Sunday, August 10, 2014

ஐந்தாவது ஆண்டில்!!

என்னுடைய வலைப்பூ ஆரம்பித்து இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவுற்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். இது என்னுடைய 250வது பதிவும் கூட…. நான்கு வருடங்களில் 250 என்பது மிகவும் குறைவு என்றாலும், மனதுக்கு திருப்தியாக, என் மனதின் வெளிப்பாடாக, நட்புகளிடம் மனம் விட்டு பேசியது போன்ற உணர்வுடன் அமைந்த பதிவுகள் அவை.

2010 ஆகஸ்டு 10ந்தேதி என்னவர் எனக்கு வலைப்பூவை துவக்கி கொடுத்து முதல் பதிவை அவரே டைப் பண்ணித் தந்து உதவினார். அது முதல் அவ்வப்போது பதிவுகளை எழுதி வருகிறேன். முதலில் சில மாதங்கள் மிகவும் சிரமப்பட்டு தான் டைப் பண்ணி கற்றுக் கொண்டேன். சமையல் குறிப்புகள், பயணத்தொடர்கள், அனுபவங்கள், நினைவுகள், திருவரங்கத்து உற்சவங்கள், பண்டிகைகள், புத்தக அறிமுகங்கள் என சில பிரிவுகளில் எழுதி வந்திருக்கிறேன்.

இரண்டு முறை வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை பெற்றுள்ளேன். நட்புகள் பலரால் நிறைய முறை வலைச்சரத்தில் அறிமுகமும் ஆகியுள்ளேன். தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் நட்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. உங்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பதிவுலகில் உலா வருவேன்.

என் வலைப்பூவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வந்த உங்களுக்கு இனிப்பில்லாமலா! ஸ்வீட் எடுங்க…. நட்புகளே. இது நானே செய்த இனிப்பு தான். அதனால் தாரளமாக எடுத்துக்கோங்க…

திருமதி மல்லிகா பத்ரிநாத் அவர்களின் குறிப்புடன் கொஞ்சம் மாறுதல்களோடு செய்த மைசூர் பாகு….. குறிப்பு இதோ..


மைசூர் பாகு!

தேவையான பொருட்கள்:-

கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 2 கப்
தண்ணீர் – ½ கப்
நெய் – 1½ கப்

செய்முறை –

கடலை மாவை வெறும் வாணலியில் சற்று வறுத்துக் கொள்ளவும். அடுத்து வாணலியில் சர்க்கரையும், தண்ணீரையும் சேர்த்து சூடாக்கவும். அருகில் ஒரு வாணலியில் நெய் விட்டு சூடாக்கவும். சர்க்கரை உருகி கொதிக்க ஆரம்பித்ததும், ஒரு கிண்ணத்தில் தண்ணீர் விட்டு வைக்கவும். கொதிக்க ஆரம்பித்த பாகை தண்ணீரில் விட்டு பார்த்தால் பாகு உருட்ட வர வேண்டும். இப்போ கடலைமாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவ வேண்டும். பாகுடன் மாவு சேர்ந்து வந்ததும், நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கைவிடாமல் கிளற வேண்டும். நெய் முழுமையாக உறிஞ்சப்பட்டு வாணலியில் ஓரங்களில் நுரை போல பூத்து வரும். இப்போ அடுப்பிலிருந்து இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி, கொஞ்சம் ஆறியதும் வில்லைகள் போடவும்.

வாயில் போட்டால் கரையும் மைசூர் பாக் தயார்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


Wednesday, August 6, 2014

வரலஷ்மி நோன்பு - சில நினைவுகள்!
தில்லியில் கொண்டாடிய நோன்பு

நாளை மறுநாள் அதாவது வெள்ளியன்று வரலஷ்மி நோன்பு கொண்டாடப்பட உள்ளது. இந்த நோன்பு தொடர்பாக என்னுடைய நினைவுகளும் மனதில் எழுந்த வண்ணம் உள்ளன. அவையே இப்பதிவிற்கான காரணம்.

அம்மா வீட்டில் வரலஷ்மி நோன்பு உண்டு. கொலு தான் இல்லை. சிறுவயதிலிருந்தே அம்மா செய்யும் வரலஷ்மி நோன்பில் என்னுடைய பங்களிப்பாக அம்மன் கொலுவிருக்கும் மண்டபத்தை மாவிலைத் தோரணங்களாலும், வாழை மரத்தாலும், சீரியல் விளக்குகளாலும் அலங்கரித்து கொடுப்பேன். பூஜையை சிரத்தையாக அம்மா செய்வார். விதவிதமான மலர்களை வாங்கி வந்து தொடுத்து வீட்டை சுத்தம் செய்து, பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வது என்று தொடர்ந்து வேலைகள் இருந்து கொண்டே இருக்கும். அப்பா உடனிருந்து மந்திரங்களைச் சொல்ல அம்மா பூஜை செய்வார்.பூஜையன்று வாசலில் அம்மனை கொண்டு வைத்து அங்கிருந்து “வரலஷ்மி எங்கள் இல்லத்திற்கு வருவாயம்மா” என்று பாடி ஆரத்தியெடுத்து உள்ளே அழைத்து வருவோம். பச்சரிசி இட்லி, கொழுக்கட்டை, அப்பம், வடை, பாயசம், சுண்டல் என்று தடபுடலான உணவு தான் அன்று. மாலையில் பட்டுப்பாவாடை சரசரக்க எல்லோர் வீடுகளுக்கும் சென்று குங்குமம் கொடுத்து வெற்றிலை தாம்பூலம் வாங்கிக் கொள்ள அழைத்து வருவேன். வீட்டுக்கு வருபவர்களுக்கும் சந்தனம் குங்குமம் தருவது, பிரசாதங்கள் தருவது என்று மிகவும் ஈடுபாட்டுடன் உலா வருவேன்.

திருமணமானதும் தில்லியில் என் முதல் நோன்பை மிகவும் சிறப்பாக செய்தேன். முதல் நோன்பை மாமியார் தான் எடுத்து வைக்க வேண்டும். ஆனால் வெயிலின் தாக்கத்தால் மாமியார் ஊருக்கு சென்று விட, பதட்டத்துடன் எப்படி செய்யப் போகிறேனோ என்று தவித்துக் கொண்டிருக்க, என்னவர் தான் முழுவதும் உடனிருந்து உதவி புரிந்தார். மனதிற்கு தைரியம் கிடைக்க அம்மா செய்து வந்த விஷயங்களை மனதிற்குள் கொண்டு வந்து அலங்கரிக்கத் துவங்கினேன். வீட்டிற்கு வீடு சில விஷயங்கள் மாறுபடும். அது போல் என் அம்மா கலசத்திற்குள் தண்ணீர் விட்டு அதில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், எலுமிச்சம்பழம் ஆகியவற்றை போடுவார். ஆனால் இங்கோ அரிசியில் தான் வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை போட வேண்டும். இவற்றை ஒரு டைரியில் எழுதி வைத்துக் கொண்டு பூஜை செய்தேன். நம்மூர் பொருட்கள் எல்லாமே kairali stores எனப்படுகிற கேரள கடையில் கிடைக்கும். முதல்நாளே லிஸ்ட் போட்டு வாங்கி வருவேன். பூ தான் கொஞ்சம் தட்டுப்பாடு....:) அம்மா செய்யும் பூஜையில் மலைபோல் மலர்கள் குவிந்து கிடக்கும். அம்மா செய்தது போல் அவ்வளவு பதார்த்தங்களை செய்தால் இங்கு சாப்பிடுவோர் யாருமில்லை. அதனால் பாயசமோ அல்லது சர்க்கரை பொங்கலோ இவற்றுடன் வடையும், சுண்டலும் என வைத்துக் கொண்டு வருடந்தவறாமல் செய்து வந்தேன். வீட்டுக்கு வீடு சென்று அழைப்பதும் தில்லியில் இயலாதது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில்… அதனால் தொலைபேசியில் அழைப்பு விடுத்து தாம்பூலங்களை தந்து வந்தேன்.

தோழிகள் சிலரும் அவர்கள் வீட்டில் அந்த வருடம் நோன்பு செய்ய இயலாமல் போனால் எங்கள் வீட்டு பூஜையில் கொண்டு வந்து வைத்தனர். மகளுக்கு கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்ததும் அவளுக்கும் என் சிறுவயதை போலவே பட்டுப்பாவாடை சரசரக்க வருகிறவர்களுக்கு சந்தனம், குங்குமம், தாம்பூலம் தருவது மிகவும் பிடித்தமானதாக இருந்தது.கடந்த மூன்று வருடங்களாக திருவரங்கம் வந்ததிலிருந்து மாமியாரும், நாத்தனாரும் இணைந்து செய்யும் பூஜையில் கலந்து கொள்வதோடு சரி. வங்கியின் லாக்கரில் எங்கள் வீட்டு அம்மன் வாசம் செய்து கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு முறையும் எடுத்து வரச் சொல்லி நினைவுபடுத்தியும் நேரமின்மை என்ற காரணத்தால் எடுக்க இயலவில்லை. அடுத்த வருடமாவது எங்கள் வீட்டு வரலஷ்மி நோன்பை என்னவரோடும் மகளோடும் இணைந்து செய்ய அந்த அம்மன் அருள் புரியட்டும்…

இந்த நோன்பை செய்து வரும் தோழிகள் அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.