Friday, November 22, 2013

கதம்பம் – 18அன்பு நட்புகளே! தீபாவளி மருந்தை தங்களுக்கெல்லாம் கொடுத்து விட்டு காணாமல் போய்விட்டேன். எல்லோரும் தேடினீங்களோ! தேடலையோ! தேடியதாகவே நினைத்து மனதை தேற்றிக் கொள்கிறேன்……:))) தீபாவளிக்கு என்னவரின் தமிழக வருகை… அந்த ஒருவாரம் முழுவதும் கணினி என் கைவசம் அகப்படவேயில்லை…..:)) அதன்பிறகு தமிழில் டைப் பண்ண சண்டித்தனம் செய்து விட்டது கணினி. மென்பொருளை மீண்டும் ஒருவழியாக முந்தாநாள் தான், கணினியோடு சமாதான உடன்படிக்கை செய்து கொண்டது…..:)) இதற்கிடையில் கார்த்திகை தீபம், சில நல்ல மற்றும் மனதை கலங்க வைத்த நிகழ்வுகள் என உங்க எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள விஷயங்கள் நிறைய சேர்ந்து விட்டன……

கார்த்திகை தீபம்:-

சென்ற ஞாயிறன்று கார்த்திகை தீபத்தை சிறப்பாக கொண்டாடினோம். அன்று பரபரப்பான சூழ்நிலை…பாட்டு கிளாஸ் வேறு, மருத்துவரிடம் காலை செல்ல வேண்டி இருந்தது, தீபம், அதன் பின் ஒரு திருமண வரவேற்பு…. எப்படியோ எல்லாவற்றையுமே ஒழுங்காக செயல்பட முடிந்தது. அப்பம் மட்டும் செய்து நைவேத்தியம் செய்தேன். நெல்பொரி, அவல்பொரியெல்லாம் செய்தால் சாப்பிட ஆளில்லை….:)) எங்கள் வீட்டில் எடுத்த புகைப்படங்கள் சில…..


திருமண வரவேற்பு:-

தீபத்தன்று மாலையில் எங்கள் குடியிருப்பில் உள்ளவர்களது மகனுக்கு திருமண வரவேற்பு…. திருமணம் தலைநகர் தில்லியில் ஒருசில நாட்கள் முன்னர் நடைபெற்றது. அங்கு சென்று திருமணத்தை காண முடியாதவர்களுக்காக வரவேற்பில் பெரிய LCD ஸ்கீரீன் வைத்து திருமணத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை பத்து நிமிட படமாக்கி சிறப்பான இசையுடன் வடிவமைத்து வெளியிட்டிருந்தார்கள். மணமக்களின் சொந்தபந்தங்கள் இணைந்து இந்த விஷயத்தை சிறப்பாக செய்திருந்தார்கள். பாராட்ட வேண்டிய விஷயம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களிடமும் சொல்லி விட்டு வந்தேன். அன்பளிப்பு வழங்கும் போது மணமகளிடம் நாங்களும் தில்லி தான் எனச் சொல்ல…. கண்களில் ஒரு பிரகாசமான ஒளிவட்டம்…..:)) அச்ச்சா!!! என்றார்…..:)))

சாப்பாட்டு மெனு – சாம்பார் சாதம், அக்கார வடிசல், தத்தியோன்னம் எனப்படும் தயிர்சாதம், வெஜிடபுள் புலாவ், வடை, அப்பளம், சிப்ஸ், தயிர்பச்சடி, இஞ்சிபுளி, இவற்றோடு சம்பந்தமேயில்லாமல் ஊத்தாப்பமும் தேங்காய் சட்னியும்…..:)) கடைசியில் ஐஸ்கிரீமுடன் காஜர் அல்வா அதாங்க காரட் அல்வா….இது தில்லி காம்பினேஷன்….:) மற்றும் பீடா…..:) (என்ன உங்களுக்கெல்லாம் வயிற்றில் புகை வருகிறதா!!! அதற்கு நான் பொறுப்பல்ல)

ஃப்ரெண்ட் தாத்தா:-

தீபத்தன்று மறுநாள் என்னுடைய ஃப்ரெண்ட் ஒருவர் இறைவனடி சேர்ந்தார். இது என்னை மிகவுமே கலங்கடித்த விஷயம்….:((( வயசு ஒன்றும் அதிகமில்லை 98 தான்…. இவரைப் பற்றி முன்பு ஒருமுறை கூட எழுதியிருந்தேன். சிறப்பான மனிதர்… பலதரப்பட்ட விஷயங்களை என்னுடன் பேசியிருக்கிறார். நிறைய ஸ்லோகங்களை எழுதியும், சொல்லியும் தந்திருக்கிறார். மாலை வேளைகளில் வாசல் திண்ணையில் அமர்ந்திருக்கும் இவரிடம் பேசாமல் யாரும் தாண்டி போய்விட முடியாது….கடைசி வரை நல்ல ஞாபக சக்தியுடன், நடமாட்டத்துடன் தான் இருந்தார்… அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும் என கடவுளை மனதார பிரார்த்திக்கிறேன்…

இவரைப் போலவே எங்கள் குடியிருப்பில் பலவருடமாக காவலாளியாக இருந்த ஒரு தாத்தாவும் இறைவனடி சேர்ந்து விட்டார். யாரிடமும் இதுவரை சிடுசிடுத்ததே கிடையாது. சிரித்த முகம், இதமான பேச்சு….போகும் போதும் வரும்போதும் சலாம் போடுவார்…. அவருடைய ஆன்மாவும் சாந்தியடைய கடவுளை பிரார்த்திக்கிறேன்…

நம்ம வல்லிம்மாவின் கணவர் சிங்கம் சாரின் மறைவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வல்லிம்மாவிடம் பேசினேன்...பாவம்... மிகவும் மென்மையானவர், நம்முடைய கஷ்டங்களுக்கும், கவலைகளுக்கும் மிகவும் கவலைப்படுவார்... கடவுள் அவருக்கு மனோ தைரியத்தை தரட்டும்...

சங்கதாராவும், காலச் சக்கரமும்:-

பதிவுலகத்திற்கு வர முடியாமல் போன நேரத்தில் திரு ”காலச்சக்கரம் நரசிம்மா” அவர்களின் காலச் சக்கரம், சங்கதாரா ஆகிய இருநூல்களை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஒன்று சரித்திர நாவல், மற்றொன்று ஒரு கிசுகிசுவை வைத்து 400 பக்கங்களுக்கு அவரால் எழுதப்பட்ட நாவல். எடுத்தால் வைக்க தோன்றவேயில்லை. அவ்வளவு விறுவிறுப்பு. நீங்களும் ஒருமுறை வாசித்து பாருங்களேன். நீங்களும் நான் சொல்வது போல் தான் சொல்வீர்கள்….:)) இப்பொழுதெல்லாம் மதிய நேர ஓய்வு நேரத்தில் புத்தகமில்லாமல் நானில்லை என்னும் அளவுக்கு ஆகி விட்டது…..:))

திருச்சி ஸ்பெஷல்:-

மின்சாரம் என்றால் என்ன? என்னும்படியாக உள்ளது இப்போதைய நிலைமை…. மின்சாரம் இருக்கும் நேரம் மிகவும் குறைவு. பகலில் ஆறுமணி நேர மின் துண்டிப்பும், இரவில் ஒருமணிநேரத்திற்கு ஒரு முறையாகவும் உள்ளது. இன்வெர்ட்டர் இல்லாதவர்களின் பாடு மிக மோசம்….:(( காற்று இல்லையென்றாலும் பரவாயில்லை… கொசுத்தொல்லை இருக்கிறதே அது பயங்கரம்….:((((

சச்சினுக்கு பாரத் ரத்னா கிடைத்ததற்காக ”திருச்சி சாரதாஸில்” வாங்கும் உடைகளுக்கு 30 சதவீகித தள்ளுபடி தருகிறார்களாம்…. விளம்பரமும் ஆச்சு, மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியாச்சு, வியாபாரமும் ஆச்சு என பலே பலே….:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

19 comments:

 1. பல்வேறு மணங்களில் கதம்பம் மணக்கிறது..

  ReplyDelete
 2. மனதை மயக்கிடும் மணமுள்ள கதம்பம் கொடுத்துள்ளதற்கு நன்றிகள்.

  [இங்கும் நீண்ட நேர மின்வெட்டு தான் மிகவும் கடுப்பேற்றி வருகிறது.]

  ReplyDelete
 3. வாசனையான கதம்பம்..

  வல்லிம்மா.. நம்மாலயே ஜீரணிக்க முடியலை. அவங்களுக்கு மனதிடத்தைத் தரணும்ன்னு இறைவனை வேண்டிக்குவோம்.

  ReplyDelete
 4. கதம்பம் மணம் வீசுகிறது..தீபம் புகைப்படங்கள் கொள்ளை அழகு!!

  ReplyDelete
 5. வீட்டில் தீபத் திருநாள் கொண்டாட்டம் அருமை... வாழ்த்துக்கள்...

  மின்வெட்டு : முடியலே... ம்...

  ReplyDelete
 6. சச்சினுக்கு பாரத் ரத்னா கிடைத்ததற்காக ”திருச்சி சாரதாஸில்” வாங்கும் உடைகளுக்கு 30 சதவீகித தள்ளுபடி தருகிறார்களாம்….
  ம்ஹும் ...
  நான் தீபாவளிக்கு(23.10.2013) முன்னாடிதான் திருச்சி வந்தபோது சாரதாசில் ஒரு புடவை வாங்கினேன்.
  இப்ப தள்ளுபடியா?
  வட போச்சே!

  ReplyDelete
 7. அது என்னவோ கார்த்திகை மாதத்தில் தான் அதிகமாக துக்க சம்பவங்கள் நடக்கிறது. கனத்த மாதம் என்பார்கள் அம்மா...

  ReplyDelete
 8. கதம்ப ஊறுகாய் நன்று !சுவைதேன்! பேத்தி நலமா!

  ReplyDelete
 9. உங்கள் ஃப்ரெண்ட் தாத்தா செஞ்சுரி அடித்திருக்கலாம். அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.

  ReplyDelete
 10. கதம்பம் மணக்கிறது.,அருமை...
  தாத்தாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்....

  ReplyDelete
 11. நான் தேடினேன் பலமுறை. காரணங்களெல்லாம் இல்லை..ஒரு அன்புதான். இன்றும் தேடிக்கொண்டுதான் வந்தேன்.
  பலதரப்பட்ட பிரிவுகள். யாவரின் ஆன்மாவும் சாந்தி அடையட்டும்.
  கார்த்திகை வாழ்த்துகள் சிறிது தாமதமாக, ஆசிகள் அன்புடன்

  ReplyDelete
 12. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 13. நல்லதொரு கதம்பம். துளசியின் கணவருக்கும் உடல்நிலை மோசமாகி இப்போச் சரியாகிட்டு இருக்குனு எழுதி இருக்காங்க. :( என்னமோ இந்த அக்டோபர், நவம்பர் மாசம் கொஞ்சம் சரியாத் தான் இல்லை. வல்லியோட தொலைபேச முயன்று எப்போவும் பிசினே வருது. அதுவும் என்னனு புரியலை. :(

  ReplyDelete
 14. எங்களுக்கு மிகவும் நெருங்கியவர்களின் பையர் திருமணம் இன்னும் சில நாட்களே இருக்கையில் நின்னு போய், அந்த அதிர்ச்சியே இன்னும் சரியாகலை. இங்கே மாமா வேறே இந்த மின்வெட்டு திடீர்னு வந்ததில் லிஃப்டில் மாட்டிண்டு, அது வேறே அவதியாப் போச்சு! :((((

  ReplyDelete
 15. கீதா மாமி - என்னமோ சங்கடமான சூழ்நிலை....நன்றி மாமி...

  ReplyDelete
 16. விளக்கும் கோலமும் அழகா இருக்கு. அந்த லட்டுமலைக்கோலம் :)) பார்த்ததும் ஒன்று நினைவுக்கு வந்தது. சின்னதுல என் ஹிந்தி டீச்சர் ,எதாச்சும் கவலைன்னா உடனே இரண்டு பாதமும் இந்த கோலமும் போட்டு சாமிக்கும்பிடச் சொல்லி பழக்கி இருந்தாங்க என்னை..

  ReplyDelete
 17. முத்துலெட்சுமி - நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் கருத்துரை.....அது சஞ்சீவி மலைங்க....:)) தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றிங்க....

  ReplyDelete
 18. கதம்பம் பல்வேறு தகவல்கள்.

  ReplyDelete
 19. மாதேவி - நன்றிங்க...

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…