Monday, March 31, 2014

முள்ளங்கி கீரை சப்ஜி!


முள்ளங்கி வாங்கும் போது அதன் கீரையுடன் நான் தமிழகத்தில் பார்த்ததில்லை. தில்லிக்கு சென்ற பின் தான் அதன் கீரையை பற்றி தெரிந்து கொண்டேன். குளிர்காலத்தில் கிடைக்கும் முள்ளங்கி வெள்ளை வெளேரென, நல்ல நீளத்துடன், தடிமனாக காணப்படும். பார்க்கவே வாங்கத் தூண்டும். நான் அங்கு இருந்தவரை கிலோவே 5 ரூபாய்க்கு மேல் வாங்கியதே இல்லை. அங்கு முள்ளங்கியை பச்சையாக சாலட்டாகத் தான் சாப்பிடுவார்கள். அல்லது ”மூலி பராட்டா செய்து சாப்பிடுவார்கள்.

அதனுடன் பச்சை பசேலென அந்த கீரையை பெரும்பாலானவர்கள் அங்கேயே ஒடித்து போட்டு விடுவார்கள். மலை போல் குவிந்திருக்கும் அந்த கீரையை ஆட்டுக்கு தான் கொடுப்பார்கள். என்னவர் காய் வாங்கச் சென்றாலும் கூட ஒடித்து அங்கேயே போட்டு விட்டு வந்து கொண்டிருந்தார்.

என் மாமியார் தான் என்னிடம் அந்த கீரையில் சப்ஜி செய்யலாம் எனச் சொல்ல, அன்று முதல் கீரையை வாங்கிக் கொண்டு வரத் துவங்கினேன். சப்ஜி செய்து சப்பாத்தியுடன் அலுவலகத்துக்கு கொடுத்து விடுவேன். உடன் சாப்பிடுபவர்களும் நன்றாக இருப்பதாக சொல்லியுள்ளார்கள்…..:) இந்த கதையெல்லாம் தில்லியோடு சரி! ஆனால் சமீபத்தில் ஒரு நாள் காலை வேளையில் பக்கத்து வீட்டில் இந்த கீரையை எடுத்து வந்து காண்பித்து இது என்னங்க கீரை? இதை சாப்பிடலாம் என்று சொல்லி தெரிந்தவங்க கொடுத்துட்டு போனாங்க…. எப்படி செய்யறதுன்னு தெரியலை என்றார்கள்ஆஹா! இது முள்ளங்கியின் கீரை. இதை சப்ஜி செய்து சாப்பிடலாம் என்று சொல்லி ரெசிபி சொன்னேன். உடனே நீங்களும் கொஞ்சம் எடுத்துக்கோங்க என்று தந்தார்கள். உடனேயே செய்து விட்டேன். நீங்களும் எப்படி என்று தெரிந்து கொள்ள வாருங்கள். கொஞ்சம் முன்கதை தான் பெரிதாகி விட்டது. பரவாயில்லை! இதெல்லாம் அப்புறம்எப்ப உங்களிடம் பகிர்ந்து கொள்வது….:)))

தேவையானப் பொருட்கள்:-

முள்ளங்கி கீரைசின்ன கட்டு அளவு
வெங்காயம் – 2
தக்காளி – 2
பயத்தம்பருப்புகைப்பிடி அளவு
மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
கரம் மசாலாசிறிதளவு
சீரகம்சிறிதளவு
சமையல் எண்ணெய்தேவையான அளவு
உப்புதேவையான அளவு

செய்முறை:-

கீரையை தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பயத்தம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காயவைத்து சீரகத்தை பொரிய விடவும். அடுத்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். தக்காளியை சேர்த்து தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து பிரட்டி, தண்னீர் தெளித்து மூடி வைக்கவும். கீரை நன்றாக வெந்ததும், வேகவைத்துள்ள பயத்தம்பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

முள்ளங்கி கீரை சப்ஜி தயார். சாதத்துடனும், சப்பாத்தியுடனும் பரிமாறலாம். சுவையானதும், சத்தானதும் கூடஎன்ன உங்க வீட்டிலும் கீரை கிடைத்தால் செய்து பார்ப்பீர்கள் தானே..

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்


திருவரங்கம்.

பின் குறிப்பு:- 

கரம் மசாலா விருப்பம் தான். தேவையில்லையெனில் விட்டு விடலாம்..
பருப்புடன், கீரையும் குக்கரில் வைத்தும் சேர்த்துக் கொள்ளலாம்.

Friday, March 28, 2014

ஹாப்பி பர்த்டே! சில ஞாபகங்கள்…
பட உதவி - கூகிள்

சிறுவயது முதல் என்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றி சமீபத்தில் வந்த என் பிறந்தநாள் அன்று என் மகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன். அதை அப்படியே பதிந்தும் வைக்கலாம் என்று எண்ணியதன் விளைவு இப்பதிவு….:)

பிறந்தநாள் என்றாலே புதுத்துணியும், இனிப்புகளும், கேக்குகளும், பார்ட்டிகளும், பரிசுப் பொருட்களும், நண்பர் கூட்டமும் தான் நினைவுக்கு வரும் இல்லையா! ஆனால் என்னுடைய சிறுபிராயத்தில் பிறந்தநாள் என்றால், முதல் நாள் இரவே கைகளில் மருதாணி வைத்து விடுவார் அம்மா. காலையில் எழுந்து தலைக்கு குளித்து, இருக்கறதுலயே நல்லதாக உள்ள ஒரு உடையை அணிந்து கொண்டு அம்மா வைத்து விடும் பூவை தலையில் சூடிக் கொண்டு கோவிலுக்குச் செல்வேன்.

கையில் அர்ச்சனைக்காக இரண்டு ரூபாய் கொடுத்து விடுவார்கள். பெயர், நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்து கொண்டு வீடு திரும்பியதும், முதல் நாள் இரவு நான் தூங்கிய பின் அம்மா செய்து வைத்த குலோப்ஜாமூனோ, அல்லது சுடச்சுட அப்போது செய்து வைத்திருக்கும் பாயசமோ தருவார் அம்மா. அப்பா அம்மாவுக்கு நமஸ்காரம் செய்து ஆசிகளை பெற்ற பின் அருகிலுள்ளோர் வீட்டுக்கு சென்று சாக்லேட்களை தந்து விட்டு வருவேன். இதுவே அன்றைய பிறந்தநாள் கொண்டாட்டமாகும்….:)

கொஞ்சம் பெரியவளான பின் அக்கம் பக்கம் இனிப்புகள் தருவதற்கு பதிலாக என்னுடைய வயது என்னவோ, அத்தனை உணவுப் பொட்டலங்களை தயார் செய்து தருவார் அம்மா. அதை அப்பாவுடன் சைக்கிளில் எடுத்துக் கொண்டு எங்கள் ஊர் கோவையின் பிரசித்தி பெற்ற கோவில்களான தண்டுமாரியம்மன் கோவிலுக்கும், கோணியம்மன் கோவிலுக்கும் செல்வோம். அங்கே வாசலில் அமர்ந்து கொண்டிருக்கும் பிச்சைக்காரர்களுக்கு என் கைகளால் உணவுப் பொட்டலங்களை தரச் சொல்வார் அப்பா. இதை சில வருடங்களுக்கு தொடர்ந்து கடைபிடித்தோம்.

எங்கள் உறவினர் தாத்தா ஒருவர் இப்படித் தான் தன்னுடைய பிறந்தநாளன்று செய்து வந்தார். நாங்களும் சென்று உதவி செய்வோம். அதை பார்த்த பின் தான் நாங்களும் இம்மாதிரி கடைபிடிக்கத் துவங்கினோம். காசு பணத்தால்  ஒரு மனிதரை திருப்திப்படுத்த இயலாது. ஆனால் உணவு என்பது ஒரு கட்டத்துக்கு மேல் திருப்திப்பட்டுத்தானே ஆகணும் இல்லையா! மனசு வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் என்பார்களே பெரியோர்..

இப்படித்தான் என் அன்றைய பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இருந்தது. திருமணமான பின் என்னவருக்காகவும், மகளுக்காகவும் இனிப்புகள் செய்து தரும் நான், எனக்காக எதுவும் செய்து கொள்ள தோன்றுவதேயில்லை….:) உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்தோடு சரி! இப்போ உலகம் முழுவதுமுள்ள பதிவுலக நட்புகளான உங்க எல்லோரின் வாழ்த்தும் கிடைப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த வருட பிறந்தநாளுக்காக எங்கள் மகள் வரைந்து தந்த வாழ்த்து மடல் இதோ…. இது தானே மிகப்பெரிய பரிசு…
மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

Thursday, March 20, 2014

சில நேரங்களில் சில மனிதர்கள்!சமீபத்தில் ஒரு திருமண விஷயத்திற்காக, ஒரு குறிப்பிட்ட MATRIMONY தளத்தில் பதிவு செய்துள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்கு அழைத்திருந்தேன். அழைப்பை ஏற்ற ஒரு பெண்மணியிடம், நான் என்னை அறிமுகம் செய்து கொள்ள, “என்ன விஷயம்? எதற்கு அழைத்தீர்கள் என வெடுக்கென கேட்க…..” நானும் அவர்கள் வீட்டு பெண்ணின் பெயரை குறிப்பிட….. அப்படியெல்லாம் யாரும் இங்கு இல்லை என்று சொல்லி, நான் பதில் சொல்வதற்குள் படாரென கட் செய்து விட்டார். சரி! எண் தான் தவறு போலிருக்கிறது.. என்று மீண்டும் சரி பார்த்து விட்டு அழைக்க, ரிங் போனவுடன் கட் செய்து விட்டார்கள்…..:)

இத்தோடு நான் நிறுத்தி கொண்டிருக்கலாம். மீண்டும் நான் அழைக்க….. எடுத்தார் அந்த பெண்மணி. நான் பேச ஆரம்பிப்பதற்குள் “ஏன் சும்மா தொந்தரவு பண்றீங்க? என்று சொல்லவே, நான் அதிர்ந்தாலும், ஒருநிமிடம் சுதாரித்து கொண்டு, “குறிப்பிட்ட தளத்தை சொல்லி அங்கு உங்க வீட்டு பெண்ணின் எண்ணை பார்த்து தான் அழைத்தேன். இதையெல்லாம் கேட்பதற்குள்ளாகவே கட் பண்றீங்களேன்னு கேட்க, அப்படியெல்லாம் யாரும் இங்கு இல்லை. இனிமே கால் பண்ணாதீங்கன்னு கட் பண்ணி விட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இவர்கள் தானே பதிவு செய்து எண்ணைத் தந்துள்ளார்கள். அப்படியிருக்க இப்படி வெடுக்கென பேசினால் என்ன அர்த்தம்? ஒரு வேளை அந்த பெண்ணிற்கு நிச்சயம் ஆகியிருந்தாலும் அதை சொல்லலாமல்லவா? கோபமாக வந்தது அந்த பெண்மணியின் மேல்….:) என்ன செய்ய?

இரண்டாவது விஷயம்!

இது பதிவுலகம் சம்பந்தபட்டது. சில மாதங்களுக்கு முன்னர் வலைச்சர ஆசிரிய பொறுப்புக்காக பல தளங்களை தேடி கொண்டிருந்ததில், ஒரு தளத்தில் என்னுடைய வலைப்பூவில் பகிர்ந்து கொண்ட கோலம் ஒன்று காணப்பட்டது. எங்களுடைய குடியிருப்பில் பொங்கல் சமயத்தில் போட்டிருந்த கோலம் அது. நான் தான் புகைப்படமெடுத்து பகிர்ந்து கொண்டிருந்தேன். சந்தேகத்திற்காக நன்றாக பார்த்ததில், அதே கோலம் தான். அவர்களுக்கு பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன். பல நாட்களுக்கு பதிலே இல்லை. பின்பு என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு பதில் அனுப்பியிருந்தார்கள். அதாவது தன்னுடைய தளத்தில் இது போல் தன்னுடையதும், மற்றவர்களுடையதும் என எல்லாமே பகிர்வதாகவும். அது உங்களுடையதாக இருந்தால் நன்றி! என்றும் குறிப்பிட்டிருந்தார்…..:)

நானும் ”யாருடைய தளத்தில் இருந்து எடுத்திருந்தாலும் அவர்களிடம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்கள் தளத்தின் சுட்டியாவது தந்திருக்க வேண்டும்” என்றும் பதிலனுப்பினேன். அதற்கும் பல நாட்கள் கழித்து ”உங்களுடையது எது என்று குறிப்பிடுங்கள், வேண்டுமானால் அதை நீக்கி விடுகிறேன்” என்று பதில் அனுப்ப… புரிய வைக்க இயலாது என விட்டு விட்டேன்.

இப்போ மீண்டும் ஒரு நாள் பார்க்க இன்னும் சில கோலங்கள் என்னுடைய பதிவிலிருந்து எடுத்து போட்டுள்ளார்கள். அதே போல் நான் தந்த பின்னூட்டத்தையும் நீக்கி விட்டு, அதற்கு முன்னால் பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி சொல்லி எழுதியிருக்கிறார்….:) ”என் கைவண்ணம்” என்று இவர் வெளியிட்டுள்ள கோலங்களில் எது உண்மையாக இவர் போட்டது என்று நம்புவது?

நினைத்திருந்தால் என்னுடைய பதிவில் போட்டிருந்த கோலங்களை நான் போட்டதாகக் கூட சொல்லியிருக்கலாம். ஆனால் எங்கள் குடியிருப்பில் உள்ள பெண்கள் பல மணிநேரங்களை செலவழித்து போட்ட கோலங்களை எப்படி நான் என்னுடையதாக சொல்வது? மனசாட்சி உறுத்தாதா? அடுத்தவர்களின் உழைப்பில் பெருமை தேடிக் கொள்ளும் இவர்களைப் போன்றவர்களை என்ன செய்வது?

இதையெல்லாம் என்னவரிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டால், “எத்தனை பேரைத் தான் உன்னால் திருத்த முடியும்?” விட்டுத் தள்ளு… இந்த உலகமே இப்படித் தான் என்கிறார்…:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

பட உதவி - கூகிள்

Wednesday, March 12, 2014

வைரல் ஜூரம் பரவும் காலமிது!!!


இப்போ சீசன் போலிருக்கு, எங்கும் வைரல் ஜூரம் பரவிக் கொண்டு வருகிறது. இங்கே எங்கள் குடியிருப்பிலேயே சிலருக்கு ஜூரம், ஜூரம் என்று கேள்விப்பட்டு கொண்டிருந்தோம். கடைசியில்.....

வேறென்ன! எங்களுக்கும் வந்தே விட்டது....:(( முதலில் ரோஷ்ணிக்கு ஆரம்பித்தது. உடம்பு வலி, தொண்டையில் எரிச்சல், கொஞ்சம் கொஞ்சமாக ஜூரத்தின் வேகமும் அதிகரிக்க, மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். வைரல் ஜூரம், நான்கு நாளைக்கு இப்படித் தான் இருக்கும். பயப்பட வேண்டாம். என்ன மருந்து கொடுக்கிறீர்கள் என கேட்கவே, ஜூரத்திற்கு CALPOL SYPUPம் , ஜலதோஷத்துக்கு T-MINIC SYRUPம் கொடுக்கிறேன் எனச் சொல்லவே, அதையே கொடுங்கோ.. டோஸேஜ் மட்டும் அதிகமாக்கி கொடுக்கவும். பாலில் மஞ்சள் பொடி, மிளகு பொடி போட்டு கொடுங்கோ. வென்னீரில் உப்பு போட்டு கொப்பளிக்க சொல்லுங்கள் எனச் சொன்னார். 

இதெல்லாம் தான் நமக்கே தெரியுமே என்று அசட்டையாக போகாமல் இருந்தால் அப்புறம் ஏன் அழைத்து வரவில்லை என திட்டு விழும் எனவே டாக்டர் ஃபீஸ், போக வர ஆட்டோ என்று அதெல்லாம் யோசிக்க கூடாது.... :)

ஒருவழியாக நான்காம் நாள் ரோஷ்ணிக்கு ஜூரம் விட்டு விட, அன்று இரவே எனக்கு வந்து விட்டது. ஜூரம், தலைவலி, கால்வலி என வேதனை தான். செய்ய வேண்டிய வேலைகளை முடித்து விட்டு படுக்கை தான். பிடிவாதமாக என்னுடனேயிருந்து மீண்டும் ரோஷ்ணிக்கு ஜுரம் எட்டிப் பார்க்க பாடுப்பட்டு கட்டுபடுத்தி வைத்துள்ளேன். பரீட்சை நேரமாச்சே....

ஐய்யோ! உடம்புக்கு முடியலைன்னாலே வேதனை தான்....:(( மருந்து, கஞ்சி எல்லாம் குடித்து இன்று தான் கொஞ்சம் பரவாயில்லை. இன்னும் ஜலதோஷமும், இருமலும் எங்களை விடுவதாக இல்லை...:) சுத்தமாக எழுந்து கூட நிற்க முடியாமல் போனதால் ஒருநாள் மாமியார் உணவும், கஞ்சியும் தந்தார்கள். அவர்களுக்கு சிரமம் தர வேண்டாம் என இன்று முதல் நானே செய்து கொள்ள ஆரம்பித்து விட்டேன்....:)

பட உதவி - கூகிள்

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

Saturday, March 8, 2014

மங்கையராய் பிறக்க மாதவம்!

மாலை வேளை என் மகளின் டிவி நேரம். அதில் அவள் ஒரு மழலைகளின் தொடரை பார்த்துக் கொண்டிருந்தாள். நானும் தேநீரை பருகிக் கொண்டே அவளுடன் பார்த்துக் கொண்டிருந்த போது அதில் ஒரு காட்சி....  இந்த வருடத்தின் விடுமுறை வேலையாக ஆசிரியர் என்ன தரப் போகிறார் என வகுப்பில் உள்ள மாணவர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஆசிரியர் இந்த முறை வித்தியாசமாக அவரவர் வீட்டில் இல்லாமல் சக நண்பரின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து அவர்களின் பழக்கவழக்கங்களை தெரிந்து கொள்ளச் சொல்கிறார். மாணவர்களும் ஆசிரியர் சொல்வது போல் செய்கின்றனர். மற்றவரின் வீட்டு விதிமுறைப்படி இருக்க முடியாமல் திணறிப் போகின்றனர். இதை நகைச்சுவையாக காட்டியிருந்தனர்.

இதை பார்த்த பின்பு எனக்கு வேறு ஒன்று தோன்றியது. இதைப் பற்றி எவ்வளவோ பேர் பேசியும் எழுதியும் உள்ளனர். ஆனால் எனக்கு இந்த சிந்தனை தோன்றிய சந்தர்ப்பம் வேறு என்பதால் இங்குஎழுதுகின்றேன். அது என்னவென்றால் வேறு ஒருத்தரின் வீட்டில் இரண்டு நாட்களுக்கே ஒன்றிப் போக முடியாமல் திணறிப் போகிற போது, பெண் என்பவள் திருமணம் என்ற ஒன்று ஆனவுடன் இத்தனை வருடம் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு செல்ல நேருகிறது.

அப்படிச் செல்லும்போது அங்கு உள்ள உறவுகளை தன்னுடைய உறவுகளாக நினைத்து,  அவர்களைப் புரிந்து கொண்டு அங்கு உள்ள பழக்கவழக்கங்களையும், சம்பிரதாயங்களையும் பின்பற்றுகிறாள். கணவர் அவருடைய உறவுகளை எப்படி அழைக்கிறாரோ அதே மாதிரி தானும் அம்மா, அப்பா, அத்தை, மாமா என்று உரிமையோடு அழைத்து அந்த குடும்பத்தோடு ஒன்றாகிப் போகிறாள்ஆண்களால் இப்படி இருக்க முடிவதில்லை. மனைவியின் உறவுகளோடு ஒன்றிப் போக முடிவதில்லை. மாமனாரைசார்என்று அழைக்கும் மாப்பிள்ளைகளும் இருக்கின்றனர்.

ஒரு பத்திரிகையில் வாசித்தது நினைவுக்கு வருகிறது. பெண்ணானவள் பிறந்த வீட்டிற்கு சென்றாலும் கணவனைப் பற்றியும் வீட்டை பற்றியுமே எண்ணுகிறாள். ஆண்கள் பிரயாணம் செல்வதானாலும் நினைத்த போது கிளம்பிவிடுகின்றனர். ஆனால் ஒரு பெண் பிரயாணம் செய்யும் போது ஆமை ஓட்டை சுமப்பது போல் பெண் வீட்டைச் சுமக்கிறாள்இது எவ்வளவு உண்மை!!.

இன்னமும் கூட நம் கிராமங்களில் பெண் குழந்தை பிறந்தாலே பாவம் என்று பலபேர் நினைக்கின்றனர். பெண் சிசுவதை என்பது இன்னமும் பல மாநிலங்களில் நடந்து கொண்டு இருக்கிறதுஇவர்களிடமிருந்து தப்பித்து வந்த பின்பும், பெண்களுக்கு எதிராய் தினம் தினம் எதாவது பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கிறதுஎன்றாலும்மங்கையராய் பிறக்க மாதவம் செய்ய வேண்டும் அம்மாஎன்ற  கவிஞனின் பாடல் போல, நான் பெண்ணாய் பிறந்ததற்கும் எனக்கும் பெண் குழந்தை பிறந்ததற்கும் எனக்குப் பெருமையே.

அனைத்து மகளிர்க்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்!

மீண்டும் சந்திப்போம்….


ஆதி வெங்கட்,
திருவரங்கம்.

டிஸ்கி:- மார்ச் 8ம் தேதியான இன்று எங்களுடைய வாழ்விலும் சிறப்பான ஒரு நாள். நாங்கள் முதன்முதலாக சந்தித்துக் கொண்டதும் இந்த நாளில் தான்....:))