Monday, December 22, 2014

கோட்டைப்புரத்து வீடு!ஏர்போர்ட்டில் இருந்து வெளிவருகிறான் விசு. அதாவது தற்போதைய கோட்டைப்புர சமஸ்தானத்தின் இளைய மஹாராஜா விஸ்வநாத ரூபசேகர கோட்டைபுரத்தார். அவனை அழைத்துச் செல்ல ஏர்ப்போர்ட்டிற்கு வந்திருந்தார் ”கார்வார் கருணாமூர்த்தி”. காரில் செல்லும் போது பைக்கில் வந்து இடைமறிக்கிறாள் அழகான இளம் யுவதி அர்ச்சனா. விசுவின் காதலி.

காரிலிருந்து இறங்கிய விசு அர்ச்சனாவோடு பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கார்வார் கருணாமூர்த்தி திடுக்கிடலுடன் விசுவிடம் எடுத்துச் சொல்கிறார். “தம்பி அந்த பொண்ணு பூவோடும் பொட்டோடும் நீண்ட நாட்கள் நல்லா வாழ வேண்டாங்களா?” இதை கேட்டதும் தான் தன்னுடைய ஆயுளும் இன்னும் சில வருடங்கள் தான் என்பதை உணர்ந்து மனம் வெறுத்துப் போகிறது. இது இன்று நேற்று நடப்பவையா என்ன? பரம்பரை பரம்பரையாக கோட்டைப்புர சமஸ்தானத்தின் ராஜாக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய முப்பதாவது வயதில் உயிரை விட்டு விடுகின்றனரே…… அப்படியொரு சாபம்!

பெண் வாரிசு பிறந்தாலும் உடனேயே மரணம் சம்பவிக்கிறது. எப்படியாவது பெண் வாரிசு தோன்றி பூஜையறையில் வைக்கப்பட்டிருக்கும் மூங்கில் பெட்டியை அதன் கையால் திறந்து பார்த்தால் தான் பரிகாரம் என்னவென்று அறிந்து கொள்ள முடியும் என்று தவியாய் தவிக்கின்றார் பெரிய ராணி பாண்டியம்மாள்.

தற்போதைய ராஜாவான விசுவின் அண்ணன் கஜேந்திர ரூபசேகர கோட்டைபுரத்தாருக்கு இன்றோடு முப்பது வயது பூர்த்தியாவதால் எல்லோரும் மரணபயத்துடன் குலதெய்வமான வேங்கைப் பொன்னியிடம் முறையிட்டு பூஜை செய்ய காத்திருக்கின்றனர். அம்மனுக்கு மாலையிட்டு வணங்கச் சென்ற கஜேந்திர ரூபசேகர கோட்டைப்புரத்தாரை காத்திருந்தது போல் அங்கிருந்த கோதுமை நாகம் தீண்டி சன்னதிக்குள்ளேயே இறந்து விடுகிறார்.

இப்படி அடுக்கடுக்கான மரணங்கள். எல்லாவற்றுக்கும் காரணம் வஞ்சியம்மாவின் சாபம். அது யாரு அந்த வஞ்சியம்மா? வஞ்சியம்மாவுக்கு நேர்ந்த கதி தான் என்ன? அர்ச்சனாவை திருமணம் செய்ய விரும்பும் விசு நினைத்ததை சாதித்தானா? சாபத்துக்கு பரிகாரம் தான் கிடைத்ததா? இல்லை இது எல்லாமே சதியா? 

மேலே சொன்ன எல்லா கேள்விகளுக்கும் உங்களுக்கு பதில் வேண்டுமெனில், நான் வாசித்த இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் கோட்டைப்புரத்து வீடு என்ற நூலை வாங்கி வாசித்து நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

அந்த கால ராஜாக்கள், அடிமை மக்களை நடத்திய விதம் கொடுமையிலும் கொடுமை…..:((( வாசிக்கும் போதே மனம் பதைபதைத்தது. அதுவும் பெண்களின் நிலை???? இன்றும் இளம் பிஞ்சுகளைக் கூட விட்டுவைக்காத வெறிநாய்களின் செயல்களுக்கும் நிச்சயம் காலம் பதில் சொல்லத் தான் போகிறது!

சமீபத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ள வாடகை நூலகத்தில் இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் ஏராளமான புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நூலின் விலையில் பத்து சதவீதம் வாசிக்கும் கட்டணமாக வசூலிக்கிறார் இதை நடத்தும் தாத்தா. அது போக சொன்ன தேதியிலிருந்து நீட்டிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு சதவிகிதம் கூடுதல். ரொம்ப கண்டிப்பு தான்….:)) இருந்தாலும் நல்ல நூல்களுக்காக செலவழிப்பது தவறில்லை என்று தேர்ந்தெடுத்து வாசிக்கிறேன்.

சக பதிவர் ”சகோதரர் சொக்கன்” அவர்களின் கோட்டைப்புரத்து வீடு விமர்சனம் படித்ததிலிருந்தே குறித்து வைத்திருந்தேன். சென்ற வாரம் நூலகத் தாத்தாவிடம் கேட்ட போது உடனே எடுத்து தந்தார்….:) விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லை. இப்போதெல்லாம் இம்மாதிரி நூல்களை வாசிப்பது தான் எனக்கும் பிடித்திருக்கிறது. ஆவி, பேய், இருட்டு, தனிமை என்றாலே நடுங்கும் நான் மகளையோ, கணவரையோ உடன் வைத்துக் கொண்டாவது இம்மாதிரி நூல்களை படித்து விடுகிறேன்…..:))) தைரியம் வந்தா சரி!!!

இந்த நூலை நீங்கள் வாங்க அணுக வேண்டிய முகவரி:-

வானதி பதிப்பகம்
23, தீனதயாளு தெரு
தி.நகர், சென்னை – 17
முதல் பதிப்பு வெளிவந்த வருடம் – டிசம்பர், 1990
நான் வாசித்தது நான்காம் பதிப்பு – மே, 2011
இப்போதைய விலை – ரூ100
மொத்த பக்கங்கள் – 328

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்

15 comments:

 1. தேவையான செலவு தான்... தவறேயில்லை...

  நூல் அறிமுகத்திற்கு நன்றி...

  ReplyDelete
 2. விமர்சனம் நன்றாக இருக்கிறது சகோ.
  அப்புறம் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

  வித்தியாசமான நூலகமாக இருக்கிறது. நூலகத்தை நடத்தும் தாத்தாவிற்கு வாழ்த்துக்கள். இங்கு சிட்னியில் தமிழுக்கென்றே தனியார் நூலகம் ஒன்று இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களால் நடத்தப்படுகிறது.

  ReplyDelete
 3. முன்பு தொடர்கதையாக படித்து இருக்கிறேன்.
  அழகான விமர்சனம்.

  ReplyDelete
 4. ஒன்று கவனித்தீர்களா ஆதிம்மா... இ.சௌ.ராஜனின் நிறைய நாவல்களில் கதாநாயகி புத்திசாலித்தனமாக துப்பறிந்து கதாநாயகனை சிக்கல்களிலிருந்து விடுவிப்பாள். பெண்களின் மீது அவர் கொண்ட மரியாதையின் வெளிப்பாடு அது. நீங்கள் படிக்க நான் இ.சௌ.ராஜனின் ‘தொடத் தொட தங்கம்’, ‘சிவம்’ ஆகிய நாவல்களைப் பரிந்துரைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கணேஷ் சார் - என்னவரின் பரிந்துரையின் பேரில் இந்த நூலகத்தில் உறுப்பினரானதும் நான் எடுத்த முதல் புத்தகமே சிவம் தான்...:) விமர்சனம் தான் எழுத முடியாமல் போய்விட்டது. அருமையான புத்தகம். நீங்கள் முன்பு என்னுடைய பதிவில் சொன்ன ரங்கநதியும் படித்து விட்டேன்...:)

   இன்று தொடத் தொட தங்கம் எடுத்து வந்துள்ளேன். படித்து விட்டு முடிந்தால் பகிர்கிறேன்...:)

   Delete
 5. வணக்கம்
  புத்தகத்தின் விமர்சனம் நன்றாக உள்ளது படிக்க வேண்டிய புத்தகம் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. நானும் இந்தக் கதையை தொடராக படித்திருக்கிறேன்..... இப்பெல்லாம் பெருங்கதை படிக்கும் பொறுமை இருக்க மாட்டேன் என்கிறது. நேரமும் கிடைப்பதில்லை... நல்ல விமர்சனம்...

  ReplyDelete
 7. அருமையான விமர்சனம்
  படித்திருந்ததால் மிகவும் ரசித்துப் படிக்க முடிந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. அருமை... எனக்கும் புத்தகங்கள் வாசிப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. ஆனா அரச கதைகள் பிடிக்காது:(..

  /// தனிமை என்றாலே நடுங்கும் நான் மகளையோ, கணவரையோ உடன் வைத்துக் கொண்டாவது இம்மாதிரி நூல்களை படித்து விடுகிறேன்…..:))) //// ஹா..ஹா..ஹா... என்னை மாதிரியே :))

  ReplyDelete
 9. இருந்தாலும் நல்ல நூல்களுக்காக செலவழிப்பது தவறில்லை // தவறேயில்லை...!

  ReplyDelete
 10. நல்ல நூல் அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 11. உன்னுடைய விமர்சனம் பார்த்தால் படிக்க வேண்டும் போல உள்ளது. இங்கெல்லாம் தமிழ் நூலகங்கள் இருக்குமா தெரியாது. நல்லகாரியம். பொழுதும் போகிறது. பிறர்க்கும் உபயோகமாகச் சொல்ல முடிகிறது. அன்புடன்

  ReplyDelete
 12. நூல் அறிமுகம் நன்று...
  இங்கு தமிழ் நூல்கள் கிடைப்பதில்லை...
  ஊருக்கு வரும்போது வாங்கலாம்...

  ReplyDelete
 13. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நட்புகளுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…