Friday, November 1, 2013

தீபாவளி ஸ்பெஷல் - 5 மருந்து சாப்பிடலாமா?

அன்பு நட்புகளே,

நேற்று ”மலாய் லட்டு” பதிவில் மருந்துடன் சந்திக்கிறேன் என்று எழுதியிருந்தேன் அல்லவா!

வாங்க! மருந்து சாப்பிட்டு தீபாவளியை கொண்டாடலாம்....2003 அவள் விகடனில் ஒரு தோழி இந்த தீபாவளி மருந்தின் செய்முறையை குறிப்பிட்டிருந்தார்கள். அன்று முதல் வருடாவருடம் இந்த குறிப்பை வைத்துக் கொண்டு தான் மருந்தை செய்து வருகிறேன். திருச்சி வந்த பின்னும் விடாமல் என்னவரை அந்த குறிப்பை மெயிலில் அனுப்பச் சொல்லி மருந்து சாமான்கள் வாங்கி தயாரித்திருக்கிறேன். இந்த வருடம் மனசுக்கு த்ருப்தியாக மருந்து அமைந்தது. அதன் செய்முறை குறிப்பை நீங்களும் தெரிந்து கொள்ள வாங்களேன்.....

தேவையான பொருட்கள்: 

சுக்கு – கால் கப், சித்தரத்தை – சிறிது, கண்டந்திப்பிலி – சிறிது, ஓமம் – 1 டீஸ்பூன், கொம்பு மஞ்சள் – 2 [இந்தப் பொருட்கள் எல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்], கசகசா – கால் கப், கிராம்பு -4, ஏலக்காய் – 4, வசம்பு – ஒரு துண்டு, மிளகு – கால் கப், சீரகம் – 1 டீஸ்பூன், காய்ந்த திராட்சை – 1 டேபிள்ஸ்பூன், நெய் – கால் கப், நல்லெண்ணை – கால் கப், வெல்லம் – அரை கப், தேன் – 1 டேபிள்ஸ்பூன். 

செய்முறை: நெய், நல்லெண்ணை, தேன், வெல்லம் ஆகியவை தவிர, மற்ற எல்லா சாமான்களையும் முதல் நாள் இரவே நன்றாக சுத்தம் செய்து, நீரில் ஊற வைக்கவும். அவை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைப்பது அவசியம். மறுநாள், மிக்ஸியில் நைஸாக விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின்னர், அரைத்த விழுது, வெல்லம் இவை இரண்டையும் அடி கனமான ஒரு வாணலியில் போட்டு, மிகக் குறைந்த தீயில் வைத்து நிதானமாக கிளறவும்.


வெல்லமும் அரைத்த விழுதும் சேர்த்து கொதிக்கும்போது, நெய், நல்லெண்ணை  இவற்றை சிறிது சிறிதாக விட்டுக் கிளறிக் கொண்டே இருக்கவும். நெய்யும் எண்ணையும் வாணலியில் தனித்தனியாக பிரிந்து வரும் பக்குவத்தில், தேனை ஊற்றி, அடுப்பிலிருந்து இறக்கி விடவும். கையில் தொட்டுப் பார்த்தால் ஒட்டாத பக்குவத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் உருட்ட முடியும். இவற்றுடன் அரிசி திப்பிலி, அதிமதுரம், தனியா ஆகியவையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்வேன்...

இப்படித் தான் நான் எப்போதும் செய்வேன். முன்பு ஊருக்கு வரும் போது நாட்டு மருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வேன். ஒரு முறை தில்லியில் நாட்டு மருந்து சாமான்கள் இல்லாமல் பொடி வாங்கி செய்தேன். கசப்பாக இருந்தது மட்டுமில்லாமல் சீக்கிரம் பூஞ்சை வந்து விட்டது. இந்த செய்முறைப்படி செய்து வைத்தால் ஒரு மாதமானாலும் கெடுவதில்லை. நல்ல பசியைத் தூண்டும், செரிமானத்துக்கு நல்லது...

என்ன நண்பர்களே! நீங்களும் இந்த மருந்தை தயாரித்து, சுவைத்து தீபாவளியை இனிமையாக கொண்டாடுங்கள்..

எல்லோருக்கும் எங்கள் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்....


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட், வெங்கட் மற்றும் ரோஷ்ணி
திருவரங்கம்.

17 comments:

 1. உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்....

  ReplyDelete
 2. இனிமேல் ஆரம்பம்... பிறகு தான் மருந்து...!

  செய்முறைக்கு நன்றி...

  இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. மருந்து இல்லையெனில் தீபாவளியே முழுமை அடையாது!
  பகிர்வுக்கு நன்றி.
  தீபாவளி நல் வாத்துகள்

  ReplyDelete
 4. தீபாவளி லேகிய தயாரிப்பு மிக அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 5. தீபாவளி லேகியத்துடன் வாழ்த்தும் கிடைத்ததில் மகிழ்ச்சி. உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 6. அந்த பொம்மை வரிசை, நேத்து ஒரு பின்னூட்டம் பாத்தபிறகுதான் புரிஞ்சுது. நல்ல ஐடியா! இனிய தீபாவளி வாழ்த்துகள்!

  மருந்து செய்முறை பண்டிகைக்கு என்றில்லாமல் எப்போதும் பயன்படுமே!!

  ReplyDelete

 7. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 8. மருந்து ரொம்பவே நன்றாக ிருக்கு. தீபாவளி லேகியம். நானும் எடுத்துக் கொண்டேன். நன்றி. வாழ்த்துகள் யாவருக்கும். அன்புடன்

  ReplyDelete
 9. எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. அருமையான தீபாவளி மருந்து.
  ரோஷ்ணிக்கு மகிழ்ச்சியாய் இருக்கும், அப்பா வந்து இருக்கிறார்கள் தீபாவளிக்கு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. தீபாவளி மருந்து அருமை...

  ReplyDelete
 12. சரியான முறையில் கிண்டுன மருந்தே அல்வா மாதிரிதான் ருசியாயிருக்கும். பலகாரம் சாப்பிடுற அளவுக்கு மருந்தும் உள்ளே போயிரும் இல்லையா!!

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. சரியாகச் சொன்னார் சாரல்.
  நான் லேகியத்தை அல்வா போலப் போக வரச் சாப்பிடுவேன்.:)
  வெகு அருமை ஆதி. இந்தக் காலத்தில் அவசர யுகத்தில் இதுபோலப் பெண்களும் உண்டா.
  மனம் நிறைந்த ஆசிகள்.

  ReplyDelete
 14. ஒரு நாப்பது வருசமாச்சு தீபாவளி மருந்து சாப்பிட்டு:(

  இடையில் ஒரு 28 வருசம் முந்தி பூனாவில் இருந்தபோது கோமளம் மாமி வீட்டில் சாப்பிட்டோம்.

  சென்னை வாசத்தில் ஸ்ரீக்ரிஷ்ணா ஸ்வீட்ஸ் கடையில் தீபாவளி பலகாரப்பேக் வாங்கியபோது அதில் கொஞ்சம் மருந்து வைத்திருந்தார்கள்.

  படம் பார்க்க அருமையா இருக்கு. அப்படியே தின்ன வேண்டியதுதான். நியூஸியில்'சரக்கு'க்கு எங்கே போவேன்:(

  ReplyDelete
 15. பண்டிகை எதுவானாலும் அளவோடு உண்டு நலமோடு வாழ நினைப்பவன்! நான்! எனவே
  இம் மருந்து எனக்குத் தேவைப் படுவதில்லை! !தங்களின் செய்முறை விளக்கம் சிறப்பு

  ReplyDelete
 16. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

  கருத்துரையிட்டு வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல......

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…