Monday, March 3, 2014

என் பெயர் ரங்கநாயகி!





சமீபத்தில் தான் இந்த புத்தகத்தை வாசித்தேன். தில்லி தமிழ்ச் சங்கத்தின் நூலகத்திலிருந்து என்னவர் எடுத்து வந்திருந்தார். இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் நாவல் என்றால் விறுவிறுப்புக்கும் மர்மங்களுக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் அவர் தான் ஆத்மார்த்தமாக எழுதிய நாவல் என இந்த நூலை குறிப்பிடுகிறார். தினமணி கதிரில் 36 வாரங்களுக்கு தொடராகவும், பின்பு தொலைக்காட்சியில் இந்த நாவல் நெடுந்தொடராகவும் வந்துள்ளது.

சரி! கதைக்குள் செல்வோமா! ஆச்சாரமான வைஷ்ணவ குடும்பத்தை சுற்றித் தான் இந்த கதை உள்ளது. அனந்தபத்மநாபன் என்கிற தொழில் அதிபரின் குடும்பத்துக்கு ரங்கநாயகி அறிமுகமாகிறாள். மனைவி காலமாகிவிட்ட நிலையில் மூன்று பெண் குழந்தைகள், மற்றும் அவரது தாயார், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் அனந்தபத்மநாபன் என்கிற .பி.என். இந்த நிலையில் தான் ரங்கநாயகி ஒரு குறிக்கோளுடன் அந்த குடும்பத்திற்கு அறிமுகமாகிறாள். அது என்ன குறிக்கோள்?

நீண்ட நாட்களாக திருமணம் கூடி வராத .பி.என் னின் தங்கைக்கு ரங்கநாயகி குடும்பத்தில் நுழைந்த வேளை நிச்சயமாகிறது. அதை தொடர்ந்து பல விபரீதங்களும் வீட்டில் நடைபெறுகிறது. மடிசார் கட்டுடன் கணவர் துபாயில் வேலைபார்ப்பதாக அறிமுகமாகும் ரங்கநாயகி ஒரு தாசியாக வெளியுலகுக்கு வேஷம் போடுகிறாள். ஆனால் அவள் ஒரு நெருப்பு என்பது உடன் பழகுபவர்களுக்கு புரிந்து விடுகிறது.

ரங்கநாயகி என்னும் புரியாத புதிருக்கான விடைகள் கதை முழுதும் தொடர்கிறது. உண்மையில் ரங்கநாயகியின் கணவர் யார்? எதற்காக இந்த வேஷம்? .பி.என் குடும்பத்தில் ரங்கநாயகி நுழைந்த காரணம் தான் என்ன? ரங்கநாயகியின் கதை என்ன? என்பது போன்ற உங்கள் கேள்விகளுக்கான விடைபுத்தகத்தில்.

இந்த புத்தகம் முழுவதும் லா..ரா, ஜெயகாந்தன், பாலகுமாரன், கண்ணதாசன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன், மாலன், அமரர் கல்கி போன்ற மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களில் உள்ள தனக்கு பிடித்த வரிகளை ஒவ்வொரு பகுதிக்கு முன்னும் பகிர்ந்து கொண்டுள்ளார் இந்திரா செளந்தர்ராஜன் அவர்கள். தன்னுடைய நூலில் மற்றவர்களுக்கும் ஒரு இடம் கொடுத்த்து மிகவும் சிறப்பான விஷயம் அல்லவா! அதுவும் அந்தந்த பகுதிக்கு ஏற்ற வரிகளாக!

விறுவிறுப்புக்கு பஞ்சமேயில்லாத இந்த நாவல் நடுவில் சற்று கொஞ்சம் இழுத்தடிப்பது போன்று தோன்றியது. ரங்கநாயகியின் குறிக்கோள் என்னன்னு உடனே சொல்லிட மாட்டாரா? என்று தோன்றியது. அதே போல் ரங்கநாயகி எடுத்த முடிவும், செய்த வேள்வியும் எந்த சராசரி பெண்ணாலும் செய்ய முடியாத, ஏற்க முடியாத ஒன்று எனவும் தோன்றியது. சற்றே பிசகியிருந்தாலும் வாழ்க்கையே சூன்யம் தான்.


இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த சில வரிகள்:-

ஸ்ரீ உன்னை விட மாட்டேன். எதைச் சொல்லி நீ என்னை விலக்க முயல்வாயோ அதுவே இனி என் ஆடை.

நீ கண்டிராத ஒரு பெண்ணை என்னில் காண்பாய். உன் மனத்தடியில் தேங்கிக் கிடக்கும் அந்த தாபம் மிகுந்த சோரப் படிமங்களை நான் வழித்தெடுப்பேன்.

நடுவில் உன் இந்திரதந்திரங்களையும் தாங்கிச் செயலாற்றுவேன். இதற்காக யார் உதவியையும் கோர மாட்டேன். எவர் அனுதாபத்தையும் பெற முயல மாட்டேன். இது சத்தியம்.

இதை யதார்த்தமாகச் சொல்கிறேன். காலம் எனக்கு நிச்சயம் கருணை செய்யும். செய்தே தீரும்!”

கடவுள் பக்திஅதன் மேலே நாம வைக்கிற நம்பிக்கை எல்லாமே அந்த க்ஷணம் பகுத்தறிவுக்காரா சொல்ற மாதிரி ஒரு பெரிய பலவீனமான விஷயமாத்தான் தோணித்து. மனுஷன் மட்டுமல்ல, தெய்வமும் சேர்ந்து ஏமாத்திடுத்துன்னு நினைச்சு அழுதப்போ ஏமார்றவா இருக்கறவரை ஏமாத்தறவாளும் இருப்பான்னு ஒரு குரல் விழுந்தது. யாரோ யார்கிட்டேயோ சொல்லிண்டு போயிண்டிருந்தா. ஆனா, எனக்குச் சொன்ன மாதிரியே பட்டுது.

அந்த நிமிஷம் ஒரு சின்ன மாற்றம் மனசுல…….”

வாழ்க்கைங்கறது எழுத்தாளர்கள் கற்பனைல உருவாக்கற நாவலோ, இல்லை பூதாகாரப் பொய் வடிவமான சினிமாவோ இல்லை. அது யாருமே நினைச்சுப் பார்க்காத திசையிலும் மேடு பள்ளங்களிலும் நம்மை இழுத்துகிட்டுப் போற ஒண்ணு. நாமளும் அது இழுப்புக்கு போய்த்தான் தீரணும். நாவல்லயும், சினிமாவுலையும் தான் நாம விரும்புற முடிவுகள் நமக்குக் கிடைக்கும். வாழ்க்கைல அப்படிக் கிடையாது.”

இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

திருவரசு புத்தக நிலையம்
13, தீனதயாளு தெரு,
தியாகராய நகர்
சென்னை – 17.

ஏப்ரல் 2001 ஆண்டு பதிப்பின் படி 248 பக்கங்கள் கொண்ட இதன் விலைரூ 65.

நான் வாசித்த இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் பிற நாவல்கள்:-

கூட்டிற்குள் புகுந்த உயிர்
காற்றாய் வருவேன்
மார்கழி ரோஜா
உயிரின் மறுபக்கம்
தேடாதே தொலைந்து போவாய்
பொற்காசுத் தோட்டம்
நீரெல்லாம் கங்கை! நிலமெல்லாம் காசி!

டிஸ்கி:- வாசகர் கூடத்தில் வெளியிட்டாலும், அங்கு வருகை தராத என் நட்புகளுக்காக இங்கேயும் பதிவிடுகிறேன்...:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

20 comments:

  1. நாவல்லயும், சினிமாவுலையும் தான் நாம விரும்புற முடிவுகள் நமக்குக் கிடைக்கும். வாழ்க்கைல அப்படிக் கிடையாது.

    சிறப்பான விமர்சனம்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

      Delete
  2. வாசகர் கூடத்திலேயே வாசித்தேன். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அங்கு வாசிக்காத நட்புகளுக்காகவும், என்னுடைய சேமிப்புக்காகவும் மீண்டும் இங்கேயும் பதிவிட்டேன்.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  3. எனக்கு இந்திரா சௌந்தரராஜன் நூல்கள் என்றால் கொள்ளைப்ப் பிரியம். என் பெயர் ரங்கநாயகி அமானுஷ்ய கதைகளுக்கு ஈடான சஸ்பென்ஸ் நாவல்தான் என்பது என் கருத்து. பகிர்வுக்கு நன்றி ஆதி!

    ReplyDelete
    Replies
    1. திருச்சி வரும் முன்பு வரை அவரது எழுத்துக்களை நான் வாசித்ததே இல்லை. எனக்கும் இப்போ பிடித்து விட்டது.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க ராஜி.

      Delete
  4. படித்தது தான்... ரசனையான விமர்சனம்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

      Delete
  5. அற்புதமாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

      Delete
  6. Replies
    1. தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி சார்.

      Delete
  7. அவர் எழுதிய பிற நாவல்கள் - கிருஷ்ணதாசி, விக்ரமா விக்ரமா, மர்மதேசம் போன்ற நாவல்கள் எல்லாம் அருமையாக இருக்கும். அப்புத்தகங்கள் கிடைக்குமாயின் படிக்க தவறாதீர்கள்

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் குறிப்பிட்ட புத்தகங்களை வாய்ப்பு கிடைக்கும் போது வாசிக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சொக்கன் சார்.

      Delete
  8. ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் கதைகளைக் கொண்டு போவதில் வல்லவர் இந்திரா சௌந்தரராஜன். அது ஒரு மாய உலகமாக காட்சி தரும். அதை அழகாக விவரித்திருக்கிறீர்ல்கள் ஆதி. வாழ்த்துகள் மா.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      Delete
  9. புத்தக விமரிசனம் அருமை!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      Delete
  10. பகிர்வுக்கு நன்றி ஆதி!

    Reply

    Reply

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி காஞ்சனா மேடம்.

      Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…