Friday, November 21, 2014

புரியாத புதிர்கள்!!!வயதில் மூத்த தம்பதியர் எங்கள் வீட்டின் எதிரில் உள்ளனர். இருவருக்குமே வயது எண்பதுக்கு மேல். அவர்களுக்கு இரு மகள்கள். இருவருமே தமிழகத்தின் வேறு வேறு ஊர்களில் அவர்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். வயதின் காரணமாக அந்த அம்மா சில மாதங்களாகவே கீழே விழுவதும், ட்ரிப்ஸ் ஏற்றுவதும், ரத்தம் ஏற்றுவதுமாக என்று அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று கொண்டே இருக்கிறார்.

பெரியவருக்கும் அந்த அம்மாவை விடவே வயது கூடுதலாக இருப்பினும், முடியாத நிலையிலும் சிடுசிடுப்புடன் சமையல் செய்து வருகிறார். கொஞ்ச நாட்களாகத் தான் வேலைக்கு ஆள் வைத்திருக்கிறார்கள். இருப்பினும் சமையல் செய்வது, பாத்திரம் தேய்ப்பது, அந்த அம்மாவுக்கு வேண்டிய உதவிகள் செய்வது என்று காலங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. பெற்ற மகள்கள் எப்போதேனும் வந்து எட்டி பார்த்து விட்டு செல்கிறார்கள்.

படம்: இணையத்திலிருந்து....  

அக்கம் பக்கம் இருக்கும் நமக்கே அவர்களின் தனிமை நிலை வேதனைப்படுத்துகிறது. அந்த அம்மாவுக்கு தலைமுடி நல்ல நீளம். அதை அவ்வப்போது பின்னி விட எங்களை கூப்பிடுவார்கள். சில சமயம் தோசை மாவோ, குழம்பு, ரசமோ தருவேன். மருத்துவமனைக்கு செல்லும் போது இப்போதெல்லாம் அந்த அம்மாவை அக்கம் பக்கம் உள்ளவர்கள் தான் தூக்கிச் சென்று ஆட்டோவில் ஏற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்டோ ட்ரைவரோ, வாட்ச்மேனோ வந்தாலும் அவர்களை அந்த அம்மா தொட விடுவதில்லை. நேற்று காலை கூட நாற்காலியில் உட்கார வைத்து நானும், ஆட்டோ ட்ரைவருமாக சேர்ந்து படிகளில் இறக்கினோம். அதன் பின்பு ஆட்டோவுக்குள் குண்டு கட்டாக தூக்கி நான் தான் ஏற்றிவிட்டேன்…..:(

மகள்களோடு போய் இருக்கலாமே என்றால் ஏதேதோ காரணங்களைச் சொல்கிறார்கள். பார்த்துக் கொள்ளுங்கள் பணத்தை அனுப்பி வைக்கிறேன் என்கிறார்களாம். சில சமயம் இவர்களே மகள்களுக்கு எதற்கு வீண் சிரமம் என்கிறார்கள். இவர்களுக்கு அங்கு செல்ல விருப்பமில்லையா? அல்லது அவர்கள் இவர்களை வைத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்களா? என்னவென்று புரிய மாட்டேங்குது. பெற்ற மகள்கள் இருக்கும் போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஏதோ கடமைப்பட்டவர்கள் போன்று எவ்வளவு நாட்களுக்கு செய்வது என்று புரியவில்லை????

அதுவும் அந்த மூத்தவர்கள் அன்பாக ஏதேனும் உதவி கேட்டாலாவது பரவாயில்லை. அதிகாரத் தொணியில் கட்டளையிடுவது போல் கூப்பிடுகிறார்கள். செய்த உதவிக்காக ஒரு மரியாதைக்கேனும் நன்றி என்று கூட சொல்வதுமில்லை….:(

எனக்கு தெரிந்த ஒரு வயதான பெண்மணியும் இப்படித் தான், பல மாதங்களாக படுக்கையிலிருந்தும் தன் மகளுக்கு எந்த தகவலையும் தெரிவித்து அவள் மனதை சங்கடப்படுத்த வேண்டாம் என்று சொல்லியே அக்கம் பக்கம் உள்ளவர்கள் செய்யும் உதவியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்…..:(

இன்னொரு வீட்டிலோ பெற்ற மகள் அம்மாவுக்கு போடும் சாதத்திற்கு கூட கணக்கு சொல்லிக் கொண்டு, ”நல்லா கொட்டிக்கோ! கொட்டிகோ” “சீக்கிரம் செத்து தொலஎன்று அன்றாடம் சொல்லிக் கொண்டிருப்பதை காது கொடுத்தும் கேட்க முடியாமல் வாய் வரை வார்த்தைகள் வந்தும் அடக்கிக் கொண்டு கேட்டுக் கொண்டுத் தான் இருக்கிறேன்….:((( இத்தனைக்கும் அந்த அம்மாவுடைய வீட்டில் தான் மகள் இருக்கிறாள். மகளுக்கு அந்த வீட்டையும் எழுதியும் தந்து விட்டார்…..:((

சென்ற வார நீயா? நானாவில் கூட ஒரு விவாதம் நிகழ்ந்தது. மகளோ! மகனோ! பெற்றவர்களின் இறுதி காலத்தை அம்போவென விட்டு விடாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. வயதானவர்களும் பாரபட்சம் பார்க்காமல் கெளரவத்தையும், பிடிவாதத்தையும் விட்டு விட்டு எல்லோரையும் அரவணைத்து செல்வதே சிறந்ததாகும்.

என்னவோ போங்க! இவர்கள் எல்லாம் என்ன தான் நினைக்கிறார்கள்? உங்களுடைய கருத்துக்களையும் இங்கு பகிர்ந்து கொள்ளுங்களேன்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


15 comments:

 1. "இன்று நீ நாளை நான்..." என்று நினைத்தால்...

  ReplyDelete
 2. இருவர் பக்கமும் விசாரித்தால்
  ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்வார்கள்
  இரண்டும் சரியாகத்தான் இருக்கும்
  ஆயினும் முதியவர்களைத் தவிக்க விடுவது
  எந்த விதத்திலும் நியாயமாகாது
  அவசியமான பதிவு.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நீண்ட நாளைக்குப் பிறகு உங்கள் பதிவு படிக்க மகிழ்ச்சி ஆதி. இளைய தலைமுறை மேல் மட்டும் தப்பு இல்லை. பெரியவர்கள் தங்கள் 'நா காத்தல்' செய்தால், நல்லது என்று தோன்றுகிறது. இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது. இதனை இரு பக்கத்தவரும் புரிந்துக்கொண்டு செயல்படவேண்டும்.
  நல்ல பதிவிற்குப் பாராட்டுக்கள்!

  ReplyDelete
 4. :இதை எல்லாம் படிக்கும் போது மனது கனத்துதான் போகிறது என்ன சொல்ல

  ReplyDelete
 5. மனிதாபிமானம் குறைந்து வருகிறதோ..!

  ReplyDelete
 6. தீராத பிரச்சினை. இந்த மாதிரி மனிதர்களுக்கென்று ஒரு இடம் இருந்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 7. நிறையபேர் இதுமாதிரி வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகளில் (APARTMENTS) இந்த மாதிரி அவலங்களைக் காணலாம். யார் கண்டது.? நாளை நம்முடைய வாழ்வும் இப்படி ஆகலாம். மனித வாழ்க்கையில் முதுமை ஒரு சாபம்தான்.
  த.ம.4

  ReplyDelete
 8. முற்றிய நாகரீகத்தின் முதன்மைச் சிக்கல் இது. இருக்க ஒரு இடம், போதிய வங்கி இருப்பு இருந்து விட்டால் பெற்ற பிள்ளைகள் துச்சமாகி விடுகின்றனர். கிராமத்தில் வேர் ஊன்றிய அக்கால வாழ்வைப் போல் கூட்டுக் குடும்பம் அவசியமற்றுப் போகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதாத இன்றைய வாழ்வில் பணத்தின் பின்னான ஓட்டத்தில் பிள்ளைகளும் பெற்றோரை பணத்தால் மட்டுமே கவனிக்கப் பழகி விட்டனர். பிறத்தியாரிடம் தன்மையாக நடந்து கொள்ளும் பலரும் உரியவர்களிடம் காட்டும் முகமே வேறாக இருந்து விடுகிறது பல நேரங்களில். இரு தரப்பினருக்கும் சகிப்புத் தன்மை குறைந்து விட்டது. சேட்டை செய்யும் குழந்தையை வளர்த்து ஆளாக்குவது போல் பிடிவாதக்கார முதியோரை சம்பந்தப்பட்டோர் சமாளித்து தான் ஆக வேண்டும். மூன்றாம் மனிதர்களின் மனிதாபிமானத்தை வற்றச் செய்து விடுகிறது இவர்களின் வீம்பு. அக்கம்பக்கத்தினர் புண்ணியத்துக்கு எத்தனை நாள் தாங்க முடியும்?

  ReplyDelete
 9. முற்பகல் செய்யின்...
  இதே நிலைதானே நாளை நமக்கும்... அப்போ மட்டும் குய்யோ முறையோன்னு கத்தி என்ன பயன்...
  செய்த வினையை அனுபவித்துத்தானே ஆக வேண்டும்...
  ஆனால் எல்லாவற்றிற்கும் நாம் காரணம் வைத்திருப்போம்...
  என்ன செய்வது?

  ReplyDelete
 10. வயது முதிர்ந்த பெற்றோர்களை காப்பது பிள்ளைகளின் கடமை! அதே சமயம் இவர்களுக்கு இடையே உள்ள இடைவெளி இன்னும் அதிகரித்துப்போவது கொடுமை! புரியாத புதிர்கள்தான்!

  ReplyDelete
 11. மிக வருத்தமாக இருக்கிறது ஆதி. உள்ளே என்னகாரணமோ. ஆனால் அவதியைப் பொறுக்க முடியாமல் நீங்கள் உதவி செய்வது மனசை நெகிழ வைக்கிறது. அவர்கள் பெற்றபெண்கள் முழுநேர உதவியாளர்களை நியமிக்கலாமே. சென்னையில் இதுபோல வசதிகளோடு வாழும் முதியோரை நான் அறிவேன். மனம் கனத்துப் போகிறது.

  ReplyDelete
 12. மகனோ மகளோ கட்டாயம் பெற்றவர்களை பார்த்துக்க தான் வேண்டும். அதுதான் கடமைக்கூட. ஆனால் எனக்கு தெரிந்த சில குடும்பத்தின் கதைகளில் பெற்றோர் தன் மகளிடம் நடந்து கொண்ட விதத்தில் வெறுப்பு ஏற்பட்டு தள்ளி இருக்கிறார். நீங்கள் சொல்லியிருப்பது போல நமக்கு உதவி செய்கிறார்கள் என்ற எண்ணம் இல்லாமல் அதிகாரம் தொனிக்க பேசுவது கேட்க கஷ்டமாக இருக்கும்.

  மகள் திருமணமான பின்பு அந்த வீட்டு பொறுப்போடு பிறந்த வீட்டையும் அடிக்கடி கவனிக்கும் குடும்பங்களில் கூட மகள் இரண்டு வீட்டையும் கட்டி இழுத்து செய்கிறாளே என்று பாராட்டு பத்திரம் வாசிக்க வேண்டாம், இன்னும் செய், செய்ய வேண்டியது உன் கடன் என்பது போல நடந்து கொள்கிறார்கள்.

  பைசாவுக்கு இரண்டு பக்கம் போல இரண்டு பக்கமும் கதைகள். இதில் பெரியவர்கள் விட்டுக்கொடுத்து அனுசரித்து போக வேண்டும் என்பது யார் சொல்லி புரிய வைப்பது.

  ReplyDelete
 13. அவர்களுக்கு மட்டும் என்ன.. மகன் மகளுடன் போய் இருக்க வேண்டாம் என்றா இருக்கிறது .. நிறைய குடும்பங்களில் பெற்றோரைப் பேசும் வார்த்தைகள் கேட்கக் கூசும். அதனால் தான் தனியே இருந்து வாழ் நாளைக் கழிக்க விரும்புகிறார்கள்.
  நீங்களே பின்பகுதியில் சொல்லியிருப்பது போல.. .. // ”நல்லா கொட்டிக்கோ! கொட்டிகோ” “சீக்கிரம் செத்து தொல” //

  ReplyDelete
 14. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…