Wednesday, July 23, 2014

சுயம்வரத்தில் நான்!!!!சுயம்வரமா? ஆமாங்க. அப்படி ஒரு படம் கூட வந்திருக்கிறது. ஏகப்பட்ட நட்சத்திரங்கள் ஒன்று திரண்டு கின்னஸ் சாதனைக்காக 24 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட படம். சரி இப்போ எதுக்கு அந்த படத்தை பற்றி சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? ராஜாக்கள் ஆண்ட காலங்களில் தங்கள் மகளுக்கேற்ற வரனை, வீரனை தேர்ந்தெடுக்க சுயம்வரம் ஏற்பாடு செய்வார்கள். பல நாடுகளிலிருந்தும் இளவரசர்கள் போட்டி போட்டுக் கொண்டு கலந்து கொள்வார்கள். அது ஒரு காலம்.

இப்போ அதே போல நவீன சுயம்வரங்கள் ஒவ்வொரு ஊர்களிலும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. சென்ற ஞாயிறன்று அப்படி ஒரு சுயம்வரத்தில் கலந்து கொள்ள நேரிட்டது. வெயிட்! வெயிட்! ஷாக் ஆயிடாதீங்க…..:) அது என் தம்பிக்காக…..:)

திருவரங்கத்திலுள்ள குறிப்பிட்ட கல்யாண மண்டபத்தில் காலை 8 மணி முதல் 4 மணி வரை நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. எங்கள் குடியிருப்பில் அதற்கான அறிவிப்பை பார்த்த அன்றே, இணையத்தில் அவர்களுக்கான தளத்திற்கு சென்று விவரங்களை பதிவு செய்தேன். குறிப்பிட்ட பதிவு எண்ணும் தந்தார்கள். சுயம்வரத்தன்று தயாராகி அங்கு செல்ல சற்று தாமதமாகி விட்டது. அங்கு சென்றால் உங்களுடைய எண் முதலே படித்தாகிவிட்டது. அமர்ந்து மற்றவர்களின் விவரங்களை கேளுங்கள் என்று சொல்லிவிடவே, அமர்ந்து கவனிக்கத் துவங்கினோம்.

சிறிது நேரங்கழித்து நான் சென்று அந்த நிகழ்ச்சியின் அமைப்பாளரிடம், “நாங்கள் இணையத்தில் பதிவு செய்திருந்தோம். வர சற்றே தாமதமாகி விட்டது. முதலே கூப்பிட்டு விடுவீர்கள் என்பது தெரியாது. மீண்டும் அழைக்க இயலுமா?” என கேட்க, அவரோஎன் கடமை முடிந்து விட்டது. உங்க இஷ்டத்துக்கு வந்தா எப்படிஎன்று சொல்லி விட்டார். சரி! அமர்ந்து மணமகள்கள் ஏதேனும் வந்தால் அவர்களின் பதிவு எண்ணை குறித்துக் கொள்வோம். பின்பு பேச செளகர்யமாக இருக்கும் என்று நினைத்து அமர்ந்தேன்.

ஆனால், வந்ததோ மணமகன்களின் அணிவரிசை தான்….:) பெற்றோருடனோ, தனியாகவோ, பெற்றோர் மட்டுமோ வந்து தங்கள் குடும்பத்தினை அறிமுகம் செய்து கொள்கின்றனர். தங்களுக்கு எப்படிப்பட்ட பெண் தேவை என்று சொல்லிக் கொண்டிருந்தனர். அமைப்பாளரும் அவர்களின் ஜாதகத்தை பார்த்து அம்மா வழியிலோ, அப்பா வழியிலோ பெண்கள் உள்ளனர். முதலில் அவர்களிடம் சென்று கேளுங்கள் என்றும். ஒருசிலருக்கு குலதெய்வ வழிபாட்டை மறந்ததால் தான் திருமணத்தில் தாமதம். ஆகவே முதலில் குலதெய்வ வழிபாட்டை செய்யுங்கள். நல்ல பெண் கிடைப்பாள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.

சிலர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தனர். செவ்வாய் தோஷத்தை பற்றி பெரிதாக கவலைப்பட ஒன்றுமில்லை என்று தன் அனுபவத்தினை பற்றி ஒரு பெண் பகிர்ந்து கொண்டார். ஒரு பெண் தன் அண்ணன்களுக்காக வந்திருந்தார். நான்கு தங்கைகளுக்கும் திருமணம் செய்த பின்னர் தான் தன் அண்ணன்கள் திருமணம் செய்து கொள்ள சம்மதித்திருக்கின்றனராம். அவர்களுக்கேற்ற நல்ல பெண் கிடைக்க வேண்டும் என்றும். நாங்கள் வருகிற பெண்ணுக்காக எப்படி வேண்டுமானாலும் அனுசரித்து கொள்கிறோம். எங்களுக்காக அண்ணன்கள் இனி எதுவும் செய்ய வேண்டாம். நாங்கள் நல்ல நிலையில் தான் இருக்கிறோம் என்று கண் கலங்கி பேசினார். அந்த பெண்ணின் முகம் இன்றும் என் நினைவில்….

இப்படி பலதரப்பட்ட மனிதர்களை அன்று சந்தித்தேன். இப்படியாக மூன்று மணி நேரங்கள் சென்றன. வெறும் மணமகன்களின் அறிமுகம் தான். என்னடா இது! பெண்களே இல்லையா!!! இப்படிப்பட்ட நிலையிலா நம் நாடு உள்ளது……:(

திடீரென்று இரண்டு பெண்களின் ஜாதகம் படிக்கப்பட்டது. ஒன்றில் மணமகளின் பெற்றோரே வந்திருந்தனர். பெண் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகவும், அங்கிருந்து வர அவளுக்கு விருப்பம் இல்லை எனவும், வெளிநாட்டில் வேலை பார்க்கும் மணமகன் தான் தேவை என்று சொன்னார்கள். மற்றொன்றில் மணமகள் அங்கு வந்திருந்தாள். அவளுக்கேற்ற வரன்கள் இருந்தால் கையை உயர்த்தி சொல்லும் படி விழாவில் அறிவிக்கப்பட்டது. நானும் கையை உயர்த்தினேன். வயது வித்தியாசம் ஒன்றோ, இரண்டோ தான் ஒத்துக் கொள்வார்களாம். அதனால் சரிப்பட்டு வரவில்லை….:) சரி! இனி அமர்ந்து என்ன பயன்……:) பெண்களின் பெற்றோரோ, அல்லது பெண்ணோ அங்கு வந்திருந்தால் தானே நம்மை அறிமுகம் செய்தவுடன், விருப்பம் இருந்தால் தெரிவிப்பார்கள். விழா வரவேற்பில் ஒரு கையேடு தரப்பட்டது. அதில் பெண், பையன்களின் தகவல்கள் இருந்தன. இதில் நமக்கு ஒத்துவருவனவற்றில் உள்ள எண்களில் தொடர்பு கொண்டு பேசுவோம். என்று அங்கிருந்து புறப்பட்டோம்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் வாங்கி வந்த கையேட்டில் இருந்த எங்களுக்கு ஒத்து வந்த எட்டு வரன்களை குறித்துக் கொண்டு ஒவ்வொருவரிடமும் பேசத் துவங்கினேன். ஒன்று திருச்சியிலேயே, அடுத்து மூன்று கேரள வரன்கள், ஒன்று திருச்சூரும், இரண்டு கோட்டயமும். பெங்களூரில் ஒன்று, ஹைதராபாத்தில் ஒன்று, தில்லியில் இரண்டு என வரிசையாக ஆரம்பித்தேன். இரண்டு வரன்களுக்கு நிச்சயமாகிவிட்டதாம். கேரள வரன்களுக்கு கேரள மணமகன்கள் தான் தேவையாம். அடுத்தது இப்போ கல்யாணம் செய்துக்கற எண்ணமில்லையாம். ஐ.ஏ.எஸ் படிக்க உத்தேசமாம். கடைசியில் தில்லி பெண்ணுக்கு இந்தி தான் பேச வருமாம். அதனால் இந்தி பேசத் தெரிந்த மணமகன் தான் தேவையாம். இப்படி ஒவ்வொன்றிலும் ஒரு காரணம்…..:)

இன்றைய காலகட்டங்களில் ஆண்கள் நன்றாகபடித்தும் வேலை கிடைக்க திண்டாடுகின்றனர். அப்படியே வேலை கிடைத்தாலும் எல்லோராலும் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடிகின்றதா? கிடைக்கின்ற வேலையில் குடும்ப சூழ்நிலைகளுக்காக உழைத்து சம்பாதிக்கத் தான் வேண்டியிருக்கிறது. மேற்கொண்டு படிக்கவும் சிலருக்கு வாய்ப்பும் கிடைப்பதில்லை. படிக்க வாங்கிய கடன்களையும் அடைக்க வேண்டியுள்ளது. உடன்பிறந்தவர்களின் வாழ்க்கை, என இப்படியே வயது ஏறிவிடுகிறது. இன்று ஆண்களின் நிலை தான் பாவமாக உள்ளது. பெண்களோ நன்றாக படித்து நல்ல வேலைக்கும் போன பின்பு அதற்கேற்ற வரன்களைத் தான் தேடுகின்றனர். வயது வித்தியாசமும் அதிகமாக கூடாது. இப்படியே நீடித்தால் ………..இந்த நிலை என்று மாறுமோ?

உங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

14 comments:

 1. இதைப்பத்தி என் வலைப்பூவில் நிறைய்ய்ய்ய்ய புலம்பல்கள் எழுதியிருக்கேன். இந்த மாதிரி கண்கள் பூத்து தேடி தேடி இளைச்சு ஒரு வழியா 7 வருஷத்துக்கு அப்புறம் தம்பிக்கு கல்யாணம் சமீபத்தில் நடந்தது. :((

  ReplyDelete
 2. எங்கள் வீட்டிலும் ஒரு வரனுக்கு பெண் தேடும் படலம் நடக்கிறது. கிடைக்க மாட்டேன் என்கிறது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள்! இந்த சுயம்வரம் பற்றி நான்கூடச் செய்தித் தாளில் படித்தேன்.

  ReplyDelete
 3. உண்மைதான் இன்று பெண்கள் நன்கு படித்து வேலையில் செட்டில் ஆகிவிட்டு ஆண்கள் இவ்வளவு சம்பாதிக்க வேண்டும் இவ்வளவு படித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்! திருமணத்திற்கு பெண்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது.

  ReplyDelete
 4. எனக்கு இது போன்ற கூட்டங்களில் கலந்து கொன்ட அனுபவம் இருக்கிறது. சில சமயங்களில் பலன்களும் சிலருக்காவது கிடைக்கிறது. ஆனால் என் அனுபவப்படி, இந்தக் காலத்தில் demand அதிகம் வைப்பது பெண்ணும் பெண் வீட்டினருமே!

  ReplyDelete
 5. இப்போதெல்லாம் பெண்கள் கிடைப்பதும் மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது. அப்படியே கிடைத்தாலும் நமக்குப்பொருத்தமான நல்ல குடும்பத்துப்பெண்கள் கிடைப்பது மஹா மஹா கஷ்டம் தான். ஆங்காங்கே உள்ள ஒருசில பெண்கள் போடும் கண்டிஷன்களைக்கேட்டால் தலையைச்சுற்றி மயக்கமே வருவதாகச் சொல்கிறார்கள் .... பிள்ளை வீட்டார். காலம் மாறி விட்டது. இப்போது பெண் குழந்தைகள் காட்டில் நல்ல மழை பெய்து வருகிறது. போகப்போக எப்படி இருக்குமோ. பெண்களைப் பெற்றுள்ளவர்களே இன்று பாக்யசாலிகள். நீங்களும் பாக்யசாலியே ;)))))))

  வயசுக்கு வந்த பையன்களை வைத்துள்ள பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்தப்பிள்ளைகள் முதிர்க்காளைகளாவதற்குள் திருமணம் நடக்குமா என்ற கவலை அந்தப் பிள்ளைகளைகளையும் அவர்கள் பெற்றோர்களையும் வாட்டி வதைத்துத்தான் வருகிறது. ;)

  ReplyDelete
 6. காலம் ரொம்பவே மாறிவிட்டது.

  ReplyDelete
 7. இன்னும் சில வருடங்களில் மணமகளுக்கு வரதட்சணை கொடுக்கக்கூடிய காலம் கூட வரலாம் :-)

  ReplyDelete
 8. பெண் குழந்தைகளே வேண்டாமென்று ஒதுக்கி வைத்த காலம் போய் பெண் குழந்தை எங்கே எனும் தேடும் காலம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது.... எப்போது உணரப் போகிறது உலகம்? அதைத் தான் சொல்கிறது உங்கள் பதிவு.

  ReplyDelete
 9. உண்மை தான் சகோ. இன்று பெண்கள் எல்லா துறையிலும் முன்னேறுகிறார்கள். நன்றாகவும் படிக்கிறார்கள். அதனால் அவர்கள் எதிர்ப்பார்ப்பில் தவறில்லை. ஆனால் நீங்கள் சொல்வது மாதிரி ஆண்களின் நிலை தான் பாவம். திருமணத்துக்கு முன்பே குடும்ப பாரத்தை சுமக்கவும், உடன் பிறந்தவர்களுக்கு திருமணத்தை முடிக்கவும் என்று அவர்கள் வாழ்கையில் ஏகப்பட்ட கடமைகள்.
  பெண்கள் இந்த மாதிரி ஆண்களை திருமணம் செய்தால் அவர்களின் வாழ்வு கண்டிப்பாக பிரகாசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், திருமணத்துக்கு முன்பே தன் குடும்ப உறுப்பினர்களின் சந்தோஷத்துக்கு மதிப்பு கொடுத்து வாழும் இந்த ஆண்கள், கண்டிப்பாக தன் மனைவியின் சந்தோசத்திற்கு மதிப்பு கொடுப்பார்கள்.

  ReplyDelete
 10. முற்பகல் செய்யுன் பிற்பகல் விளையும்...!

  உசிலம்பட்டி உட்பட பல இடங்களில்...

  ReplyDelete
 11. உண்மைதான் சகோதரி 1980 முதல் 1995 வரை பெண் குழந்தை கருக்களைப்பு விஸ்தாரமாக வளர்ந்து வந்த காலகட்டம் அதன் பாதிப்பு இன்று வெளிப்படுகிறது இதனைக்குறித்து நான் கூட ஒருபதிவு இட்டு இருந்தேன். இந்த தவறுக்கு பொருப்பாளிகள் சமூக அங்கத்தினராகிய நாமே...

  ReplyDelete
 12. அடடா... இப்படிப்போகிறதா.....

  ReplyDelete
 13. வணக்கம்
  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிடமுகவரி.
  http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_2.html?showComment=1406943320490#c8058890132868713880
  வாருங்கள்..வாருங்கள்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 14. அனைவரின் கருத்துக்களுக்கும் என் அன்பான நன்றிகள்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…