Wednesday, December 17, 2014

அடை மழையும், இலைகள் பழுக்காத உலகமும்…..
சமீபத்தில் தான் பதிவர் ராமலஷ்மி அவர்களின் இந்த இரு புத்தகங்களையும் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டுமே அருமையான புத்தகங்கள். அடைமழைபுத்தகத்திற்கு மதிப்புரை எழுதிய திரு ரிஷபன் அவர்கள் எனக்கு வாசிக்கத் தந்தார். ராமலஷ்மி அவர்களின் புகைப்படங்களுக்கு நான் என்றுமே ரசிகை. தான் பார்க்கும் காட்சிகளை தத்ரூபமாக படமாக்குவதில் இவருக்கு நிகர் இவரே தான். அதே போல் தான் இவருடைய கதைகளும், கவிதைகளும். பன்முகம் கொண்டவர் ராமலஷ்மி அவர்கள். நான் நேரில் சந்திக்க விரும்பும் நபர்களில் இவரும் ஒருவர்.

இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெற்ற இவரது இரண்டு நூல்களாவன அடை மழையும், இலைகள் பழுக்காத உலகமும்.அடை மழைஎன்பது பதிமூன்று கதைகளை உள்ளடக்கிய சிறுகதை தொகுப்பாகும். இந்த நூலில் இருப்பது அத்தனையும் சமூகம் சார்ந்த யதார்த்தமான கதைகள். நெல்லையின் வட்டார மொழியில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நம்மோடு பல கதைகள் பேசுகின்றன.

ஒருசில கதைகளை அவரது வலைப்பூவில் வாசித்து இருக்கிறேன் என்றாலும் இருக்கையில் சாய்ந்தமர்ந்து புத்தகத்தின் கதைகளை உள்வாங்கி வாசிப்பது என்பது மிகவும் சுவையானதல்லவா! பெரும்பாலான கதைகள் அவ்வப்போது பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளன என்பது கூடுதல் சிறப்பு. வசந்தா, பொட்டலம், வயலோடு உறவாடி, ஈரம், அடையாளம், பயணம், ஜல்ஜல் என்னும் சலங்கையொலி, அடை மழை, சிரிப்பு, பாசம், உலகம் அழகானது, இதுவும் கடந்து போகும், அடைக்கோழி ஆகியன இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளாகும்.

”ஜல்ஜல் சலங்கையொலி”யில் சுப்பையா வளர்த்த சோலையும் சொக்கனும், சரசுவின் ”அடைக்கோழியும்”, மரங்களும், செடிகளும் நம் குழந்தைகள் போல் தான் என நிருபித்து காட்டியிருக்கும் ”இதுவும் கடந்து போகும்” கதையும், அன்றாட வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் மனிதர்களின் உண்மை நிலையை விளக்கிச் சொன்ன ”உலகம் அழகானது” கதையும், மாரியின் ஆற்றாமையை விளக்கும் ”பாசமும்”, மகனை காயப்படுத்திய ஆசிரியை மேல் கோபப்பட முடியாமல் தவிக்கும் அம்மாவின் நிலையைச் சொல்லும் ”பொட்டலம்” சிறுகதையும் என ஒவ்வொன்றும் நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றியது. எதைச் சொல்ல எதை விட?

இலைகள் பழுக்காத உலகம்61 கவிதைகளை உள்ளடக்கிய இந்த கவிதை தொகுப்பும் இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் வெளிவந்துள்ளது. குட்டிக் குட்டி கவிதை வரிகளில் தன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். என் மகளும் இந்த கவிதை தொகுப்பில் உள்ள ஒருசில கவிதைகளை வாசித்து அர்த்தத்தை என்னிடம் கேட்டு உள்வாங்கிக் கொண்டாள் என்பதை பெருமையாக இங்கே சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். அவளைக் கவர்ந்தவை ”பூக்குட்டி”யும், ”தேவதைக்குப் பிடித்த காலணிகளும்”. இந்த கவிதைத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளும் பத்திரிக்கைகளில் இடைப்பட்ட காலங்களில் வெளிவந்தவை தான்.

என்னை கவர்ந்த பல கவிதைகளில் மாதிரிக்கு இங்கே சில வரிகள்….

காற்றில் மிதந்து வந்து
மடியில் விழுந்தது
பழுத்த இலையொன்று

காலம் முடிந்து
தானே கனிந்து
விருப்ப ஓய்வு வேண்டி
விருட்சத்தினின்று
கழன்று கொண்ட அதன் நடுவே
நீண்டு ஒன்றும்
குறுக்காகப் பலவும்
ஓடின அழுத்தமாக
அன்பின் வரிகள்

செவிகளால் பார்க்கவும்
கண்களால் கேட்கவும் முடிகிற
அற்புதத்தை நிகழ்த்தி.

சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் இத்தொகுப்பின் கூடுதல் சிறப்பு. ராமலஷ்மி அவர்களின் மேலும் பல புத்தகங்கள் வெளிவர வேண்டும் என்ற வாழ்த்துக்களுடன் விடைபெறுகிறேன்.

அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீட்டில் வந்துள்ள இவ்விரு புத்தகங்களையும் நீங்களும் வாங்கி வாசித்து நான் பெற்ற இன்பத்தை பெற்றிடுங்கள்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


16 comments:

 1. அருமையான நூல் விமர்சனங்கள்.
  "//இருக்கையில் சாய்ந்தமர்ந்து புத்தகத்தின் கதைகளை உள்வாங்கி வாசிப்பது என்பது மிகவும் சுவையானதல்லவா!//"
  உண்மை. உண்மை. என்னதான், கணினி வழியாகவோ, அலைபேசி வழியாகவோ படித்தாலும், புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு படிக்கிற மாதிரி வராது.

  ReplyDelete
 2. ஆஹா.... இன்றைக்குத்தான் நானும் பதிவர் ராமலக்ஷ்மியை சந்தித்த விவரம் போட்டுருக்கேன். இதே பன்முகத் திறமையைச் சொல்லி இருக்கேன்.

  ரொம்ப மகிழ்ச்சியா இருக்குப்பா.

  ReplyDelete
 3. ராமலஷ்மி அவர்களின் மேலும் பல புத்தகங்கள் வெளிவர வேண்டும் என்ற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. ராமலஷ்மி இன்னும் பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள்.

  @ராமலஷமி : இந்த ஜனவரிக்கு என்ன புத்தகம் வெளியீடு மேடம்?

  :)))))

  ReplyDelete
 5. உங்கள் வாசிப்பனுபவத்தை அருமையாகப் பகிர்ந்திருக்கிறீர்கள். மனமார்ந்த நன்றி, ஆதி.

  தேவதை ரோஷிணிக்கு பூக்குட்டியும், தேவதைக்குப் பிடித்தக் காலணிகளும் பிடித்துப் போனது அறிந்து மகிழ்ச்சி:)!

  வாசிக்கப் பரிந்துரைத்த எழுத்தாளர் ரிஷபன் அவர்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 6. @ ஸ்ரீராம்,

  அப்படி ஏதும் வெளியீடு இருந்தால் உங்களிடம் சொல்லாமல் இருப்பேனா:))?

  ReplyDelete
 7. ”ஜல்ஜல் சலங்கையொலி எனக்கு மிகவும் பிடித்த கதை.
  நீங்கள் பகிர்ந்த கவிதையும் அருமை.
  ரோஷ்ணிக்கும் ராமலக்ஷ்மி கவிதை பிடித்தது மகிழ்ச்சி.
  நீங்கள் சொன்னது போல் ராமல்க்ஷ்மியின் பல புத்தகங்கள் வெளிவரவேண்டும், வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. புத்தகப் பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 9. இந்தப் பதிவைப் படிப்பவர்களை வாசிக்க தூண்டியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி..

  ReplyDelete
 10. நான் வாங்கிப் படிக்கிறேன். ராம லக்ஷ்மியின் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அன்புடன்

  ReplyDelete
 11. வணக்கம்
  தங்களின் பார்வையில் விமர்சனம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 3
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:

  கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 12. அவரின் எழுத்துக்கள் + படங்கள் என்றும் சிறப்பு... அருமையான விமர்சனம்... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 13. சமீபத்தில் ராமலக்ஷ்மியை சந்தித்தேன். எத்தனை எளிமையானவர் என்று வியந்து போனேன். காமிராவில் எங்களையெல்லாம் சிறைப்பிடித்தார். அவர் காமிராவில் சிறைப்பட கொடுத்து வைத்திருக்க வேண்டுமே! நானும் இந்த இரண்டு புத்தகங்களையும் படிக்க வேண்டும்.

  ReplyDelete
 14. ராமலெஷ்மி அக்காவின் புத்தகங்களுக்கு அருமையான விமர்சனம்...

  ReplyDelete
 15. அனைவருக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…