Thursday, November 28, 2013

பிடி கொழுக்கட்டை!


நண்பர்களே! இன்று நீங்க பார்க்கப் போறது பிடி கொழுக்கட்டை அல்லது உப்புமா கொழுக்கட்டை என்று சொல்லப்படும் ஒரு சிற்றுண்டியை. இதை என் மாமியாரிடம் தான் கற்றுக் கொண்டேன். செய்ய மிகவும் எளிது.. சுவை அபாரம். எண்ணெய் அதிகம் இல்லாத சிற்றுண்டி. தில்லியில் கடுங்குளிரில் கூட இதை செய்து சுடச்சுட ருசித்திருக்கிறோம். கோவையில் அரிசிமாவில் சின்ன வெங்காயம் போன்றவற்றை தாளித்து இதைப் போல செய்வாங்க. தேங்காய் எண்ணெய் மணத்துடன் அது ஒருவித சுவையாக இருக்கும். 

வாங்க இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:-

பச்சரிசி – 1 தம்ளர்
துவரம்பருப்பு – கால் தம்ளர்
கடலைப்பருப்பு – கால் தம்ளர்
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேங்காய்துருவல் – சிறிதளவு (விருப்பப்பட்டால்)

தாளிக்க:-

கடுகு – ¼ தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
வரமிளகாய் – 2 (இரண்டாக கிள்ளிக் கொள்ளவும்)
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை:-

மிக்சியில் அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு ரவை பதத்தில் உடைத்துக் கொள்ளவும். வாணலியில் சமையல் எண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து தண்ணிர் விடவும். ஒரு தம்ளர் ரவைக்கு இரண்டரை தம்ளர் தண்ணீர் விடலாம். உப்பு சேர்க்கவும். தேங்காய்துருவல் விருப்பப்பட்டால் இப்போது சேர்க்கலாம். தண்ணீர் கொதித்ததும் உடைத்து வைத்த ரவையை கொட்டிக் கிளறவும். தண்ணீர் வற்றியதும் அடுப்பை நிறுத்தவும். ரவா உப்புமா போல் சுருள சுருள கிளற வேண்டிய அவசியமில்லை…


சூடு கொஞ்சம் தணிந்தவுடன் கிளறி வைத்த உப்புமாவை கொழுக்கட்டையாக பிடித்து நெய் அல்லது எண்ணெய் தடவிய தட்டுகளில் இட்லி பானையில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை நிறுத்தவும்…

சூடான, சுவையான பிடி கொழுக்கட்டை பரிமாற தயார்!


தேங்காய் சட்னி, சாம்பார், மிளகாய்பொடி, சர்க்கரை, ஊறுகாய் என எதோடும் ஒத்துப் போகும் இந்த பிடி கொழுக்கட்டை…

நீங்களும் செய்து பார்த்து உங்கள் வீட்டிலுள்ளவர்களை அசத்துங்களேன்…

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

டிஸ்கி:-

முடிந்தவரை படிப்படியான செய்முறைப் படங்கள் எடுத்து முதன்முறையாக பகிர்ந்துள்ளேன்...:)

Monday, November 25, 2013

பூத்தொட்டி வால் ஹேங்கிங் செய்யலாமா?வீணாகப் போன ஒரு பொருளை வைத்து நாங்கள் செய்த வால் ஹேங்கிங் இது....

குக்கர் கேஸ்கெட் வீணாக போய்விட்டது...சரி அதை வைத்து ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன்.

அதை விட பொழுது போகாமல் என் பின்னாலேயே சுற்றிக் கொண்டு, என்னைத் தொந்தரவு செய்து கொண்டு இருந்த ரோஷ்ணிக்கு வேலை கொடுக்கவென முடிவெடுத்தேன்.....:))

1) கிஃப்ட் பேக்கை சுற்றி வந்திருந்த பேப்பரை கேஸ்கெட் முழுதும் இறுக்கமாக சுற்றச் சொன்னேன்....

2) சார்ட் பேப்பரை வட்டமாக வெட்டி பின்பக்கமாக கேஸ்கெட்டை சுற்றி ஒட்டச் சொன்னேன்...

3) அதில் ஏதாவது ஒரு படத்தை வெட்டி அதில் ஒட்டச் சொன்னேன்...

4) ஐஸ்கிரீம் குச்சிகளை பின்பக்கமாக வைத்து ஒட்டினேன்.

5) தெர்மக்கோல் உருண்டைகளை சுற்றிலும் ஒட்டினோம்.

6) எடுப்பாக தெரிவதற்காக சுற்றி ஸ்டிக்கர் பொட்டுகளை ஒட்டினேன்.

இப்போது  எங்கள் வீட்டின் அழகை மேலும் மெருகூட்ட
அழகான வால் ஹேங்கிங் தயார்...

யார் வந்தாலும் ரோஷ்ணி நான் தான் செய்தேன் என பெருமையாக சொல்லிக் கொள்கிறாள். ...:)

நீங்களும் செய்து பாருங்கள். குழந்தைகளையும் செய்ய வைத்து மகிழ்ந்திடுங்கள்....

தில்லியில் சில வருடங்களுக்கு முன்பு நான் செய்த வால் ஹேங்கிங் இதோ...இது கேஸ்கெட் முழுவதும் உல்லன் நூலைக் கொண்டு சுற்றி, காலண்டரில் இருந்த பிள்ளையாரை வெட்டி ஒட்டி ஸ்டிக்கர் பொட்டுகளால் அலங்காரம் செய்தது....

என்னிடம் இன்னும் ஒரு கேஸ்கெட் கூட உள்ளது. அதை சாட்டின் ரிப்பன் கொண்டு முழுவதும் சுற்றி வைத்துள்ளேன்.... இதை வேறுவிதமாக பொம்மைகளை தொங்கவிட்டு செய்யலாம் என்று யோசனை......:))

தங்களுக்கும் ஏதாவது டிப்ஸ் தெரிந்தால், அதை எனக்கு தெரிவித்தால் மகிழ்வேன்...:)


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

Friday, November 22, 2013

கதம்பம் – 18அன்பு நட்புகளே! தீபாவளி மருந்தை தங்களுக்கெல்லாம் கொடுத்து விட்டு காணாமல் போய்விட்டேன். எல்லோரும் தேடினீங்களோ! தேடலையோ! தேடியதாகவே நினைத்து மனதை தேற்றிக் கொள்கிறேன்……:))) தீபாவளிக்கு என்னவரின் தமிழக வருகை… அந்த ஒருவாரம் முழுவதும் கணினி என் கைவசம் அகப்படவேயில்லை…..:)) அதன்பிறகு தமிழில் டைப் பண்ண சண்டித்தனம் செய்து விட்டது கணினி. மென்பொருளை மீண்டும் ஒருவழியாக முந்தாநாள் தான், கணினியோடு சமாதான உடன்படிக்கை செய்து கொண்டது…..:)) இதற்கிடையில் கார்த்திகை தீபம், சில நல்ல மற்றும் மனதை கலங்க வைத்த நிகழ்வுகள் என உங்க எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள விஷயங்கள் நிறைய சேர்ந்து விட்டன……

கார்த்திகை தீபம்:-

சென்ற ஞாயிறன்று கார்த்திகை தீபத்தை சிறப்பாக கொண்டாடினோம். அன்று பரபரப்பான சூழ்நிலை…பாட்டு கிளாஸ் வேறு, மருத்துவரிடம் காலை செல்ல வேண்டி இருந்தது, தீபம், அதன் பின் ஒரு திருமண வரவேற்பு…. எப்படியோ எல்லாவற்றையுமே ஒழுங்காக செயல்பட முடிந்தது. அப்பம் மட்டும் செய்து நைவேத்தியம் செய்தேன். நெல்பொரி, அவல்பொரியெல்லாம் செய்தால் சாப்பிட ஆளில்லை….:)) எங்கள் வீட்டில் எடுத்த புகைப்படங்கள் சில…..


திருமண வரவேற்பு:-

தீபத்தன்று மாலையில் எங்கள் குடியிருப்பில் உள்ளவர்களது மகனுக்கு திருமண வரவேற்பு…. திருமணம் தலைநகர் தில்லியில் ஒருசில நாட்கள் முன்னர் நடைபெற்றது. அங்கு சென்று திருமணத்தை காண முடியாதவர்களுக்காக வரவேற்பில் பெரிய LCD ஸ்கீரீன் வைத்து திருமணத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை பத்து நிமிட படமாக்கி சிறப்பான இசையுடன் வடிவமைத்து வெளியிட்டிருந்தார்கள். மணமக்களின் சொந்தபந்தங்கள் இணைந்து இந்த விஷயத்தை சிறப்பாக செய்திருந்தார்கள். பாராட்ட வேண்டிய விஷயம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களிடமும் சொல்லி விட்டு வந்தேன். அன்பளிப்பு வழங்கும் போது மணமகளிடம் நாங்களும் தில்லி தான் எனச் சொல்ல…. கண்களில் ஒரு பிரகாசமான ஒளிவட்டம்…..:)) அச்ச்சா!!! என்றார்…..:)))

சாப்பாட்டு மெனு – சாம்பார் சாதம், அக்கார வடிசல், தத்தியோன்னம் எனப்படும் தயிர்சாதம், வெஜிடபுள் புலாவ், வடை, அப்பளம், சிப்ஸ், தயிர்பச்சடி, இஞ்சிபுளி, இவற்றோடு சம்பந்தமேயில்லாமல் ஊத்தாப்பமும் தேங்காய் சட்னியும்…..:)) கடைசியில் ஐஸ்கிரீமுடன் காஜர் அல்வா அதாங்க காரட் அல்வா….இது தில்லி காம்பினேஷன்….:) மற்றும் பீடா…..:) (என்ன உங்களுக்கெல்லாம் வயிற்றில் புகை வருகிறதா!!! அதற்கு நான் பொறுப்பல்ல)

ஃப்ரெண்ட் தாத்தா:-

தீபத்தன்று மறுநாள் என்னுடைய ஃப்ரெண்ட் ஒருவர் இறைவனடி சேர்ந்தார். இது என்னை மிகவுமே கலங்கடித்த விஷயம்….:((( வயசு ஒன்றும் அதிகமில்லை 98 தான்…. இவரைப் பற்றி முன்பு ஒருமுறை கூட எழுதியிருந்தேன். சிறப்பான மனிதர்… பலதரப்பட்ட விஷயங்களை என்னுடன் பேசியிருக்கிறார். நிறைய ஸ்லோகங்களை எழுதியும், சொல்லியும் தந்திருக்கிறார். மாலை வேளைகளில் வாசல் திண்ணையில் அமர்ந்திருக்கும் இவரிடம் பேசாமல் யாரும் தாண்டி போய்விட முடியாது….கடைசி வரை நல்ல ஞாபக சக்தியுடன், நடமாட்டத்துடன் தான் இருந்தார்… அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும் என கடவுளை மனதார பிரார்த்திக்கிறேன்…

இவரைப் போலவே எங்கள் குடியிருப்பில் பலவருடமாக காவலாளியாக இருந்த ஒரு தாத்தாவும் இறைவனடி சேர்ந்து விட்டார். யாரிடமும் இதுவரை சிடுசிடுத்ததே கிடையாது. சிரித்த முகம், இதமான பேச்சு….போகும் போதும் வரும்போதும் சலாம் போடுவார்…. அவருடைய ஆன்மாவும் சாந்தியடைய கடவுளை பிரார்த்திக்கிறேன்…

நம்ம வல்லிம்மாவின் கணவர் சிங்கம் சாரின் மறைவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வல்லிம்மாவிடம் பேசினேன்...பாவம்... மிகவும் மென்மையானவர், நம்முடைய கஷ்டங்களுக்கும், கவலைகளுக்கும் மிகவும் கவலைப்படுவார்... கடவுள் அவருக்கு மனோ தைரியத்தை தரட்டும்...

சங்கதாராவும், காலச் சக்கரமும்:-

பதிவுலகத்திற்கு வர முடியாமல் போன நேரத்தில் திரு ”காலச்சக்கரம் நரசிம்மா” அவர்களின் காலச் சக்கரம், சங்கதாரா ஆகிய இருநூல்களை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஒன்று சரித்திர நாவல், மற்றொன்று ஒரு கிசுகிசுவை வைத்து 400 பக்கங்களுக்கு அவரால் எழுதப்பட்ட நாவல். எடுத்தால் வைக்க தோன்றவேயில்லை. அவ்வளவு விறுவிறுப்பு. நீங்களும் ஒருமுறை வாசித்து பாருங்களேன். நீங்களும் நான் சொல்வது போல் தான் சொல்வீர்கள்….:)) இப்பொழுதெல்லாம் மதிய நேர ஓய்வு நேரத்தில் புத்தகமில்லாமல் நானில்லை என்னும் அளவுக்கு ஆகி விட்டது…..:))

திருச்சி ஸ்பெஷல்:-

மின்சாரம் என்றால் என்ன? என்னும்படியாக உள்ளது இப்போதைய நிலைமை…. மின்சாரம் இருக்கும் நேரம் மிகவும் குறைவு. பகலில் ஆறுமணி நேர மின் துண்டிப்பும், இரவில் ஒருமணிநேரத்திற்கு ஒரு முறையாகவும் உள்ளது. இன்வெர்ட்டர் இல்லாதவர்களின் பாடு மிக மோசம்….:(( காற்று இல்லையென்றாலும் பரவாயில்லை… கொசுத்தொல்லை இருக்கிறதே அது பயங்கரம்….:((((

சச்சினுக்கு பாரத் ரத்னா கிடைத்ததற்காக ”திருச்சி சாரதாஸில்” வாங்கும் உடைகளுக்கு 30 சதவீகித தள்ளுபடி தருகிறார்களாம்…. விளம்பரமும் ஆச்சு, மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியாச்சு, வியாபாரமும் ஆச்சு என பலே பலே….:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

Friday, November 1, 2013

தீபாவளி ஸ்பெஷல் - 5 மருந்து சாப்பிடலாமா?

அன்பு நட்புகளே,

நேற்று ”மலாய் லட்டு” பதிவில் மருந்துடன் சந்திக்கிறேன் என்று எழுதியிருந்தேன் அல்லவா!

வாங்க! மருந்து சாப்பிட்டு தீபாவளியை கொண்டாடலாம்....2003 அவள் விகடனில் ஒரு தோழி இந்த தீபாவளி மருந்தின் செய்முறையை குறிப்பிட்டிருந்தார்கள். அன்று முதல் வருடாவருடம் இந்த குறிப்பை வைத்துக் கொண்டு தான் மருந்தை செய்து வருகிறேன். திருச்சி வந்த பின்னும் விடாமல் என்னவரை அந்த குறிப்பை மெயிலில் அனுப்பச் சொல்லி மருந்து சாமான்கள் வாங்கி தயாரித்திருக்கிறேன். இந்த வருடம் மனசுக்கு த்ருப்தியாக மருந்து அமைந்தது. அதன் செய்முறை குறிப்பை நீங்களும் தெரிந்து கொள்ள வாங்களேன்.....

தேவையான பொருட்கள்: 

சுக்கு – கால் கப், சித்தரத்தை – சிறிது, கண்டந்திப்பிலி – சிறிது, ஓமம் – 1 டீஸ்பூன், கொம்பு மஞ்சள் – 2 [இந்தப் பொருட்கள் எல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்], கசகசா – கால் கப், கிராம்பு -4, ஏலக்காய் – 4, வசம்பு – ஒரு துண்டு, மிளகு – கால் கப், சீரகம் – 1 டீஸ்பூன், காய்ந்த திராட்சை – 1 டேபிள்ஸ்பூன், நெய் – கால் கப், நல்லெண்ணை – கால் கப், வெல்லம் – அரை கப், தேன் – 1 டேபிள்ஸ்பூன். 

செய்முறை: நெய், நல்லெண்ணை, தேன், வெல்லம் ஆகியவை தவிர, மற்ற எல்லா சாமான்களையும் முதல் நாள் இரவே நன்றாக சுத்தம் செய்து, நீரில் ஊற வைக்கவும். அவை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைப்பது அவசியம். மறுநாள், மிக்ஸியில் நைஸாக விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின்னர், அரைத்த விழுது, வெல்லம் இவை இரண்டையும் அடி கனமான ஒரு வாணலியில் போட்டு, மிகக் குறைந்த தீயில் வைத்து நிதானமாக கிளறவும்.


வெல்லமும் அரைத்த விழுதும் சேர்த்து கொதிக்கும்போது, நெய், நல்லெண்ணை  இவற்றை சிறிது சிறிதாக விட்டுக் கிளறிக் கொண்டே இருக்கவும். நெய்யும் எண்ணையும் வாணலியில் தனித்தனியாக பிரிந்து வரும் பக்குவத்தில், தேனை ஊற்றி, அடுப்பிலிருந்து இறக்கி விடவும். கையில் தொட்டுப் பார்த்தால் ஒட்டாத பக்குவத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் உருட்ட முடியும். இவற்றுடன் அரிசி திப்பிலி, அதிமதுரம், தனியா ஆகியவையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்வேன்...

இப்படித் தான் நான் எப்போதும் செய்வேன். முன்பு ஊருக்கு வரும் போது நாட்டு மருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வேன். ஒரு முறை தில்லியில் நாட்டு மருந்து சாமான்கள் இல்லாமல் பொடி வாங்கி செய்தேன். கசப்பாக இருந்தது மட்டுமில்லாமல் சீக்கிரம் பூஞ்சை வந்து விட்டது. இந்த செய்முறைப்படி செய்து வைத்தால் ஒரு மாதமானாலும் கெடுவதில்லை. நல்ல பசியைத் தூண்டும், செரிமானத்துக்கு நல்லது...

என்ன நண்பர்களே! நீங்களும் இந்த மருந்தை தயாரித்து, சுவைத்து தீபாவளியை இனிமையாக கொண்டாடுங்கள்..

எல்லோருக்கும் எங்கள் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்....


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட், வெங்கட் மற்றும் ரோஷ்ணி
திருவரங்கம்.