Wednesday, July 23, 2014

சுயம்வரத்தில் நான்!!!!சுயம்வரமா? ஆமாங்க. அப்படி ஒரு படம் கூட வந்திருக்கிறது. ஏகப்பட்ட நட்சத்திரங்கள் ஒன்று திரண்டு கின்னஸ் சாதனைக்காக 24 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட படம். சரி இப்போ எதுக்கு அந்த படத்தை பற்றி சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? ராஜாக்கள் ஆண்ட காலங்களில் தங்கள் மகளுக்கேற்ற வரனை, வீரனை தேர்ந்தெடுக்க சுயம்வரம் ஏற்பாடு செய்வார்கள். பல நாடுகளிலிருந்தும் இளவரசர்கள் போட்டி போட்டுக் கொண்டு கலந்து கொள்வார்கள். அது ஒரு காலம்.

இப்போ அதே போல நவீன சுயம்வரங்கள் ஒவ்வொரு ஊர்களிலும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. சென்ற ஞாயிறன்று அப்படி ஒரு சுயம்வரத்தில் கலந்து கொள்ள நேரிட்டது. வெயிட்! வெயிட்! ஷாக் ஆயிடாதீங்க…..:) அது என் தம்பிக்காக…..:)

திருவரங்கத்திலுள்ள குறிப்பிட்ட கல்யாண மண்டபத்தில் காலை 8 மணி முதல் 4 மணி வரை நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. எங்கள் குடியிருப்பில் அதற்கான அறிவிப்பை பார்த்த அன்றே, இணையத்தில் அவர்களுக்கான தளத்திற்கு சென்று விவரங்களை பதிவு செய்தேன். குறிப்பிட்ட பதிவு எண்ணும் தந்தார்கள். சுயம்வரத்தன்று தயாராகி அங்கு செல்ல சற்று தாமதமாகி விட்டது. அங்கு சென்றால் உங்களுடைய எண் முதலே படித்தாகிவிட்டது. அமர்ந்து மற்றவர்களின் விவரங்களை கேளுங்கள் என்று சொல்லிவிடவே, அமர்ந்து கவனிக்கத் துவங்கினோம்.

சிறிது நேரங்கழித்து நான் சென்று அந்த நிகழ்ச்சியின் அமைப்பாளரிடம், “நாங்கள் இணையத்தில் பதிவு செய்திருந்தோம். வர சற்றே தாமதமாகி விட்டது. முதலே கூப்பிட்டு விடுவீர்கள் என்பது தெரியாது. மீண்டும் அழைக்க இயலுமா?” என கேட்க, அவரோஎன் கடமை முடிந்து விட்டது. உங்க இஷ்டத்துக்கு வந்தா எப்படிஎன்று சொல்லி விட்டார். சரி! அமர்ந்து மணமகள்கள் ஏதேனும் வந்தால் அவர்களின் பதிவு எண்ணை குறித்துக் கொள்வோம். பின்பு பேச செளகர்யமாக இருக்கும் என்று நினைத்து அமர்ந்தேன்.

ஆனால், வந்ததோ மணமகன்களின் அணிவரிசை தான்….:) பெற்றோருடனோ, தனியாகவோ, பெற்றோர் மட்டுமோ வந்து தங்கள் குடும்பத்தினை அறிமுகம் செய்து கொள்கின்றனர். தங்களுக்கு எப்படிப்பட்ட பெண் தேவை என்று சொல்லிக் கொண்டிருந்தனர். அமைப்பாளரும் அவர்களின் ஜாதகத்தை பார்த்து அம்மா வழியிலோ, அப்பா வழியிலோ பெண்கள் உள்ளனர். முதலில் அவர்களிடம் சென்று கேளுங்கள் என்றும். ஒருசிலருக்கு குலதெய்வ வழிபாட்டை மறந்ததால் தான் திருமணத்தில் தாமதம். ஆகவே முதலில் குலதெய்வ வழிபாட்டை செய்யுங்கள். நல்ல பெண் கிடைப்பாள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.

சிலர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தனர். செவ்வாய் தோஷத்தை பற்றி பெரிதாக கவலைப்பட ஒன்றுமில்லை என்று தன் அனுபவத்தினை பற்றி ஒரு பெண் பகிர்ந்து கொண்டார். ஒரு பெண் தன் அண்ணன்களுக்காக வந்திருந்தார். நான்கு தங்கைகளுக்கும் திருமணம் செய்த பின்னர் தான் தன் அண்ணன்கள் திருமணம் செய்து கொள்ள சம்மதித்திருக்கின்றனராம். அவர்களுக்கேற்ற நல்ல பெண் கிடைக்க வேண்டும் என்றும். நாங்கள் வருகிற பெண்ணுக்காக எப்படி வேண்டுமானாலும் அனுசரித்து கொள்கிறோம். எங்களுக்காக அண்ணன்கள் இனி எதுவும் செய்ய வேண்டாம். நாங்கள் நல்ல நிலையில் தான் இருக்கிறோம் என்று கண் கலங்கி பேசினார். அந்த பெண்ணின் முகம் இன்றும் என் நினைவில்….

இப்படி பலதரப்பட்ட மனிதர்களை அன்று சந்தித்தேன். இப்படியாக மூன்று மணி நேரங்கள் சென்றன. வெறும் மணமகன்களின் அறிமுகம் தான். என்னடா இது! பெண்களே இல்லையா!!! இப்படிப்பட்ட நிலையிலா நம் நாடு உள்ளது……:(

திடீரென்று இரண்டு பெண்களின் ஜாதகம் படிக்கப்பட்டது. ஒன்றில் மணமகளின் பெற்றோரே வந்திருந்தனர். பெண் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகவும், அங்கிருந்து வர அவளுக்கு விருப்பம் இல்லை எனவும், வெளிநாட்டில் வேலை பார்க்கும் மணமகன் தான் தேவை என்று சொன்னார்கள். மற்றொன்றில் மணமகள் அங்கு வந்திருந்தாள். அவளுக்கேற்ற வரன்கள் இருந்தால் கையை உயர்த்தி சொல்லும் படி விழாவில் அறிவிக்கப்பட்டது. நானும் கையை உயர்த்தினேன். வயது வித்தியாசம் ஒன்றோ, இரண்டோ தான் ஒத்துக் கொள்வார்களாம். அதனால் சரிப்பட்டு வரவில்லை….:) சரி! இனி அமர்ந்து என்ன பயன்……:) பெண்களின் பெற்றோரோ, அல்லது பெண்ணோ அங்கு வந்திருந்தால் தானே நம்மை அறிமுகம் செய்தவுடன், விருப்பம் இருந்தால் தெரிவிப்பார்கள். விழா வரவேற்பில் ஒரு கையேடு தரப்பட்டது. அதில் பெண், பையன்களின் தகவல்கள் இருந்தன. இதில் நமக்கு ஒத்துவருவனவற்றில் உள்ள எண்களில் தொடர்பு கொண்டு பேசுவோம். என்று அங்கிருந்து புறப்பட்டோம்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் வாங்கி வந்த கையேட்டில் இருந்த எங்களுக்கு ஒத்து வந்த எட்டு வரன்களை குறித்துக் கொண்டு ஒவ்வொருவரிடமும் பேசத் துவங்கினேன். ஒன்று திருச்சியிலேயே, அடுத்து மூன்று கேரள வரன்கள், ஒன்று திருச்சூரும், இரண்டு கோட்டயமும். பெங்களூரில் ஒன்று, ஹைதராபாத்தில் ஒன்று, தில்லியில் இரண்டு என வரிசையாக ஆரம்பித்தேன். இரண்டு வரன்களுக்கு நிச்சயமாகிவிட்டதாம். கேரள வரன்களுக்கு கேரள மணமகன்கள் தான் தேவையாம். அடுத்தது இப்போ கல்யாணம் செய்துக்கற எண்ணமில்லையாம். ஐ.ஏ.எஸ் படிக்க உத்தேசமாம். கடைசியில் தில்லி பெண்ணுக்கு இந்தி தான் பேச வருமாம். அதனால் இந்தி பேசத் தெரிந்த மணமகன் தான் தேவையாம். இப்படி ஒவ்வொன்றிலும் ஒரு காரணம்…..:)

இன்றைய காலகட்டங்களில் ஆண்கள் நன்றாகபடித்தும் வேலை கிடைக்க திண்டாடுகின்றனர். அப்படியே வேலை கிடைத்தாலும் எல்லோராலும் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடிகின்றதா? கிடைக்கின்ற வேலையில் குடும்ப சூழ்நிலைகளுக்காக உழைத்து சம்பாதிக்கத் தான் வேண்டியிருக்கிறது. மேற்கொண்டு படிக்கவும் சிலருக்கு வாய்ப்பும் கிடைப்பதில்லை. படிக்க வாங்கிய கடன்களையும் அடைக்க வேண்டியுள்ளது. உடன்பிறந்தவர்களின் வாழ்க்கை, என இப்படியே வயது ஏறிவிடுகிறது. இன்று ஆண்களின் நிலை தான் பாவமாக உள்ளது. பெண்களோ நன்றாக படித்து நல்ல வேலைக்கும் போன பின்பு அதற்கேற்ற வரன்களைத் தான் தேடுகின்றனர். வயது வித்தியாசமும் அதிகமாக கூடாது. இப்படியே நீடித்தால் ………..இந்த நிலை என்று மாறுமோ?

உங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

Saturday, July 12, 2014

பல்பு வாரமோ!
வாரம் முழுதும் தலைப்பில் குறிப்பிட்டது போல பல்பு வாரமோ என்று சொல்லும் விதமாக ஒரே அலைச்சலும், பல்புகளுமாக போய்விட்டது. அதை பதிவுலக நட்புகளான உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ளாவிட்டால் எப்படி? இதோ பல்புகளின் அணிவரிசை.…

சம்பவம் 1:-

மாதா மாதம் இணைய இணைப்புக்கான ரீசார்ஜ் செய்வது வழக்கம்.  இம்மாதமும் மகளை பாட்டு வகுப்பில் விட்டபின் ஒரு கடைக்குச் சென்றேன். என் அலைபேசியில் பதிந்து வைத்திருக்கும் இணையத்திற்கான சிம் எண்ணை அவர்களின் சீட்டில் எழுதி ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்து விட்டு தந்தேன். கடைக்காரரும் ரீசார்ஜ் ஆகி விட்டது என்று சொல்லவே, பணத்தை தந்து விட்டது அங்கிருந்து மருந்தகத்திற்கும், ஸ்டேஷனரி கடைக்கும் சென்று வேலைகளை முடித்துக் கொண்டு மீண்டும் பாட்டு வகுப்பிற்கு வந்து ஐந்து நிமிடங்கள் அமர்ந்ததும், வகுப்பு முடிந்து மகள் வெளியில் வந்தாள். அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கும் வந்தாச்சு. நுழைந்த உடனே மடிக்கணினியை ஆன் செய்து பார்த்தால், ரீசார்ஜ் ஆகவில்லை. ஏறக்குறைய ஒருமணிநேரம் ஆகி விட்டது. இன்னும் காத்திருக்கலாம் என்றால், ஒருவேளை தவறுதலாக வேறு யாருக்கும் ரீசார்ஜ் ஆகிவிட்டதோ என்ற பயம். கடைக்கு தொடர்பு கொள்ளலாம் என்றால் அவர்களின் எண் உள்ள சீட்டை எங்கோ விட்டுவிட்டேன் போலிருக்கிறது. எல்லாவற்றையும் கொட்டி தேடியாச்சு….:)

இன்னும் இரவுக்கான சமையல், ஹோம்வொர்க் என்று வேலைகள் இருக்கவே, ஒரு ஆட்டோவை பிடித்து சென்று விசாரித்தால், ஏதோ பிரச்சனையாம். இப்போ தான் ரீசார்ஜ் ஆகியிருக்கு என்றார். உடனேயே அவர்களின் கடை எண்ணை மீண்டும் வாங்கி வந்து முதல் வேலையாக அலைபேசியில் சேமித்துக் கொண்டேன்….:)) அலைபேசிக்கான ரீசார்ஜ் எனில், வரவு வைக்கப்பட்டால் தான் பணமே தருவேன். இணையத்துக்கு அவர்கள் சொல்வதை நம்பித் தான் வர வேண்டியுள்ளது. எப்போதும் அங்கு தான் ரீசார்ஜ் செய்து கொள்வேன் என்றாலும் இம்முறை பல்பு……J

சம்பவம் 2:-

ஒருநாள் மாலையில் கண் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். கண்ணில் சொட்டு மருந்து விட்டு அரைமணி உட்கார்ந்து மருத்துவரிடம் காண்பித்து, சோதனைகள் முடிந்தது. கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு என்றதும், சிஸ்டம்ல நாள் முழுதும் உட்கார்ந்திருப்பீர்களா? என்றார் மருத்துவர். நான் இரண்டு மணிநேரம் தான் செலவழிப்பேன். கொஞ்சம் புத்தகங்கள் வாசிப்பேன். என்றதும். வற்றிப் போன காவிரி போல் கண்களும் வற்றி போய்விட்டன என்பதால் தான் எரிச்சலாம். மற்றபடி பவர் எல்லாம் இல்லை. அவ்வப்போது கண்களை சிமிட்டுங்கள், கண்களுக்கான பயிற்சிகளை செய்யுங்கள் என்று சொட்டு மருந்தும், மாத்திரைகளும் எழுதித் தந்தார். ஃபீஸ் என்றதும் மருந்தகத்தில் மருந்துகளை வாங்கிக் கொண்டு அங்கேயே செலுத்தி விடுங்கள் என்றார். (வியாபாரத் தந்திரம் தான்) சொட்டு மருந்து விட்டிருந்ததால் கண்களில் பார்வை கலங்கினால் போல் தான் தெரிந்தன. குத்துமதிப்பாக பணத்தை செலுத்தி விட்டு மருந்துகளை வாங்கிக் கொண்டு, வீடு வந்தடைந்தேன்.

வழியில் ஒரு வட இந்திய மாப்பிள்ளை அழைப்பு நடந்து கொண்டிருந்தது. இதில் கேரள சாயலும் தெரிந்தது. பேண்ட் வாத்தியங்களும், குதிரைகளும், யானையும், செண்டை மேளங்களும், கரடி போல் வேடமணிந்த ஒருவரும், கையில் ராக்கெட்டை அனாயாசமாக பற்ற வைத்து வானில் விட்டுக் கொண்டிருந்த ஒரு சிறுவனும் என எல்லாவற்றையும் ஒருவாறாக பார்வையிட்டு வந்தேன்.

மறுநாள் காலையில் மருந்துகளை பார்த்தால் 15 மாத்திரைகளுக்கு பதிலாக 10 மாத்திரைகளே உள்ளன. நல்லவேளை என் புத்தி வேலை செய்தது. உடனே மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்ல, அங்கு பணிபுரியும் பெண் “அந்த டப்பாவை நல்லாப் பாருங்க இருக்கும் என்றார்” நேற்று தாம்மா மருந்து விட்டதால் கண்ணு ஒழுங்காத் தெரியல… இன்னிக்கு நல்லாவே தெரியுது. 10 தான் இருக்கு என்று சொல்லவே, சரி! வாங்க தரேன் என்றாள். மாலையில் வருவதாக சொல்லி மீண்டும் அலைந்து வாங்கி வந்தேன்… கவனக்குறைவோ! ஏமாற்ற திட்டமோ! தெரியாது. ஆனால் நான் அலைந்தது தான் மிச்சம்….:)

சம்பவம் – 3

திருவரங்கத்தை பொறுத்தவரை காய்கறி சந்தைகள் காலையில் வடக்கு வாசலிலும், மதியம் கீழ வாசலிலும், மாலையில் தெற்கு வாசலிலும் நடைபெறும். காலை சந்தையான வடக்கு வாசல் தான் எங்களுக்கு அருகில் என்றாலும் பள்ளி நேரமாகையால் செல்ல முடியாது. அருகில் இருக்கும் கடையிலேயே வாங்கிக் கொள்வேன். நேற்று கூட மகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்பி விட்டு கடைக்கு சென்று காய்கறிகளை வாங்கி வந்தேன். வீட்டுக்கு வந்து கணக்கு பார்த்தால் 15 ரூபாய் கூடுதலாக வாங்கப்பட்டதாக தெரிந்தது. உடனே ஒரு துண்டு சீட்டில் கணக்கை எழுதிக் கொண்டு, “என்னை பார்த்தாலே ஏமாளின்னு எழுதியிருக்கு போல, இந்த கணக்கை பார்க்கட்டும்” என்று வீராவேசமாக புறப்பட்டேன்.

“என்னக்கா! (இது திருச்சி பாஷை! வயது வித்தியாசமில்லாமல் எல்லோரும் அக்கா தான்) என்றார். கணக்கை காண்பித்து சொன்னதும். ஒருமுறை சரி பார்த்து விட்டு, ”தக்காளி கால்கிலோ 10 ரூபாக்கா….  விக்கிற விலைவாசில கிலோ 10 ரூபாக்கு யார் தராங்க.  நான் போட்ட கணக்கு சரி தான்” என்று சொல்ல, சாரி சொன்னேன். பரவாயில்லக்கா நானும் கவனிக்காம இருந்திருக்கலாம். கேட்டதில தப்பில்ல என்றார். அசடு வழிந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

செம பல்பு இல்ல…………..:)))

கடைசியாக ஒரு பெரிய கோபம்:-

பாட்டு வகுப்பின் திண்ணையில் அமர்ந்திருந்தேன். அவர்கள் வீட்டின் உறவினப் பெண்மணி, ஏதோ ஒரு உதவிக்காக என்னை அழைக்கையில் ”ஆண்ட்டி! இதை ஒருநிமிஷம் பிடிங்க என்றார். எனக்கு மஹாக்கோபம்!!! என் வயது ஒத்தவளோ, ஓரிரு வயது சிறியவளாகவோ தான் இருப்பாள். அவளுக்கு இரண்டு வயதில் மகன், எனக்கு ஒன்பது வயதில் மகள். இவ்வளவு தான் வித்தியாசம். அக்கா அல்லது பெயர் சொல்லிக் கூட அழைத்திருக்கலாம். அதற்காக ஆண்ட்டி என்றா அழைப்பது?

வழக்கமான பின்னூட்டங்கள் இல்லாமல், உங்களுக்கு இதுபோல் அனுபவங்கள் ஏற்பட்டிருந்தால், என்ன செய்திருப்பீர்கள்? என்று பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்….:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

Monday, July 7, 2014

புயலடித்த இரவு!நான் எழுதிய நூல் அறிமுகப் பதிவுகள் ஒரு சிலதில் பி.வி.ஆர் என்ற எழுத்தாளரைப் பற்றி ”எங்கள் ப்ளாக்” ஸ்ரீராம் சார் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். சமீபத்தில் பழைய பேப்பர் எடுக்கும் கடை ஒன்றில் சில நாவல்களை பார்த்து வாங்கி வந்தோம். அதில் பி.வி.ஆர் அவர்கள் எழுதியது ஒன்று இருக்கவே, இதுவரை படிக்காத இவரது எழுத்துகளை வாங்கி படித்து பார்ப்போமே என்று வாங்கினேன்.

அந்த கதை தான்புயலடித்த இரவு”. கதை எழுதப்பட்ட காலகட்டம் 1978களில், அன்றைய மாலைமதியில் வெளிவந்திருக்கிறது. அப்போதைய விலையும் 80காசுகள் மட்டுமே…..:) சரி வாங்க! கதைக்குள் போவோம்.

ஊட்டியில் பிரபல மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரும், பங்குதாரருமான கோபிநாத். இளம் வயதிலேயே பலதரப்பட்ட அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து நல்ல பெயர் எடுத்திருந்தான். இன்னும் பலதரப்பட்ட அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடிக்க துடிப்புடன் இருந்தான். சிறுவயது முதலே மாமாவுடன் தான் வளர்ந்து வந்தான். தாய் அவ்வப்போது வந்து பார்த்து விட்டு போவாள். ஆனால் தாயின் நடத்தை பற்றிய சில கேள்விகள் சிறு வயது முதலே கோபிநாத்தின் மனதில் இருந்ததால் தாயோடு அவனால் ஒட்ட முடியவில்லை.

படிப்பில் கெட்டிக்காரனாக இருந்த கோபிநாத் பெண்கள் விஷயத்தில் மோசமானவனாக இருந்திருக்கிறான். இப்படியே காலங்கள் ஓட மருத்துவப் படிப்பையும் முடித்து, மாமாவிடம் அனுமதி பெற்று ஊட்டியில் விலைக்கு வந்த ஒரு மருத்துவமனையை வாங்கி தன் நண்பன் முரளி மற்றும் ரம்யாவுடன் கூட்டு சேர்ந்து வெற்றிகரமாக நடத்தி வந்தான்.

ஒருநாள் அதிகாலை அவனுக்கு ஒரு வித்தியாசமான கனவு வருகிறது. அதில் மலைச்சரிவில் கோபிநாத் சைக்கிளில் செல்வதாகவும், அங்கிருந்து பள்ளத்தாக்கில் விழும் நிலையில், ப்ரேக் பிடிக்க கைகள் வேலை செய்யவில்லை. மரத்து போனது போலிருந்தது. பள்ளதாக்கிலிருந்து தன்னை போலவே ஒருவன் வந்து, இனி கோபிநாத்தின் கைகள் வேலை செய்யாது எனவும், நேற்று தான் அவனுடைய கடைசி ரணசிகிச்சை முடிவுற்றதாகவும் சொல்லி விட்டு, இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் எனக் கூற கனவு கலைகிறது. இதை கோபிநாத் கேலியோடு தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டான்.

அன்று சிவபாதம் என்பவருக்கு வயிற்றின் குடலில் ஏற்பட்ட புண்ணை குணமாக்க செயற்கை குழாய் பொருத்த தயாராக ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைகிறான். செவிலியர் எல்லாம் தயாராக வைக்க, கைகளில் க்ளவுஸை மாட்ட எத்தனிக்க, வலதுகையை தூக்க முடியவில்லை…..

கனவு பலித்து விட்டது. என்றோ யாருக்கோ செய்த துரோகம் தான் இன்றைய நிலைக்கு காரணம் என நண்பன் கூற…. சாருமதி! கல்லூரிப்பருவத்தில் பம்பாய் வாழ்க்கையில் சாருமதிக்கு தான் செய்த துரோகத்தை எண்ணி, இன்று ஒரு பெண் குழந்தையுடன் தவிக்கும் சாருமதியை திருமணம் செய்து உடன் அதற்கான பரிகாரத்தை செய்கிறான். ஆனாலும் கைகள் ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்றவுடன் வேலை செய்வதில்லை. 

மீண்டும் யோசித்ததில் ஜானகி தோன்றினாள். ஒரு டாக்டர் என்ற அகந்தையில் அவளிடம் நடந்து கொண்ட விதத்தை எண்ணி கூசி, அவளிடம் சென்று பாவ மன்னிப்பை கேட்கிறான். அவளும் மனதார மன்னித்தாள். இருந்தும் கைகளுக்கு உணர்வே கிடைக்கவில்லையே…..

இதை விட பெரிய பாவமாக ஒரு புயலடித்த இரவில் பெற்ற தாய் மகனிடம் சிகிச்சை பெற வந்தும், விரட்டியடித்த மகனுக்கு கடவுள் கொடுத்த தண்டனை தான் இது என்று உணர்ந்து, தாயிடம் ஓடிச் சென்று பாவ மன்னிப்பு கேட்டு முற்றிலும் புதிய மனிதனாக மாற கைகளும் புத்துணர்வு பெறுகிறது.

இப்படியாக பி.வி.ஆர் அவர்களின் புயலடித்த இரவை வாசித்து மகிழ்ந்தேன். வலையில் தேடியும் அப்புத்தகம் கிடைக்காததால் முழுக்கதையும் இங்கேயே வெளியிட்டு விட்டேன்….:) உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


Friday, July 4, 2014

மரகதலிங்கம்!
சமீபத்தில் வந்த எங்களின் 12வது திருமணநாளுக்கு என்னவரிடம் இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் சில புத்தகங்களை வாங்கித் தர சொன்னேன். அவரும் உடனேயே ஆன்லைன் புக்கிங் மூலம் புத்தகங்களை தருவித்து பரிசளித்தார். அதில் ஒன்று தான் இந்த மரகதலிங்கம்.

இது ஒரு ஆன்மீக மர்ம நாவல். ”என்னுரையில்திரு இந்திரா செளந்தர்ராஜன் அவர்கள் தனக்கு மிக மிக திருப்தி தந்த நாவல் என்று குறிப்பிடுகிறார். மேலும் ஆன்மீகம் சார்ந்த இறை நம்பிக்கை நமக்குள் பலகேள்விகளை உடையது. எனக்குத் தெரிந்து  தெளிவான ஆன்மீக எண்ணம் உடையவர்கள் மிகமிகமிகக் குறைவு. குழப்பமான கேள்விகளோடு, அரைகுறை நம்பிக்கையோடு தான் நமது ஆன்மீகம் உள்ளது. சான்றோர் உலகமும் தெளிவாய், பொட்டில் அடித்த மாதிரி பதில் கூறியதில்லை. பல ஆன்மீக விளக்கங்கள் பாதிபுரியும், பாதிபுரியாது. இதுதான் இன்றைய ஆன்மீக நிலை. நான் என் நாவல்களில் இந்த நிலையை மாற்ற முயல்பவன் என்கிறார்.


லிங்கங்களில் இருவிதம் உண்டு. ஒன்று சுயம்பு, இன்னொன்று மானுடர்கள், தேவர்கள் உருவாக்கியவை. சுயம்பு என்றால் தானாக தோன்றியவை. மற்றவை உருவாக்கப்பட்டவை. இதில் மரகதலிங்கம் நவரத்ன லிங்கங்களின் தொகுப்பில் வருவது. இதை வழிபட்டால் தீராத நோயும் தீரும்.”


சிவன்குடி மரகதலிங்கம் மிக விசேஷமானது. புராணப்படி இந்திரனே அந்த மரகதலிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகதலிங்கத்தை தொடர்ந்து ஒரு மண்டல காலம் உச்சி வேளையின் போது அதன்மேல் சூரியஒளிபடும்போது வணங்கியவர்கள் எல்லோருமே தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் இன்று அந்த மரகதலிங்கம்……?

இப்படித்தான் இந்த கதை துவங்குகிறது. ஒருகாலத்தில் பசுமையாக இருந்த சிவன்குடி கிராமம், இன்று வறட்சியுடன் மொத்தமே பத்து மனிதர்களுடன் சுடுகாடாக காணப்படுகிறது. அந்த ஊருக்கு பாண்டியராஜன் என்பவன் வெளிநாட்டிலிருந்து வருகிறான். கோயிலுக்கு சென்று புதர் மண்டிக் கிடக்கும் அவலநிலையைக் காண்கிறான். குருக்களை கண்டு தன் தந்தையின் விருப்பமாக இடிபடும் நிலையில் உள்ள சிவன் கோயிலை புனரமைக்கும் எண்ணத்தை வெளியிடுகிறான். ஆனால் குருக்களோ இப்படி வந்தவர்கள் எவரும் உயிரோடு ஊர் திரும்பியதில்லை, என்று லிங்கம் களவு போனதோ, அதோடு ஊரும் சுடுகாடாகி போய்விட்டது. கடவுளின் கோபம் குறையவில்லை. அதனால் உடனேயே இங்கிருந்து கிளம்பி விடு என்கிறார். ஆனால்பாண்டியராஜனோ பிடிவாதம் பிடிக்க, அவனை ஒரு கருநாகம் தீண்டி விடுகிறது…….

பல வருடங்களுக்கு முன்னால் கஜேந்திர பாண்டியன் என்பவனும், கோட்டை முத்துவும் சிவன்குடி மரகதலிங்கத்தின் மேல் கண் வைத்து பத்து கோடிக்கு வெளிநாட்டில் விற்க ஏற்பாடு செய்து களவாடி விடுகின்றனர். இதற்கிடையே இவர்கள் இருவருக்கும் பண விவகாரத்தில் தகராறு ஏற்பட்டு, லிங்கம் பாம்பு புற்றில் தஞ்சமடைகிறது. திருடிய கஜேந்திர பாண்டியன் கருநாகம் தீண்டி லிங்கம் புற்றில் இருக்கும் உண்மையை கோட்டைமுத்துவிடம் சொல்லாமலே இறந்து விடுகிறான். திருடச் சொன்ன கோட்டை முத்துவுக்கு தொழுநோய் வந்து அது அவனது மகனுக்கும் தொடர்கிறது.

மரகதலிங்கம் புற்றில் இருந்து மீண்டதா? பாண்டியராஜன் கோவிலை சீரமைத்தானா? சிவன்குடி சுடுகாடாகி போனதற்கு கடவுளின் கோபம் தான் காரணமா? அல்லது மனிதர்களின் சதி வேலையாக இருக்குமா? போன்ற உங்கள் எல்லாம் கேள்விகளுக்குமான விடை மரகதலிங்கம் புத்தகத்தில்

இந்த புத்தகத்திலேயே உச்சியிலே என்ற மர்ம நாவலும், ஓசைப்படாமல் ஒரு கொலை” என்று ஒரு குறுநாவலும் இருக்கிறது.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த புத்தகத்தை எடுத்தால் முடிக்கும் வரை கீழே வைக்க தோன்றவில்லை.

இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

திருமகள் நிலையம்
சுகான்ஸ் அபார்ட்மெண்ட்ஸ்
பழைய எண்: 28 புது எண்: 13,
சிவப்பிரகாசம் சாலை,
தி.நகர், சென்னை – 600017.
தொலைபேசி: 24342899, 24327696.
நான்காம் பதிப்பான டிசம்பர் 2011 படி இதன் விலைரூ 70.
மொத்த பக்கங்கள் - 152

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

டிஸ்கி:- இந்த பகிர்வு திங்களன்று வாசகர் கூடத்தில் வெளியானது.