Tuesday, December 24, 2013

தவலை அடை!



இது ஒரு பாரம்பரிய சிற்றுண்டி. என் மாமியாரிடமிருந்து தான் இதை கற்றுக் கொண்டேன். அந்த காலத்தில் வெண்கலத் தவலையில்(பானை) இதை செய்திருப்பார்கள். அதனால் இந்த பெயர் வந்திருக்கிறது. நாம் இன்று தோசைக்கல்லில் தான் போட்டு செய்யப் போகிறோம். இது கட்லட்டின் முன்னோடி என்று சொல்லலாம். இந்த தவலை அடையின் பாரம்பரிய செய்முறையை பற்றி கீதா மாமி எழுதியிருக்காங்க பாருங்க. எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான இந்த சிற்றுண்டியின் செய்முறையை பார்க்கலாமா?

தேவையானப் பொருட்கள்:-

பச்சரிசி – 1 தம்ளர்
துவரம்பருப்பு – 2 மேஜைக்கரண்டி
கடலைப்பருப்பு – 2 மேஜைக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
தேங்காய் பல்லு பல்லாக கீறியது தேவையான அளவு

தாளிக்க:-

எண்ணெய் தேவையான அளவு
கடுகு – ¼ தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ½ தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – ½ தேக்கரண்டி
பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
வரமிளகாய் – 3 (அ) 4
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:-



அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு ஆகியவற்றை மிக்சியில் போட்டு ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காயவைத்து, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களான கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கிள்ளிய வரமிளகாய் துண்டங்கள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்.. வறுபட்டதும் 21/2 தம்ளர் தண்ணீர் சேர்க்கவும். தேங்காய்த் துண்டங்களையும், தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும்.. தண்ணீர் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள அரிசி கலவையை போட்டு கிளறவும். உதிர் உதிராக வரும் அளவுக்கு கிளற வேண்டாம். தண்ணீர் சுண்டி கொஞ்சம் கெட்டியாக வந்தால் நிறுத்தி விடலாம்.



கை பொறுக்கும் சூட்டில் ஆரஞ்சு பழ அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.. தோசைக்கல்லை காயவைத்து உருண்டைகளை உள்ளங்கை அளவு அடைகளாக கைகளில் வைத்தோ அல்லது வாழையிலை, பிளாஸ்டிக் ஷீட் இவற்றில் வைத்தோ தட்டிக் கொள்ளவும். மெலிதாக தட்டவேண்டாம். நான் கைகளில் வைத்தே தட்டுவது தான் வழக்கம்.



ஒரு சமயத்தில் ஏழு அடைகள் வரை தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு மூடவும். நிதானமான தீயிலேயே இருக்கட்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து, கவனமாக அடைகளை திருப்பிப் போட்டு, மீண்டும் எண்ணெய் விட்டு மூடி வைக்கவும். இருபுறமும் முறுவலாக வந்த பின்னர் எடுத்து பரிமாறவும். இதற்கு சட்னி, சாம்பார் இவையெல்லாம் தேவைப்படாது. உங்களுக்கு விருப்பமிருப்பின் அவற்றோடோ அல்லது இட்லி மிளகாய்ப்பொடியுடனோ சாப்பிடலாம்.

சுவையான தவலை அடை, ருசிக்க தயார்….


நீங்களும் செய்து பார்த்து உங்க வீட்டில் உள்ளவர்களையும் அசத்துங்களேன்..

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

தொடர்புடைய பதிவுகள்:-


37 comments:

  1. வணக்கம்
    அருமையான உணவு செய்முறை விளக்கம் அருமை பார்த்தவுடன் சாப்பிடத்தான் சொல்லுது மனம்...என்னசெய்வது படத்தில் உள்ளது.எடுக்கமுடியாது .. மலேசியாவில் இப்படியான உணவு தமிழ்கடைகளில் கூட இல்லை.அருமை அம்மா வாழ்த்துக்கள் .

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இது கடைகளில் எல்லாம் கிடைக்காது...:)) இந்தியாவுக்கு வரும் போது வாருங்கள்...செய்து கொடுத்திட்டா போச்சு..:))

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்..

      Delete
  2. வணக்கம்

    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தழிம்மண வாக்குகளுக்கு மிக்க நன்றி சார்..

      Delete
  3. நீங்கள் சொல்வது போல
    இது நல்ல பாரம்பரிய உணவு
    எங்கள் பாட்டியின் கைமணத்தில்
    உண்டுக் களித்தது
    இந்தப் பதிவைப் பார்த்து மனைவியைச்
    செய்யச் சொல்லி இருக்கிறேன்
    பார்ப்போம் என்றிருக்கிறார்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்...

      Delete
  4. தவலை வடை சாப்பிட்டு இருக்கிறேன்! தவலை அடையும் மிக நன்றாக இருக்கும் போலிருக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. சூப்பராக இருக்கும்...:))

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் சார்..

      Delete
  5. Replies
    1. தமிழ்மண வாக்குகளுக்கு மிக்க நன்றி ரமணி சார்..

      Delete
  6. ருசியான சமைஅய்ல் பதிவுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...

      Delete
  7. கட்லட்டின் முன்னோடி என்று சொல்லலாம். //
    நல்ல செய்தியாக இருக்கே!

    ருசியான, அழகான தவலை அடை.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

      Delete
  8. மிக அழகாக படத்துடன் ருசியான பகிர்வு! இத்தனை சுகமாக இருக்கிறதே!..:)

    இன்றே செய்துவிடுகிறேன்! பார்கவே வாயூறுகிறது ஆதி!.. அசத்திவிட்டீர்கள்...

    சக பதிவரையும் குறிப்பிட்டது மகிழ்ச்சி! அவரிடமும் போய்ப் பார்க்கின்றேன்!

    பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

    த ம.4

    ReplyDelete
    Replies
    1. ஆதி!.. செய்து பார்த்திட்டேன்மா...:)
      சூப்பர் ருசி! நல்லாவே வந்திச்சு. அரிசிக் குருணை கைவசம் இல்லாதததால்
      கோதுமைக் குருணி பல்கர்ன்னு இங்கே சொல்லுவாங்க.. அதிலே செய்தேன்.
      அதுல பசைத்தன்மையே இல்லாதபடியால உருட்டவோ தட்டவோ முடியாதுன்னு
      கொஞ்சூண்டு அரிசி மாவு சேர்த்துக் கிளறி உருட்டித் தட்டி சுட்டுச் சாப்பிட்டோம்!..:)

      நல்ல ருசி! வீட்டிலயும் எல்லோருக்கும் ரொம்பவே பிடிச்சுப் போயிற்று!
      நல்ல ரெஸிப்பி! அடுத்த முறை அரிசிக் குருணையிலேயே
      செய்வதாக இருக்கேன்... மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் ஆதி!

      Delete
    2. மிக்க நன்றி இளமதி.. செய்தும் பார்த்து கருத்திட்டதற்கு.. மகிழ்ச்சி..

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி..

      Delete
  9. வயிற்றுக்கு ஒன்றும் செய்யாதே! :))

    ReplyDelete
    Replies
    1. அரிசி, பருப்பு தானே....:)) வயிற்றுக்கு என்ன செய்யப் போகிறது...? அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே ஏதேனும் செய்யலாம்...:))

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்..

      Delete
  10. வ லை ஏறிய
    த ’வ லை’ அடையா?

    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வார்த்தை ஜாலம் அருமை...:)

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்..

      Delete
  11. Thavalai adai romba naalaikkappuram sappitten. Suvayo...suvai. parattukkal.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி..

      Delete
  12. ஆதி உனக்கும்.எனக்கும் ஒரே அலைவரிசையில் மூலிபரோட்டாமாதிரி தவலடையும் யோசனையில் வந்தது ஏன்ஏன் எள்று கேட்டுக் கொள்கிறேன். முன்பு மஹியுடன் அம்மாதிரி ஏற்படும்.
    ரொம்ப ஸந்தோஷமாக இருந்தது. செய்து போட்டோவெல்லாம் எடுத்து வைத்திருக்கிறேன். நான்
    ஒன்று நினைத்தால் அது மறுநாள் உன்பதிவில் வருகிறது. அதிகம் வித்தியாஸமில்லை.
    மிக்க அழகாக ருசியாக இருக்கிறது உன்பதிவு. தவலடை இங்கு மிகவும் பிடித்தமான டிபன்.
    பலகாரத்திற்கு முக்கால்வாசி இதைச் செய்வார்கள். எங்கள் ஊரில். நல்ல ருசியான பதிவு..
    அன்புடன்



    ReplyDelete
    Replies
    1. ஆஹா! ஒரே அலைவரிசை... மிக்க மகிழ்ச்சிம்மா... உங்களுடையதையும் அவசியம் பதிவிடுங்கள் அம்மா...

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா..

      Delete
  13. நன்றாக இருக்கிறது ஆதி...தவலை வடை ருசித்திருக்கிறேன்...தவலை அடை இப்பொழுது தான் கேள்வி படுகிறேன்..கட்டாயம் செய்து பார்க்கிறேன் ....

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள் ஷமீ...

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷமீ..

      Delete
  14. தவளை அடை பார்க்கும் போதே சாப்பிட சொல்கிறது. பதிவே மணக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. பிழையாகி விட்டது என நினைக்கிறேன்....:)) இங்கு அசைவம் பற்றிய பேச்சே கிடையாது....:)))

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலஷ்மி மேடம்..

      Delete
  15. சிறு வயதில் சாப்பிட்டுள்ளேன்! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி சார்...

      Delete
  16. நல்ல ரெசிபி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன் சார்..

      Delete
  17. செஞ்சுப் பார்த்துட வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ராஜி...

      Delete
  18. இது தவலை அடை கிடையாது. இது அரிசி அடைமாதிரினா இருக்கு. தவலைஅடை (தவலடை) பருப்பு நிறைய சேர்த்து கிட்டத்தட்ட பருப்புவடை மாதிரி ஆனால் சின்ன அடை ஷேப்பில் இருக்கும்.

    ReplyDelete
  19. நாங்கள் இதை தவலை அடை அல்லது தவலடை என்று தான் சொல்வோம்....:)

    தாங்கள் ஆமவடை அல்லது தவலவடை பற்றி கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன்....:) எதுவாக இருந்தாலும் வந்து கருத்து சொன்னது குறித்து மகிழ்ச்சி.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…