Tuesday, February 25, 2014

அருவருப்பா இருக்கு!!!அம்மா! கத்திரிக்கா, வெண்டக்கா, பாகக்கா எல்லாம் கொண்டு வந்துருக்கேன்…. காய் காய்…..வாங்கலையாம்மா….

அருகிலுள்ள கிராமத்திலிருந்து சைக்கிளில் காய்கறிகளை கொண்டு வந்து குடியிருப்புகளில் விற்பனை செய்கிறவர்.

சில நாட்களாக குடியிருப்பின் உள்ளே செல்ல வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் வாயில் அருகிலேயே நின்று கொண்டு கூவிக் கொண்டிருந்தார். அம்மா! காய் காய்….

மகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்ப வந்த பவானி. கையோடு குடத்தையும் கொண்டு வந்திருந்தாள் கீழே..

அம்மா! பாகக்கா, கத்திரிக்கா………

இருக்குப்பா! நேத்து தான் சந்தையிலிருந்து வாங்கிட்டு வந்தேன்

வீட்டுக்குள்ளேயே குடிநீர் குழாய் மூலம் வந்தாலும் ஏனோ அதிலுள்ள உப்பின் அளவு கூடுதலாக இருப்பதால், வயிற்றுக்கு ஒத்துக் கொள்வதில்லை…:((

குடியிருப்பிலேயே மாநகராட்சியின் குடிதண்ணீர் குழாய்கள் நான்கு உள்ளன. சுத்திரிக்கப்பட்ட நீராதலால் ஒரு சிலர் அதில் அன்றாடம் சமையலுக்கும், குடிநீருக்காகவும் பிடித்து செல்வதுண்டு. பலர் வீட்டில் ஆரோ சிஸ்டம் வைத்திருக்க, ஒரு சிலர் குடிநீர் கேன்கள் வாங்கிக் கொள்ள, இப்படி பவானி மாதிரி சிலர் இந்தக் குழாய்களில் பிடித்து செல்வதுண்டு.

குடத்தை கழுவி விட்டு தண்ணீரை பிடித்து அங்குள்ள திட்டில் வைத்து விட்டு ஆட்டோவுக்காக காத்திருக்கையில்…….

ஐய்யோ! ஐய்யோ! என்னய்யா இப்படி பண்ணிட்ட! இதில எப்படி நாங்க தண்ணீ பிடிக்கிறது! எச்ச பண்ணி குடிக்கிற! அந்த தண்ணியெல்லாம் இந்த குடத்துல எல்லாம் தெளிக்குது! வேற வழியில்லாம தான் நான் இங்க பிடிக்கிறேன்! அருவருப்பா இருக்கு! இதுக்கு தான் இங்க உள்ளே செல்ல தடை போட்டிருக்காங்க. வந்தோமா! வியாபாரத்த பாத்தோமான்னு இல்லாம இப்படி பண்ணிட்டயே! உனக்கு வேணும்னா எங்கிட்ட கேட்டா நான் கொடுத்திருப்பேன்ல! என்று ஒரு பெண்மணி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண..

பவானி என்ன நடக்கிறதென்று புரியாமல் முழித்துக் கொண்டிருக்க அந்த காய்கறிக்காரர், வாடிய முகத்துடன் தண்ணி தானம்மா குடிச்சேன். அது தப்பா? என்று இவளிடம் புலம்பியபடியே வெளியேறினார்.

மகளை அனுப்பி விட்டு தன்னுடைய குடத்தை எடுக்கச் சென்ற போது அங்கிருந்த இன்னொரு பெண்மணியிடம்என்னங்க நடக்குது! எந்த காலத்துல இருக்கோம்! வாய வெச்சா அவர் குடிச்சார் எனக் கேட்க, இல்லங்க! கைய ஏந்தி தான் குடிச்சார்.. அதுக்கே அந்தம்மா கத்தறாங்க எனச் சொல்லசொல்லா இயலா கோபத்துடன் குடத்தை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள். நேற்றைய ஒரு நிகழ்வினை நினைத்த படியே….சாலையில் வந்து கொண்டிருக்கையில் மாடு ஒன்று குழாய் திறந்திருந்த நிலையில் கீழே விழும் நீரை நாக்கால் குடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. இதை பார்த்ததும் அடடா! இப்படி குடிச்சா எப்படி அதன் தாகம் அடங்கும்வாயை பைப்பில் வைத்து குடிக்கக் கூடாதோ! என்று நினைத்தபடியே வந்து கொண்டிருந்த பவானிக்கு இன்றைய நிகழ்வின் மூலம்….

இப்படிப்பட்ட மனிதர்களால் தான் மாடு கூட பயந்து கீழே விழும் நீரால் நாக்கை ஈரப்படுத்திக் கொண்டிருந்ததோ என்று தோன்றியது. அல்லது அது நம் மீது அருவருப்பு பட்டுத் தான் தள்ளி நின்று குடித்ததோ என்று மனதுள் நினைத்துக் கொண்டிருந்தாள்.

சில நேரங்களில் தப்பைக் கண்டு தட்டிக் கேட்க மனது துடித்தாலும், வாயை மூடிக் கொண்டு தான் இருக்க வேண்டியுள்ளது. இந்த சம்பவத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டாள்.

பட உதவி - கூகிள்

நட்புடன்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

37 comments:

 1. அந்த பெண்மணிக்கு தான் மனம் முழுவதும் அருவருப்பு...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

   Delete
 2. நான் நிகழ்ந்த கதை என்று நினைத்தேன்... ஆனால் கீழே பார்த்த பின் தான் தெரிந்தது சிறுகதை என... என்ன செய்வது இப்படியும் மனிதர்கள்

  ReplyDelete
  Replies
  1. நிகழ்ந்த கதை தான்.. கதையாக மாற்ற முயற்சி செய்தேன்...:)

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க எழில்.

   Delete
 3. நானும் நிஜமாக நடந்தது என நினைத்தே படித்தேன்.. :)

  ReplyDelete
  Replies
  1. நிஜம் தானே சில நேரங்களில் கதையாக மாறுகிறது...:)

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க கோவை ஆவி.

   Delete
 4. Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

   Delete
 5. சிறுகதை நல்லா இருக்கு. அடுக்கு மாடிகளில் குடி இருந்தாலும் இன்னும் மனசு கட்டாந்தரையில்தான் இருக்கு

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க.

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க ராஜி.

   Delete
 6. nijam? allathu karpanai?? eppadi irunthalum arumai! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா மாமி.

   Delete
 7. கதை நல்லாருக்கு ஆதி.

  திருந்தாத ஜென்மங்களை விட்டுத்தள்ளப்பழகிக்கணும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க. திருந்தாத ஜென்மங்கள்... புரிய வைக்க முடியாத ஜென்மங்கள் என பலர் அங்கங்கே உள்ளனர்....:(

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க சாந்தி.

   Delete
 8. நல்ல கதை ஆதி. சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க ஆசியா உமர்.

   Delete
 9. கண்ணில் படும் சம்பவங்கள்தானே கற்பனை கலந்து கதையாகிறது? எனவே, கதையோ, நிஜமோ... எப்படியிருந்தாலும் சிந்திக்க வைத்தது.

  ReplyDelete
  Replies
  1. கண்ணில் பட்ட சம்பவம் தான்... கதை வடிவில் மாற்ற முயற்சி செய்தேன்.

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   Delete
 10. சிலர் இன்னும் நான் திருந்த மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள். என்ன செய்வது ? அவர்களைக் கண்டால் தான் அருவருப்பாக இருக்கிறது.

  நல்ல கதை. வாழ்த்துகள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க தமிழ்முகில்.

   Delete
 11. Bhavani yendra peyaril padivil varum sambavam patri padikkumbodhu satru kuzhappam ( nijam Kadaya ) yerpattadhu.

  ReplyDelete
  Replies
  1. நிஜம் தான் சித்தி! கதைகள் எல்லாமே நிஜத்தின் பிரதிபலிப்பு தானே... அப்படியொரு முயற்சி தான் இது..

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 12. ரசிக்க வைத்தது, யோசிக்க வைத்தது. எனவே நல்லதொரு சிறுகதை! மகிழ்வான நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கணேஷ் சார்.

   Delete
 13. நல்ல கதை ஆதி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 14. Replies
  1. தங்களின் வருகைக்கும், வாக்குகளுக்கும் மிக்க நன்றி நம்பள்கி.

   Delete
 15. இப்படியும் சிலர்! என்ன செய்வது!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 16. மனிதன் தண்ணிகூட குடிக்கக் கூடாதா? என்ன மக்களோ...
  நல்ல கதை ஆதி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க கிரேஸ்.

   Delete
 17. மனிதர்களில் எத்தனை நிறங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 18. இப்படியும் சிலர் இருக்கதான் செய்கிறார்கள்...நல்ல கதை!!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க மேனகா.

   Delete
 19. காய்கறி வண்டியும் மாடு நீர் அருந்துவதும் தத்ரூபம். கதையோடு ஒத்துப் போகிறது. மனித நீதியைச்சொன்ன கதை அருமை ஆதி !

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…