Thursday, February 27, 2014

சட்டுபுட்டு மிக்சர்!!!தீபாவளி சமயத்தில் மிக்சர் செய்ய வாங்கியிருந்த வறுக்காத கார்ன்ப்ளேக்ஸ், அப்போ செஞ்சது போக கொஞ்சம் பாக்கி இருந்தது. ரொம்ப நாளா அதை எடுக்கறதும், நேரம் இல்லாம வைக்கிறதுமா இருந்தேன். சென்ற வாரத்தில் மாலை வேளையில் ரோஷ்ணி பள்ளியிலிருந்து வரும் சமயம், அதை வறுத்து போட்டு கொஞ்சம் காரசாரமா மிக்சர் செய்து கொடுத்தேன். கார்ன்ப்ளேக்ஸ் மட்டும் போட்டா மிக்சர் வந்துடுமா? வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்:-

வறுக்காத கார்ன்ப்ளேக்ஸ் – 1 கப்
வறுத்த வேர்க்கடலை – அரை கப்
பொட்டுக்கடலை – அரை கப்
அவல் – 1 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய்த்தூள் – ½  தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

விருப்பப்பட்டால் – பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை போன்ற உலர்பழங்களை சேர்த்துக் கொள்ளலாம்.செய்முறை:-

முதலில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை போன்றவற்றை வெறும் வாணலியில் கொஞ்சம் வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலையின் தோலை நீக்கிக் கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் கார்ன்ப்ளேக்ஸ், அவல் போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுக்கவும். கறிவேப்பிலையையும் பொரித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் அல்லது தாம்பாளத்தில் வறுத்த கார்ன்ப்ளேக்ஸ், அவல், கறிவேப்பிலை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பாதாம், பிஸ்தா, திராட்சை போன்ற உலர் பழங்கள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை போடவும். சின்ன வாணலியில் அல்லது தாளிக்கும் கரண்டியில், இரண்டு தேக்கரண்டியளவு எண்ணெய் வைத்து சூடானதும், பெருங்காயத்தூள் சேர்க்கவும். பொரிந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மிளகாய்த்தூள் சேர்த்து உடனே தாம்பாளத்தில் உள்ள மிக்சரில் கொட்டி நன்றாக கலந்து விடவும். நன்கு ஆறியவுடன் காற்று புகா டப்பாவில், அல்லது பாட்டிலில் போட்டு வைத்து பயன்படுத்தவும்.

இந்த மிக்சரை அரை மணி நேரத்திற்குள்ளாகவே செய்து முடித்து விடலாம். நம் கையால் செய்ததால் சுகாதாரமாகவும் இருக்கும். செலவும் ஜாஸ்தி ஆகாது. தேவைப்பட்டால் இதனுடன் பூந்தி, ஓமப்பொடி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு ஏன் நமக்கே மாலை வேளையில் காபி, டீயுடன் இந்த காரசாரமான மிக்சர் ஏற்ற ஜோடியாக இருக்கும். உங்கள் வீட்டிலும் செய்து பார்ப்பீர்கள் தானே….:)பின் குறிப்பு:-

கார்ன்ப்ளேக்ஸ், அவல் போன்றவற்றை ஸ்டீல் வடிகட்டி பெரிய அளவில் உள்ளதில் போட்டு எண்ணெய்க்குள் வைத்தால் பொரிந்து விடும். எடுக்கவும் எளிது.

அளவு உங்கள் விருப்பம் தான். எவ்வளவு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

Tuesday, February 25, 2014

அருவருப்பா இருக்கு!!!அம்மா! கத்திரிக்கா, வெண்டக்கா, பாகக்கா எல்லாம் கொண்டு வந்துருக்கேன்…. காய் காய்…..வாங்கலையாம்மா….

அருகிலுள்ள கிராமத்திலிருந்து சைக்கிளில் காய்கறிகளை கொண்டு வந்து குடியிருப்புகளில் விற்பனை செய்கிறவர்.

சில நாட்களாக குடியிருப்பின் உள்ளே செல்ல வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் வாயில் அருகிலேயே நின்று கொண்டு கூவிக் கொண்டிருந்தார். அம்மா! காய் காய்….

மகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்ப வந்த பவானி. கையோடு குடத்தையும் கொண்டு வந்திருந்தாள் கீழே..

அம்மா! பாகக்கா, கத்திரிக்கா………

இருக்குப்பா! நேத்து தான் சந்தையிலிருந்து வாங்கிட்டு வந்தேன்

வீட்டுக்குள்ளேயே குடிநீர் குழாய் மூலம் வந்தாலும் ஏனோ அதிலுள்ள உப்பின் அளவு கூடுதலாக இருப்பதால், வயிற்றுக்கு ஒத்துக் கொள்வதில்லை…:((

குடியிருப்பிலேயே மாநகராட்சியின் குடிதண்ணீர் குழாய்கள் நான்கு உள்ளன. சுத்திரிக்கப்பட்ட நீராதலால் ஒரு சிலர் அதில் அன்றாடம் சமையலுக்கும், குடிநீருக்காகவும் பிடித்து செல்வதுண்டு. பலர் வீட்டில் ஆரோ சிஸ்டம் வைத்திருக்க, ஒரு சிலர் குடிநீர் கேன்கள் வாங்கிக் கொள்ள, இப்படி பவானி மாதிரி சிலர் இந்தக் குழாய்களில் பிடித்து செல்வதுண்டு.

குடத்தை கழுவி விட்டு தண்ணீரை பிடித்து அங்குள்ள திட்டில் வைத்து விட்டு ஆட்டோவுக்காக காத்திருக்கையில்…….

ஐய்யோ! ஐய்யோ! என்னய்யா இப்படி பண்ணிட்ட! இதில எப்படி நாங்க தண்ணீ பிடிக்கிறது! எச்ச பண்ணி குடிக்கிற! அந்த தண்ணியெல்லாம் இந்த குடத்துல எல்லாம் தெளிக்குது! வேற வழியில்லாம தான் நான் இங்க பிடிக்கிறேன்! அருவருப்பா இருக்கு! இதுக்கு தான் இங்க உள்ளே செல்ல தடை போட்டிருக்காங்க. வந்தோமா! வியாபாரத்த பாத்தோமான்னு இல்லாம இப்படி பண்ணிட்டயே! உனக்கு வேணும்னா எங்கிட்ட கேட்டா நான் கொடுத்திருப்பேன்ல! என்று ஒரு பெண்மணி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண..

பவானி என்ன நடக்கிறதென்று புரியாமல் முழித்துக் கொண்டிருக்க அந்த காய்கறிக்காரர், வாடிய முகத்துடன் தண்ணி தானம்மா குடிச்சேன். அது தப்பா? என்று இவளிடம் புலம்பியபடியே வெளியேறினார்.

மகளை அனுப்பி விட்டு தன்னுடைய குடத்தை எடுக்கச் சென்ற போது அங்கிருந்த இன்னொரு பெண்மணியிடம்என்னங்க நடக்குது! எந்த காலத்துல இருக்கோம்! வாய வெச்சா அவர் குடிச்சார் எனக் கேட்க, இல்லங்க! கைய ஏந்தி தான் குடிச்சார்.. அதுக்கே அந்தம்மா கத்தறாங்க எனச் சொல்லசொல்லா இயலா கோபத்துடன் குடத்தை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள். நேற்றைய ஒரு நிகழ்வினை நினைத்த படியே….சாலையில் வந்து கொண்டிருக்கையில் மாடு ஒன்று குழாய் திறந்திருந்த நிலையில் கீழே விழும் நீரை நாக்கால் குடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. இதை பார்த்ததும் அடடா! இப்படி குடிச்சா எப்படி அதன் தாகம் அடங்கும்வாயை பைப்பில் வைத்து குடிக்கக் கூடாதோ! என்று நினைத்தபடியே வந்து கொண்டிருந்த பவானிக்கு இன்றைய நிகழ்வின் மூலம்….

இப்படிப்பட்ட மனிதர்களால் தான் மாடு கூட பயந்து கீழே விழும் நீரால் நாக்கை ஈரப்படுத்திக் கொண்டிருந்ததோ என்று தோன்றியது. அல்லது அது நம் மீது அருவருப்பு பட்டுத் தான் தள்ளி நின்று குடித்ததோ என்று மனதுள் நினைத்துக் கொண்டிருந்தாள்.

சில நேரங்களில் தப்பைக் கண்டு தட்டிக் கேட்க மனது துடித்தாலும், வாயை மூடிக் கொண்டு தான் இருக்க வேண்டியுள்ளது. இந்த சம்பவத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டாள்.

பட உதவி - கூகிள்

நட்புடன்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.