்களில் அநுபவிக்கக் கிடைக்கும். தொகுத்தவிதம் வெகு அழகு.
  அன்புடன்

  ReplyDelete
 2. ஐயகோ... அடுக்குமாடிக் குடியிருப்பில் இத்தனை தொல்லைகளா...? நல்லவேளை... பின்னால டைப்பினதை சரிபார்க்கறீங்க... இல்லாட்டி எங்க கதி என்ன ஆவுறதாம்...? அடுக்கு மாடிக் குடியிருப்புல இல்லாத எனக்கு அம்மனுக்கு கூழ் ஊத்தறாங்க, விநாயகருக்கு சதுர்த்தி கொண்டாடறாங்கன்னு சிலநாள் தொல்லைகள்தான். இப்படி தினசரித் தொல்லைகள் இல்ல... ஹா... ஹா... ஹா...

  ReplyDelete
 3. தவிர்க்க முடியாத தவிப்புகள்! கஷ்டங்கள்!!

  ReplyDelete
 4. இப்படி சில இம்சைகள் எங்கும் இருக்கத்தான் செய்கின்றன! என்ன செய்வது?

  ReplyDelete
 5. சத்தமே ஆகாது.. ஆனா இரைச்சல்களுக்கிடையே தான் வாழ்க்கை என்றாகி விட்டது !

  ReplyDelete
 6. எனக்கும் சின்ன சத்தம்கூட ஆகாது. ஆனா, நமக்குன்னே வாய்ச்ச மாதிரி இப்படி பல தொல்லைகள். இதைவிட பெரிய்ய்ய்ய்ய்ய இம்சை என்னன்னா, எங்கூட்டுக்காரர் எங்க வீட்லருந்து எந்த சின்ன சத்தமும் வரக்கூடாதுன்னு பசங்களை பயங்கர கெடுபிடி பண்ணுவார் - மத்தவங்களுக்கு தொல்லையா இருக்கக்கூடாதாம்!! கஷ்டம்!!

  இப்போ தனிவீடு என்றாலும், போக்குவரத்து சப்தங்கள் அதிகம். அதுவும் இளசுகள் காரை என்னவோ செய்து அலற வைத்து காதை செவிடாக்குவார்கள். எங்கே போனாலும் நாமதான் காதுல “இயர் ப்ளக்” மாட்டிக்கணும் போல!!

  ReplyDelete
 7. வானமும் சொந்தமில்ல, பூமியும் (முழுசா) சொந்தமில்ல... இதுதான் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் சொத்து. கட்டிலையோ சோபாவையோ இழுத்தா கீழ் வீட்டில் சத்தம் கேக்குமேன்னு பயம். ஆணி அடித்தால் அடுத்த பிளாட்டில் இருப்பவர் திட்டுவாரே....

  ReplyDelete
 8. அடடா இந்த ஸ்பீக்கர்களால் படும் இம்சைகளை ஒரு புத்தகமாகவே போடலாம் .. எங்கள் மனத்துயர்களை படித்து பதிவிட்டது போல் இருக்கிறது

  ReplyDelete
 9. கருத்துரைத்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 10. பக்கத்து வீட்டுத்துத் தலைவலியை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளீர்கள். உங்கள் பக்கத்து வீட்டினரை நானே நேரில் பார்த்ததுபோல் உள்ளது. இவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களல்ல, தொல்லை தருபவர்கள்.

  நல்லா இருக்குங்க, வாழ்த்துகள்!

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…