Thursday, November 27, 2014

சிறுதானியப் பொங்கல்!சமீபகாலமாக மக்களிடையே சிறுதானியங்கள் அதிகமான முக்கியத்துவம் பெற்றுவருகிறது. அரிசி உணவை விட நார்ச்சத்து இதில் அதிகமுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அந்த காலத்து மக்களால் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்ட கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, குதிரை வாலி, திணை, சோளம், பனிவரகு போன்றவை தான் சிறுதானியங்கள் என்பதாகும். இவற்றை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் மேம்படும் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் ஆங்காங்கே சிறுதானிய உணவகங்களும் செயல்படத் துவங்கியுள்ளன.

அப்படிப்பட்ட சிறுதானியங்களில் ஒன்றான சாமையை வைத்து வெண்பொங்கல் செய்து பார்த்தேன். முதன்முறையாக சமைத்ததால் சற்றே பயம் இருந்தது. ஆனால் சாப்பிடும் போது அந்த எண்ணமே மாறி விட்டது. அவ்வளவு மிருதுவாகவும், சுவையாகவும் இருந்த அந்த பொங்கலின் செய்முறை இங்கே….

சாமைப் பொங்கல்தேவையானப் பொருட்கள்:-

சாமை – 1 கப் (டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) ஆங்கிலத்தில் LITTLE MILLET 
பயத்தம்பருப்பு – ¼ கப்
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை

தாளிக்க:-

பொடியாக நறுக்கிய இஞ்சி சிறிதளவு
கறிவேப்பிலை – 1 கொத்து
ஒன்றிரண்டாக பொடித்த மிளகு – ½ தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
நெய் (அ) எண்ணெய் தேவையான அளவு
முந்திரிப்பருப்பு சிறிதளவு

செய்முறை:-பயத்தம்பருப்பை வாணலியில் சற்றே வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். சாமையை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறப் போடவும். வாணலியில் நெய்யோ அல்லது எண்ணெயோ சிறிதளவு வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொள்ளவும். குக்கரில் சாதம் வைப்பது போல் பாத்திரத்தில் சாமை, பயத்தம்பருப்பு, தாளித்த பொருட்கள், உப்பு, தண்ணீர் (1க்கு 1½)   பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து இரண்டு விசில் கொடுத்து நிறுத்தவும். சூடான, சுவையான பொங்கல் தயார்.

சட்னி, சாம்பாரோடு சாப்பிட சுவையாக இருக்கும். சுடச்சுட இருந்ததால் நான் வெறுமனேயே சாப்பிட்டு விட்டேன்….:) சாதாரணமாக அரிசியில் செய்யும் பொங்கலில் அரிசியும், பருப்பையும் வேகவைத்துக் கொண்டு, கொஞ்சம் மசித்து விட்டு தாளித்துக் கொட்டுவேன். ஆனால் இதை நீங்கள் மசித்தால் கூழாகி விடும். அதனால் தாளித்த பின்னர் குக்கரில் வைப்பது தான் சரி. நேரிடையாக குக்கரிலேயே தாளித்தும் செய்யலாம். எப்படி வசதியோ அப்படி செய்து கொள்ளுங்கள்.

இந்த சிறுதானியங்களை அரிசிக்குப் பதிலாக பயன்படுத்தி, அடை, உப்புமா, இட்லி, தோசை போன்றவையும் செய்யலாம். வேறு ஏதாவது சிறுதானிய உணவுடன் பின்னர் சந்திக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.Wednesday, November 26, 2014

கண்ணழகி காஞ்சனமாலை!!!தில்லியின் வார சந்தையில் வழக்கமாக பழம் ஒருவரிடம் வாங்குவோம். நான்கு வழிச்சாலை ஒன்றின் திருப்பத்தில் எப்போதும் அமர்ந்திருக்கும் அவரை நாங்கள் மையழகன்என்று சொல்வதுண்டு….:))) ஏனென்றால் அவர் ஒரு ஹரியானாக்காரர். ஹரியானா ஆண்கள் எல்லோரும் அழகாக மை வைத்து கொண்டிருப்பர். சரி! இவரைப் பற்றியல்ல இப்பதிவு. நாம் விஷயத்துக்கு வருவோம்.

இது கண்ணழகி காஞ்சனமாலையை பற்றியது. பெயர் அழகாக இருக்கிறதல்லவா?? அது வேறு யாருமல்ல. அடியேன் தான்…..:)) இருக்கிற பெயர்கள் பத்தாது என்று இவள் வேறு புதுப்பெயர் வைத்து கொண்டிருக்கிறாளே என்று நீங்கள் சொல்வது என் காதுகளில் விழுகிறது…..:) என்ன செய்ய???

கடந்த ஒரு வார காலமாக விஜயகாந்த் கண் போல காட்சியளிக்கிறது என்னுடைய கண்கள். சென்ற வாரத்தில் ஒருநாள் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த மகள் கண் சிவந்திருப்பதாக சொல்லவே, அவளை கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று மெட்ராஸ் ஐதான் என உறுதி செய்து கொண்டேன். அவர்கள் தந்த சொட்டு மருந்துகளை விட்டு வந்தேன். இந்த குழந்தைகளுக்கு என்னமோ தெரியலை, அப்போது தான் நம்மீது பாசம் அதிகமாகி விடுகிறது…..:)) அடுத்த நாளே எனக்கும் பரிசு கிடைத்து விட்டது……:))

நல்லவேளை மகளுக்கு அவ்வளவு தீவிரமில்லை. எனக்கோ கண்களை திறக்கவே முடியவில்லை. பயங்கரமான வீக்கமும் ரத்தத்தைப் போல் கண்கள் சிவந்து, தெறித்து விழுந்து விடுவதைப் போல் இருந்தன. இதனுடன் ஜோடி போட்டுக் கொண்டு ஜூரமும், ஜலதோஷமும் வேறு. இதனோடு தவிர்க்கவே முடியாத அன்றாட வேலைகளும். எனக்கே என் கண்களைக் காண பயமாக இருக்கின்றன…..:)) கண்களிலிருந்து தண்ணீர் ஒருபுறம் கொட்ட, மூக்கிலிருந்து ஒருபுறம் தண்ணீர் கொட்ட…… இதற்கு ஒரு கைக்குட்டை, அதற்கு ஒரு கைக்குட்டை என படு பிஸியாக இருந்தேன்….:) முதலில் ஒத்தை கண் சிவராசுபோல் ஒரு கண்ணில் தான் கேடு. பின்பு இரண்டாவதும் சேர்ந்து கொண்டன. அவ்வப்போது குளிர்ந்த நீரில் கண்களை கழுவிக் கொண்டும், சொட்டு மருந்துகளை விட்டுக் கொண்டும் வருகிறேன். இப்போ கொஞ்சம் பரவாயில்லை.

இருந்தாலும் வெளியில் தலையை காட்டினாலே எல்லோரும் தலை தெறிக்க ஓடுகிறார்கள். நேற்று கூட ஒரு வேலையாக கண்ணாடி அணிந்து கொண்டு வெளியில் சென்றிருந்தேன். கடையில் இருந்த பெண் அக்கா கண் வலியாஎனக் கேட்க கடைக்காரரோ விசாரித்தாலே நமக்கும் வந்துடும். கேட்காதேஎன்கிறார்…..:)) நல்ல கதை தான்.

சிறுவயதில் வந்த அனுபவம் இன்றும் நன்றாக நினைவில் உள்ளது. அப்பாவுடன் நாங்கள் கோவையில் இருந்த போது டவுன்ஹாலுக்கு ஏதோ வாங்குவதற்காக சென்றிருந்தோம். சைக்கிளில் என்னை உட்கார வைத்துக் கொண்டு அப்பா தள்ளிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். என் கண்களில் புளிச்சைஎன்று சொல்லக்கூடிய அழுக்கு அவ்வப்போது வந்து கொண்டே இருப்பதாக சொல்லி தன்னுடைய கைக்குட்டையால் துடைத்து விட்டுக் கொண்டே இருந்தார். அப்புறம் இரண்டு மூன்று நாட்களுக்கு சொட்டு மருந்துகளை விட்டு குணப்படுத்தினர்.

கண் வலி துவங்கி காது வலி, கழுத்து சுளுக்கு, பல் வலி, பிரசவம் வரை எல்லாமே வேதனை தரும். அந்த நிமிடம், இது தான் உலகிலேயே மிகவும் கொடியது என்று தோன்றும். அடுத்த ஏதேனும் வேதனை வரும் வரை…. இல்லையா? எல்லாமே கஷ்டம் தான். அது போக பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் இந்த வலிகள் எல்லாமே துவங்குகிறது. இதுவும் ஒரு ஆச்சரியம் தான்.

இந்த மெட்ராஸ் ஐ சீசன் முடிந்து விட்டாலும் நீங்களும் கவனமாகவே இருங்க. இந்த பதிவை படித்ததால் உங்களுக்கும் இது தாக்கலாம்…..:)) முதலில் கண்களை குளிந்த நீரால் கழுவிக்கோங்க….:))


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


Monday, November 24, 2014

கண்காட்சிக்கு போகலாமா!!குழந்தைகள் தினத்தையொட்டி எங்கள் மகளின் பள்ளியில் கண்காட்சி இவ்வாண்டு நடைபெற்றது. இதற்காக சில நாட்கள் முன்னரே ஒவ்வொரு வகுப்பிலும் மாணாக்கர்களை பிரித்து ஒவ்வொருவருக்கும் வேலைகள் தரப்பட்டன. எங்கள் மகளுக்கு NATIONAL SYMBOLS ஒதுக்கப்பட்டது. ஒரு மயில் பொம்மையும், தெர்மக்கோலில் NATIONAL SYMBOLS என்று எழுதியும் தந்தேன். பள்ளிக்கு எடுத்துச் சென்றவள் ஆசிரியரிடம் தருவதற்குள் வாண்டுகள் சிலரின் விஷமத்தால் உடைக்கப்பட்டு வீட்டுக்கு திரும்ப அனுப்பப்பட்டன. அழுது கொண்டே வீட்டுக்குத் திரும்பினாள்.

சரி! போனால் போகிறது விடு! என்று சொல்லி திரும்ப பரணிலிருந்து ஒரு கடினமான அட்டையை எடுத்து வெட்டி அதில் சார்ட் பேப்பரை ஒட்டி, அதில் எழுதி, மயிலின் படத்தை பழைய புத்தகங்களிலிருந்து வெட்டி எடுத்து அதையும் ஒரு அட்டையில் ஒட்டித் தந்து இரண்டுக்குமே ஒரு குச்சியை பின்னால் ஒட்டி எங்கேனும் பொருத்தி வைக்கும் படி செய்து கொடுத்தேன். நல்லவேளை இதை பத்திரமாக ஆசிரியரிடம் ஒப்படைத்து விட்டாள்.

மறுநாளான குழந்தைகள் தினத்தன்று கண்காட்சியைக் காண பள்ளிக்குச் சென்றோம். ஒவ்வொரு துறைக்கும் தனித் தனி அறைகள் பிரிக்கப்பட்டு மாணாக்கர்களின் தனித்திறமைகளை வெளிக்காட்டியிருந்தார்கள். ஒவ்வொரு அறையின் வாசலிலும் மாணவிகள் தட்டில் சந்தனம், குங்குமம், கற்கண்டு போன்றவற்றைத் தந்து வரவேற்பு செய்தனர்.

தமிழ்த் துறையில் சங்ககால மலர்களின் பெயர்களை படங்களுடன் ஓலைச் சுவடி போல் தயாரித்திருந்தனர். அதே போல் முத்தமிழான இயல் இசை நாடகம் ஆகிய மூன்றுமே வைகுண்ட ஏகாதசியில் கடைபிடிக்கப்படுவதை பற்றி ஒரு மாணவர் விளக்கினார். தஞ்சை பெரிய கோவிலை தெர்மக்கோலினால் பிரம்மாண்டமாக செய்திருந்தனர். ஆழ்வார்களால் போற்றப்படும் திருவரங்கம், சீதையின் வனவாசம் என்று பல்வேறு தலைப்புகளில் மாணாக்கர்களின் தனித்திறமை வெளிப்பட்டது.

இதே போல் ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், வணிகவியல், சமஸ்கிருதம், கணினியின் செயல்பாடுகள், மாணாக்கர்களின் ஓவியங்கள், வேதியியல், இசை என்று வரிசையாக ஒவ்வொரு அறையிலும் சிறப்பாக செய்திருந்தனர். பார்வையிட்ட பின் அங்கே உள்ள கையேட்டில் நமது கருத்துக்களை பதியும் படியும், நம்மை கவர்ந்தது எது என்றும் கேட்டிருந்தது.

என்னை கவர்ந்த விஷயங்களாவன…. நெகிழியை தவிர்த்தலை பற்றிய விஷயங்கள், சாக்பீஸில் செய்த கலைப்பொருட்கள், தேவையில்லாத பொருட்களைக் கொண்டு செய்த கைவினைப் பொருட்கள், மூலிகைச் செடிகள், வேதியியல் அமிலங்களைக் கொண்டு செய்து காட்டிய கெமிக்கல் அபிஷேகம் போன்றவை. மறுசுழற்சி, தண்ணீர் சிக்கனம், மின்சார உற்பத்தி, உணவு பிரமிடுகள், குப்பையில்லாத நாட்டை உருவாக்குதல் என்று பல….

எதிர்பாராத விதமாக வீட்டில் தீ பற்றினால் வினிகரை ஒரு பாட்டிலில் விட்டுக் கொண்டு, அந்த பாட்டிலின் வாய்புறத்தில் சின்ன ட்ஷ்யூ பேப்பரை வைத்து அதன் மேல் சிறிது சமையல் சோடாவை போட்டு பாட்டிலை மூடி, மூடியில் சின்ன துளை போட்டுக் கொண்டு குலுக்கினால் நுரை போன்று திரவம் வெளிவந்து தீயை அணைக்கிறது. அதேபோல் ஒரு மாணவி வீட்டிலேயே செடி வளர்க்க மண்ணிற்கு பதிலாக தேங்காய் நாரையும் காபித்தூளையும் போட்டு பாட்டில்களில் நிரப்பி வளர்த்திருந்தாள்.

இசைத்துறையில் போட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. ஒரு அட்டையில் ராகங்களும் அதற்கேற்ற திரையிசைப் பாடல்களும் எழுதப்பட்டிருந்தன. இருபது நொடிகளுக்குள் அவற்றை பார்த்துக் கொண்டு விட்டு, அதன் பின்பு அவர்கள் கேட்கும் போது சரியாக சொல்ல வேண்டும். மகள் அம்மா சீக்கிரம் பார்த்துக்கோஎன்றதும், ஆண்ட்டி 20, 19, 18 என்று அந்த மாணவி கூறியதும் தான் மனதில் ஏறிக் கொண்டிருந்தாலும், ஏதோ கொஞ்சம் மனதில் பதிந்து அந்த மாணவி கேட்ட சிலவற்றுக்கு சரியான பதிலைச் சொன்னதற்காக சிறிய பரிசு ஒன்று தரப்பட்டது.

இதே போல் கணினித் துறையிலும் சில விளையாட்டுகள். ரோபோவை தெர்மக்கோலில் செய்து, அதே போல் காற்றாலையை பேட்டரியுடன் இணைத்து இயக்கி காட்டினார்கள். காய்கறிகளில் கார்விங் செய்து அழகுபடுத்தியிருந்தார்கள். இன்னும் நிறைய செயல்பாடுகள் என்று பள்ளியே களைகட்டியிருந்தது.

இப்படி மாணாக்கர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் திறமையை வெளிப்படுத்திய பள்ளி நிர்வாகத்தினருக்கும், கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய மாணாக்கர்களுக்கும் பாராட்டுக்களை சொல்லியே ஆக வேண்டும். அன்றைய நாளை சிறப்பாக செலவழித்த எண்ணத்துடன் வெளிவந்தவுடன் மகள் அம்மா ஐஸ்கிரீம் பார்லர் கிட்டக்கத்தான் இருக்குஎன்று ஆரம்பித்தாள். சரியென்று ஆளுக்கொரு ஸ்ட்ராபெர்ரி கப் வாங்கி ருசித்து விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


Friday, November 21, 2014

புரியாத புதிர்கள்!!!வயதில் மூத்த தம்பதியர் எங்கள் வீட்டின் எதிரில் உள்ளனர். இருவருக்குமே வயது எண்பதுக்கு மேல். அவர்களுக்கு இரு மகள்கள். இருவருமே தமிழகத்தின் வேறு வேறு ஊர்களில் அவர்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். வயதின் காரணமாக அந்த அம்மா சில மாதங்களாகவே கீழே விழுவதும், ட்ரிப்ஸ் ஏற்றுவதும், ரத்தம் ஏற்றுவதுமாக என்று அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று கொண்டே இருக்கிறார்.

பெரியவருக்கும் அந்த அம்மாவை விடவே வயது கூடுதலாக இருப்பினும், முடியாத நிலையிலும் சிடுசிடுப்புடன் சமையல் செய்து வருகிறார். கொஞ்ச நாட்களாகத் தான் வேலைக்கு ஆள் வைத்திருக்கிறார்கள். இருப்பினும் சமையல் செய்வது, பாத்திரம் தேய்ப்பது, அந்த அம்மாவுக்கு வேண்டிய உதவிகள் செய்வது என்று காலங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. பெற்ற மகள்கள் எப்போதேனும் வந்து எட்டி பார்த்து விட்டு செல்கிறார்கள்.

படம்: இணையத்திலிருந்து....  

அக்கம் பக்கம் இருக்கும் நமக்கே அவர்களின் தனிமை நிலை வேதனைப்படுத்துகிறது. அந்த அம்மாவுக்கு தலைமுடி நல்ல நீளம். அதை அவ்வப்போது பின்னி விட எங்களை கூப்பிடுவார்கள். சில சமயம் தோசை மாவோ, குழம்பு, ரசமோ தருவேன். மருத்துவமனைக்கு செல்லும் போது இப்போதெல்லாம் அந்த அம்மாவை அக்கம் பக்கம் உள்ளவர்கள் தான் தூக்கிச் சென்று ஆட்டோவில் ஏற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்டோ ட்ரைவரோ, வாட்ச்மேனோ வந்தாலும் அவர்களை அந்த அம்மா தொட விடுவதில்லை. நேற்று காலை கூட நாற்காலியில் உட்கார வைத்து நானும், ஆட்டோ ட்ரைவருமாக சேர்ந்து படிகளில் இறக்கினோம். அதன் பின்பு ஆட்டோவுக்குள் குண்டு கட்டாக தூக்கி நான் தான் ஏற்றிவிட்டேன்…..:(

மகள்களோடு போய் இருக்கலாமே என்றால் ஏதேதோ காரணங்களைச் சொல்கிறார்கள். பார்த்துக் கொள்ளுங்கள் பணத்தை அனுப்பி வைக்கிறேன் என்கிறார்களாம். சில சமயம் இவர்களே மகள்களுக்கு எதற்கு வீண் சிரமம் என்கிறார்கள். இவர்களுக்கு அங்கு செல்ல விருப்பமில்லையா? அல்லது அவர்கள் இவர்களை வைத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்களா? என்னவென்று புரிய மாட்டேங்குது. பெற்ற மகள்கள் இருக்கும் போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஏதோ கடமைப்பட்டவர்கள் போன்று எவ்வளவு நாட்களுக்கு செய்வது என்று புரியவில்லை????

அதுவும் அந்த மூத்தவர்கள் அன்பாக ஏதேனும் உதவி கேட்டாலாவது பரவாயில்லை. அதிகாரத் தொணியில் கட்டளையிடுவது போல் கூப்பிடுகிறார்கள். செய்த உதவிக்காக ஒரு மரியாதைக்கேனும் நன்றி என்று கூட சொல்வதுமில்லை….:(

எனக்கு தெரிந்த ஒரு வயதான பெண்மணியும் இப்படித் தான், பல மாதங்களாக படுக்கையிலிருந்தும் தன் மகளுக்கு எந்த தகவலையும் தெரிவித்து அவள் மனதை சங்கடப்படுத்த வேண்டாம் என்று சொல்லியே அக்கம் பக்கம் உள்ளவர்கள் செய்யும் உதவியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்…..:(

இன்னொரு வீட்டிலோ பெற்ற மகள் அம்மாவுக்கு போடும் சாதத்திற்கு கூட கணக்கு சொல்லிக் கொண்டு, ”நல்லா கொட்டிக்கோ! கொட்டிகோ” “சீக்கிரம் செத்து தொலஎன்று அன்றாடம் சொல்லிக் கொண்டிருப்பதை காது கொடுத்தும் கேட்க முடியாமல் வாய் வரை வார்த்தைகள் வந்தும் அடக்கிக் கொண்டு கேட்டுக் கொண்டுத் தான் இருக்கிறேன்….:((( இத்தனைக்கும் அந்த அம்மாவுடைய வீட்டில் தான் மகள் இருக்கிறாள். மகளுக்கு அந்த வீட்டையும் எழுதியும் தந்து விட்டார்…..:((

சென்ற வார நீயா? நானாவில் கூட ஒரு விவாதம் நிகழ்ந்தது. மகளோ! மகனோ! பெற்றவர்களின் இறுதி காலத்தை அம்போவென விட்டு விடாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. வயதானவர்களும் பாரபட்சம் பார்க்காமல் கெளரவத்தையும், பிடிவாதத்தையும் விட்டு விட்டு எல்லோரையும் அரவணைத்து செல்வதே சிறந்ததாகும்.

என்னவோ போங்க! இவர்கள் எல்லாம் என்ன தான் நினைக்கிறார்கள்? உங்களுடைய கருத்துக்களையும் இங்கு பகிர்ந்து கொள்ளுங்களேன்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


Friday, November 14, 2014

மடிசார் மாமி!ரங்கநாயகி! இவள் பெயரைச் சொல்லி விசாரிப்பதை விட மடிசார் மாமி என்றால் தான் எல்லோருக்கும் சட்டென புரியும். ஏறக்குறைய 35 வயதிருக்கலாம். மடிசார் கட்டுடன் கைப்பையை மாட்டிக் கொண்டு கைனட்டிக் ஹோண்டாவில் இவள் நீதிமன்ற வளாகத்தில் நுழைவதே பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தையும், பிரமிப்பையும்  உண்டு பண்ணும். இவள் தன் கணவனை இழந்தவள்.

தாயை இழந்து சித்தியின் கெடுபிடியில் வளர்ந்த ரங்கநாயகி, பத்தாவது முடித்த கையோடு 15 வயதில் புரோகிதர் கைலாசத்திற்கு வாக்கப்படுகிறாள். மச்சினர்களும், நாத்தனார்களும் சிறுவயது உடையவர்களாக இருக்கவே, தான் குழந்தையே பெற்றுக் கொள்ளாமல் அவர்களைத் தன் குழந்தைகளாக எண்ணி வளர்க்கிறாள். வறுமையின் பிடியிலும் சொற்ப காலங்களே வாழ்ந்தாலும் கணவனுடன் ஆத்மார்த்தமாக அன்னியோன்மாக வாழ்கிறாள். அவ்வப்போது குடும்பச் சூழலுக்காக சமையல் வேலைக்கும், சீர் பட்சணங்கள் செய்வதற்கும் செல்கிறாள்.


கணவனின் இறப்புக்கு பின் பல இடைஞ்சல்களுக்கு நடுவிலும் மாமியாருக்காகவும், மச்சினர், நாத்தனார்களுக்காகவும் மாலைநேரக் கல்லூரியில் படித்துக் கொண்டே சமையல் வேலைகளுக்கும் சென்று வரத் தொடங்கினாள். கணவனின் ஆசைக்காக குங்குமத்தையும், மடிசாரையும் விடவில்லை. இது ஊரார் கண்களில் பட்டு அவதூறுக்கும், அவமானங்களுக்கும் ஆளாக நேர்கிறது. எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல், கணவனின் கடமையை நிறைவேற்றப் வைராக்கியத்துடன் போராடுகிறாள்.

டேவிட் ஆசீர்வாதம் என்பவரின் கம்பெனியில் டைப்பிஸ்டாக சேர்ந்து சட்டக் கல்லூரியில் பயின்று பின்பு அந்த கம்பெனியின் லீகல் அட்வைஸராகவும் பதவி வகிக்கிறாள். டேவிட் ரங்கநாயகி மேல் வைத்திருக்கும் மதிப்பை, கொச்சைபடுத்தி ஊர் பேசுகிறது. இதனால் கம்பெனியிலும், வீட்டிலும் பல பேச்சுக்கும் பிரச்சனைகளுக்கும் ஆளாகிறாள்.


கஷ்டப்பட்டு வளர்த்த குழந்தைகள் மன்னிமேல் அபாரமான பாசத்தையும், பக்தியையும் வைத்திருக்கின்றனர். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மேம்பட ஆரம்பிக்கிறது. தன்னுடைய குழந்தைகளின் வாழ்க்கைக்காகத் தான் பாடுபடுகிறாள் என்று தெரிந்தும் மாமியார் தொடர்ந்து தன் சுடு சொல்லாலேயே ரங்கநாயகியை புண்படுத்துகிறாள். குழந்தைகளே ஒரு சமயம் மன்னியை கேள்வி கேட்கும் நிலை ஏற்பட சில நாட்கள் ஹாஸ்டலில் சென்றும் தங்குகிறாள்.

மோசமான மாமியாரின் உடல்நிலையைத் தேற்ற மீண்டும் வீட்டுக்கு வரும் ரங்கநாயகியை மாமியாரும் மற்றவர்களும் புரிந்து கொள்ள, தன் கடமை முடிந்த உணர்வுடன் சமீபகாலமாகவே கணவனின் நினைவுகள் அவளை முழுதும் சூழ ஆரம்பிக்கிறது. மற்றவர்கள் சுதாரிப்பதற்குள் முழுதும் அன்றைய நாளுக்கே சென்று வாழ ஆரம்பித்து விடுகிறாள். அன்றைய நாளுக்கும் இன்றைய வாழ்க்கைக்கும் ஏற்படும் குழப்பத்தால் தன்னுடைய முடிவை தேடிக் கொள்கிறாள் ரங்கநாயகி.


மற்றவர்களுக்காகவே வாழ்ந்து மடிந்து போகும் ரங்கநாயகி. பாசத்தின் மொத்த உருவம், தைரியசாலி, வைராக்கியமுள்ளவள், புத்திசாலி, ஆச்சார அனுஷ்டானங்களை இன்றும் கடைபிடிப்பவள். என்று பன்முகங்களை கொண்டவள். இவளைப் போல ஒரு ஜீவன் நிஜ வாழ்வில் கிடைப்பது கடினம்.நேற்று வாசித்த இந்த நாவலின் தாக்கம் குறையத் துவங்கும் முன் இதைப் பற்றி எழுதி விடுவது தான் உத்தமம் என்று நினைத்தேன். பள்ளி இறுதியில் இருந்த சமயம் என்று நினைக்கிறேன். அப்போது இரவலாக வாங்கிப் படித்த புத்தகம் இது. நடுநடுவில் மடிசார் மாமியாக நடிகை ஸ்ரீவித்யா அவர்களின் புகைப்படமும் கதைக்கேற்ற மணியம் செல்வன் அவர்களின் ஓவியமும் சேர்ந்த கலவையாக மனதில் இன்னும் அதன் நினைவுகள். நெடுநாட்களாக வாசிக்க எண்ணிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ள ஒரு வாடகை நூலகத்தில் கேட்டவுடன் கிடைத்தது. பல வருடங்களுக்குப் பின் கதையை மீட்டுக் கொள்ள உதவியது.திரையில் தோன்றும் துக்க காட்சியில் யாரேனும் கண்ணீர் சிந்தும் போது பார்க்கும் சிலருக்கு கண்ணீர் வருவது இயல்பு. அம்முலு! அம்முலு! என்று கணவன் தன்னை அழைப்பதாக அவ்வப்போது அவரோடு வாழ்ந்த நினைவுகளில் மூழ்கும் போது வாசிக்கும் நமக்கே கண்ணீர் துளிர்ப்பது உண்மை! தேவிபாலா அவர்களின் எழுத்துக்களில் தலைசிறந்தது இது என்று நினைக்கிறேன். இது தொலைக்காட்சி தொடராகவும் வந்துள்ளது. அதில் கேர்.ஆர்.விஜயா ரங்கநாயகி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். அதை நான் பார்த்ததில்லை.


1993ம் அவருடம் விகடன் பதிப்பகத்தார் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். முடியும் போது நீங்களும் வாசித்துப் பாருங்கள். புத்தகத்தின் படத்தை கூகிளில் தேடினால் வேறு ஏதேதோ படங்கள் தான் கிடைக்கின்றன. அதனால் என்னிடம் இருந்த மட்கிய புத்தகத்தை தான் புகைப்படமெடுத்து போட்டுள்ளேன்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.