Monday, December 9, 2013

மேரக்கா கூட்டு!


என்னடா இது! கூட்டு என்பது புரிகிறது… இது என்ன! மேரக்கா!!! என்கிறீர்களா? இது கொங்கு நாடாம் கோவையில் விற்கப்படும் ஒரு காய்….:) இருங்க…இருங்க….உங்க ஊரிலும் அந்த காய் கண்டிப்பாய் கிடைக்கும்…:) ஆனா எங்க ஊரில் அதற்கு சொல்லப்படும் பெயர் தான் புதிதாக உள்ளது….:) என்ன! ஒரே குழப்பமா இருக்கா? செளசெள என்பது தான் மேரக்காய் என்று கோவையில் சொல்லப்படும்… சில இடங்களில் பெங்களூர் கத்திரிக்காய் என்றும் அழைக்கப்படும்…

கூட்டுடன் சாதம் என்பது ஒரு முழுமையான உணவு என்று தான் நான் சொல்வேன்.. காய், பருப்பு, தேங்காய், உப்பு, காரம் என்று எல்லாம் கலந்த கலவையல்லவா கூட்டு.. எண்ணெய் குறைவாக உபயோகிப்பதால் உடலுக்கும் தீங்கு விளைவிக்காதது…செய்வதற்கும் எளிது… கூட்டிற்கு பல காய்கள் பயன்படுத்தப் படுகின்றன… பூசணி, புடலங்காய், பீர்க்கங்காய், கொத்தவரங்காய், அவரைக்காய், கோஸ், கீரைத்தண்டு, வெள்ளரிக்காய், கத்திரிக்காய், கீரைகள் போன்றவை... இரண்டு காய்களை சேர்த்தும் கூட்டுகள் செய்வதுண்டு…

ஆயுர்வேத மருந்துகள் போன்றவற்றை சாப்பிடுபவர்கள், புளி சேர்க்கக்கூடாது என்று அறிவுறுத்தப் படுவார்கள்… அவர்கள் இது போல் கூட்டு செய்து சாப்பிடலாம்… நான் இப்படித் தான் சில நாட்களாக சாப்பிட்டு வந்தேன்…:) மதிய உணவுக்கு செய்யப்படும் கூட்டு இரவு சப்பாத்திக்கும் தோதாக அமைந்து விடும்…..:))

செளசெள கூட்டு என்றாலே தில்லியில் எங்கள் எதிர்வீட்டில் இருந்த பெண் தான் எனக்கு நினைவுக்கு வருவாள்… சமைப்பதை காட்டிலும் சாப்பிடுவதில் தான் அவளுக்கு கொள்ளை ஆசை….:)) செளசெளவுடன் கேரட் சேர்த்து செய்யப்படும் கூட்டை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட்டால்…. அடடடா! என்று அவள் சொல்வதே அசத்தலாக இருக்கும்….:))))

மேரக்காயில் கூட்டு செய்வது பற்றி இன்று பார்க்கலாமா? வாங்க….தேவையான பொருட்கள்:-

செளசெள – 1
பயத்தம்பருப்பு – 1 கைப்பிடியளவு
தேங்காய்த்துருவல் – 3 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க:-

தனியா – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ½  தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – ½ தேக்கரண்டி
வரமிளகாய் – 2 (அ) 3
பெருங்காயம் – சிறிதளவு
சீரகம் – ¼ தேக்கரண்டி
மிளகு – ¼ தேக்கரண்டி
எண்ணெய் – சிறிதளவு

தாளிக்க:-

கடுகு – ¼ தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ½ தேக்கரண்டி (விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.. இல்லையென்றால் உளுத்தம்பருப்பு மட்டும்..)
உளுத்தம்பருப்பு – ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:-

செளசெளவை தோல் சீவி சிறு சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்..குக்கரில் சாதம் வைக்கும் போதோ அல்லது தனியாகவோ பயத்தம்பருப்புடன் செளசெள துண்டங்களை சேர்த்து மஞ்சள்தூள் போட்டு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்..

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மேலே வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்முறுவலாக வறுத்து எடுத்து ஆறியவுடன் தேங்காய்த்துருவலுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்..

வாணலியில் வேகவைத்த செளசெளவுடன், அரைத்த விழுதையும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்…

தாளிக்க – சிறிதளவு எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து, கொதித்து இறக்கிய கூட்டில் கொட்டவும்…

சுவையான செளசெள சாரி மேரக்கா கூட்டு தயார்…. சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.. அப்பளம், வடாம், சிப்ஸ் இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்… இந்த கூட்டை சப்பாத்திக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்…

என்ன! உங்க வீட்டிலும் செய்து பார்ப்பீர்கள் தானே…


பின் குறிப்புகள்:-

   1) வறுத்து அரைக்காமல் தேங்காய்த்துருவலுடன் வரமிளகாய் அல்லது பச்சை மிளகாய் கொஞ்சம் சீரகம் சேர்த்து அரைத்தும் கூட்டு செய்யலாம்…

 2) காய் வேகவைக்கும் போது வேர்க்கடலை, கொண்டக்கடலை போன்றவற்றை சேர்த்தும் செய்யலாம் (உதாரணம் – முட்டைக்கோஸுடன் கேரட், பூசணி, கொத்தவரங்காய்)

  3) தாளித்து கொட்டும் போது கருவடகம் போன்றவற்றை தாளித்தும் கொட்டுவார்கள்… (உதாரணம் – கீரைக்கூட்டு)
     
  4) காய்களின் தோலில் துவையல் அரைக்கலாம்… அவை இன்னொரு பகிர்வில்…


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்..


29 comments:

 1. முந்தாநாள் தான் சப்பாத்திக்கு செளசெள போட்டு வெள்ளைக் குருமா செய்தேன். இங்கே மாமாவுக்கு அவ்வளவாப் பிடிக்காத காய். அதனால் எப்போவானும் தான் செளசெள,குடமிளகாய் எல்லாம்.:)))) கர்நாடகாவில் செளசெள பாத் பிரபலம். காலங்கார்த்தாலே ஹோட்டல்களில் செளசெள பாத் சுடச் சுடக் கிடைக்கும். அதற்கு அங்கே ரசிகர்களும் நிறைய! :))))

  ReplyDelete
  Replies
  1. செளசெள பாத்தா!!

   தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா மாமி....

   Delete
 2. புதிதாக கேள்விப்படுகிறேனே.பெயரைப்பார்த்ததும் வெளிநாட்டு ரெஸிப்பியோ என்று நினைத்து விட்டேன்.வித்தியாசாமான பெயரும் அருமையான ரெஸிப்பியும்..

  ReplyDelete
  Replies
  1. ஆஹா! வெளிநாடா! உள்நாட்டிலேயே செய்து பார்க்க வேண்டியது ஏகப்பட்டது இருக்கே....:))

   தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸாதிகா மேடம்..

   Delete
 3. ருசியான சத்தான கூட்டு .

  பெங்களூரில் மரங்களில் படர்ந்த கொடியில் சௌ சௌ காய்கள் காய்த்துக் குலுங்கின ..
  பார்க்கவே அழகாக இருந்தது ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...

   Delete
 4. //கர்நாடகாவில் செளசெள பாத் பிரபலம். //
  அங்கே கடைகளில் சௌசௌபாத் கேட்டால், தட்டில் பாதி கிச்சடியும், பாதி கேசரியும் தருவார்கள். இதற்கும் சௌசௌக் காய்க்கும் சம்பந்தம் இருப்பதாகத் தோன்றவில்லை.

  நானும் மெராக்கோ நாட்டு சமையல் என்று தவறாகப்புரிந்துகொண்டு படிக்கவந்தேன். புதிய தமிழ் சொல் கற்றுக்கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி குலவுசனப்பிரியன்...

   Delete
 5. ஏதோ ஒரு புதிய காய் என நினைத்தேன்...சௌசௌ கூட்டு ரொம்ப நல்லாயிருக்கு!!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி மேனகா...

   Delete
 6. சுவையான சமையற் குறிப்பு இதற்கு என் மனமார்ந்த பாராட்டுகளும்
  வாழ்த்துக்களும் தோழி .
  http://rupika-rupika.blogspot.com/2013/12/blog-post_8.html

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்...

   Delete
 7. Chav...chav kku innoru pudhu perai therindhukonden.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி...

   Delete
 8. உடம்பிற்கு மிகவும் உதவும் சத்தான கூட்டு... செய்முறைக்கு நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்...

   Delete
 9. அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

  [எனக்கு ஏனோ இந்தக் காயைப் பார்த்தாலே பிடிப்பது இல்லை. அதனால் அவியல் என்பதை நான் எங்குமே உண்பதும் இல்லை. கல்யாணங்களுக்கு எங்காவது சென்றால் கூட்டு பூசணிக்காயா அல்லது செளசெள வா எனக்கேட்ட பிறகே அதைத்தொடுவது வழக்கம்]

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்...

   Delete
 10. மேரக்கா கொஞ்சம் யோசனைப் பண்ணினாலும் புரியவில்லை. மேரா அக்காவா. ஓ சீமை கத்தரிக்காய். சௌசௌ.பெங்களூர் கத்தரிக்காய். இந்தக்கொடி ஒரு வறுஷம் நட்டு விட்டால்,ஓய்ந்து,துளிர்த்து என 3 வருஸங்கள் காய்க்கும். பறித்து மாளாது.நேபாலியில் இதற்குப் பெயர் இஸ்கூல். ஸ்ம்பார்,மோர்க்கூட்டு,பஜ்ஜி,என எல்லா விதத்திலும் உபயோகிக்கலாம். அவியல்
  தொகையல் அருமையாயிருக்கும். உன்குறிப்பும் பிரமாதம்.மேரக்கா கூட்டு. ஸந்தோஷம் ஆதி அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. கொங்கு தமிழில் ஒரு சில காய்களுக்கு வேறு பெயர்கள் உண்டு...:)) இதை வைத்தே என்னவர் பலமுறை என்னை கிண்டல் செய்ததுண்டு....:))

   தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....

   Delete
  2. நேபாளியில் இஸ்கூலா!!!! நல்லா இருக்கே...:)))

   Delete
 11. கூட்டு ரொம்ப நல்லாருக்குது. இங்கே கண்ணுலயே தட்டுப்பட மாட்டேங்குது. என்னிக்காவது தட்டுப்பட்டா பாய்ஞ்சு ஒண்ணுக்கு நாலா அள்ளிட்டு வர்றது வழக்கம்.

  ReplyDelete
  Replies
  1. டெல்லியிலும் அப்படித் தான்... எப்போதாவது தான் கிடைக்கும்....

   தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க அமைதிச்சாரல்...

   Delete
 12. வித்தியாசமான சௌ சௌ கூட்டு..
  ஆஹா... இந்த வாரம் சப்பாத்திக்கு செய்து பார்த்திட வேண்டியதுதான்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்...

   Delete
 13. வழக்கமான கூட்டு தான் என்றலும் புகைப்படம் மிக வித்தியாசமாக, அழகாக‌ காண்பிக்கிறது! செளசெளவிற்கு இப்படியும் ஒரு பெயர் இருப்பதை அறிவித்திருப்பதற்கு நன்றி ஆதி?!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோம்மா...

   Delete
 14. பெயரை பார்த்ததும் ஏதொ டெல்லி ஷ்பெசல் என்றே நினைத்தேன்.கூட்டு செய்முறை மிகவும் எளிதாக இருக்கிறது..அடுத்த தடவை இப்படி செய்து பார்க்கிறேன் ஆதி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷமீ...

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…