Tuesday, December 30, 2014

மாங்காய் இஞ்சி ஊறுகாய்!

மாங்காய் போன்ற மணத்துடன், இஞ்சி போன்ற காரம் இல்லாத மாங்காய் இஞ்சி கிடைக்கும் சீசன் இது. சென்ற வாரம் கடைத்தெருவுக்கு சென்ற போது வழக்கமாக எலுமிச்சம்பழம் வாங்கும் தாத்தாவிடம் மாங்காய் இஞ்சியை பார்த்தேன். கால் கிலோ ரூ20க்கு தருவதாகச் சொன்னார். நான் மட்டுமே போட்டுக் கொள்வேன் என்பதால் 100 கிராம் தருவீங்களா? என்றவுடன் கால் கிலோ எடுத்துக்கோ பாப்பா கொஞ்சமாகத் தான் வரும் என்றார். சரி குடுங்க என்று வாங்கி வந்து உடனடி ஊறுகாய் தயாரித்தேன். தயிர் சாதத்துக்கு நல்ல ஜோடி.

இஞ்சிக்கு உள்ள மருத்துவ குணங்களை போன்றே மாங்காய் இஞ்சியும் செரிமானத்திற்கும், கொலஸ்ட்ராலை குறைப்பதற்கும், குளிரிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கும் என பல நன்மைகளை நமக்குத் தருகின்றன.

இந்த ஊறுகாய் செய்முறையை என் தில்லித்தோழி ரமாவிடமிருந்து கற்றுக் கொண்டேன். அப்போது நான் தில்லியில் இருந்த போது ஊரிலிருந்து வந்த நண்பர் வாங்கி வந்ததாகச் சொல்லி என்னிடம் மாங்காய் இஞ்சியைத் தந்தார். ”புளி இஞ்சி” போல் தான் செய்யணுமா எனக் கேட்ட போது இந்த உடனடி ஊறுகாய் செய்முறையை சொல்லித் தந்தார். வாங்க அதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.தேவையானப் பொருட்கள்:-

மாங்காய் இஞ்சி – கால் கிலோ
பச்சை மிளகாய் – 2 அல்லது 3
கடுகு – ½ தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தாளிக்க தேவையான அளவு
எலுமிச்சம்பழம் – புளிப்புக்கு தகுந்தாற் போல் 2 அல்லது 3

செய்முறை:-

மாங்காய் இஞ்சியை தோல் சீவி நன்கு கழுவிக் கொண்டு, துண்டு துண்டாகவோ அல்லது காரட் துருவியால் துருவியோ எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் தாளிக்கத் தேவையான அளவு நல்லெண்ணெயை விட்டு, அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும். பெருங்காயத்தூளையும் சேர்த்து பொரிந்ததும் அடுப்பை நிறுத்தி நறுக்கி வைத்த மாங்காய் இஞ்சியுடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சம்பழத்தை பிழிந்து நன்கு கலந்து விடவும். உடனடி ஊறுகாய் தயார். இதை தயிர் சாதத்துடனோ உப்புமா போன்றவற்றுடனும் தொட்டுக் கொள்ள ஏற்ற ஜோடி. குளிர்சாதனப் பெட்டியில் பத்து நாட்கள் வரை வைத்துக் கொள்ளலாம்.

என்ன! இப்ப சீசன் தான் என்பதால் உங்க வீட்டிலும் வாங்கி செய்து பார்ப்பீர்கள் தானே…:)

என்னுடைய ”புளி இஞ்சி” செய்முறை இங்கே…

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

டிஸ்கி:-

இன்றைய வலைச்சரத்தில் ஜெய்ப்பூர் போலாமா! பார்த்து விட்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் நட்புகளே!

Monday, December 29, 2014

டெசிபல் இம்சைகள்!!!!பட உதவி - இணையம்

இன்றைய நாகரீக காலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் பலர் வசிக்கின்றோம். வசிக்கவும் விரும்புகிறோம். நல்ல விஷயங்கள் பல இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தாலும் சில பல இம்சைகளும் இருக்கின்றனவே…. அப்படிப்பட்ட எல்லை மீறிய தொல்லைகள் தான் நான் இப்பதிவு எழுத காரணம்…:)

ஒற்றைக் கல் சுவர் தான் எல்லா இடத்திலும் என்பதால், அடுத்தவர் வீட்டில் நடக்கின்ற எல்லா கூத்துகளும் நம் வீட்டுக்கும் தெரியவருகின்றது. எங்கள் வீட்டின் ஹாலில் உள்ள ஜன்னல், எதிர் ப்ளாக்கின் பால்கனிக்கு நேரே வருகிறது. அந்த வீட்டில் உள்ளவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள். அவர்களும் யாருடனும் பேச மாட்டார்கள், அவர்கள் வீட்டுக்கும் இதுவரை ஒருவரும் வந்ததில்லை. வெளியில் போகும் போது கூட நாம் ஒருபுறம் என்றால் அவர்கள் எதிர்புறத்தில் தான் செல்வார்கள். அப்படியே யாருடன் பேசினாலும் சண்டையில்லாமல் முடிந்ததில்லை. மனித ஒவ்வாமை போலிருக்கு???

இவர்கள் தங்களை யாரும் பார்த்து விடக்கூடாது என்றோ, தங்களுக்கு யாரையும் பார்க்கப் பிடிப்பதில்லை என்றோ பால்கனிக்கும் திரைச்சீலைகளை தொங்க விட்டிருப்பார்கள். ஒருவிதத்தில் நமக்கும் நல்லது தான்….. ஏன் என்று நான் சொல்லச் சொல்ல உங்களுக்கே புரிந்து விடும்…:)

அந்த வீட்டில் இருக்கும் ஆளுக்கு காலையில் எழுந்ததிலிருந்து மூக்கை உறிஞ்சிக் கொண்டேயிருக்க வேண்டும். அதுவும் அதிகபட்சமான ஒலியெழுப்பி, ஐந்து நிமிடத்துக்கொரு முறை, ”வீல்” என்ற சப்தத்துடன்..... அடுத்து அடுக்கு தும்மல் ப்ளாட்டே அதிர்கிறார் போல்…… சரி! சைனஸ் பிரச்சனையாயிருக்கும்.

அவர்கள் வீட்டில் பல் தேய்த்து துப்புவது ஏதோ காட்டுக்குள் நுழைந்து சிங்கம் புலி போன்றவற்றின் கர்ஜனைகளை தொடர்ந்து கேட்பது போன்று இருக்கும். சரி! காலை வேளையோடு இவைகளை முடித்துக் கொண்டுவிட்டால் மதிய வேளை நிம்மதியாக கழியும் என்று நீங்கள் நினைத்தால் அது தான் தவறு…..:)

பால்கனியில் ஒரு பாலித்தீன் கவரில் ஏதோ வைத்துக் கொண்டிருப்பார் போல, கையை ”கொசா முசா” என்று ஒலியெழுப்பி உள்ளே நுழைத்து ஏதோ எடுப்பார். ஒரு தடவை இரு தடவை என்றால் பரவாயில்லை. தொடர்ந்து இதே சத்தம். என்ன தான் அந்த கவருக்குள்ளே இருக்குமோ தெரியவில்லை??? பார்க்கத் தான் முடியாமல் திரைச்சீலைகள் தடுக்கின்றனவே….:( தொடர்ந்து சத்தம் வரும் எரிச்சலில் பாய்ந்து சென்று, என்ன தான் நடக்கிறது? என்னய்யா பண்ற? என்று கேட்டுவிடலாமா என்று பலநாள் தோன்றும். நான் ஒரு சூப்பர்மேன் போல் சூப்பர்உமனாக மாறமுடியுமா என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்…..:)))

ஒன்றா! இரண்டா தொல்லைகள் எல்லாம் சொல்லவே ஓர்நாள் போதுமா? அடுத்து மேல் வீட்டில் இருந்து. அங்கு இரண்டு சின்னஞ்சிறு வால் பசங்களை வைத்துள்ள குடும்பம். அந்த வீட்டு சிறுவர்கள் அவர்கள் வீட்டின் சமையலறையில் உள்ள பாத்திரங்களை தூக்கி வந்து ஹாலில் வீசுவதும், நாற்காலிகளை ”டொர் டொர்” என்று நகர்த்துவதும், கீழே நம் வீட்டில் செங்கலை தரையில் வைத்து தேய்த்தால் எப்படியிருக்குமோ அப்படியொரு சப்தத்தை தரும்…..:)) நடு ராத்திரி வரை தூங்காமல் அந்த பசங்க ஓடுவதும், குதிப்பதுமாக ”நாங்க இங்க தான் இருப்போம்” என்று அவர்களின் இருப்பை நமக்கு தெரியப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள்….:)

நாமளும் நம்முடைய சிறுவயதில் இப்படித்தான் இருந்திருப்போம். நம் வீட்டுக் குழந்தைகளும் இப்படித் தான் இருந்திருப்பார்கள் என்று பலநாள் நான் என்னையே சமாதானம் செய்து கொள்வேன்….:) ஆனால் என்னை இவ்வளவு தூரம் புலம்ப வைப்பது அந்த குழந்தைகளின் அம்மா தான். குழந்தைகளையும் கண்(டி)டுக்காது, தொலைக்காட்சியில் திரையிசைப் பாடல்களை அலற விட்டுக் கொண்டு அது தரும் ஒலியை விட என்னுடையது தான் அதிகம் என்று போட்டி போட்டுக் கொண்டு பாடிக் கொண்டிருப்பாள்….:)

அவர்கள் வீட்டுக்கு எதிர் ப்ளாக்கில் உள்ளவர்களை உச்சபட்ச அலறலில் அழைத்து பேசிக் கொண்டிருப்பாள். பேசிக் கொண்டிருப்பது என்று சொல்வதே தவறு. அவளது மொழியில் பேச்சு. என்னுடைய மொழியில் கத்திக் கொண்டிருப்பது.

அவர்கள் பேசுவதற்கு நேர் கீழே உள்ள ஜன்னல் அருகே தான் என்னுடைய கணினியை வைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டும், டைப் செய்து கொண்டிருப்பேன். பலநாட்கள் நான் நினைப்பதை டைப் செய்வதற்கு பதிலாக அவர்கள் பேசுவதை அப்படியே டைப் செய்து விடுவேன். பின்பு ஒருமுறை சரிபார்க்கும் போது தான் நான் செய்த தவறு தெரியும்…..:)) வாசிப்பதும் இதே போல் தான் கணினித்திரையில் தோன்றும் எழுத்துக்களும் அவர்கள் பேச்சுமாக கலந்து கட்டி இருக்கும்.

தாங்கள் செய்வது அடுத்தவர்களுக்கு இடைஞ்சலாக இருக்குமோ என்று ஒருநொடி நினைத்திருந்தாலும் பரவாயில்லையே. இவர்களிடம் சண்டை போடுவதெல்லாம் வீண். நாம் தான் அசிங்கப்பட்டு போவோம்….:)) இதைவிட வேறு அறைக்கு என்னுடைய கணினியை இடம் மாற்றிவிடலாமா??? அல்லது ஜன்னலை மூடியே வைத்திருக்கலாமா??? அல்லது வீட்டையே காலி செய்துவிடலாமா???? என்று தீவிரமாக யோசனை செய்து கொண்டு வருகிறேன்…..:))

இன்னும் இந்த டெசிபல் தொல்லைகள் ஏராளம் உள்ளன. அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற நினைக்கும், மாறத் துடிக்கும் உள்ளங்களுக்கு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்….:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

டிஸ்கி:-

இன்று முதல் வலைச்சரத்தில் பணியாற்ற அழைப்பு. அங்கும் வருகைத் தந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.

Monday, December 22, 2014

கோட்டைப்புரத்து வீடு!ஏர்போர்ட்டில் இருந்து வெளிவருகிறான் விசு. அதாவது தற்போதைய கோட்டைப்புர சமஸ்தானத்தின் இளைய மஹாராஜா விஸ்வநாத ரூபசேகர கோட்டைபுரத்தார். அவனை அழைத்துச் செல்ல ஏர்ப்போர்ட்டிற்கு வந்திருந்தார் ”கார்வார் கருணாமூர்த்தி”. காரில் செல்லும் போது பைக்கில் வந்து இடைமறிக்கிறாள் அழகான இளம் யுவதி அர்ச்சனா. விசுவின் காதலி.

காரிலிருந்து இறங்கிய விசு அர்ச்சனாவோடு பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கார்வார் கருணாமூர்த்தி திடுக்கிடலுடன் விசுவிடம் எடுத்துச் சொல்கிறார். “தம்பி அந்த பொண்ணு பூவோடும் பொட்டோடும் நீண்ட நாட்கள் நல்லா வாழ வேண்டாங்களா?” இதை கேட்டதும் தான் தன்னுடைய ஆயுளும் இன்னும் சில வருடங்கள் தான் என்பதை உணர்ந்து மனம் வெறுத்துப் போகிறது. இது இன்று நேற்று நடப்பவையா என்ன? பரம்பரை பரம்பரையாக கோட்டைப்புர சமஸ்தானத்தின் ராஜாக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய முப்பதாவது வயதில் உயிரை விட்டு விடுகின்றனரே…… அப்படியொரு சாபம்!

பெண் வாரிசு பிறந்தாலும் உடனேயே மரணம் சம்பவிக்கிறது. எப்படியாவது பெண் வாரிசு தோன்றி பூஜையறையில் வைக்கப்பட்டிருக்கும் மூங்கில் பெட்டியை அதன் கையால் திறந்து பார்த்தால் தான் பரிகாரம் என்னவென்று அறிந்து கொள்ள முடியும் என்று தவியாய் தவிக்கின்றார் பெரிய ராணி பாண்டியம்மாள்.

தற்போதைய ராஜாவான விசுவின் அண்ணன் கஜேந்திர ரூபசேகர கோட்டைபுரத்தாருக்கு இன்றோடு முப்பது வயது பூர்த்தியாவதால் எல்லோரும் மரணபயத்துடன் குலதெய்வமான வேங்கைப் பொன்னியிடம் முறையிட்டு பூஜை செய்ய காத்திருக்கின்றனர். அம்மனுக்கு மாலையிட்டு வணங்கச் சென்ற கஜேந்திர ரூபசேகர கோட்டைப்புரத்தாரை காத்திருந்தது போல் அங்கிருந்த கோதுமை நாகம் தீண்டி சன்னதிக்குள்ளேயே இறந்து விடுகிறார்.

இப்படி அடுக்கடுக்கான மரணங்கள். எல்லாவற்றுக்கும் காரணம் வஞ்சியம்மாவின் சாபம். அது யாரு அந்த வஞ்சியம்மா? வஞ்சியம்மாவுக்கு நேர்ந்த கதி தான் என்ன? அர்ச்சனாவை திருமணம் செய்ய விரும்பும் விசு நினைத்ததை சாதித்தானா? சாபத்துக்கு பரிகாரம் தான் கிடைத்ததா? இல்லை இது எல்லாமே சதியா? 

மேலே சொன்ன எல்லா கேள்விகளுக்கும் உங்களுக்கு பதில் வேண்டுமெனில், நான் வாசித்த இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் கோட்டைப்புரத்து வீடு என்ற நூலை வாங்கி வாசித்து நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

அந்த கால ராஜாக்கள், அடிமை மக்களை நடத்திய விதம் கொடுமையிலும் கொடுமை…..:((( வாசிக்கும் போதே மனம் பதைபதைத்தது. அதுவும் பெண்களின் நிலை???? இன்றும் இளம் பிஞ்சுகளைக் கூட விட்டுவைக்காத வெறிநாய்களின் செயல்களுக்கும் நிச்சயம் காலம் பதில் சொல்லத் தான் போகிறது!

சமீபத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ள வாடகை நூலகத்தில் இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் ஏராளமான புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நூலின் விலையில் பத்து சதவீதம் வாசிக்கும் கட்டணமாக வசூலிக்கிறார் இதை நடத்தும் தாத்தா. அது போக சொன்ன தேதியிலிருந்து நீட்டிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு சதவிகிதம் கூடுதல். ரொம்ப கண்டிப்பு தான்….:)) இருந்தாலும் நல்ல நூல்களுக்காக செலவழிப்பது தவறில்லை என்று தேர்ந்தெடுத்து வாசிக்கிறேன்.

சக பதிவர் ”சகோதரர் சொக்கன்” அவர்களின் கோட்டைப்புரத்து வீடு விமர்சனம் படித்ததிலிருந்தே குறித்து வைத்திருந்தேன். சென்ற வாரம் நூலகத் தாத்தாவிடம் கேட்ட போது உடனே எடுத்து தந்தார்….:) விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லை. இப்போதெல்லாம் இம்மாதிரி நூல்களை வாசிப்பது தான் எனக்கும் பிடித்திருக்கிறது. ஆவி, பேய், இருட்டு, தனிமை என்றாலே நடுங்கும் நான் மகளையோ, கணவரையோ உடன் வைத்துக் கொண்டாவது இம்மாதிரி நூல்களை படித்து விடுகிறேன்…..:))) தைரியம் வந்தா சரி!!!

இந்த நூலை நீங்கள் வாங்க அணுக வேண்டிய முகவரி:-

வானதி பதிப்பகம்
23, தீனதயாளு தெரு
தி.நகர், சென்னை – 17
முதல் பதிப்பு வெளிவந்த வருடம் – டிசம்பர், 1990
நான் வாசித்தது நான்காம் பதிப்பு – மே, 2011
இப்போதைய விலை – ரூ100
மொத்த பக்கங்கள் – 328

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்

Friday, December 19, 2014

உடுப்பி சாம்பார்!

விஜய் தொலைக்காட்சியில் சனிக்கிழமைதோறும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும்சமையல் சமையல்பகுதியில் திரு வெங்கடேஷ் பட் அவர்களின் குறிப்புப்படி செய்து பார்த்த சாம்பார். ஆனால் சற்று மாற்றங்களுடன்….:)  அவர் செய்தது உடுப்பி கோவிலில் பரிமாறும் சாம்பாராம்.

தேவையானப் பொருட்கள்:-

குடமிளகாய், முள்ளங்கி, கேரட் தலா 1
புளிக்கரைசல் – ½  கப்
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
வேகவைத்த துவரம்பருப்பு – ½ கப்
உப்பு தேவையான அளவு
எண்ணெய்தாளிக்கத் தேவையான அளவு

அரைக்க:-

தேங்காய்த்துருவல்அரை கப்
தனியா – 2 தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
வரமிளகாய் – 3

செய்முறை:-

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து, காய்களை சேர்க்கவும். ஐந்து நிமிடம் வதக்கிய பின் வேகும் அளவுக்கு தண்ணீர் சேர்க்கவும். புளிக்கரைசலை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். காய் வெந்த பின் அரைத்த விழுதை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து பருப்பை சேர்க்கவும் அடுப்பை குறைந்த தணலில் ஐந்து நிமிடம் வைத்து இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும். சுவையான மணமான உடுப்பி சாம்பார் தயார்.
எப்போதும் தனியா, கடலைப்பருப்பு, வரமிளகாய், பெருங்காயம் முதலியவற்றை எண்ணெய் சேர்த்து வறுத்து தேங்காயுடன் அரைத்து செய்வேன். இது பச்சையாக தனியா, சீரகம் போன்றவற்றை அரைப்பதால் சுவை அருமையாக உள்ளது. கொஞ்சம் மோர்க்குழம்பை நினைவுபடுத்துகிறது….:)இந்த சாம்பார் இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி போன்ற எல்லாவற்றுடனும் ஒத்துப் போகிறது. நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

பின்குறிப்பு:-

பட் அவர்கள் பருப்பு சேர்க்கவில்லை. நான் சேர்த்துள்ளேன்

அதே போல உடுப்பி சாம்பாரில் பூசணிக்காய், வாழைக்காய், பலாக்காய் முதலியவற்றை சேர்ப்பார்களாம். நான் என்னிடமிருந்த காய்களை சேர்த்தேன்.

அங்கு வெல்லம் சேர்ப்பார்களாம். நான் அதை தவிர்த்துவிட்டேன்.

தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக சமையல் எண்ணெய் சேர்த்துள்ளேன்.

அவர் செய்த “உடுப்பி சாம்பாரின் காணொளிகீழே....
மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


Wednesday, December 17, 2014

அடை மழையும், இலைகள் பழுக்காத உலகமும்…..
சமீபத்தில் தான் பதிவர் ராமலஷ்மி அவர்களின் இந்த இரு புத்தகங்களையும் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டுமே அருமையான புத்தகங்கள். அடைமழைபுத்தகத்திற்கு மதிப்புரை எழுதிய திரு ரிஷபன் அவர்கள் எனக்கு வாசிக்கத் தந்தார். ராமலஷ்மி அவர்களின் புகைப்படங்களுக்கு நான் என்றுமே ரசிகை. தான் பார்க்கும் காட்சிகளை தத்ரூபமாக படமாக்குவதில் இவருக்கு நிகர் இவரே தான். அதே போல் தான் இவருடைய கதைகளும், கவிதைகளும். பன்முகம் கொண்டவர் ராமலஷ்மி அவர்கள். நான் நேரில் சந்திக்க விரும்பும் நபர்களில் இவரும் ஒருவர்.

இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெற்ற இவரது இரண்டு நூல்களாவன அடை மழையும், இலைகள் பழுக்காத உலகமும்.அடை மழைஎன்பது பதிமூன்று கதைகளை உள்ளடக்கிய சிறுகதை தொகுப்பாகும். இந்த நூலில் இருப்பது அத்தனையும் சமூகம் சார்ந்த யதார்த்தமான கதைகள். நெல்லையின் வட்டார மொழியில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நம்மோடு பல கதைகள் பேசுகின்றன.

ஒருசில கதைகளை அவரது வலைப்பூவில் வாசித்து இருக்கிறேன் என்றாலும் இருக்கையில் சாய்ந்தமர்ந்து புத்தகத்தின் கதைகளை உள்வாங்கி வாசிப்பது என்பது மிகவும் சுவையானதல்லவா! பெரும்பாலான கதைகள் அவ்வப்போது பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளன என்பது கூடுதல் சிறப்பு. வசந்தா, பொட்டலம், வயலோடு உறவாடி, ஈரம், அடையாளம், பயணம், ஜல்ஜல் என்னும் சலங்கையொலி, அடை மழை, சிரிப்பு, பாசம், உலகம் அழகானது, இதுவும் கடந்து போகும், அடைக்கோழி ஆகியன இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளாகும்.

”ஜல்ஜல் சலங்கையொலி”யில் சுப்பையா வளர்த்த சோலையும் சொக்கனும், சரசுவின் ”அடைக்கோழியும்”, மரங்களும், செடிகளும் நம் குழந்தைகள் போல் தான் என நிருபித்து காட்டியிருக்கும் ”இதுவும் கடந்து போகும்” கதையும், அன்றாட வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் மனிதர்களின் உண்மை நிலையை விளக்கிச் சொன்ன ”உலகம் அழகானது” கதையும், மாரியின் ஆற்றாமையை விளக்கும் ”பாசமும்”, மகனை காயப்படுத்திய ஆசிரியை மேல் கோபப்பட முடியாமல் தவிக்கும் அம்மாவின் நிலையைச் சொல்லும் ”பொட்டலம்” சிறுகதையும் என ஒவ்வொன்றும் நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றியது. எதைச் சொல்ல எதை விட?

இலைகள் பழுக்காத உலகம்61 கவிதைகளை உள்ளடக்கிய இந்த கவிதை தொகுப்பும் இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் வெளிவந்துள்ளது. குட்டிக் குட்டி கவிதை வரிகளில் தன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். என் மகளும் இந்த கவிதை தொகுப்பில் உள்ள ஒருசில கவிதைகளை வாசித்து அர்த்தத்தை என்னிடம் கேட்டு உள்வாங்கிக் கொண்டாள் என்பதை பெருமையாக இங்கே சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். அவளைக் கவர்ந்தவை ”பூக்குட்டி”யும், ”தேவதைக்குப் பிடித்த காலணிகளும்”. இந்த கவிதைத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளும் பத்திரிக்கைகளில் இடைப்பட்ட காலங்களில் வெளிவந்தவை தான்.

என்னை கவர்ந்த பல கவிதைகளில் மாதிரிக்கு இங்கே சில வரிகள்….

காற்றில் மிதந்து வந்து
மடியில் விழுந்தது
பழுத்த இலையொன்று

காலம் முடிந்து
தானே கனிந்து
விருப்ப ஓய்வு வேண்டி
விருட்சத்தினின்று
கழன்று கொண்ட அதன் நடுவே
நீண்டு ஒன்றும்
குறுக்காகப் பலவும்
ஓடின அழுத்தமாக
அன்பின் வரிகள்

செவிகளால் பார்க்கவும்
கண்களால் கேட்கவும் முடிகிற
அற்புதத்தை நிகழ்த்தி.

சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் இத்தொகுப்பின் கூடுதல் சிறப்பு. ராமலஷ்மி அவர்களின் மேலும் பல புத்தகங்கள் வெளிவர வேண்டும் என்ற வாழ்த்துக்களுடன் விடைபெறுகிறேன்.

அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீட்டில் வந்துள்ள இவ்விரு புத்தகங்களையும் நீங்களும் வாங்கி வாசித்து நான் பெற்ற இன்பத்தை பெற்றிடுங்கள்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.