Monday, February 17, 2014

வத்தக்குழம்பு!



வற்றக்குழம்பு என்று சொல்லப்படுகிற வத்தக்குழம்பு பாரம்பரிய சமையலில் ஒன்று. என் அம்மா, மாமியார் போன்றவர்களிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். என் அப்பாவுக்கு வத்தக்குழம்பு, சுட்ட அப்பளம் என்றால் உயிர். இதை என் புகுந்த வீட்டில் "மெந்தி குழம்பு" என்று சொல்வார்கள். சட்டென செய்து விடலாம். சாதமும், குழம்பும் வைத்து விட்டால் அப்பளம் வடாம், சிப்ஸ் போன்றவற்றுடன் ஜோராக சாப்பிட்டு விடலாம். சுண்டக்காய், மணத்தக்காளி போன்றவை வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றை நீக்குபவை. எங்கள் மகளுக்கு சிறுவயது முதலே அதன் நன்மைகளை சொல்லி பழக்கியதால், ஒவ்வொரு வாய் சாதத்துக்கும் வற்றல் வைத்து தான் தர வேண்டும் என்பாள்..:))

தேவையானப் பொருட்கள்:-

புளி – எலுமிச்சையளவு
சாம்பார்ப் பொடி – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:-

நல்லெண்ணெய் – 1 குழிக்கரண்டி
கடுகு – ¼ தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ½ தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – ½ தேக்கரண்டி
பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
சுண்டக்காய் வற்றல் (அ) மணத்தக்காளி வற்றல் – 2 தேக்கரண்டி


செய்முறை:-

புளியைத் தண்ணீரில் ஊறவைத்து புளிக்கரைசல் தயார் செய்து கொள்ளவும். வாணலியில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை முதலியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக தாளித்த பின்னர் வற்றலையும் சேர்க்கவும். வறுபட்டதும் புளிக்கரைசலை விட்டு உப்பு, சாம்பார்ப் பொடி, மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் வேண்டுமென்றால் சின்ன துண்டு வெல்லம் சேர்க்கலாம். குழம்பு கெட்டியானதும் எண்ணெய் பிரிந்து வந்து விடும். இப்போது இறக்கி விடலாம்.

சுவையான வத்தக்குழம்பு தயார்.

பின் குறிப்புகள்:-

1) இதே செய்முறையில் வற்றலை தவிர்த்து விட்டு சின்ன வெங்காயமும், பூண்டும் சேர்த்தும் குழம்பு வைப்போம். சுவையாக இருக்கும்.

2) குழம்பு கொஞ்சம் நீர்க்க இருப்பது போல் தோன்றினால் அரிசி மாவு சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு ஒரு கொதி வந்ததும் நிறுத்தலாம்.

3) இரண்டு விதமான வற்றல்களையும் சேர்த்தும் குழம்பு வைக்கலாம்.

4) வேர்க்கடலையும் இந்த குழம்பில் சேர்த்துச் செய்யலாம்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

24 comments:

  1. வணக்கம்
    செய்முறை விளக்கம் மற்றும் மருத்துவ குணம் போன்றவற்றை மிக அருமையாக சொல்லியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சுண்டக்காய் வற்றல் குழம்பு என்றால் அந்த சுவையே தனி... உங்கள் முறைப்படி செய்து பார்ப்போம்... நன்றி...

    ReplyDelete
  3. சுண்டைக்காயை தனியாக எடுத்து வைத்து விடுவார்கள் என்பதால் நல்லெண்ணை விட்டு நன்றாக கறுப்பாகும் வரை வறுத்து மிக்ஸியில் அரைத்து குழம்பு வைப்போம்.. கறுப்பு கலரில் குழம்பு இருப்பதால் இதற்கு லேகியக்குழம்பு என்று பிள்ளைகள் பெயர் சூட்டிவிட்டார்கள்..

    சுண்டைக்காய் நன்றாக கறுப்பாகும் வரை கைவிடாமல் வறுத்து அரைக்கவேண்டும் .. இல்லாவிட்டால் குழம்பு கசக்கும் .. நன்கு எண்ணை பிரியும் வரை குழம்பு கொதிக்கவைத்து சேமித்தால் ஒருவாரம் வரை கெடாமல் இருப்பதோடு அடுத்தநாள் தான் மிகவும் சுவையும் மணமும் அருமையாக இருக்கும்..

    ReplyDelete
  4. எங்களுக்கும் பிடிக்கும்! கடைகளில் இவற்றைப் புளிப்பாக வைத்துவிடுவது ஒரு கொடுமை!

    ReplyDelete
  5. மிகவும் பிடித்த குழம்பு… ஆனால் சரியான செய்முறை இன்னமும் கிடைக்கவில்லை…

    ReplyDelete
  6. சாம்பார் ருசியெல்லாம் இந்த வத்தக்குழம்புக்கு முன்னாடி ஒண்ணுமே இல்லை. அதுவும் என் அம்மம்மா கற்சட்டியில் செய்வார். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. சுவையான வத்தக்குழம்பை சுடச்சுட பறிமாறியதற்கு நன்றி!

    ReplyDelete
  8. வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும் சூப்பர் காம்பினேஷன்! ஸ்ரீரங்கத்திலிருந்து இன்னொரு சமையல் நிபுணர்(நிபுணி!)

    ReplyDelete
  9. இவ்வளவு சிம்ப்ளானதுதானா வத்தக்குழம்பு!? நாளைக்கே செஞ்சு அசத்திட வேண்டியதுதான்

    ReplyDelete
  10. வற்றல் குழம்பு நிபுணி கோவை அரசியே வணக்கம் . செய்முறை விளக்கம் நன்று. மேலும் பல சமையல் நிபுணர்கள்/நிபுணிகள் உருவாகட்டும். முக்கியமாக தாளிக்கும் போது வெந்தயம் சிறிது சேர்த்தால் குளுமை. மேலும் தக்காளி பழம், சிறிது வெல்லமும் சேர்க்கலாம்.கொதிவந்து இறக்கும் போது அரிசி . மாவுக்கு பதில் சிறிது கடலை மாவு சேர்த்தால் ருசி கூடும், தயிர் சாதத்திற்கு வத்தகொழம்பு தொட்டுக் கொண்டால் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

    ReplyDelete
  11. ஈசி வத்தகுழம்பு ஜோர்.

    ReplyDelete

  12. தங்க மங்கை அவர்களே,

    தற்போது ஆரஞ்சு பழ சீசன் என்பதால் இந்த பழங்களின் தோலை சிறிது சிறிதாக நறுக்கி, வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு வதக்கிக்கொண்டு வெங்காயம், முருங்கக்காய், சுண்டக்காய் இவற்றிற்கு பதிலாக இதை வற்றல் குழம்பு செய்ய பயன் படுத்தலாம்

    ReplyDelete
  13. சொல்லும் போதே எண்ணம் எங்கெங்கோ போகிறது .வத்தக் குழம்பு
    சிக்கனமாக செய்தாலும் அதன் சுவையே தனி .எனக்கு பிடித்த
    குழம்பின் செய் முறை விளக்கத்துக்கு மிக்க நன்றி தோழி .

    ReplyDelete
  14. வத்தக் குழம்பு பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டுகிறது. அதை விடவும் நீங்கள் கொடுத்துள்ள குறிப்புகள் அசத்தல். வாழ்த்துக்கள்.... தொடருங்கள்.....

    ReplyDelete
  15. சுண்டைக்காய் வற்றல் குழம்பு அருமையாக ருசியாக இருக்கும். எனக்கு மிகவும் பிடிக்கும். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  16. வத்தக்குழம்பு அடிக்கடி செய்வோம்...
    அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  17. பகிர்வுக்கு நன்றி ஆதி!! நானும் இதே முறையில் தான் செய்வேன்!

    ReplyDelete
  18. ரொம்பக் கரெக்ட் ஆதி மேடம்! நிலக்கடலையை போட்டு எங்கம்மா செய்யற வத்தக்குழம்புக்கு ஈடிணை கிடையாதன்றது என் கருத்து. உங்க ஸ்டைல் ஆஃப் மேக்கிங்கும் சூப்பரு!

    ReplyDelete
  19. உங்கள் முரையிலும் ஒரு நாள் சமைக்க வேண்டும் ஆதி.

    ReplyDelete
  20. அசத்தல் குழம்பு..

    கத்தரிக்காய் முருங்கைக்காய், கொத்தவரங்காய் கூட்டணியிலும் செய்யலாம்.


    ReplyDelete
  21. எனக்கு மிகவும் பிடித்த ஒன்று!

    ReplyDelete
  22. பார்க்கும் போதே நீர் ஊறுது!
    என் கலிக் பூர்ணா மாமி செய்துட்டு வருவாங்க.
    செம ஜோரா இருக்கும்.
    இனி நாமளும் செய்திட வேண்டியது தான் .
    நன்றி ஆதி சிஸ்டர்

    ReplyDelete
  23. ஆகா... பாத்துக்கினதுக்கே சோக்கா கீதே... இன்னும்... துன்னு பாத்துகினா...?
    ஒரு டவுட்டுமே... வத்தக் கொயம்புல வெந்தயம் போடுமா... போடாதா...?

    ReplyDelete
  24. வத்தக்குழம்பை ரசித்து, ருசித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…