Wednesday, August 6, 2014

வரலஷ்மி நோன்பு - சில நினைவுகள்!




தில்லியில் கொண்டாடிய நோன்பு

நாளை மறுநாள் அதாவது வெள்ளியன்று வரலஷ்மி நோன்பு கொண்டாடப்பட உள்ளது. இந்த நோன்பு தொடர்பாக என்னுடைய நினைவுகளும் மனதில் எழுந்த வண்ணம் உள்ளன. அவையே இப்பதிவிற்கான காரணம்.

அம்மா வீட்டில் வரலஷ்மி நோன்பு உண்டு. கொலு தான் இல்லை. சிறுவயதிலிருந்தே அம்மா செய்யும் வரலஷ்மி நோன்பில் என்னுடைய பங்களிப்பாக அம்மன் கொலுவிருக்கும் மண்டபத்தை மாவிலைத் தோரணங்களாலும், வாழை மரத்தாலும், சீரியல் விளக்குகளாலும் அலங்கரித்து கொடுப்பேன். பூஜையை சிரத்தையாக அம்மா செய்வார். விதவிதமான மலர்களை வாங்கி வந்து தொடுத்து வீட்டை சுத்தம் செய்து, பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வது என்று தொடர்ந்து வேலைகள் இருந்து கொண்டே இருக்கும். அப்பா உடனிருந்து மந்திரங்களைச் சொல்ல அம்மா பூஜை செய்வார்.



பூஜையன்று வாசலில் அம்மனை கொண்டு வைத்து அங்கிருந்து “வரலஷ்மி எங்கள் இல்லத்திற்கு வருவாயம்மா” என்று பாடி ஆரத்தியெடுத்து உள்ளே அழைத்து வருவோம். பச்சரிசி இட்லி, கொழுக்கட்டை, அப்பம், வடை, பாயசம், சுண்டல் என்று தடபுடலான உணவு தான் அன்று. மாலையில் பட்டுப்பாவாடை சரசரக்க எல்லோர் வீடுகளுக்கும் சென்று குங்குமம் கொடுத்து வெற்றிலை தாம்பூலம் வாங்கிக் கொள்ள அழைத்து வருவேன். வீட்டுக்கு வருபவர்களுக்கும் சந்தனம் குங்குமம் தருவது, பிரசாதங்கள் தருவது என்று மிகவும் ஈடுபாட்டுடன் உலா வருவேன்.

திருமணமானதும் தில்லியில் என் முதல் நோன்பை மிகவும் சிறப்பாக செய்தேன். முதல் நோன்பை மாமியார் தான் எடுத்து வைக்க வேண்டும். ஆனால் வெயிலின் தாக்கத்தால் மாமியார் ஊருக்கு சென்று விட, பதட்டத்துடன் எப்படி செய்யப் போகிறேனோ என்று தவித்துக் கொண்டிருக்க, என்னவர் தான் முழுவதும் உடனிருந்து உதவி புரிந்தார். மனதிற்கு தைரியம் கிடைக்க அம்மா செய்து வந்த விஷயங்களை மனதிற்குள் கொண்டு வந்து அலங்கரிக்கத் துவங்கினேன். வீட்டிற்கு வீடு சில விஷயங்கள் மாறுபடும். அது போல் என் அம்மா கலசத்திற்குள் தண்ணீர் விட்டு அதில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், எலுமிச்சம்பழம் ஆகியவற்றை போடுவார். ஆனால் இங்கோ அரிசியில் தான் வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை போட வேண்டும். இவற்றை ஒரு டைரியில் எழுதி வைத்துக் கொண்டு பூஜை செய்தேன். நம்மூர் பொருட்கள் எல்லாமே kairali stores எனப்படுகிற கேரள கடையில் கிடைக்கும். முதல்நாளே லிஸ்ட் போட்டு வாங்கி வருவேன். பூ தான் கொஞ்சம் தட்டுப்பாடு....:) அம்மா செய்யும் பூஜையில் மலைபோல் மலர்கள் குவிந்து கிடக்கும். 



அம்மா செய்தது போல் அவ்வளவு பதார்த்தங்களை செய்தால் இங்கு சாப்பிடுவோர் யாருமில்லை. அதனால் பாயசமோ அல்லது சர்க்கரை பொங்கலோ இவற்றுடன் வடையும், சுண்டலும் என வைத்துக் கொண்டு வருடந்தவறாமல் செய்து வந்தேன். வீட்டுக்கு வீடு சென்று அழைப்பதும் தில்லியில் இயலாதது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில்… அதனால் தொலைபேசியில் அழைப்பு விடுத்து தாம்பூலங்களை தந்து வந்தேன்.

தோழிகள் சிலரும் அவர்கள் வீட்டில் அந்த வருடம் நோன்பு செய்ய இயலாமல் போனால் எங்கள் வீட்டு பூஜையில் கொண்டு வந்து வைத்தனர். மகளுக்கு கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்ததும் அவளுக்கும் என் சிறுவயதை போலவே பட்டுப்பாவாடை சரசரக்க வருகிறவர்களுக்கு சந்தனம், குங்குமம், தாம்பூலம் தருவது மிகவும் பிடித்தமானதாக இருந்தது.



கடந்த மூன்று வருடங்களாக திருவரங்கம் வந்ததிலிருந்து மாமியாரும், நாத்தனாரும் இணைந்து செய்யும் பூஜையில் கலந்து கொள்வதோடு சரி. வங்கியின் லாக்கரில் எங்கள் வீட்டு அம்மன் வாசம் செய்து கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு முறையும் எடுத்து வரச் சொல்லி நினைவுபடுத்தியும் நேரமின்மை என்ற காரணத்தால் எடுக்க இயலவில்லை. அடுத்த வருடமாவது எங்கள் வீட்டு வரலஷ்மி நோன்பை என்னவரோடும் மகளோடும் இணைந்து செய்ய அந்த அம்மன் அருள் புரியட்டும்…

இந்த நோன்பை செய்து வரும் தோழிகள் அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

11 comments:

  1. வரலஷ்மி விரதம் பற்றிய பகிர்வுகள்..அருமை.

    ReplyDelete
  2. கணவர் குழந்தையோடு சேர்த்து நோன்பு நோற்க அம்மன் அருள் புரியட்டும். மாமியார் பூஜை செய்யும்போது நீங்களும் உங்கள் அம்மன் முகத்தைப் பூஜையில் வைக்க வேண்டுமே..

    இங்கும் உண்டு பூஜை. கலசத்தில் தண்ணீர் ஊற்ற மாட்டோம். அரிசி எ.பழம், வே.பா, நாணயம் தான்..

    ReplyDelete
  3. அம்மன் அருள் புரியட்டும்… வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. அடுத்த ஆண்டு பூஜையில் கணவர் குழந்தையுடன் மன நிறைவோடு பூஜித்து, படமெடுத்து பகிர்ந்து கொள்ள வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  5. மிக அழகான அசத்தலான பதிவு. நாளை வரலக்ஷ்மி விரதம் என்பதை முன்கூட்டியே அறிவிப்பதாக உள்ளது. பகிர்வுக்குப்பாராட்டுக்கள் + நன்றிகள்.

    ReplyDelete
  6. அம்மன் அலங்காரம் வெகு ஜோர்! எங்கள் வீட்டிலும் இரண்டு வருடங்களாய் நோன்பு விட்டுப்போய்விட்டது! இந்த வருடம் ஆரம்பிக்க உள்ளார்கள்!

    ReplyDelete
  7. கண்டிப்பாக தங்களின் எண்ணம் நிறைவேற அந்த அம்மன் அருள் புரிவாள்.

    ReplyDelete
  8. வரலஷ்மி நோன்பை வெங்கட், ரோஷ்ணி, மற்றும் குடும்பத்தினருடன் சிறப்பாக கொண்டாட அம்மன் அருள் புரியட்டும்….
    வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
    வரலக்ஷ்மி வீட்டுக்கு வந்து அனைவர் கேட்கும் வரங்களை அளிக்கட்டும்.

    ReplyDelete
  9. வெகு அழகு ஆதிம்மா. வரலக்ஷ்மி எல்லா அருளையும் செய்வாள் அம்மா. பக்தியுடன் அழைக்கும்போது அமைதியாக வந்து குடும்பதை ஒன்று சேர்ப்பாள். அடுத்த வருடம் நீங்கள் இதே போல் இன்னும் பிரமாதமாகப் பதிவு போட்டு நான் படிக்க வேண்டும். வாழ்க கண்ணா.

    ReplyDelete
  10. கருத்து தெரிவித்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.

    ReplyDelete
  11. ஆதி,

    அடுத்த வருடம் உங்க விருப்பம் போலவே நீங்க மூவரும் ஒன்றாக இருந்து பூஜையில் கலந்துகொள்ள என் வேண்டுதலும்.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…