Wednesday, February 19, 2014

சென்னையில் ஒரு நாள்!



கடந்த வாரம் நெருங்கிய உறவினரின் திருமணத்துக்காக சென்னைக்கு வந்திருந்தோம். அதற்கு ஒரு சில நாட்கள் முன்பு தான் எங்களுடன் தில்லியில் இருந்த நண்பர், (தற்போது மும்பையில் வசிக்கிறார்) சென்னையில் வீடு கட்டி கிரஹப்பிரவேசமும், அவரது மகனின் பூணூல் வைபவமும் வைத்திருந்தார். விழாவிற்கு வரவில்லையென்றால் இனிமே பேச்சே கிடையாது. அன்று நீ அங்கிருக்கஎன்று நண்பரிடமிருந்து அலைபேசியில் மிரட்டல்….:)))

ஆனாலும் எங்களால் கலந்து கொள்ள முடியவில்லை….:)) கிரஹப்பிரவேசத்திற்கு மட்டும் என்னவர் சென்று வந்துவிட்டார். அதனால் சென்னைக்கு சென்ற உடன் அவர்களைப் பார்த்து விசாரித்து வரலாம் என்று இல்லத்திற்கு சென்றிருந்தோம். ஒரு சில வருடங்கள் பார்க்காவிட்டால், பசங்கள்லாம் சட்டுனு வளர்ந்துடறாங்க. மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர்களைக் கண்டதால், கொஞ்சம் அளவளாவி விட்டு, காலைச் சிற்றுண்டியும் முடித்துக் கொண்டு, அங்கிருந்து அவர்கள் புதிதாக கட்டியிருக்கும் வீட்டையும் சென்று பார்க்கச் சென்றோம்.

இதே ஏரியாவில் தான் தில்லியில் எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த தோழியும் தற்போது வசிக்கிறார். அவரைப் பார்த்தும் ஏறக்குறைய பத்து வருடங்கள் ஆகிவிட்டது. அவருக்கு காலையிலேயே தொலைபேசியிருந்தோம். மகளுக்கு ஹிந்தி பரீட்சை இருப்பதால் மாலையில் தான் வீட்டில் இருப்பார் எனக் கூறவே, சரி மாலையில் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தோம்.

சரி! இங்கே தானே நம்ம பதிவுலகத் தோழி ஒருவரும் இருக்காங்க, அவங்களையாவது சந்திக்கலாம் என நினைத்தோம். 2012 மேயில் நான் அவர்களை முதன்முறையாக சந்தித்தேன். அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பில் இருப்போம். அவங்களை பார்க்கலாம் என அலைபேசியில் அழைக்க, தான் வேறு விலாசத்தில் தற்போது இருப்பதாகவும், நாங்கள் சரியாக எங்கு இருக்கிறோம்? எனக் கேட்க….

நான் நண்பரிடம் கொடுத்து இடத்தை சொல்லச் சொன்னேன். அவரும் சொல்ல, இவர்களும் அங்கிருந்து தற்போது அவர்கள் வசிக்கும் விலாசத்தைச்  சொல்ல, கடைசியில் எங்கள் தில்லித் தோழியும், பதிவுலகத் தோழியும் எதிர் எதிர் வீட்டில்…..:))) நண்பர் சுத்தம்! நாங்கள்லாம் தில்லியில் ஒன்றாக இருந்தவர்கள்! அங்கே தானா! சரியாப் போச்சுஎன்றார். அவருக்கு சில வேலைகள் இருந்ததால், விடைபெற்றுக் கொண்டு நாங்கள் எதிர்பாராத சந்தோஷத்துடன் அவர்கள் இல்லத்துக்கு சென்றோம். காரணம் கிரஹப்பிரவேசத்தில் கலந்து கொண்ட என்னவர், தில்லித் தோழியின் வீட்டிற்கு சென்று கொஞ்சம் நேரம் அரட்டை அடித்து விட்டு தான் வந்திருந்தார்….:)) அன்று எதிர் வீட்டில் இருந்த நம் பதிவுலகத் தோழி விசேஷத்திற்கு சென்றிருக்க, பார்க்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

சரி! இப்போப் போனாலும் பதிவுலகத் தோழியை பார்த்து விட்டு வந்துடணும். மாலையில் தானே தில்லித் தோழி இருப்பார் என நினைத்துக் கொண்டே அங்கே சென்றோம். ஆனால், அலைபேசியில் எங்களிடம் பேசி விட்ட நம் பதிவுலகத் தோழி, மகளுக்காக மதிய சாப்பாடை எடுத்துச் செல்ல தயாராகி கொண்டிருக்கும் தில்லித் தோழியிடம் தில்லியில் உள்ள உங்க ஃப்ரெண்ட் வந்துகிட்டிருக்காங்கஎனச் சொல்ல, அவளும் யாரு எனக்கு தெரிஞ்சவங்க, உங்களுக்கும் தெரிஞ்சிருக்காங்கஎன்று நினைத்துக் கொண்டிருக்க, நாங்களும் செல்லவே…..

ஏறக்குறைய பத்து வருடங்களுக்குப் பிறகு பார்த்த தில்லித் தோழியிடமும், பதிவுலகத் தோழியிடமும் என இருவரிடமும் செம அரட்டை…..:)) சந்தோஷங்கள் பரிமாறப்பட்டன. என் மகளை தோழி பார்த்ததேயில்லை. காரணம் அப்போது எங்கள் இருவருக்குமே குழந்தை பிறந்திருக்கவில்லை. தில்லியில் நாங்கள் அடித்த கொட்டமும், நண்பர்களைப் பற்றியும், குளிர், வெயில் என சகலமும் பதிவுலகத் தோழியிடமும்,  அதே போல் நம் பதிவுலகத் தோழி பெரிய எழுத்தாளர் என்பதையும், அவர்களிடம் எனக்குண்டான நட்பு பற்றியும் தில்லித் தோழியிடம் பகிர்ந்து கொண்டேன்.

அவர்களும் எதிர் எதிர் வீட்டில் இருப்பதால் அவர்களுக்குண்டான புரிதல்களைப் பகிர அந்த இடமே களைகட்டி இருந்தது. மகளுக்கு கொடுக்க வேண்டிய உணவை, வேறு ஒருவரிடம் கொடுத்தனுப்பி விட்டு எங்களுடன் சேர்ந்து கொண்டார் தோழி. மதிய உணவருந்த இருவரும் அழைப்பு விடுக்க, சாதமா! வேண்டாமே என்று, தில்லியில் தினமும் சாப்பிட்டாலும் அலுத்துப் போகாமல் சப்பாத்திக்கு ஓகே சொன்னார் என்னவர்….:)) சரி! எல்லோரும் சேர்ந்தே தயார் பண்ணுவோம் என்று சொல்லி மூவரும் கூட்டணி அமைத்தோம். தில்லித் தோழி வேண்டிய காய்கறிகளை ஓடிச் சென்று வாங்கி வர, ஒருவர் மாவு பிசைய, ஒருவர் காய்கறிகளை நறுக்க, ஒருவர் சப்பாத்தி இட்டு கொடுக்க, ஒருவர் போட்டு எடுக்க, ஒருவர் பாத்திரங்களை கையோடு தேய்த்துப் போட என்று பரபரவென்று வேலைகளை செய்து, ஃபுல்கா, ஆலு மட்டர் சப்ஜி, தால், வெள்ளரிக்காய் ரெய்தா, சாலட் என செய்து முடித்தோம்….:))

முதலில் என்னவருக்கும், மகளுக்கும் பரிமாறி விட்டு, அடுத்து நாங்கள் மூவரும் அரட்டையுடன் உணவு உண்டோம். எல்லோரும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். மாலையில் நம் பதிவுலகத் தோழி ஒரு சந்திப்பிற்காக செல்ல வேண்டும் என்று கிளம்ப, எங்களின் சிறிது நேர காத்திருப்புக்கு பின் தில்லித் தோழியின் மகள் பரீட்சை முடித்து வீடு வர, எங்கள் மகளோடு விளையாட விட்டு, சிறிது நேரத்திற்குப் பிறகு நாங்களும் அங்கிருந்து கிளம்பினோம்.

சரி! இவ்வளவு நேரம் பதிவுலகத் தோழி என்று மறைமுகமாக சொன்னது போதும். அவர் வேறு யாருமல்லநம்ம கற்றலும்கேட்டலும் லாஜி”, சாரி! ராஜி தான்…:)) தில்லித் தோழி கவிதா

ராஜி, கவிதா இருவருக்கும் - மிகவும் இனிமையான நாளாக அன்று இருந்ததுப்பா. உண்மையிலேயே மனதிற்கு ஒரு புத்துணர்வும் சந்தோஷமும் கிடைத்தது. அன்று போல மனம் விட்டு சிரித்தும் நெடுநாளாகி விட்டது. இது போன்ற வாய்ப்பு இனி எப்போ கிடைக்கும்னு பார்க்கலாம்....:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

டிஸ்கி:-

வாசகர் கூடத்தில் என்னுடைய பங்களிப்பாக நான் எழுதிய இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் ”என் பெயர் ரங்கநாயகி” நாவலின் விமர்சனம், கடந்த சனியன்று வெளியானது. இதுவரை வாசிக்காதவர்கள் அங்கு சென்று படித்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்தால் மகிழ்வேன்....:)


22 comments:

  1. வாவ்!!!! தோழிகளுடன் சேர்ந்து அரட்டையடித்துக்கொண்டே சாப்பிடும்போது வயிறு நிறைஞ்சதும் தெரியாது. மனசு நிறைஞ்சதும் தோணாது! இன்னும் இன்னும்தான்:-)

    உங்க மகிழ்ச்சி பதிவில் கொட்டிக்கிடக்கு:-)

    ReplyDelete
  2. எப்போதும் இதைப்போல மகிழ்ச்சி தொடரட்டும்......

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. மனதின் மகிழ்ச்சி பதிவில் அருமை

    ReplyDelete
  4. எதிர்பாராத சந்திப்பு. ஆனாலும் என்றும் மறக்காத தித்திப்பு

    ReplyDelete
  5. வெங்கட் சாரை சந்திக்கலாம் வா என்று ஆவியும் வாத்தியாரும் அழைப்பு விடுத்தார்கள் எனக்கு சனியன்று அலுவலகம் இருந்ததால் சந்திக்க முடியவில்லை.. அடுத்தமுறை சென்னை வரும்போது தவறாது சந்திக்க வேண்டும்...

    வாசகர் கூடத்தில் இன்னும் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

    உங்கள் சேவை எங்களுக்குத் தேவை :-)

    ReplyDelete
  6. ‘லாஜி’ மேடம் எழுதின நிறையப பகிர்வுகளை நான் படிச்சதுண்டு. எனக்கும் பிடித்த அந்தப் பிரபலம் உங்களோட தோழிங்கறதை தெரிஞ்சுக்கிட்டல ரொம்ப மகிழ்ச்சி.

    ReplyDelete
  7. நீங்கள் மகிழ்ச்சியோடு பகிர்ந்து இருப்பதை வாசிக்க எங்களையும் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டு விட்டது.

    ReplyDelete
  8. யாரு எனக்கு தெரிஞ்சவங்க, உங்களுக்கும் தெரிஞ்சிருக்காங்க-
    உலகம் உருண்டை தான் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள் போலும்..
    மீண்டும் மீண்டும் சந்திக்க வாழ்த்துகள்..!

    ReplyDelete
  9. அன்றைய நாள் மறக்க முடியாத தருணங்களுடையது. அடுத்த முறை இன்னும் சில திட்டமிடல்களுடன் சந்திப்போம். :)

    ReplyDelete
  10. என்னவொரு சந்தோசம்...!

    இனிய சந்திப்பின் மகிழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    ReplyDelete
  11. தோழிகள் சந்தித்துக் கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி! பதிவுலகில் எனக்கும் ஒரு புது ப்ரெண்ட் கிடைச்சிருக்காங்களே! பகிர்வுக்கு நன்றி! உங்கள் தோழியின் தளம் சென்று பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  12. தோழிகள் சந்தித்து கொண்டதில் மகிழ்ச்சிதான்! கற்றலும் கேட்டலும் தளத்தில் அவரின் பதிவுகளை வாசித்து இருக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  13. கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா ஆதி.. நம்ம ராஜி தானா.. ஆஹா அற்புதமான சந்திப்பு தான் இது.. தில்லி தோழி, பதிவுலகத்தோழி என்று படிச்சுட்டே இருக்கும்போதே யோசனை யாரா இருக்கும் யாரா இருக்கும் என்று. ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா எனக்கு... மூவரின் கைவண்ணத்தில் மதிய உணவு, சப்பாத்திஃபுல்கா, ஆலுமட்டர், தால், ரெய்தா சாலட் அதனோடு நிறைய எல்லோரின் அன்பு... உணவு வயிற்றை மட்டுமல்ல மனதையும் நிறைத்து இருக்கும் கண்டிப்பா.. மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் மூவருக்குமே.. த.ம.7

    ReplyDelete
  14. Noted the value of Meeting the valuable friends by your valuable writings. Keep it up

    ReplyDelete
  15. Romba naal kazhichchu sandhikkumbodhu neram poradhe theriyadhu. Nanna enjoy panni iruukkirirgal yenbadai paddikka romba sondhozham. Magizhchchigal menmelum thodarattum.

    ReplyDelete
  16. பதிவை படிக்கும் போதே எனக்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொள்கிறது...மறக்கமுடியாத சந்திப்புதான்..

    ReplyDelete
  17. சும்மாவே இரண்டு தோழிகள் ஒன்று சேர்ந்தால் அங்கே கிடைக்கும் சந்தோஷத்தைப்பற்றி சொல்லவே வேண்டாம்! அப்படியிருக்க, மூன்று தோழிகள், அதுவும் பல நாட்களுக்குப்பிறகான சந்திப்பு! அந்த மகிழ்ச்சி எப்படியிருக்கும் என்று புரிகிறது! உங்களின் பதிவு அதை அப்படியே உணர்த்தவும் செய்கிறது! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  18. இனிய சந்திப்பு, இனிய பதிவு!

    ReplyDelete
  19. ஹும், நல்லா என்ஜாய் பண்ணியிருக்கீங்க !! தொடருட்டும் உங்களின் சந்தோஷ சந்திப்புகள் !

    ReplyDelete
  20. எதிர்பாராத சந்திப்புக்கள் என்றும் சந்தோஷத்தைக் கொடுப்பவைதான்...
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  21. நீங்களும் உங்கள் தோழிகளுமாக அடித்த அரட்டை இங்கே எங்களுக்குக் கேட்கிறது! ஒவ்வொரு எழுத்திலும் சந்தோஷம் கொப்பளிக்கிறது!

    ReplyDelete
  22. என்னுடைய சந்தோஷத்தில் பங்கு கொண்டு, கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…