Thursday, January 30, 2014

அரங்கமா நகருளானே.... (வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் – 3)

பகல்பத்துக்கும், ராப்பத்துக்கும் இடைப்பட்ட நாள் தான் வைகுண்ட ஏகாதசி என அழைக்கப்படுகிறது.. பெருமாள் அர்ஜுன மண்டப வழியாக நுழைந்து பரமபத வாசல் வழியாக, அரிய ரத்னங்களை கொண்ட அங்கியை அணிந்து கொண்டு அதிகாலையில் காட்சி தருவார்…. ஆகவே அன்று சொர்க்க வாசல் படி மிதித்தல் என்பது வைபவமாக கொண்டாடப்படுகிறது

ஸ்ரீரங்கமே கோலாகலமாக காணப்பட்டது.. ஏறக்குறைய ஒரு மாதகாலமாகவே தட்டிகள் கட்டி வரிசையில் மக்களை அனுப்புவதற்கும், அவர்களுக்கான குடிநீர் வசதி, பாதுகாப்பு, உறைவிடங்கள் போன்றவற்றை திருச்சி மாநகராட்சியும், காவல்துறையினரும் ஏற்பாடு செய்து கொண்டு வந்தனர்இன்று அந்த நாளே வந்துவிட்டது


சொர்க்க வாசல் படி மிதிக்க தெற்கு வாசலில் மட்டும் தான் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும், மற்ற வாசல்களில் அனுமதி கிடையாது என்றும் சொல்லவேகாலை 7 மணிக்கெல்லாம் மேற்கு உத்திர வீதியில் சென்று கொண்டிருந்த வரிசையில் நிற்கத் துவங்கினோம்இங்கேயே நான்கு வரிசைகள்எங்கு செல்கிறது..என்று தெரியவில்லைஅப்படியே நகர்ந்து கொண்டே சென்றோம்

அந்த காலை நேரத்தில் ஒருபுறம் சூடான இட்லிகள், சாம்பாருடன் ஃபாயில் டப்பாக்களில் எல்லோருக்கும் விநியோகித்து கொண்டிருந்தனர்… அதை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே வரிசையில் நின்றவர்களும், இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு பிடிக்காமல் போனதால் தூக்கி சாலையில் வீசி எறிந்தவர்களும், என எங்கும் இட்லி மயமாக இருந்தது…. நமக்கு தான் குப்பை போட மிகவும் பிடிக்குமே…. கேட்கணுமா!

ஒரு குடும்பத்தில் இருந்து வருபவர்கள், முதலில் ஒரு பொட்டலம் வாங்கி சாப்பிட்டு பார்த்து விட்டு பிறகு எல்லோருக்கும் வாங்கியிருக்கலாம்…. ஆனால் யார் அதெல்லாம் யோசிக்கிறாங்க! வீணாக தூக்கி போட்ட உணவு வேறு ஒருவருக்கு தேவையாக இருந்திருக்கலாம்…. அவர்களாவது சாப்பிட்டிருப்பார்கள்….:(

ஒலிப்பெருக்கியில் வயதான ஆந்திர பெண்மணி யாரோ வழி தெரியாமல் கூட்டத்திலிருந்து காணாமல் போய் காவல் துறையினரிடம் உதவி கேட்க அவர்கள் அறிவித்து விட்டு அந்த பாட்டியை விட்டே பேச சொல்லிக் கொண்டிருந்தனர். இப்படிப் பலர்…


மறுபுறம் காவல் துறையினர் பொதுமக்களுக்கு திருடர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்கும் படி அறிவிப்புகள் அங்கங்கே வெளியிட்டிருந்தனர்… நகைகளை அணிந்து கொண்டு வர வேண்டாம், காமிராக்கள் அனுமதியில்லை, தாலிச் சரடை ப்ளவுஸ் ஹூக்கில் பொருத்தி வரவும் போன்ற பல எச்சரிக்கைகள்…. இதெல்லாம் பார்த்தும் கழுத்து நிறைய நெக்லஸ், ஹாரம் அணிந்து வந்தவர்கள் ஒருபுறம் என ஸ்ரீரங்கமே களைகட்டியிருந்தது…

வரிசையும் நகர்ந்து கொண்டே வந்தது…. அடுத்து கல்யாண மண்டபம் ஒன்றின் வாசலில் சர்க்கரைப் பொங்கல் தந்து கொண்டிருந்தார்கள்.. நாங்களும் வரிசையில் இப்போது ஒன்றரை மணி நேரங்களை செலவழித்திருந்தோம்… இன்னும் கோவில் உள்ளேயே நுழையலை….:) நடுவில் சிலர் நுழையப் பார்க்க, எங்களுடன் நின்றிருந்தவர்கள் எல்லோரும் கொந்தளிக்க, காவல் துறையினர் வந்து கண்டித்தும், அவர்கள் காதிலேயே வாங்காது நுழைந்து செல்கின்றனர்…. சிரமமே படக்கூடாது போல இவர்களுக்கு……:(

”ரங்கா ரங்கா” கோபுரத்தின் உள்ளே நுழைவதற்கு முன் ஒரு இடத்தில் சின்ன அளவில் பூஜையில் வைத்து வணங்குவதற்காக இராமர் ஜாதகம் எல்லோருக்கும் வழங்கப்பட்டது…. வாங்கி கைப்பையில் வைத்துக் கொண்டேன்… அடுத்து சின்னச் சின்ன பாக்கெட்டுகளில் இனிப்பு பூந்தி எல்லோருக்கும் தரப்பட்டது… இதை மட்டும் வாங்கி நானும் ரோஷ்ணியும் சாப்பிட்டோம்… வாங்க! எல்லோரும் தெற்கு கோபுரத்தின் உள்ளே நுழையப் போகிறோம்…

இங்கேயும் வரிசைகளில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டேயிருந்தோம்… கீதா ப்ரஸ் கோரக்பூர் வழங்கும் பகவத்கீதை விளக்கங்களுடன், அவரவர்கள் மொழியை கேட்டு எல்லோருக்கும் வழங்கப்பட்டது… தொடர்ந்து சென்று கொண்டேயிருந்தோம்.. பெருமாள் சன்னிதி உள்ளே செல்வதற்கு முன் கருடமண்டபத்தில் ஒரு இடத்தில் வரிசைகள் நீக்கப்பட்டு எல்லோரும் சேர்ந்து நசுக்க ஒருவழியாகி விட்டோம்… எல்லோருக்கும் அவசரம்… உடனே பெருமாளை பார்க்கணும், சொர்க்க வாசல் படி மிதிக்கணும்… ஐந்து நிமிடம் கூட தாமதிக்கக்கூடாதாம்…:))

அடுத்து பெருமாள் சன்னிதி உள்ளே அனுமதி…. இதுவரை முத்தங்கி சேவை பார்க்க வந்தவர்கள், ரத்னாங்கி சேவை பார்க்க வந்தவர்கள், சொர்க்க வாசல் படிமிதிக்க வந்தவர்கள் என ஒரே வரிசையில் தான் வந்து கொண்டிருந்தோம்… இனி அவரவர்கள் எங்கு செல்ல வேண்டுமோ பிரிந்து செல்லலாம்… ஓட்டம் தான்….:)) ஒருவழியாக தங்க பல்லி, வெள்ளி பல்லி எல்லாம் பார்த்து இதோ…. மூன்றரை மணி நேரங்களுக்கு பிறகு சொர்க்க வாசல்படி மிதித்து விட்டேன்… ரங்கநாதா எல்லோரையும் நீதான் காக்கணும்….:)


இரண்டு மூன்று மாதங்களாக குதிகால் வலி வந்து நடக்கவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன்… இன்று சொர்க்க வாசல் படி மிதிக்க காலை குமிழ் குமிழாக இருந்த பித்தளைத் தகடு அடித்த படியில் வைத்து அழுத்த….. உயிரே போனாப் போல ஆயிடுத்து….:( அதனால் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறேன்…:)

நாளை ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை ரத்னாங்கி சேவையில் தரிசிக்கலாமா….:)

படங்கள் உதவி - கூகிள்

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

Wednesday, January 29, 2014

ரங்கா! ரங்கா! (வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் – 2)வைகுண்ட ஏகாதசியன்று வெளியிட்ட ”மாலே மணிவண்ணா” பதிவில் (மன்னிக்கவும்! சற்றே இடைவேளை ஆகி விட்டது) நாளை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு முத்தங்கி சேவையைப் பார்க்கப் போகலாம் என்று முடிவு பண்ணியிருந்தோம் இல்லையா? அதே மாதிரி சரியாக 10 மணிக்கெல்லாம் தயாராகி கோவிலுக்கு சென்றோம்.. நேற்று இருந்ததை விட கும்பல் இன்னும் கூடுதலாகத் தான் இருந்ததுஇன்று விட்டாலும் பொங்கல் விடுமுறை வேறு வருகிறதேஅப்போது பார்ப்பது கடினம்.. ஆதலால் எப்படியாவது பார்த்து விட வேண்டும்..என்று தர்மசேவை வரிசையில் நிற்கத் துவங்கினோம்..


கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினரும், தன்னார்வ தொண்டர்களும் அங்கங்கே காணப்பட்டனர்சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தன்னார்வ தொண்டு புரியும் பெண்மணிகள் வாளிகளில் எடுத்து வந்து வரிசையில் நிற்பவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தனர்..

எங்களுக்கு முன்னே ஒரு வட இந்திய குடும்பம் நின்று கொண்டு காவல்துறையினரிடம் எத்தனை நேரம் ஆகும் என்று இந்தியில் கேட்டுக் கொண்டிருந்தனர்.. அவர்களும் புரிந்தும், புரியாமலும் என்ன பதில் சொல்வதென்று முழித்துக் கொண்டிருக்கவே, எங்கிருந்து வருகிறீர்கள் என இந்தியில் கேட்கஉடனே சந்தோஷத்துடன் பாபீஜி! நாங்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தோரிலிருந்து வந்திருக்கிறோம் என்று சொன்னார்கள்

எங்கள் வரிசையும் கொஞ்சமாக கொஞ்சமாக நகரத் துவங்கவே, அப்படியே நாங்களும் அவ்வப்போது பேசிக் கொண்டும் வந்தோம்அவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு இங்கே வந்திருக்கிறார்களாம்இன்று இரவு இங்கேயிருந்து திருப்பதிக்கு செல்வதாகவும் தெரிவித்து தன் குடும்பத்தினரை அறிமுகப்படுத்தி வைத்தார்ரங்கநாதர் கோவிலின் சிறப்புகளையும், ஏன் கும்பலாக  இருக்கிறது எனவும் பலவாறு கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்தனர்

இந்தோரில் பிரசித்தி பெற்ற பாலாஜி கோவில் இருப்பதாகவும் அங்கு வரும்படியும் அழைப்பு விடுத்தார்… வரிசையில் நின்று கொண்டிருந்த சபரிமலை பக்தர்களை காண்பித்து இவர்கள் ஏன் இந்த நிற உடை அணிந்திருக்கிறார்கள்? எங்கு செல்கிறார்கள்? எப்போதுமே இங்கு இப்படித் தான் கும்பல் இருக்குமா? என்று பலக் கேள்விகள்… தெரிந்தவரை அவர்களுக்கு விளக்கம் கொடுத்தேன்…

அவர்கள் மிகச்சிறப்பான சமயத்தில் தான் இங்கு வந்திருப்பதாகவும்… விசேஷமான நாட்கள் தான் வைகுண்ட ஏகாதசியின் பகல்பத்தும், ராப்பத்தும் எனச் சொன்னேன்…. மிகவும் சந்தோஷமடைந்தார்கள்… நீங்கள் தினமும் வந்து பெருமாளை தரிசிப்பீர்களா? எனக் கேட்டனர்… பெருமாளை தரிசிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல…என்றேன்….:)

ஏறக்குறைய ஒரு மணிநேரம் கழித்து உட்கார கொஞ்சம் இடம் கிடைத்தது… 50 ரூபாய் கட்டண வரிசையை சிறிது நேரம் அனுமதித்து, அடுத்து எங்களை அனுமதித்து என ரங்கநாதரின் உள் சன்னிதி வரை நின்று நின்று தான் சென்றோம்…. உள் சன்னிதியில் நகர்ந்து கொண்டே சென்று கொண்டிருந்தோம்இங்கே காவல் துறையினர் விரட்டிக் கொண்டேயிருந்தனர்.. வட இந்திய குடும்பம் உணர்ச்சி வசப்பட்டு கோவிந்தா கோவிந்தா என்று சத்தமாக சொல்லிக் கொண்டும், மந்திரங்களை சொல்லியும் ஒருவழியாக இதோ ரங்கனை காணப் போகிறேன்


அவசரப்படுத்தும் காவலர்களும், கோயில் பணியாளர்களுக்கும் மத்தியில் அவசரமாக திருவடியை முதலில் தரிசனம் செய்து கொண்டு, அடுத்து முகத்தை பார்ப்பதற்குள், பிடித்து வெளியே தள்ளி விடுகிறார்கள்இரண்டு மணி நேரம் நின்று காத்துக் கொண்டிருந்த நாங்கள் இரண்டு நிமிடங்கள் கூட முத்தங்கி சேவையை பார்க்கவில்லை என்று தான் சொல்லணும்…:)

வெளியே வந்து தங்க கோபுரத்தை தரிசனம் செய்து விட்டு, அப்படியே அன்று பகல்பத்து உற்சவத்தின் 9ம் நாள் ஆகையால் கிளி மண்டபத்தில் இருந்த உற்சவரையும் வரிசையில் நின்று தரிசனம் செய்து விட்டு, அப்போது நடந்து கொண்டிருந்த அரையர் சேவையையும் பார்த்து விட்டு வெளியே வந்தோம்…

இரண்டு மணிநேரங்கள் வரிசையில் நின்று இரண்டு நிமிடங்களுக்குள் பெருமாளை முத்தங்கி சேவையில் பார்த்து விட்டு வந்தோம்… முத்தங்கி சேவையை காண வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறியது…


அடுத்து வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல்படி மிதித்தேனா? அடுத்த பகிர்வில்… நாளையே வெளியிட்டு விடுகிறேன்…..:)

படங்கள் உதவி - கூகிள்

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்…