Friday, June 27, 2014

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்!இன்று ஒரு சிறப்பான நாள். ஆமாங்க! இன்று என்னவரின் பிறந்தநாள். எனக்கு எப்போதும் உற்ற துணையாகவும், உறுதுணையாகவும், இருக்கும் நல்ல உள்ளத்திற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 

தான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்க என் பிரார்த்தனைகள். இன்று போல் நல்ல ஆரோக்கியத்துடனும், அன்புடனும் திகழ அந்த கடவுள் அருள் புரியட்டும்.


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

Tuesday, June 24, 2014

கீரைத்தண்டு கூட்டு!

நாம் அன்றாடம் வாங்கும் முளைக்கீரை, அரைக்கீரை, தண்டுக்கீரை போன்ற கீரைகளை ஆய்ந்து சமையலுக்கு எடுக்கும் போது, ஒருசிலர் தண்டுகளை தூக்கி எறிந்து விடுவார்கள். சிலர் அவற்றையும் கீரையுடன் சமையலுக்கு சேர்ப்பார்கள்.  கீரையே போதும் தண்டுகள் சேர்த்தால் ஜாஸ்தியாகி விடும் என்று நினைத்தால், இருக்கும் சதைபத்தான தண்டுகளை வைத்து இந்த கூட்டை செய்யலாம். ஒரு கட்டு கீரையே 10க்கும் 15க்கும் வாங்கும் போது அவை இரண்டு நாள் சமையலுக்கு உபயோகமானால் நல்லது தானே… ஒருநாள் கீரை மசியல், மறுநாள் கீரைத்தண்டு கூட்டு….:)

இந்த கூட்டை சாதத்துடனோ, சப்பாத்தியுடனோ சேர்த்து சாப்பிடலாம். என் மாமியாரிடமிருந்து தான் இந்த ரெசிபியை தெரிந்து கொண்டேன். வாங்க! இதை எப்படி செய்யறதுன்னு தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

பொடியாக நறுக்கிய கீரைத்தண்டு – 1 கப்
பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி
வேர்க்கடலை – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க:-

வரமிளகாய் – 4
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
தனியா – ½ தேக்கரண்டி
மிளகு – ½ தேக்கரண்டி
சீரகம் – ¼ தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
தேங்காய்த்துருவல் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை:-

நறுக்கிய கீரைத்தண்டுடன், பாசிப்பருப்பு, வேர்க்கடலை சேர்த்து தண்ணீர் விட்டு, குக்கரில் சாதம் வைக்கும் போதோ, தனியாகவோ வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் மேலே வறுக்க கொடுத்துள்ள பொருட்களான வரமிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், பெருங்காயம், தேங்காய் சேர்த்து சிறிதளவு எண்ணெய் விட்டு பொன்முறுவலாக வறுத்து ஆற வைக்கவும். பின்பு அதை மிக்சியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.

குக்கரில் வேகவைத்த கீரைத்தண்டு பருப்பு கலவையுடன், அரைத்த விழுதை சேர்த்து, தேவையான உப்பு போட்டு தண்ணீர் விட்டு, பத்து நிமிடம் கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து விட்டு, தாளிக்கும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து கூட்டில் கொட்டவும்.

சுவையான கீரைத்தண்டு கூட்டு தயார். சாதத்துடன் கூட்டு அப்பளம் வைத்து அன்றைய உணவை முடித்துக் கொள்ளலாம். என்ன! உங்க வீட்டிலும் செய்து பார்ப்பீர்கள் தானே!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

டிஸ்கி:-

ராஜலக்ஷ்மி மேடம் தன்னுடைய பதிவில் சொல்லியிருந்தது போலவே, என்னுடைய பிளாக்கரிலும் ஏதோ பிரச்சனை துவங்கி விட்டது. நேற்றிலிருந்து யாருடைய பதிவுகளும் என்னுடைய டாஷ்போர்டில் தெரிவதில்லை. எப்போது சரியாகும் என்றும் தெரியவில்லை...:)


Thursday, June 19, 2014

எல்லாம் நன்மைக்கே!எல்லோருக்கும் வணக்கம். நண்பர்கள் அனைவரும் நலம் என்று நினைக்கிறேன். சில பல காரணங்களால் மூன்று மாதங்களாக வலையுலகம் பக்கம் வராமல் இருந்து விட்டேன். மார்ச் மாதத்திலேயே கொஞ்சம் சலிப்பு வரத் துவங்கி விட்டாலும், அவ்வப்போது கொஞ்சம் எட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். மகளின் தேர்வுகள் துவங்கியவுடன் கணினியை விட்டு மொத்தமாக விலகினேன். பின்பு விடுமுறை. அவளுடனேயே என் பொழுதுகளை கழிக்கத் துவங்கினேன். கைவேலைப்பாடுகள் சிலவற்றை என் உதவியுடன் செய்தாள். தொலைக்காட்சியில் நேரங்களை கழித்தோம்.

மே மாத துவக்கத்தில் ரோஷ்ணியின் அப்பா இங்கு வந்து விட மூவருமாக தெனாலிராமன் திரைப்படத்திற்கு சென்று வந்தோம். திருச்சியை அடுத்துள்ள திருவெள்ளறை புண்டரீகாக்ஷ பெருமாளை திவ்யமாக தரிசனம் செய்தோம். அடுத்து ஒரு மலை வாசஸ்தலத்திற்கு ஒருநாள் பயணமாக சென்று வந்தோம். அது என்ன இடம் என்பது சஸ்பென்ஸ்! என்னவரின் அடுத்த பயணத்தொடராக இருக்கலாம். ஒரு நாளை அருமையாக என்ஜாய் செய்தோம். இவையெல்லாமே ரோஷ்ணி அப்பா இங்கு வந்தவுடனேயே அடுத்தடுத்து சென்று வந்த இடங்கள். அதன் பிறகும் நிறைய திட்டங்கள் வைத்திருந்தோம். ஆனால் கடவுள் என்ன நினைக்கிறாரோ அதானே நிகழும்…..:)

திடீரென்று என்னுடைய உடல்நிலை தகராறு செய்ய ஆரம்பிக்க எல்லா திட்டங்களும் ரத்து… தில்லியில் ஆரம்பித்த இந்த பிரச்சனை, நான் இங்கு வந்த காரணமும் அதுவே. இங்கு வந்த பிறகு வேறுவிதமாக இருந்தது. அருகிலுள்ள பெண் மருத்துவரிடம் காண்பித்து கொண்டிருந்தேன். தற்காலிக நிவாரணத்திற்காக தொடர்ந்து ஹார்மோன் மருந்துகளை பரிந்துரை செய்து வந்தார். அவரே தொடர்ந்து இதை நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் சொல்லவே, ஆயுர்வேதம், சித்தா என்று மாறி பார்த்தும் உடனடி பலனில்லை.. இப்படியே வேறு மருத்துவரிடம் பார்க்கலாமா? என்று யோசித்தே இரண்டு ஆண்டுகள் கழிந்து விட்டன.

இப்போது மீண்டும் தில்லியில் இருந்தது போலவே பிரச்சனை துவங்க, விடுமுறை முடிந்து என்னவரும் கிளம்பிவிட, ஒரு சுபவேளையில் என் தோழிகள் சிலரின் பரிந்துரையில் குறிப்பிட்ட வேறு மருத்துவரை பார்க்க, நாம் சொல்லும் விஷயங்களை நிதானமாக காது கொடுத்து கேட்கிறார். எந்த சிடுசிடுப்பும் இல்லை. இதுவே எனக்கு மிகுந்த மகிழ்வளித்தது. பரிசோதனைகள் முடிந்து பிரச்சனையின் ஆணி வேரை கண்டறிந்து, அதை தீர்ப்பதற்கான வழியையும் சொல்லி, ஒருவழியாக எல்லா வேலையும் முடிந்து விட்டது. இனி மருத்துவர் சொல்லியுள்ள உணவு முறைகளையும், நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் கடைபிடிக்க வேண்டும். பலவித மன உளைச்சலுக்கு ஆளானாலும் ஒரு தீர்வை கண்டறிந்து அதை தீர்த்ததில் மனது லேசான உணர்வு.

சமீபத்தில் பேசிய தில்லி தோழி கூட “தில்லியிலிருந்து வந்ததிற்கான காரணத்திற்கு இப்போது தான் தீர்வு கண்டுள்ளாய்” என்றார். நேரம் தான். அல்லல்பட வேண்டும் என்று இருந்திருக்கிறது.

இனி நடப்பவை எல்லாம் நன்மைக்கே….

தொடர்ந்து சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.