Thursday, March 6, 2014

திருவரங்கத்து இற்றைகள்!நேற்று வழக்கம் போல் காலை முதல் பரபரப்பாக செயல்பட்டு ரோஷ்ணியை பள்ளிக்கு அனுப்பிய பின், சற்று இளைப்பாறி விட்டு குளித்து சாப்பிடலாம் என எண்ணி, கணினியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். அப்போது வந்த என் மாமனார் உடனே குளித்து விட்டு கிளம்பு, ரங்கநாதரை பார்க்கப் போகலாம் எனச் சொல்ல, ஒன்றுமே புரியாமல் யார்ப்பா இங்கு வராங்க? எனக் கேட்க… யாரும் வரலை…:) நாம தான் ரங்கநாதரைப் பார்க்கப் போகலாம் எனச் சொன்னேன். எனச் சொல்லவே உடனே குளித்து தயாராகி விட்டேன்….:)

உள்ளூரிலேயே இருந்தாலும் பெருமாளை பார்ப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமானது இல்லை. ஏற்கனவே நான் இந்த விஷயம் குறித்து என்னுடைய பதிவுகளில் எழுதியிருக்கேன். கும்பல் கொஞ்சம் இருந்தாலும் பெருமாளை நன்றாகப் பார்க்க முடிந்தது. தள்ளுமுள்ளு இல்லை. ஆனால் வழக்கம் போல் நகருங்கோ! நகருங்கோ! வெளியே வாம்மா! என்று குரல்கள்….:))

வெளியே வந்து அன்னமூர்த்தியை பார்த்து விட்டு, இவரைப் பற்றி சொல்வதானால் கையில் சாத உருண்டையும், தீர்த்த பாத்திரமும் வைத்துக் கொண்டு காட்சியளிப்பார். இவரை பார்த்தால் வாழ்நாளில் உணவுக்கு பஞ்சமே வராது என்பது ஆன்றோரின் கருத்து. அடுத்து கருடாழ்வாரை தரிசனம் செய்தோம்.

மாசி மாத தெப்போற்சவம் நடைபெறுவதால் உற்சவப் பெருமாள் ”ரங்க விலாஸ்” மண்டபத்தில் பாண்டியன் கொண்டையில் அருள்பாலித்து கொண்டிருக்கவே, அவரையும் தரிசனம் செய்தோம். பதினைந்தே பேர் இருந்தாலும் நிதானமாக பார்க்க விடாமல், அர்ச்சனை பண்றவங்க மட்டும் நில்லுங்கோ! மற்றவர்கள் நகருங்கோ! எனச் சொல்ல நகர்ந்தோம். வெளிநாட்டினரின் வருகை இன்று அதிகமாகவே இருந்தது. காதில் ஜிமிக்கி அணிந்து, தலையில் மல்லிகை சூடி வெளிநாட்டு பெண்மணிகள் உலா வந்தனர்…….:)

அடுத்து உள் ஆண்டாள் சன்னிதி, இங்கு உள்ளே சென்றவுடன் அந்த பட்டர் வழக்கம் போல் 50 ரூபாய் கொடுங்கோ! ஆண்டாளுக்கு மாலை சாற்றலாம். அந்த மாலையைத் தான் ரங்கநாதர் அணிந்து கொள்வார் என சொல்லிக் கொண்டிருந்தார்…:) சன்னிதி அருகே சில சிற்பங்களை பார்த்தேன். இதுவரை எடுக்காத சிற்பங்கள் ஆகையால், அடுத்த முறை வரும் போது என்னவரிடம் சொல்லி படம் பிடிக்க சொல்லலாம் என நினைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன்…..:))

வழியில் ஒரு காதல் ஜோடி அமர்ந்து கொண்டு உலகத்தை மறந்திருக்க, நம்ம சீனு அவர்களின் சித்தன்னவாசல் பதிவை நினைத்துக் கொண்டேன்.....:) இந்த மாதிரி ஜென்மங்கள் கோவிலையும் விட்டு வைப்பதில்லை போல என நினைத்துக் கொண்டு அங்கேயிருந்து சக்கரத்தாழ்வார் சன்னிதி. அடுத்து தாயார் ரங்கநாச்சியார் சன்னிதியின் உள்ளே நுழைந்தோம். இங்கு கும்பலே இல்லாததால் எங்குமே நிற்கவில்லை. கருவறையின் வாசலில் நின்றே ஸ்ரீதேவி, பூதேவி, ரங்கநாச்சியார் என நல்ல திவ்யமான தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பினோம். 

கோவிலில் தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. அதே போல் வயதானவர்கள் இரவு 7.30 மணியளவில் உதவிக்கு ஒரு ஆள் துணையுடன் வந்து எல்லா சன்னிதியிலும் வரிசையில் நிற்காமல் இலவச தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்துள்ளது. கோவிலில் அங்கங்கே அறிவிப்பு பலகையில் பெண்கள் காலை வேளையில் தனியாக கோலம் போடுவதை தவிர்க்கவும் என்றும், அறிமுகமில்லாத நபர்கள் கதவைத் தட்டினால் திறக்க வேண்டாம் போன்ற அறிவுரைகள் அங்கங்கே எழுதி வைக்கப்பட்டுள்ளன.


மாலையில் தெப்போற்சவத்தையொட்டி தினமும் ஒரு வாகனத்தில் பெருமாளின் புறப்பாடு உண்டு. அனுமந்த வாகனத்தில் ரங்கன் காட்சியளிக்க, தரிசனம் செய்து விட்டு வந்தேன். வழக்கம் போல் காமிராவை கொண்டு செல்லவில்லை….:))

எதிர்பாராத நேரத்தில் சிறப்பான தரிசனங்களை செய்து வைத்த மாமனாருக்கு என் நன்றியை தெரிவித்தேன்…..:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

பட உதவி - கூகிள்

20 comments:

 1. அடுத்த முறை படங்களுடன் பகிர்வை எதிர்ப்பார்க்கிறேன்... இந்தப் பதிவிற்கு மாமனாருக்கு தான் நன்றி... ஹிஹி...

  ReplyDelete
 2. எங்களுக்கும் அந்த தரிசன நிகழ்வை
  அருமையாகப் பதிவு செய்து தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அருமை அருமை!

  உங்க மாமனார் சொன்னபின்தான் மீண்டும் கோவிலுக்குப்போய் அன்னமூர்த்தியைத்தேடி தரிசித்தோம்.

  உங்க மாமனார் மாமியாருக்கு என் அன்பைச்சொல்லுங்க. கூடவே என் நன்றியையும்.

  ReplyDelete
 4. உங்களோடு எங்களையும் பெருமாளைத் தரிசிக்க வைத்துவிட்டார் உங்க மாமனார். அப்பாவுக்கும் பதிவைப் பகிர்ந்த உங்களுக்கும் நன்றிங்க ஆதி!

  ReplyDelete
 5. இதுவரை 1 முறை மட்டுமே ரங்கநதரை தரிசித்து இருக்கிறேன்..அடுத்தமுறை செல்லும் வாய்ப்பிருந்தால் நீங்கள் சொல்லிய சாமிகளை தரிசிக்கவேண்டும்.பகிர்வுக்கு நன்றிங்க..

  ReplyDelete
 6. எங்களுக்கும் எதிர்பாராத தரிசனக் கட்டுரை கிடைத்தது.னன்றி.

  ReplyDelete
 7. தரிசன நிகழ்வை அருமையான பகிர்வாக்கிய தங்களுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 8. எதிர்பாராத நேரத்தில் சிறப்பான தரிசனங்களை அருமையாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்

  ReplyDelete
 9. ஹயயோ... திருவரங்கக் கோயில் வந்தும் நான் அன்னமூர்த்தியை தரிசிச்சது இல்லையே...! அடுத்த முறை வர்றப்ப கண்டிப்பா பாத்துடணும். உங்கள் மாமனாரிடம் என் நமஸ்காரங்களைக் கூறவும்.

  ReplyDelete
 10. //வழியில் ஒரு காதல் ஜோடி அமர்ந்து கொண்டு உலகத்தை மறந்திருக்க,//

  இதைத்தான் தெய்வீகக் காதல் என்பார்களோ!

  ReplyDelete
 11. Annavirku Yengaladhu Namaskaarangalai Therivikkavum.

  ReplyDelete
 12. //நம்ம சீனு அவர்களின் சித்தன்னவாசல் பதிவை நினைத்துக் கொண்டேன்.....:) // ஹா ஹா ஹா...

  ஏழாம் வகுப்பு என்று நினைக்கிறன்.. திருச்சிக்கு கல்வி சுற்றுலா வந்திருந்தோம்.. ஸ்ரீரங்கம் கோவில் உள் வரை வந்துவிட்டு ரங்கநாதரை தரிசிக்க முடியாமல் போனதை நினைத்தால் வருத்தமாகவே இருக்கிறது.. சீக்கிரம் வர வேண்டும்..

  ReplyDelete
 13. சென்ற யூலை ரங்கநாதரைத் தரிசிக்க வந்தேன். உறவுகள்,5 குழந்தைகள், 6 முதியோர் உட்பட 25 பேர், மிகச் சிரமப்படுத்திவிட்டார்கள். 50 ரூபா சீட்டு வாங்கியும், 2 மணிநேரம்- குழந்தைகள், முதியோர் என எந்த ஏற்பாடுமில்லை. ஓ ரங்கா, ரங்கா என சென்றோம். எங்களுடன் வந்த முதியவர்கள் ," சென்று கண்டு தொழு" முன்பே வெளியே தள்ளிவிடப்பட்டது. மனதுக்கு மிக வேதனை தந்தது.நாம் அங்கு வந்தது எங்கள் தவறு என்பதுபோல் அவர்கள் நடவடிக்கை யாவும் இருந்தது.ஆனால் காசு பிடுங்குவதில் கண்ணாக இருந்தார்கள்.
  //வழியில் ஒரு காதல் ஜோடி அமர்ந்து கொண்டு உலகத்தை மறந்திருக்க, நம்ம சீனு அவர்களின் சித்தன்னவாசல் பதிவை நினைத்துக் கொண்டேன்.....:) இந்த மாதிரி ஜென்மங்கள் கோவிலையும் விட்டு வைப்பதில்லை போல என நினைத்துக் கொண்டு//
  தயவு செய்து அவர்களைத் திட்டாதீர்கள்.பல பேர் கூடும் இடத்தில் அவர்கள் பாதுகாப்பாக இருக்கட்டும், நீங்கள் துரத்தினால், இவர்கள் ஆள் நாடமாட்டம் குறைந்த இடங்களில், சில கயவர்களால் சீரளிக்க வாய்ப்புள்ளது.எத்தனை செய்திகள் படித்துவிட்டோம், காதலனைத் அடித்துத் துரத்தி விட்டு, பெண்ணைச் சீரளித்துக் கொலை. தயவு செய்து விட்டு விடுங்கள். ஒரு புனிதமும் கெடவில்லை. ரங்க நாதர் கோவில் அடுத்த
  தெருவெங்கும் குடியும் குடித்தனமுமாகத் தானே மக்கள் வாழ்கிறார்கள்.ரங்கா ரங்கா கோபுரத்தெதிரில் ஒரு அந்தணர் குடும்பம் மழலைகளுடன் கண்டேன். அவர்கள் வீட்டு வாசலில் இருந்து காலை சற்று அகட்டி வைத்தால் கோபுரவாசல், அவர்கள் காதலுடன் வாழ்கிறார்கள்.
  புகழ் பெற்ற மடங்களில் நடந்த காதல்களைக் கண்ணுறு விட்டு, அவர்களைப் பல்லக்கில் சுமக்கிறோம்.
  இச்சிறுசுகளை விட்டு விடுவோம்.
  இன்னுமொன்று, தமிழகத்தில் ஆலயங்களுக்குச் சென்ற போது, குன்றத்தூர் முருகன் கோவில் அன்னதானமடத்தில் சாப்பிடச் சென்று, நான் இருந்த மேசை மடத்தின் இடப்பக்க பின் மூலை, என் எதிரில் இருந்த தூணில் செதுக்கியிருந்த சிற்பம்,மானிட காம உறவின் உச்சமென்பேன். என் அருகில் இருந்த என் மருமகன் கவனித்தானோ? தெரியவில்லை. நான் சாப்பிட்டு முடிந்து படமெடுக்கும் போது, "என்னத்தைப் படம் எடுக்கிறீர்கள்" எனக் கேட்டான். எடுத்துவிட்டு வண்டி நிறுத்துமிடத்துக்கு வாருங்கள் எனக் கூறி விட்டுச் சென்றுவிட்டான்.
  பின் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலிலும் இப்படி பல சிற்பங்கள் பார்த்தேன், ஏனையவற்றுடன் அவற்ரையும் படம் எடுத்தேன்.
  அதனால் கோவில் காதலற்குரிய இடமல்ல எனக் கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. அவர்களும் வரம்பு மிறார்கள் என நம்புவோம்.
  இனி என் மனதில் பதிந்த ரங்கநாதர் கோவில் கோபுரத்தை நினைத்து, அவரை வணங்குவேன்.  ReplyDelete
 14. திருவரங்க தரிசன வர்ணணை அருமை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 15. அன்னமூர்த்தி பார்த்ததில்லை நானும். நீங்கள் தரிசனம் செய்த விதத்தை சொன்னது நாங்களும் உங்களுடனேயே ஒவ்வொரு சன்னிதியாக சென்று வந்த திருப்தி ஏற்பட்டது ஆதி. நன்றி பகிர்விற்கு.

  ReplyDelete
 16. இது வரை ரங்கநாதரை சேவிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. பார்க்கலாம் அதிர்ஷடம் இருக்கா என்று!

  ReplyDelete
 17. தங்கள் மாமனாரின் புண்ணியத்தில் எங்களுக்கும் தரிசனம் கிடைத்தது. பல வருடங்கள் ஆகி விட்டது நான் திருவரங்க கோவிலுக்கு வந்து.

  "//பட உதவி - கூகிள்//"

  தங்கள் கணவரிடம் இல்லாத புகைப்படங்களா, கூகிள் ஆண்டவரிடம் இருக்கப்போகிறது.!!!!

  ReplyDelete
 18. சிறப்பான தரிசனம்.

  ReplyDelete
 19. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…