Tuesday, June 24, 2014

கீரைத்தண்டு கூட்டு!

நாம் அன்றாடம் வாங்கும் முளைக்கீரை, அரைக்கீரை, தண்டுக்கீரை போன்ற கீரைகளை ஆய்ந்து சமையலுக்கு எடுக்கும் போது, ஒருசிலர் தண்டுகளை தூக்கி எறிந்து விடுவார்கள். சிலர் அவற்றையும் கீரையுடன் சமையலுக்கு சேர்ப்பார்கள்.  கீரையே போதும் தண்டுகள் சேர்த்தால் ஜாஸ்தியாகி விடும் என்று நினைத்தால், இருக்கும் சதைபத்தான தண்டுகளை வைத்து இந்த கூட்டை செய்யலாம். ஒரு கட்டு கீரையே 10க்கும் 15க்கும் வாங்கும் போது அவை இரண்டு நாள் சமையலுக்கு உபயோகமானால் நல்லது தானே… ஒருநாள் கீரை மசியல், மறுநாள் கீரைத்தண்டு கூட்டு….:)

இந்த கூட்டை சாதத்துடனோ, சப்பாத்தியுடனோ சேர்த்து சாப்பிடலாம். என் மாமியாரிடமிருந்து தான் இந்த ரெசிபியை தெரிந்து கொண்டேன். வாங்க! இதை எப்படி செய்யறதுன்னு தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

பொடியாக நறுக்கிய கீரைத்தண்டு – 1 கப்
பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி
வேர்க்கடலை – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க:-

வரமிளகாய் – 4
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
தனியா – ½ தேக்கரண்டி
மிளகு – ½ தேக்கரண்டி
சீரகம் – ¼ தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
தேங்காய்த்துருவல் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை:-

நறுக்கிய கீரைத்தண்டுடன், பாசிப்பருப்பு, வேர்க்கடலை சேர்த்து தண்ணீர் விட்டு, குக்கரில் சாதம் வைக்கும் போதோ, தனியாகவோ வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் மேலே வறுக்க கொடுத்துள்ள பொருட்களான வரமிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், பெருங்காயம், தேங்காய் சேர்த்து சிறிதளவு எண்ணெய் விட்டு பொன்முறுவலாக வறுத்து ஆற வைக்கவும். பின்பு அதை மிக்சியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.

குக்கரில் வேகவைத்த கீரைத்தண்டு பருப்பு கலவையுடன், அரைத்த விழுதை சேர்த்து, தேவையான உப்பு போட்டு தண்ணீர் விட்டு, பத்து நிமிடம் கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து விட்டு, தாளிக்கும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து கூட்டில் கொட்டவும்.

சுவையான கீரைத்தண்டு கூட்டு தயார். சாதத்துடன் கூட்டு அப்பளம் வைத்து அன்றைய உணவை முடித்துக் கொள்ளலாம். என்ன! உங்க வீட்டிலும் செய்து பார்ப்பீர்கள் தானே!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

டிஸ்கி:-

ராஜலக்ஷ்மி மேடம் தன்னுடைய பதிவில் சொல்லியிருந்தது போலவே, என்னுடைய பிளாக்கரிலும் ஏதோ பிரச்சனை துவங்கி விட்டது. நேற்றிலிருந்து யாருடைய பதிவுகளும் என்னுடைய டாஷ்போர்டில் தெரிவதில்லை. எப்போது சரியாகும் என்றும் தெரியவில்லை...:)


28 comments:

 1. படிக்கும்போதே சூப்பரா இருக்கு ருசி! இதுவரை வேர்க்கடலையைக் கூட்டில் சேர்த்தது இல்லை. மற்றபடி அரிசி உப்புமா முதல் சகலத்திலும் சேர்த்துருக்கேன்:-)))

  செஞ்சுருவோம். நன்றி ரோஷ்ணியம்மா. உங்க மாமியார் ரெஸிபின்னா அதுக்கு மதிப்பு கூடுதல் என் மனதில்,கேட்டோ!

  அவுங்களை நான் அன்போடு விசாரிச்சதாச் சொல்லுங்கோ.

  ReplyDelete
  Replies
  1. நான் கூட்டுகளில், வத்தக்குழம்பில் எப்போதும் சேர்ப்பதுண்டு. கண்டிப்பாக விசாரித்ததா சொல்றேன்....:)

   தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி டீச்சர்.

   Delete
 2. வணக்கம்
  நல்ல செய்முறைவிளக்க குறிப்பு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை போலதான் என்னுடைய பிளாக்கிலும் எப்போது சரிவரும் என்று தெரியாது.. நானும் செய்யாத வேலை எல்லாம் செய்து பார்த்தேன் சரி வர வில்லை.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மூன்று நாட்களுக்குப் பின் இப்போ ப்ளாகர் சரியாகி விட்டது.

   தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க ரூபன்.

   Delete
 3. Nice koottu! I always add thandu in poriyal or what ever the dish I am making! :)

  //ராஜலக்ஷ்மி மேடம் தன்னுடைய பதிவில் சொல்லியிருந்தது போலவே, என்னுடைய பிளாக்கரிலும் ஏதோ பிரச்சனை துவங்கி விட்டது. // I also have the same issue. Seeing your "disci":) and the previous comment, I think google is doing some thing to the blogger! avvvvvv!

  ReplyDelete
  Replies
  1. இப்போ சரியாகி விட்டது மகி.

   தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

   Delete
 4. கீரைத்தண்டுகளை சூப் செய்வோம்.. சாம்பாரில் போடுவதும் உண்டு.. கூட்டும் அருமைதான்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

   Delete
 5. நாங்களும் செய்து பார்க்கிறோம்...

  நமக்கான திரட்டி எது...? http://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Speed-Wisdom-8.html

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

   தானாகவே சரியாகி விட்டது. நன்றி.

   Delete
 6. படத்தைப் பார்த்துக் கொண்டே
  சப்பிட்டுவிடலாம் போல் உள்ளது
  படமும் சொன்னதும் அருமை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

   Delete
 7. Replies
  1. தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி சார்.

   Delete
 8. பதிவர் இராஜலஷ்மிக்கு ஏற்பட்ட நிலமை உங்களுக்கும் ஏற்படலாம்,http://avargal-unmaigal.blogspot.com/2014/06/reading-list.html

  ReplyDelete
  Replies
  1. தகவல்களுக்கு மிக்க நன்றி சகோ.

   Delete
 9. ச்அமைச்சு, சாப்பிட்டு பார்த்துட வேண்டியதுதான்.

  ReplyDelete
  Replies
  1. செய்து பாருங்கள். நன்றாக இருக்கும்.

   தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க ராஜி.

   Delete
 10. சகோதரி, தங்களை ஓர் தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.

  விபரங்கள் இதோ:

  இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அழைப்பிற்கு மிக்க நன்றி. முடியும் போது தொடர்கிறேன்.

   தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில் பிரகாசம்.

   Delete
 11. என் மனைவி சொல்லுவா சமைக்கும் போது லேப்டாப்பை பக்கத்தில் வைத்து சமைக்காதீங்க என்று இப்பல்ல தெரியுது நான் சமைப்பதை நீங்க லேப்டாப் கேமரா மூலம் பார்த்து நான் சமைக்கும் முறையை அப்படியே இங்கே பதிவாக இட்டு இருக்கிறீர்கள் என்று.... கேமரா முலம் பார்த்து கற்று கொண்டு அழகாக சமைத்து பதிவிட்டதுக்கு பாராட்டுக்கள்....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ.....:)) நீங்க சமைச்சதை பார்த்த பின்னும், இன்னும் எனக்கு சமையல் மறக்காம இருக்கே...:))

   Delete
 12. இந்த முறையில் கூட்டு இதுவரை செய்ததில்லை. விரைவில் செய்கிறேன். பார்க்கவே நாவூறவைக்கிறது படம். பகிர்வுக்கு நன்றி ஆதி.

  ReplyDelete
  Replies
  1. செய்து பாருங்கள். ருசியாக இருக்கும்.

   தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 13. கீரைத் தண்டுக் கூட்டு அருமையாக இருக்கிறதே. நானும் இனித்தான் செய்து பார்க்க வேண்டும்.
  இங்கு இப்படி தண்டுடன் ஃப்ரெஸ்ஸாக கீரை கிடைப்பது அருமை!
  பார்ப்போம்.

  சுலபமான நல்ல குறிப்பு. பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் ஆதி!

  ReplyDelete
  Replies
  1. கிடைக்கும் போது செய்து பாருங்கள்.

   தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 14. வெற்றி வெற்றி!!!

  இன்னிக்கு சமைச்சாச்சு. சின்னச் சின்ன மாறுதல்களுடன்:-)

  கீரைக்குப் பதிலா புடலங்காய். இங்கே கீரை அதுவும் இந்தக் குளிர்காலத்தில் ஏது? அப்ப புடலங்காய் மட்டும் எப்படின்னா........ இந்தியாவில் இருந்து வருது ஃப்ரோஸன் வெஜியாக.

  அப்புறம் பாசிப் பருப்புக்கு பதிலா கடலைப்பருப்பு. மத்தபடி எல்லாம் உங்க மாமியார் சொல்படிக்கே!

  ரொம்ப நல்லா இருக்குன்னார் கோபால்.

  வெங்கட் அம்மாவுக்கு(ம்) என் நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. செய்து பார்த்து வெற்றி கண்டதில் மிக்க மகிழ்ச்சி டீச்சர். கோபால் சாருக்கும் பிடித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. நிச்சயம் அம்மாவிடம் சொல்கிறேன்.

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…