Saturday, July 12, 2014

பல்பு வாரமோ!
வாரம் முழுதும் தலைப்பில் குறிப்பிட்டது போல பல்பு வாரமோ என்று சொல்லும் விதமாக ஒரே அலைச்சலும், பல்புகளுமாக போய்விட்டது. அதை பதிவுலக நட்புகளான உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ளாவிட்டால் எப்படி? இதோ பல்புகளின் அணிவரிசை.…

சம்பவம் 1:-

மாதா மாதம் இணைய இணைப்புக்கான ரீசார்ஜ் செய்வது வழக்கம்.  இம்மாதமும் மகளை பாட்டு வகுப்பில் விட்டபின் ஒரு கடைக்குச் சென்றேன். என் அலைபேசியில் பதிந்து வைத்திருக்கும் இணையத்திற்கான சிம் எண்ணை அவர்களின் சீட்டில் எழுதி ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்து விட்டு தந்தேன். கடைக்காரரும் ரீசார்ஜ் ஆகி விட்டது என்று சொல்லவே, பணத்தை தந்து விட்டது அங்கிருந்து மருந்தகத்திற்கும், ஸ்டேஷனரி கடைக்கும் சென்று வேலைகளை முடித்துக் கொண்டு மீண்டும் பாட்டு வகுப்பிற்கு வந்து ஐந்து நிமிடங்கள் அமர்ந்ததும், வகுப்பு முடிந்து மகள் வெளியில் வந்தாள். அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கும் வந்தாச்சு. நுழைந்த உடனே மடிக்கணினியை ஆன் செய்து பார்த்தால், ரீசார்ஜ் ஆகவில்லை. ஏறக்குறைய ஒருமணிநேரம் ஆகி விட்டது. இன்னும் காத்திருக்கலாம் என்றால், ஒருவேளை தவறுதலாக வேறு யாருக்கும் ரீசார்ஜ் ஆகிவிட்டதோ என்ற பயம். கடைக்கு தொடர்பு கொள்ளலாம் என்றால் அவர்களின் எண் உள்ள சீட்டை எங்கோ விட்டுவிட்டேன் போலிருக்கிறது. எல்லாவற்றையும் கொட்டி தேடியாச்சு….:)

இன்னும் இரவுக்கான சமையல், ஹோம்வொர்க் என்று வேலைகள் இருக்கவே, ஒரு ஆட்டோவை பிடித்து சென்று விசாரித்தால், ஏதோ பிரச்சனையாம். இப்போ தான் ரீசார்ஜ் ஆகியிருக்கு என்றார். உடனேயே அவர்களின் கடை எண்ணை மீண்டும் வாங்கி வந்து முதல் வேலையாக அலைபேசியில் சேமித்துக் கொண்டேன்….:)) அலைபேசிக்கான ரீசார்ஜ் எனில், வரவு வைக்கப்பட்டால் தான் பணமே தருவேன். இணையத்துக்கு அவர்கள் சொல்வதை நம்பித் தான் வர வேண்டியுள்ளது. எப்போதும் அங்கு தான் ரீசார்ஜ் செய்து கொள்வேன் என்றாலும் இம்முறை பல்பு……J

சம்பவம் 2:-

ஒருநாள் மாலையில் கண் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். கண்ணில் சொட்டு மருந்து விட்டு அரைமணி உட்கார்ந்து மருத்துவரிடம் காண்பித்து, சோதனைகள் முடிந்தது. கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு என்றதும், சிஸ்டம்ல நாள் முழுதும் உட்கார்ந்திருப்பீர்களா? என்றார் மருத்துவர். நான் இரண்டு மணிநேரம் தான் செலவழிப்பேன். கொஞ்சம் புத்தகங்கள் வாசிப்பேன். என்றதும். வற்றிப் போன காவிரி போல் கண்களும் வற்றி போய்விட்டன என்பதால் தான் எரிச்சலாம். மற்றபடி பவர் எல்லாம் இல்லை. அவ்வப்போது கண்களை சிமிட்டுங்கள், கண்களுக்கான பயிற்சிகளை செய்யுங்கள் என்று சொட்டு மருந்தும், மாத்திரைகளும் எழுதித் தந்தார். ஃபீஸ் என்றதும் மருந்தகத்தில் மருந்துகளை வாங்கிக் கொண்டு அங்கேயே செலுத்தி விடுங்கள் என்றார். (வியாபாரத் தந்திரம் தான்) சொட்டு மருந்து விட்டிருந்ததால் கண்களில் பார்வை கலங்கினால் போல் தான் தெரிந்தன. குத்துமதிப்பாக பணத்தை செலுத்தி விட்டு மருந்துகளை வாங்கிக் கொண்டு, வீடு வந்தடைந்தேன்.

வழியில் ஒரு வட இந்திய மாப்பிள்ளை அழைப்பு நடந்து கொண்டிருந்தது. இதில் கேரள சாயலும் தெரிந்தது. பேண்ட் வாத்தியங்களும், குதிரைகளும், யானையும், செண்டை மேளங்களும், கரடி போல் வேடமணிந்த ஒருவரும், கையில் ராக்கெட்டை அனாயாசமாக பற்ற வைத்து வானில் விட்டுக் கொண்டிருந்த ஒரு சிறுவனும் என எல்லாவற்றையும் ஒருவாறாக பார்வையிட்டு வந்தேன்.

மறுநாள் காலையில் மருந்துகளை பார்த்தால் 15 மாத்திரைகளுக்கு பதிலாக 10 மாத்திரைகளே உள்ளன. நல்லவேளை என் புத்தி வேலை செய்தது. உடனே மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்ல, அங்கு பணிபுரியும் பெண் “அந்த டப்பாவை நல்லாப் பாருங்க இருக்கும் என்றார்” நேற்று தாம்மா மருந்து விட்டதால் கண்ணு ஒழுங்காத் தெரியல… இன்னிக்கு நல்லாவே தெரியுது. 10 தான் இருக்கு என்று சொல்லவே, சரி! வாங்க தரேன் என்றாள். மாலையில் வருவதாக சொல்லி மீண்டும் அலைந்து வாங்கி வந்தேன்… கவனக்குறைவோ! ஏமாற்ற திட்டமோ! தெரியாது. ஆனால் நான் அலைந்தது தான் மிச்சம்….:)

சம்பவம் – 3

திருவரங்கத்தை பொறுத்தவரை காய்கறி சந்தைகள் காலையில் வடக்கு வாசலிலும், மதியம் கீழ வாசலிலும், மாலையில் தெற்கு வாசலிலும் நடைபெறும். காலை சந்தையான வடக்கு வாசல் தான் எங்களுக்கு அருகில் என்றாலும் பள்ளி நேரமாகையால் செல்ல முடியாது. அருகில் இருக்கும் கடையிலேயே வாங்கிக் கொள்வேன். நேற்று கூட மகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்பி விட்டு கடைக்கு சென்று காய்கறிகளை வாங்கி வந்தேன். வீட்டுக்கு வந்து கணக்கு பார்த்தால் 15 ரூபாய் கூடுதலாக வாங்கப்பட்டதாக தெரிந்தது. உடனே ஒரு துண்டு சீட்டில் கணக்கை எழுதிக் கொண்டு, “என்னை பார்த்தாலே ஏமாளின்னு எழுதியிருக்கு போல, இந்த கணக்கை பார்க்கட்டும்” என்று வீராவேசமாக புறப்பட்டேன்.

“என்னக்கா! (இது திருச்சி பாஷை! வயது வித்தியாசமில்லாமல் எல்லோரும் அக்கா தான்) என்றார். கணக்கை காண்பித்து சொன்னதும். ஒருமுறை சரி பார்த்து விட்டு, ”தக்காளி கால்கிலோ 10 ரூபாக்கா….  விக்கிற விலைவாசில கிலோ 10 ரூபாக்கு யார் தராங்க.  நான் போட்ட கணக்கு சரி தான்” என்று சொல்ல, சாரி சொன்னேன். பரவாயில்லக்கா நானும் கவனிக்காம இருந்திருக்கலாம். கேட்டதில தப்பில்ல என்றார். அசடு வழிந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

செம பல்பு இல்ல…………..:)))

கடைசியாக ஒரு பெரிய கோபம்:-

பாட்டு வகுப்பின் திண்ணையில் அமர்ந்திருந்தேன். அவர்கள் வீட்டின் உறவினப் பெண்மணி, ஏதோ ஒரு உதவிக்காக என்னை அழைக்கையில் ”ஆண்ட்டி! இதை ஒருநிமிஷம் பிடிங்க என்றார். எனக்கு மஹாக்கோபம்!!! என் வயது ஒத்தவளோ, ஓரிரு வயது சிறியவளாகவோ தான் இருப்பாள். அவளுக்கு இரண்டு வயதில் மகன், எனக்கு ஒன்பது வயதில் மகள். இவ்வளவு தான் வித்தியாசம். அக்கா அல்லது பெயர் சொல்லிக் கூட அழைத்திருக்கலாம். அதற்காக ஆண்ட்டி என்றா அழைப்பது?

வழக்கமான பின்னூட்டங்கள் இல்லாமல், உங்களுக்கு இதுபோல் அனுபவங்கள் ஏற்பட்டிருந்தால், என்ன செய்திருப்பீர்கள்? என்று பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்….:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

24 comments:

 1. இதுல ஒண்ணுமில்லீங்... இதெல்லாம் அனுபவங்கள்தாங்.... இப்ப ஒருமாதிரி இருந்தாலும் அப்புறம் ரசிச்சுச் சிரிக்க முடியுங்க..... அப்புறம் என்ன கேட்டீங்க... எங்க அனுபவமாங்க.... அது கெடக்குங்க ஏராளமா... அத்த ஏங்க இங்க சொல்லி பல்பு வாங்கிகிட்டு....ஹிஹிஹி...

  ReplyDelete
 2. வணக்கம்

  எல்லா சம்பவங்களையும் இரசித்துப்படித்தேன் அதில் நான் அனுபவப்பட்டது.சம்பவம்-1 இல்தான்... மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
  த.ம 3வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. சீரியல் செட் போல் பல்பு செட்..

  இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டால் வேறு எப்படியும் நடந்துகொள்ளமுடியாது..
  அப்போதைக்கு அதுதான் முடியும்..இல்லையா.. யோசிக்க அப்போது நேரம் இல்லையே..!

  ReplyDelete
 4. ஆண்ட்டின்னு கூப்பிட்ட பொண்ணு கிட்ட யெஸ் பாட்டின்னு நீங்க சொல்லிருந்தா பல்பு அவங்களுக்கு போயிருக்கும். மத்த பல்புகள் எல்லாமே ரசனை. (மத்தவங்க வாங்கினா பல்பு ரசனைதாண்டே...) ஹி... ஹி.... ஹி...

  ReplyDelete
 5. ஆதி,
  தைரியமா சொல்லச் சொல்லி இப்படி பயமுறுத்திட்டீங்களே ! பல்புகளிலேயே பெரிய பல்பு கோபம்தான் பிடித்தது.

  பேசாம தொடர் பதிவாக்கி இருக்கலாமோ !!

  ReplyDelete
 6. ஆன்டின்னு கூப்பிட்டா எனக்கு கோவம் வரும், வயதுக்காக அல்ல, ஆங்கிலத்தில் கூப்பிட்டதுக்காக..., அக்கா, அத்தை, பேரியம்மா, சித்தின்னு கூப்பிட்டா சந்தோசப்படுவேன்.

  ReplyDelete
 7. பல்புகள் எல்லாம் சகஜம்தான்! ரீசார்ஜ் விசயம் பலமுறை ஏற்பட்டு இருக்கிறது! கடையிலும் சிலமுறை ஏமாந்து இருக்கிறேன்! திரும்ப சென்று கேட்டது இல்லை! எனக்கும் யாராவது அங்கிள் என்று அழைத்தால் இப்பொதெல்லாம் பிடிப்பது இல்லை! ஆனால் வயசு ஏறிப்போச்சே! என்ன செய்வது?!

  ReplyDelete
 8. பல்புவாங்கிய அனுபவங்கள் பகிர்வு நன்றாக இருக்கிறது. சிரிப்பு, வருத்தம், கோபம் எல்லாம் நிறைந்த பல்பு.
  வாழ்க்கையில் பல்பு வாங்காமல் முடியுமா ஆதி?
  நானும் வாங்கி இருக்கிறேன்.

  ReplyDelete
 9. கடைசியாக சொன்னீர்கள் அல்லவா - ஆண்ட்டி கோபம். இதே மாதிரியான அனுபவம் என் மனைவிக்கு ஏற்பட்டது. உடனே, அவர்கள், ஆண்டி என்று கூப்பிட்டவரிடம், நான் இன்னும் ஆண்டி ஆகிற வயசை தொடவில்லை. அதனால், நீ என்னை பேர் சொல்லியே கூப்பிடலாம் என்று சொல்லிவிட்டு, பின்பு வீட்டிற்கு வந்து, என்னிடம் ஒரே புலம்பல்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா,.. சார், என் மகள் சொட்டைத்தலையுடன் யாரைப் பார்த்தாலும் தாத்தா என்று கூப்பிடுவாள்....

   Delete
 10. எல்லாரும் பல்ப் வாங்குறது சகஜம்தான்..
  முதலாவது எப்போதாவது நேர்வதுதான்... இரண்டாவதில் ஏமாற்ற வாய்ப்பில்லை... கவனக் குறைவாக இருக்கலாம்...
  கடைசியாக சொன்னது... அதானே எப்படி ஆண்டியின்னு கூப்பிடலாம்... அது தப்பாச்சே...
  ரொம்ப சுவராஸ்யமாச் சொல்லியிருக்கீங்க சகோதரி...

  ReplyDelete
 11. சில பல்பு அனுபவங்கள் அந்த நேரத்தில் டென்ஷன் தந்தாலும் பின்னாளில் நினைத்துப் பார்க்கும்போது நகைச்சுவையாயிருக்கும். நல்ல பதிவு! இரசித்தேன். நன்றி!

  ReplyDelete
 12. இந்த வாரம் ஜகஜ்ஜோதியாக பிரகாசித்திருக்கிறது உங்களுக்கு. அனைத்தையும் ரசித்தேன். உங்கள் கோபம் நியாயமானதுதான். அந்தப்பெண்மணி தன் வயதைக் குறைத்துக்காட்ட உங்களை ஆண்ட்டியாக்கிப் பார்க்கிறார்கள் போலும்.

  ReplyDelete
 13. ஆஹா.நான் தான் உலக மஹா பல்பாளினு நினைச்சனே.ஆதி. எனக்கு மேல இருக்கியேப்பா. நான் கடைக்குப் போகிற அழகும். விழாமல் படியேறு அழகும். பாட்டி பார்த்துவாங்கன்னு கடைக்காரர் சொல்கிற அழகும். வாங்கின பொருட்களுக்குப் பணம் கொடுத்துவிட்டு மீதியும் வாங்காMஅல் புடவைகளையும் அங்கேயே வைத்துவிட்டு வர அழகும் சூப்பர் பல்புகள். .என்னை 18 வயசிலியே பக்கத்துவீட்டு அம்மா மாமின்னு கூப்பிட்டதிலிருந்து எனக்கு இந்த அக்கா எல்லாம் ரசிப்பதில்லை.அப்பவே நான் கிழவியான ஃபீலிங் வந்துட்டதுப்பா. சூப்பர் வாட்ஸ் பல் புகள் வாங்கினதுக்குப் பாராட்டுகள் .வெகு வான ஒளிமயமான வாழ்க்கைக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. பதிவு - பளிச் என்று இருந்தது.

  ஆண்ட்டி - நியாயமான கோபம்.

  ReplyDelete
 15. உண்மையிலேயே உங்களுக்கு பல்பு வாரம்தான் போல... ஒரு பெரியவர் ஒரு குட்டிப் பெண்ணுடன் வாக்கிங் போவார்.ஒரு நாள் அவர் மட்டும் தனியாகப் போனார் . நான் எங்கேங்க உங்க பேத்தின்னு கேட்டேன்...அட அது என் பெண்மா..கொஞ்சம் முடி நரைச்சா தாத்தான்னு முடிவு செய்துடறதான்னார்.. ஹி..ஹி..ன்னு வழிஞ்சேன். ஆன்ட்டி ,பாட்டி எல்லாம் கேட்டுப் பழகிடுச்சு...யார் என்ன சொன்னாலும் என் மனதளவில் இளமையாய் உணர்வதால் அது குறித்துக் கவலைப்படுவதில்லை. காய்கறிக்கடையில் நிகழ்ந்ததுண்டு...அங்கேயும் நம் அக்மார்க் சிரிப்புதான் வேற வழி...

  ReplyDelete
 16. பல்புகள் பளிச்சுன்னு இருக்கு..

  ReplyDelete
 17. இது போன்ற பல்பு எனக்கும் சமீபத்தில் கிடைத்தது...
  பள்ளிவாசலில் நோன்பு திறக்க சென்ற சமயம் உறவினர் ஒருவரை சந்தித்தேன்...அவர் எனது தொலைபேசி எண்ணை மகளிடம் குறித்துக் கொள்ள சொன்னார் "ஆன்ட்டி நம்பர் குறித்துக் கொள் என்று"
  எனக்கும் அவர் மகளுக்கும் 5 அல்லது 6 ஆண்டுகளே வித்தியாசம்.......

  நீங்கள் கண் பிரச்சனை பற்றி சொன்னதும் நினைவு வருகிறது..பழைய புத்தக கடைகளில் உள்ள புத்தகங்கள் கூட கண்ணில் நோய் தொற்றை ஏற்படுத்தக் கூடும்..என் அனுபவம் இது...நூலகங்களில் உள்ள பழைய புத்தகத்தினால் கூட வரும்...

  ReplyDelete
 18. தமிழ் வார்த்தையில் மாமி வெகு ஸகஜம். கன்னடகாரர்கள் கமலம்மா,ஸுசீலம்மா என்று ஒரு அம்மா சேர்த்து மரியாதையாகச் சொல்லி விடுவார்கள். அவர்கள் மெஜாரிட்டியாக இருந்த ஒரு இடத்தில் என்னை தமிழ் பேசுபவர்கள் எனக் கருதியோ என்னவோ மஹாலிங்க மாமி என்று ஒரு
  பெரிய ஸ்தானத்தில் எனது 25 ஆவது வயதிலேயே என்னைச் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
  அவர்கள் மாற்றவில்லை. நேராக மாமியிலிருந்து பாட்டிஸ்தானம். இப்படி எத்தனையோ!!!!!!
  உன்னுடைய அனுபவமும் மிக்க ஸ்வாரஸ்யமாக உள்ளது. பல்புக்கு அர்த்தம் இப்போதுதான் தெரிந்தது. நன்றி அன்புடன்

  ReplyDelete
 19. வணக்கம் தங்களது பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது//http://blogintamil.blogspot.in/2014/07/super-hit-post.html// நன்றி!

  ReplyDelete
 20. வணக்கம்


  இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்


  அறிமுகம் செய்தவர்-மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன்


  பார்வையிடமுகவரி-வலைச்சரம்


  அறிமுகம்செய்த திகதி-18.07.2014

  -நன்றி-

  -அன்புடன்-

  -ரூபன்-

  ReplyDelete
 21. மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன் இன்று வலைச்சரத்தில் தங்களை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. தங்களின் பதிவைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
  www.drbjambulingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  ReplyDelete
 22. இந்த மாதிரி அனுபவங்கள் என்றுமே சுவாரஸ்யம் தான்! ஆனாலும் சில சமயம் மனக்கசப்பிலும் வந்து முடிந்திருக்கின்றன!

  ReplyDelete
 23. ஹா..ஹா..:)) பல்புகள் சூப்பர்.

  அன்ரிஎன அழைத்தவரை நீங்களும் அன்ரி என அழைத்திருக்கவேண்டியதுதானே.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…