Monday, March 31, 2014

முள்ளங்கி கீரை சப்ஜி!


முள்ளங்கி வாங்கும் போது அதன் கீரையுடன் நான் தமிழகத்தில் பார்த்ததில்லை. தில்லிக்கு சென்ற பின் தான் அதன் கீரையை பற்றி தெரிந்து கொண்டேன். குளிர்காலத்தில் கிடைக்கும் முள்ளங்கி வெள்ளை வெளேரென, நல்ல நீளத்துடன், தடிமனாக காணப்படும். பார்க்கவே வாங்கத் தூண்டும். நான் அங்கு இருந்தவரை கிலோவே 5 ரூபாய்க்கு மேல் வாங்கியதே இல்லை. அங்கு முள்ளங்கியை பச்சையாக சாலட்டாகத் தான் சாப்பிடுவார்கள். அல்லது ”மூலி பராட்டா செய்து சாப்பிடுவார்கள்.

அதனுடன் பச்சை பசேலென அந்த கீரையை பெரும்பாலானவர்கள் அங்கேயே ஒடித்து போட்டு விடுவார்கள். மலை போல் குவிந்திருக்கும் அந்த கீரையை ஆட்டுக்கு தான் கொடுப்பார்கள். என்னவர் காய் வாங்கச் சென்றாலும் கூட ஒடித்து அங்கேயே போட்டு விட்டு வந்து கொண்டிருந்தார்.

என் மாமியார் தான் என்னிடம் அந்த கீரையில் சப்ஜி செய்யலாம் எனச் சொல்ல, அன்று முதல் கீரையை வாங்கிக் கொண்டு வரத் துவங்கினேன். சப்ஜி செய்து சப்பாத்தியுடன் அலுவலகத்துக்கு கொடுத்து விடுவேன். உடன் சாப்பிடுபவர்களும் நன்றாக இருப்பதாக சொல்லியுள்ளார்கள்…..:) இந்த கதையெல்லாம் தில்லியோடு சரி! ஆனால் சமீபத்தில் ஒரு நாள் காலை வேளையில் பக்கத்து வீட்டில் இந்த கீரையை எடுத்து வந்து காண்பித்து இது என்னங்க கீரை? இதை சாப்பிடலாம் என்று சொல்லி தெரிந்தவங்க கொடுத்துட்டு போனாங்க…. எப்படி செய்யறதுன்னு தெரியலை என்றார்கள்ஆஹா! இது முள்ளங்கியின் கீரை. இதை சப்ஜி செய்து சாப்பிடலாம் என்று சொல்லி ரெசிபி சொன்னேன். உடனே நீங்களும் கொஞ்சம் எடுத்துக்கோங்க என்று தந்தார்கள். உடனேயே செய்து விட்டேன். நீங்களும் எப்படி என்று தெரிந்து கொள்ள வாருங்கள். கொஞ்சம் முன்கதை தான் பெரிதாகி விட்டது. பரவாயில்லை! இதெல்லாம் அப்புறம்எப்ப உங்களிடம் பகிர்ந்து கொள்வது….:)))

தேவையானப் பொருட்கள்:-

முள்ளங்கி கீரைசின்ன கட்டு அளவு
வெங்காயம் – 2
தக்காளி – 2
பயத்தம்பருப்புகைப்பிடி அளவு
மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
கரம் மசாலாசிறிதளவு
சீரகம்சிறிதளவு
சமையல் எண்ணெய்தேவையான அளவு
உப்புதேவையான அளவு

செய்முறை:-

கீரையை தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பயத்தம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காயவைத்து சீரகத்தை பொரிய விடவும். அடுத்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். தக்காளியை சேர்த்து தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து பிரட்டி, தண்னீர் தெளித்து மூடி வைக்கவும். கீரை நன்றாக வெந்ததும், வேகவைத்துள்ள பயத்தம்பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

முள்ளங்கி கீரை சப்ஜி தயார். சாதத்துடனும், சப்பாத்தியுடனும் பரிமாறலாம். சுவையானதும், சத்தானதும் கூடஎன்ன உங்க வீட்டிலும் கீரை கிடைத்தால் செய்து பார்ப்பீர்கள் தானே..

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்


திருவரங்கம்.

பின் குறிப்பு:- 

கரம் மசாலா விருப்பம் தான். தேவையில்லையெனில் விட்டு விடலாம்..
பருப்புடன், கீரையும் குக்கரில் வைத்தும் சேர்த்துக் கொள்ளலாம்.

16 comments:

 1. முள்ளங்கி கீரை இங்கு கிடைத்தால் இது போல் செய்கிறோம்...

  "பார்க்கவே இப்படி இருக்கிறதே... வேறு கீரையில் செய்யலாமா" - இந்தக் கேள்வி வீட்டில் நல்-பாதி...!

  ReplyDelete
 2. முள்ளங்கி கீரை கிடைப்பது கஷ்டம் கிடைத்தால் செய்து விடுகிறேன்.
  டெல்லியில் கீரை நன்றாக் கிடைக்கும் செய்து இருக்கிறேன். கரம் மசாலா சேர்த்தது இல்லை ,அது சேர்த்து செய்து பார்க்கிறேன்.
  கீரைசப்ஜி படம் அருமை.

  ReplyDelete
 3. நல்லாயிருக்கிறது ஆனால் இங்கே முள்ளங்கி மட்டுமே, கீரை கிடைப்பதில்லை.

  ReplyDelete
 4. ஒரு நல்ல வித்தியாசமான, இந்த கோடைக்கு ஏற்ற ஒரு உணவு வகையைத்தான் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். மிக்க நன்றி ஆதி. கூடுதல் தகவல் ஒன்று முள்ளங்கியில் செய்த எந்த உணவையும் இரவில் உண்ணக் கூடாது என்று ஏன் வீட்டுப பெரியவர்கள் கூறுவார்கள்.

  ReplyDelete
 5. முள்ளங்கிக் கீரையை கிராமத்தில் இருந்தபோது சாப்பிட்டு இருக்கிறேன். நகர்ப்புறங்களில் பெரும்பாலும் கீரை இல்லாமல்தான் விற்பனை செய்கிறார்கள்! நல்ல ஒரு சமையல் குறிப்பினைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 6. வித்தியாசமான டிஷ்தான்... பதிவுக்கு நன்றி

  ReplyDelete
 7. முள்ளங்கி என்றதுமே என் மனைவி முள் அங்கியை தரித்த மாதிரி முறைக்கிறார். இதில் எங்கே நான் முள்ளங்கி கீரையைப் பற்றிச் சொல்வது.

  ReplyDelete
 8. முள்ளங்கி உடலுக்கு நல்லது.... கீரை இங்கு கிடைப்பதில்லை வீட்டில் வளர்க்கும் போது செய்து பார்க்கிறேன்...இதே முறையில் நான் பாலாக் கீரை செய்வேன் அதுவும் மிகுந்த சுவையுடன் இருக்கும்

  ReplyDelete
 9. சென்னையில் கீரையோடு முள்ளங்கி கிடைக்கும். மற்ற மாவட்டங்களில் பார்த்தது இல்லை. குஜராத்தில் நாம் வேண்டாம்னாக் கூடக் கீரையோடு தான் தருவாங்க. இந்தக் கீரையில் வெறும் பாசிப்பருப்புப் போட்டு நன்கு வேக வைத்து, மி.வத்தல், தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்துவிட்டும் செய்யலாம். பருப்பு உசிலி போலவும் செய்யலாம். பெரும்பாலும் கடுகுக்கீரை, பாலக் கீரை, முள்ளங்கிக் கீரையைப் போட்டு சாக் sarson ka saag / makki roti க்கு சைட் டிஷ் செய்யலாம். அதில் கட்டாயம் கரம் மசாலா சேர்ப்பதுண்டு. :))))

  ReplyDelete
 10. பயனுள்ள பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 11. வெகு அருமையான குறிப்பு. ஆதி. என் மருமகள் அழகாகச் செய்வார். முள்ளங்கி பரோட்டாவும் கீரை சப்ஜியும் சூப்பராக இருக்கும்.

  ReplyDelete
 12. Idhuvarai naanum mullangi keerayai yerindhuvittuirukkiren . Inimel seidhu paarkkanum.

  ReplyDelete
 13. Idhuvarai keerayai naanum samaiththadhu illai. Inimel seidhu paarkkavendum.

  ReplyDelete
 14. முள்ளங்கிக்கீரையில் அபரிமிதமான வைட்டமின் ஏ சத்து உள்ளதாம்..கண்களுக்கு நல்லது..!

  ReplyDelete
 15. முள்ளங்கி கீரையில் கூட்டு செய்யலாம் என கேள்விபட்டு இருக்கிறேன். இப்பொழுது செய்முறை விளக்கம் கிடைத்ததால் செய்து பார்க்கிறோம். நன்றி....

  ReplyDelete
 16. ஆகா... பாக்க சொல்லோ நாக்குல எச்சி ஊருதும்மே... ஆமா... கீரையெல்லாம் குக்கு பண்ணி ஒடனே துண்ணுக்கனுமாமே... பிரிட்ஜில வச்சு துண்ணக் கூடாதேமே... மெய்யாலுமேவா...?

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…