Friday, November 14, 2014

மடிசார் மாமி!ரங்கநாயகி! இவள் பெயரைச் சொல்லி விசாரிப்பதை விட மடிசார் மாமி என்றால் தான் எல்லோருக்கும் சட்டென புரியும். ஏறக்குறைய 35 வயதிருக்கலாம். மடிசார் கட்டுடன் கைப்பையை மாட்டிக் கொண்டு கைனட்டிக் ஹோண்டாவில் இவள் நீதிமன்ற வளாகத்தில் நுழைவதே பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தையும், பிரமிப்பையும்  உண்டு பண்ணும். இவள் தன் கணவனை இழந்தவள்.

தாயை இழந்து சித்தியின் கெடுபிடியில் வளர்ந்த ரங்கநாயகி, பத்தாவது முடித்த கையோடு 15 வயதில் புரோகிதர் கைலாசத்திற்கு வாக்கப்படுகிறாள். மச்சினர்களும், நாத்தனார்களும் சிறுவயது உடையவர்களாக இருக்கவே, தான் குழந்தையே பெற்றுக் கொள்ளாமல் அவர்களைத் தன் குழந்தைகளாக எண்ணி வளர்க்கிறாள். வறுமையின் பிடியிலும் சொற்ப காலங்களே வாழ்ந்தாலும் கணவனுடன் ஆத்மார்த்தமாக அன்னியோன்மாக வாழ்கிறாள். அவ்வப்போது குடும்பச் சூழலுக்காக சமையல் வேலைக்கும், சீர் பட்சணங்கள் செய்வதற்கும் செல்கிறாள்.


கணவனின் இறப்புக்கு பின் பல இடைஞ்சல்களுக்கு நடுவிலும் மாமியாருக்காகவும், மச்சினர், நாத்தனார்களுக்காகவும் மாலைநேரக் கல்லூரியில் படித்துக் கொண்டே சமையல் வேலைகளுக்கும் சென்று வரத் தொடங்கினாள். கணவனின் ஆசைக்காக குங்குமத்தையும், மடிசாரையும் விடவில்லை. இது ஊரார் கண்களில் பட்டு அவதூறுக்கும், அவமானங்களுக்கும் ஆளாக நேர்கிறது. எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல், கணவனின் கடமையை நிறைவேற்றப் வைராக்கியத்துடன் போராடுகிறாள்.

டேவிட் ஆசீர்வாதம் என்பவரின் கம்பெனியில் டைப்பிஸ்டாக சேர்ந்து சட்டக் கல்லூரியில் பயின்று பின்பு அந்த கம்பெனியின் லீகல் அட்வைஸராகவும் பதவி வகிக்கிறாள். டேவிட் ரங்கநாயகி மேல் வைத்திருக்கும் மதிப்பை, கொச்சைபடுத்தி ஊர் பேசுகிறது. இதனால் கம்பெனியிலும், வீட்டிலும் பல பேச்சுக்கும் பிரச்சனைகளுக்கும் ஆளாகிறாள்.


கஷ்டப்பட்டு வளர்த்த குழந்தைகள் மன்னிமேல் அபாரமான பாசத்தையும், பக்தியையும் வைத்திருக்கின்றனர். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மேம்பட ஆரம்பிக்கிறது. தன்னுடைய குழந்தைகளின் வாழ்க்கைக்காகத் தான் பாடுபடுகிறாள் என்று தெரிந்தும் மாமியார் தொடர்ந்து தன் சுடு சொல்லாலேயே ரங்கநாயகியை புண்படுத்துகிறாள். குழந்தைகளே ஒரு சமயம் மன்னியை கேள்வி கேட்கும் நிலை ஏற்பட சில நாட்கள் ஹாஸ்டலில் சென்றும் தங்குகிறாள்.

மோசமான மாமியாரின் உடல்நிலையைத் தேற்ற மீண்டும் வீட்டுக்கு வரும் ரங்கநாயகியை மாமியாரும் மற்றவர்களும் புரிந்து கொள்ள, தன் கடமை முடிந்த உணர்வுடன் சமீபகாலமாகவே கணவனின் நினைவுகள் அவளை முழுதும் சூழ ஆரம்பிக்கிறது. மற்றவர்கள் சுதாரிப்பதற்குள் முழுதும் அன்றைய நாளுக்கே சென்று வாழ ஆரம்பித்து விடுகிறாள். அன்றைய நாளுக்கும் இன்றைய வாழ்க்கைக்கும் ஏற்படும் குழப்பத்தால் தன்னுடைய முடிவை தேடிக் கொள்கிறாள் ரங்கநாயகி.


மற்றவர்களுக்காகவே வாழ்ந்து மடிந்து போகும் ரங்கநாயகி. பாசத்தின் மொத்த உருவம், தைரியசாலி, வைராக்கியமுள்ளவள், புத்திசாலி, ஆச்சார அனுஷ்டானங்களை இன்றும் கடைபிடிப்பவள். என்று பன்முகங்களை கொண்டவள். இவளைப் போல ஒரு ஜீவன் நிஜ வாழ்வில் கிடைப்பது கடினம்.நேற்று வாசித்த இந்த நாவலின் தாக்கம் குறையத் துவங்கும் முன் இதைப் பற்றி எழுதி விடுவது தான் உத்தமம் என்று நினைத்தேன். பள்ளி இறுதியில் இருந்த சமயம் என்று நினைக்கிறேன். அப்போது இரவலாக வாங்கிப் படித்த புத்தகம் இது. நடுநடுவில் மடிசார் மாமியாக நடிகை ஸ்ரீவித்யா அவர்களின் புகைப்படமும் கதைக்கேற்ற மணியம் செல்வன் அவர்களின் ஓவியமும் சேர்ந்த கலவையாக மனதில் இன்னும் அதன் நினைவுகள். நெடுநாட்களாக வாசிக்க எண்ணிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ள ஒரு வாடகை நூலகத்தில் கேட்டவுடன் கிடைத்தது. பல வருடங்களுக்குப் பின் கதையை மீட்டுக் கொள்ள உதவியது.திரையில் தோன்றும் துக்க காட்சியில் யாரேனும் கண்ணீர் சிந்தும் போது பார்க்கும் சிலருக்கு கண்ணீர் வருவது இயல்பு. அம்முலு! அம்முலு! என்று கணவன் தன்னை அழைப்பதாக அவ்வப்போது அவரோடு வாழ்ந்த நினைவுகளில் மூழ்கும் போது வாசிக்கும் நமக்கே கண்ணீர் துளிர்ப்பது உண்மை! தேவிபாலா அவர்களின் எழுத்துக்களில் தலைசிறந்தது இது என்று நினைக்கிறேன். இது தொலைக்காட்சி தொடராகவும் வந்துள்ளது. அதில் கேர்.ஆர்.விஜயா ரங்கநாயகி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். அதை நான் பார்த்ததில்லை.


1993ம் அவருடம் விகடன் பதிப்பகத்தார் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். முடியும் போது நீங்களும் வாசித்துப் பாருங்கள். புத்தகத்தின் படத்தை கூகிளில் தேடினால் வேறு ஏதேதோ படங்கள் தான் கிடைக்கின்றன. அதனால் என்னிடம் இருந்த மட்கிய புத்தகத்தை தான் புகைப்படமெடுத்து போட்டுள்ளேன்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


16 comments:

 1. பன்முகங்களை கொண்டவள். இவளைப் போல ஒரு ஜீவன் நிஜ வாழ்வில் கிடைப்பது கடினம்.
  /

  very nice story.

  ReplyDelete
 2. இப்ப குமுத்தத்தில் காயத்ரி மந்திரம்னு ஒரு தொடர்கதை. அதிலும் ஹீரோயின் சின்னப்பொண்ணா இருந்தாலும் மடிசார் கட்டியிருப்பது போலத்தான் படம் வரும். அது பார்க்கும் போது ரங்கநாயகியா ஸ்ரீவித்யா படம் போட்டு கதை வருமேன்னு நினைச்சேன். போட்டோக்களுக்கு நன்றி ஆதி

  ReplyDelete
 3. பொழுது போக்குக்கான கதையிலும் வாழ்வியல் அறங்களை புதைத்து எழுதிய காலம்... இன்னும் நினைவில் நின்றதை பகிர்ந்த விதம் அழகு.

  ReplyDelete
 4. தொடர் கதையாக வந்தபோதே ஆவலுடன் படித்து ரஸித்த கதை.ஸ்ரீவித்யாவின் மடிசார் கட்டுடன் எல்லோரும் அடுத்து என்ன என்று ரஸித்தது. படங்கள் மனதில்ப் பதிந்து போனவை. அழகாக சொல்லியுள்ளாய். படிக்க அலுக்காது. அன்புடன்

  ReplyDelete
 5. தொடர் வந்த போது
  படிக்க இயலவில்லை
  படங்களுடன் தங்கள் விமர்சனம்
  மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. இந்தக் கதையை தொடராக வரும்போதே வாசித்திருக்கிறேன். கதையும் படங்களும் அடுத்து என்ன என்ற ஆவலை உண்டாக்கும். அருமையான கதை. பதிவு பார்த்ததும் யாவும் ஞாபகம் வருகிறது. உன் பதிவும் சூப்பர்.அன்புடன்

  ReplyDelete
 7. மலரும் நினைவுகளுக்கு வித்திட்டது தங்கள் பதிவு

  ReplyDelete
 8. வாவ் ! இந்தக்கதையை நானும் மிகவும் விரும்பி வாசித்திருக்கிறேன் ,பகிர்ந்த படங்கள் யாவும் மிக அழகு.பகிர்வும் அருமை.

  ReplyDelete
 9. ரொம்ப அருமையாக இருக்கு

  ReplyDelete

 10. யாரோ எழுதிய கதையாகத் தெரியவில்லை முதலில்! எழுத்தும் நடையும் சொல்லிய விதமும் அப்படி எண்ணத் தோன்றுகிறது! வாழ்த்து!

  ReplyDelete
 11. வருகை புரிந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 12. இந்தப்புத்தகத்தை ஒருவாரமாக [துபாயில்] படிக்க ஆரம்பித்து நேற்று தான் ஒரு வழியாகப் படித்து முடித்தேன். விமர்சனம் அருமை. பாராட்டுகள்.

  ReplyDelete
 13. இந்த புத்தகத்தை முன்பு வாசித்த ஞாபாகம். மீண்டும் ஒரு முறை வாசிக்கத் தூண்டிவிட்டது தங்களின் இந்த விமர்சனம்

  ReplyDelete
 14. அழகான விமர்சனம்! விகடனில் வந்த போதே ரசித்துப் படித்த ஞாபகம் மனதில் வந்தது!

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…