Friday, March 28, 2014

ஹாப்பி பர்த்டே! சில ஞாபகங்கள்…
பட உதவி - கூகிள்

சிறுவயது முதல் என்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றி சமீபத்தில் வந்த என் பிறந்தநாள் அன்று என் மகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன். அதை அப்படியே பதிந்தும் வைக்கலாம் என்று எண்ணியதன் விளைவு இப்பதிவு….:)

பிறந்தநாள் என்றாலே புதுத்துணியும், இனிப்புகளும், கேக்குகளும், பார்ட்டிகளும், பரிசுப் பொருட்களும், நண்பர் கூட்டமும் தான் நினைவுக்கு வரும் இல்லையா! ஆனால் என்னுடைய சிறுபிராயத்தில் பிறந்தநாள் என்றால், முதல் நாள் இரவே கைகளில் மருதாணி வைத்து விடுவார் அம்மா. காலையில் எழுந்து தலைக்கு குளித்து, இருக்கறதுலயே நல்லதாக உள்ள ஒரு உடையை அணிந்து கொண்டு அம்மா வைத்து விடும் பூவை தலையில் சூடிக் கொண்டு கோவிலுக்குச் செல்வேன்.

கையில் அர்ச்சனைக்காக இரண்டு ரூபாய் கொடுத்து விடுவார்கள். பெயர், நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்து கொண்டு வீடு திரும்பியதும், முதல் நாள் இரவு நான் தூங்கிய பின் அம்மா செய்து வைத்த குலோப்ஜாமூனோ, அல்லது சுடச்சுட அப்போது செய்து வைத்திருக்கும் பாயசமோ தருவார் அம்மா. அப்பா அம்மாவுக்கு நமஸ்காரம் செய்து ஆசிகளை பெற்ற பின் அருகிலுள்ளோர் வீட்டுக்கு சென்று சாக்லேட்களை தந்து விட்டு வருவேன். இதுவே அன்றைய பிறந்தநாள் கொண்டாட்டமாகும்….:)

கொஞ்சம் பெரியவளான பின் அக்கம் பக்கம் இனிப்புகள் தருவதற்கு பதிலாக என்னுடைய வயது என்னவோ, அத்தனை உணவுப் பொட்டலங்களை தயார் செய்து தருவார் அம்மா. அதை அப்பாவுடன் சைக்கிளில் எடுத்துக் கொண்டு எங்கள் ஊர் கோவையின் பிரசித்தி பெற்ற கோவில்களான தண்டுமாரியம்மன் கோவிலுக்கும், கோணியம்மன் கோவிலுக்கும் செல்வோம். அங்கே வாசலில் அமர்ந்து கொண்டிருக்கும் பிச்சைக்காரர்களுக்கு என் கைகளால் உணவுப் பொட்டலங்களை தரச் சொல்வார் அப்பா. இதை சில வருடங்களுக்கு தொடர்ந்து கடைபிடித்தோம்.

எங்கள் உறவினர் தாத்தா ஒருவர் இப்படித் தான் தன்னுடைய பிறந்தநாளன்று செய்து வந்தார். நாங்களும் சென்று உதவி செய்வோம். அதை பார்த்த பின் தான் நாங்களும் இம்மாதிரி கடைபிடிக்கத் துவங்கினோம். காசு பணத்தால்  ஒரு மனிதரை திருப்திப்படுத்த இயலாது. ஆனால் உணவு என்பது ஒரு கட்டத்துக்கு மேல் திருப்திப்பட்டுத்தானே ஆகணும் இல்லையா! மனசு வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் என்பார்களே பெரியோர்..

இப்படித்தான் என் அன்றைய பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இருந்தது. திருமணமான பின் என்னவருக்காகவும், மகளுக்காகவும் இனிப்புகள் செய்து தரும் நான், எனக்காக எதுவும் செய்து கொள்ள தோன்றுவதேயில்லை….:) உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்தோடு சரி! இப்போ உலகம் முழுவதுமுள்ள பதிவுலக நட்புகளான உங்க எல்லோரின் வாழ்த்தும் கிடைப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த வருட பிறந்தநாளுக்காக எங்கள் மகள் வரைந்து தந்த வாழ்த்து மடல் இதோ…. இது தானே மிகப்பெரிய பரிசு…
மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

24 comments:

 1. அழகா வரைஞ்சு கட்டிங்லாம் வேற செஞ்சு த்ந்திருக்கா குழந்தை. பாக்கவே அவ்ளோ ரசனையா இருக்கு. உங்களின் பிறந்த தின நிலைவலைகளும் ரம்யம்.

  ReplyDelete
 2. பிறந்தநாளுக்காக தங்கள் மகள் வரைந்து தந்த
  வாழ்த்து மடல் தானே மிகப்பெரிய பரிசு .. வாழ்த்துகள்..!

  ReplyDelete
 3. Belated birthday wishes Adhi..

  ReplyDelete
 4. மனிதன் "போதும்" என்று சொல்வது சாப்பிடும் நேரத்தில் தான்...

  தங்களின் மகளுக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. Advance next b'day wishes! :)

  ReplyDelete
 6. Once again Happy Birthday. Wishes to one and all.

  ReplyDelete
 7. omedeto gozaimasu. 1 (in Japanese)
  Happy birthday!

  ReplyDelete
 8. அழகான , அருமையான பிறந்த நாள் பரிசு...

  ReplyDelete

 9. பிறந்தநாள் பரிசாக என்னதான் பணப்பை, வங்கி எண், இரகசியக் கடவு எண் என வரிசைகட்டி வந்தாலும், அம்மாக்களுக்கு தங்களின் குட்டீஸ்களின் பிஞ்சு கைகளால் கிடைக்கும் பரிசுதான் மிகப்பெரிய பரிசாகிவிடுகிறது.

  இனிய பிறந்தநாள் நினைவுகளுடன் உங்கள் மகளின் வாழ்த்து அட்டையும் அருமை !

  ReplyDelete
 10. பிஞ்சுக் கரத்தால் வரைந்த ஓவியம் நெஞ்சை நிறைக்கும்
  எந்நாளும் ...வாழ்த்துக்கள் அம்மா பிள்ளை இருவருக்குமே !

  ReplyDelete
 11. தங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துகள்.

  தங்கள் குழந்தை செல்வி. ரோஷ்ணி அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட கற்றுத்தந்திருக்கிறார்கள் உங்கள் பெற்றோர்! வறியோர் சிலர் வயிறார உண்ண உணவளிப்பது எத்தனை சிறப்பு! அருமை!

  ReplyDelete
 13. அற்புதமான வாழ்த்து மடல்! இதைவிட மகிழ்வான தருணம் உண்டா வாழ்வில்?

  ReplyDelete
 14. கார்டு ரொம்ப அழகு ! இந்தமுறை அண்ணாவும் ,பொண்ணும் உங்க பிறந்தநாளை அருமையா கொண்டாடிட்டாங்கல்ல !

  ReplyDelete
 15. சகோதரிக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ரோஷ்ணிக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
 16. ஆதி, ரோஷ்ணி வரைந்து தந்த பிறந்த நாள் வாழ்த்து அட்டை அழகு, இதைவிட வேறு என்ன வே?ண்டும்.
  சிறு வயது பிறந்தநாள் கொண்டாட்டம் அருமையானது.
  பிறருக்கு உணவு அளித்து திருப்த்தி படுத்தியது நல்ல செயல்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. ரோஷினியின் வேலைப்பாடு அருமை... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 18. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
  அருமை

  ReplyDelete
 19. பிறந்த தின நினைவலைகள் அருமை...

  ReplyDelete
 20. மகள் கையால் செய்த வாழ்த்து அட்டை அருமை !!
  உங்கள் நினைவலைகளும் அருமை

  ReplyDelete
 21. ரோஷ்ணியின் நக்ஷத்திரப் பிறந்த நாளுக்கு எங்கள் வாழ்த்துகள், ஆசிகள்.

  ReplyDelete
 22. //மனசு வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும்// உண்மைதான்!தங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! தங்கள் செல்லத்திற்கு பாராட்டுகளும் ஆசிகளும்!

  ReplyDelete
 23. எளிய பிறந்த நாள் நினைவுகள் அருமை. நாங்களும் இப்படித்தான் செய்வோம். நிச்சயம் கோவிலுக்குப் போவோம்.
  மகள் செய்துகொடுத்த வாழ்த்தட்டையில் உங்கள் வயிறும், மனமும் நிறைந்திருக்கும் போல. உங்களுக்காக எதுவும் செய்துகொள்ளவில்லை என்கிறீர்களே, கொஞ்சம் வருத்தம் எனக்கு. எல்லோருக்கும் செய்யும்போது நீங்கள் ஏன் உங்களுக்கு என்று எதுவும் செய்து கொள்வதில்லை?

  ReplyDelete
 24. அடுத்த பிறந்தநாளுக்கு முன்னமேயே எங்களுக்குச் சொல்லிவிடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அம்மா அப்பா உங்கள் பிறந்த நாளை வெறுமையாக விடுவதை விரும்ப மாட்டார்கள். அதனால் பழைய வழக்கத்தைவிடாமல் செய்யவும். அன்பு ரோஷ்ணிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் .ஆதிக்கு அன்பு வாழ்த்துகள்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…