Friday, October 25, 2013

சுண்டல் கலெக்‌ஷனும், பதிவர் சந்திப்புகளும்!!!!நவராத்திரி முடிந்து இத்தனை நாட்கள் கழித்து சுண்டல் கலெக்‌ஷனா!!! என்று நினைக்காதீர்கள். எழுத வேண்டியது என்று நிறைய யோசித்து மனதுக்குள் வைத்துக் கொண்டு நேரமில்லாமல் எழுதாமல் விடுபட்டவை ஏராளம்….

இந்த வருட நவராத்திரியில் சென்ற வருடத்தை விட நிறைய பேர் இல்லத்துக்கு சென்று கொலுவை கண்டுகளித்தேன். விதவிதமான பொம்மைகள் செட்டு செட்டாக கண்களைக் கவர்ந்தன. புதியது எவை என்று கேட்டு அவற்றையும் ரசித்தேன். ஒரு சிலர் வீட்டில் அந்த காலந்தொட்டு தொடர்ந்து கொலுவை அலங்கரிக்கும் பழமை வாய்ந்த பொம்மைகளையும் கண்டேன்.

வழக்கம் போல் ரோஷ்ணி ”அம்மா நம்ப வீட்டிலும் கொலு வைக்கலாம்” என்று நச்சரித்தாள். புகுந்த வீட்டில் வழக்கம் இல்லாவிட்டாலும் மகளுக்காக, மாமியாரிடமும் அனுமதியும் கேட்டு தில்லியில் ஒரு சின்ன பெட்டி கொள்ளும் அளவுக்கு பொம்மைகளை வாங்கி சேகரிக்க ஆரம்பித்தேன். இந்த சூழ்நிலையில் தான் என் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்ரீரங்கத்துக்கு வந்து தற்காலிகமாக தங்கியுள்ளோம். இங்கு புதிதாக வாங்கி அதை மாற்றி என்று…….வேண்டாம். அடுத்த வருடம் அப்பாவுடன் எங்கு இருக்கிறோமோ அங்கு வைக்கலாம். அதற்கு கடவுள் வழி செய்யட்டும் என்று சொல்லி புரிய வைத்தேன்…..:)


சரஸ்வதி பூஜைக்கு சுகியனும், சுண்டலும் செய்து பூஜையை நல்லபடியாக கொண்டாடினோம். மகள் பாட்டு கற்றுக் கொள்வதால் விஜயதசமி அன்று குருவுக்கு தட்சிணை கொடுத்து நமஸ்கரித்தாள். ஒரு சில வீடுகளில் ஓரிரண்டு பாட்டுகளும் பாடினாள். தில்லியில் இருந்ததை விட இப்போ அக்கம்பக்கம் பழகுகிறாள். 

வாசலில் பீங்கான் பொம்மைகளைத் தான் விற்றுக் கொண்டிருந்தார்கள். மண் பொம்மைகளுக்கென்று தனிப்பட்ட அழகு இருக்கிறது. ஆனாலும் பராமரிப்பு, அதிகமான விலை போன்ற காரணத்தால் பீங்கானுக்கு தங்களுக்கு ஆதரவை மக்கள் தருகின்றனர். தில்லியில் உள்ள நண்பர் ஒருவருக்காக பீங்கான் பொம்மைகள் சிலதை பேரம் பேசி வாங்கினேன். அவைகள் இதோ……


அடுத்து நம்ம சீனா ஐயாவும், மெய்யம்மை ஆச்சியும் திருச்சி வருவதாகவும் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஃபெமினா ஹோட்டலில் தங்குவதாகவும், பதிவர்களை சந்திக்க விரும்புவதாகவும் தகவல் தெரிவித்து வை.கோ சாரும், தனிப்பட்ட முறையில் சீனா ஐயாவும் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள். ஆனால் அன்று நவராத்திரிக்காக என் மகளின் பாட்டு வகுப்பில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனால் என்னால் கலந்து கொள்ள இயலாததை தெரிவித்து பதில் அனுப்பியிருந்தேன். ஃபெமினாவில் சந்திப்பு நடந்த பின் திடீரென இன்ப அதிர்ச்சியாக சீனா ஐயா தம்பதிகளும், வை.கோ சாரும் எங்கள் இல்லத்துக்கே வருகை தந்திருந்தார்கள். ரிஷபன் சாரும் உடனிருக்க எங்கள் இல்லத்திலேயே ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது. உடனடியாக அவர்கள் கிளம்ப வேண்டி இருந்ததால் என்னால் உபசரிக்க முடியவில்லை….அடுத்து சென்னையில் பதிவர் விழாவில் கலந்து கொண்ட ”பாட்டி சொல்லும் கதைகள்” என்ற வலைப்பூ வைத்திருக்கும் திருமதி ருக்மணி சேஷசாயி அம்மா, தான் திருவரங்கத்திற்கு குடி வருவதாகவும் வந்த பின் தெரிவிக்கிறேன் என்று சொல்லி இருந்தார். சென்ற வாரம் என்னவருக்கு மின்னஞ்சல் மூலம் தன் முகவரியை தெரிவித்து, என்னை சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தாராம். எங்கள் வீட்டருகில் தான் அவர் இருப்பதாக தெரிந்து கொண்டு ஒரு மாலைப் பொழுதில் அவர்கள் இல்லத்துக்கு ரோஷ்ணியுடன் சென்றிருந்தேன். ”வருக வருக” என வாய்நிறைய அழைத்து உபசரித்தார்.


சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ருக்மணி அம்மாவைப் பற்றி நிறைய விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் இதுவரை 18 புத்தகங்களை குழந்தைகளுக்காக எழுதியிருப்பதாகவும், 35 வருடங்கள் தமிழ் ஆசிரியராக பணியாற்றியதையும் தெரிவித்தார். ஓய்வு நேரங்களில் ஃபேஷன் ஜுவல்லரிகள் தயாரித்து விற்பனை செய்கிறார். இது நிஜமாகவே என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம். ஏனென்றால் அவர்கள் வயது அப்படி….. அவர்கள் இல்லத்திலும் கொலு வைத்திருக்கவே பார்த்து வெற்றிலை தாம்பூலம் பெற்றுக் கொண்டோம். ரோஷ்ணிக்கு தன் கையால் செய்த காதணிகளை பரிசளித்தார். அவர்கள் எழுதிய புத்தகங்களை இரண்டையும் எங்களுக்கு தந்தார்.


விரைவில் திருச்சி பதிவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு பதிவர் சந்திப்பு நடத்த விரும்புவதாகவும் தெரிவித்தார். இந்த வாரத்தில் ஒருநாள் மாலை எங்கள் இல்லத்துக்கும் வந்திருந்தார். இப்படியாக நவராத்திரியும், பதிவர் சந்திப்புகளும் இனிமையாக நடந்தது.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

32 comments:

 1. நவராத்திரியும் , பதிவர் சந்திப்பும் அருமை. திருவரங்கம் அனைவரும் விரும்பி வந்து தங்கும் இடமாகி விட்டது.
  திருமதி ருக்மணி சேஷசாயி அவர்கள் பற்றிய விஷயங்கள் வியக்க வைக்கிறது.

  ReplyDelete
 2. பழகியவர்களாகட்டும்... புதியவர்களாகட்டும்... ஒவ்வொரு முறை பதிவுலக நண்பர்களைச சந்திக்கும் போதும் மனது மகிழ்வாகி விடுகிறது. உற்சாகம் பிறக்கிறது...! அந்த வகையில் உங்களுக்கு அமைந்த இனிய சந்திப்புகளைப் படித்து மகிழ்ந்தேன்! ரோஷ்ணிப் பாப்பா பாட்டெல்லாம் பாடுதா...? சொல்லவே இல்ல! அடுத்த முறை வர்றப்ப (எனக்கு லக் இருந்தா) கேட்டுரணும்...!

  ReplyDelete
 3. இனிய சந்திப்புகள்... வாழ்த்துக்கள்... திருச்சியில் எப்போது பதிவர் சந்திப்பு நடக்கப் போகிறது...? கலந்து கொள்ள ஆவல்...

  ReplyDelete
 4. அம்மையப்பன் போன்ற சீனா ஐயாவ மற்றும் அவரது துணைவியாரையும், ருக்மணி பாட்டியையும் நல்ல நாளில் சந்தித்து அவங்க ஆசியை பெற்றிருக்கிறீர்கள். ம்ம்ம்ம் பொறமையா இருக்குங்கண்ணி!

  ReplyDelete
 5. ரோஷ்ணியின்'குறையொன்றும் இல்லை 'குறைவில்லாமல் தொடரட்டும் ...
  பதிவர்களின் அன்புப் பிணைப்பும் தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி !
  த.ம 5

  ReplyDelete
 6. பதிவர் சந்திப்பு பற்றிய விபரங்கள் இனிமை!
  பீங்கான் பொம்மைகள் மிக அழகாக இருக்கின்றன!

  ReplyDelete
 7. //சரஸ்வதி பூஜைக்கு சுகியனும், சுண்டலும் செய்து பூஜையை நல்லபடியாக கொண்டாடினோம்.//

  அடடா, சீயன் செய்திருந்தீர்களா? சொல்லவே இல்லையே ;((((( [நாக்கில் நீர் ஊறுகிறதே]

  >>>>>

  ReplyDelete
 8. //தில்லியில் உள்ள நண்பர் ஒருவருக்காக பீங்கான் பொம்மைகள் சிலதை பேரம் பேசி வாங்கினேன். அவைகள் இதோ……//

  அருமையான செலெக்‌ஷன்கள். பாராட்டுக்கள். அதுவும் அந்தப்பசுவும் கன்றும் படு ஜோர்.

  >>>>>

  ReplyDelete
 9. //ரிஷபன் சாரும் உடனிருக்க எங்கள் இல்லத்திலேயே ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது.//

  எப்படி நாங்கள் நம்புவது? படத்தில் உங்களையும் காணோம். திரு. ரிஷ்பன் சாரையும் காணோமே ! ;)))))

  ரோஷ்ணி எடுத்த படங்கள் அருமையாக வந்துள்ளன. என் ஸ்பெஷல் பாராட்டுக்களை அவளுக்குச் சொல்லுங்கோ.

  >>>>>

  ReplyDelete
 10. //உடனடியாக அவர்கள் கிளம்ப வேண்டி இருந்ததால் என்னால் உபசரிக்க முடியவில்லை….//

  எல்லோர் வீட்டிலும் அம்மாமண்டபக் காவிரித்தண்ணீர் மட்டுமே அருந்தக் கிடைத்தது. அதுவே மிகவும் சந்தோஷம், எங்களுக்கு..

  >>>>>

  ReplyDelete
 11. //ருக்மணி அம்மாவைப் பற்றி நிறைய விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் இதுவரை 18 புத்தகங்களை குழந்தைகளுக்காக எழுதியிருப்பதாகவும், 35 வருடங்கள் தமிழ் ஆசிரியராக பணியாற்றியதையும் தெரிவித்தார். ஓய்வு நேரங்களில் ஃபேஷன் ஜுவல்லரிகள் தயாரித்து விற்பனை செய்கிறார். இது நிஜமாகவே என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம். ஏனென்றால் அவர்கள் வயது அப்படி…..//

  உண்மையிலேயே மிகவும் பாராட்டுக்குரியவர். எனக்கும் இவர்கள் தன் ஸ்ரீரங்கம் விலாசம், போன் நம்பர் எல்லாம் கொடுத்து சந்திக்க விரும்புவதாக மெயில் கொடுத்துள்ளார்கள்.

  நிச்சயமாக சந்திப்பேன் என சொல்லி இருக்கிறேன்.

  இவரைப்பற்றி “உரத்த சிந்தனை” பத்திரிகை மூலம் எனக்கு ஏற்கனவே நிறைய விஷயங்கள் தெரியும்.

  ஏதோ ஒரு அறக்கட்டளை போல நடத்தி, சிறு கதை எழுத்தாளர்களுக்கு போட்டிகள் வைத்து, பரிசுகளும் தந்து வருகிறார் எனக்கேள்வி.

  மிகவும் திறமையானவர்கள். இந்த வயதிலும் சுறுசுறுப்பாக ஆர்வமாக உள்ளவர்கள்.

  போய்ப் பார்த்து நமஸ்கரிக்க வேண்டும் என நினைத்துள்ளேன். ப்ராப்தம் வர வேண்டும். பார்ப்போம்.

  >>>>>

  ReplyDelete
 12. ’சுண்டல் கலெக்‌ஷனும், பதிவர் சந்திப்புகளும்!!!!’ அருமையான பதிவு.

  எனக்கு அந்த சுண்டலைவிட சீயத்தின் மேல் ஒரு கண் இன்னும் உள்ளது. இன்றோ நாளையோ எங்காத்து மாமியை செய்யச்சொல்லி இப்போதே தாஜா செய்ய ஆரம்பிக்க இருக்கிறேன்.

  பாராட்டுகள். வாழ்த்துகள், நன்றிகள்.

  ReplyDelete
 13. நவராத்திரியும், பதிவர் சந்திப்புகளும் இனிமையாக நிறைவளித்தது ..!

  ReplyDelete
 14. சொல்வது எதுவானாலும் அதனை அழகாகச் சொல்கிறீகள்! பதிவு நன்று!

  ReplyDelete
 15. பண்டிகையை நன்கு கொண்டாடியது குறித்து மகிழ்ச்சி .
  பதிவர் சந்திப்பு பற்றிய விவரம் ,போட்டோ அருமை .
  நான் சென்ற வாரம் சமயபுரம் கோவில் சென்று திரும்பி வரும் போதும் , நேற்று வைகை ரயிலில் சென்னை திரும்பி வரும்போது ரயில் ஸ்ரீரங்கம் ஸ்டேஷன் தாண்டும்போதும் தங்களை நினைத்துக்கொண்டேன் . நான் படித்தது திருச்சி என்பதால் எனக்கு திருச்சி ஸ்ரீரங்கம் ஏரியா ரொம்பவே பிடிக்கும்.அந்த இடங்களுக்கு சென்று மலரும் நினைவுகளில் ஒரு இரண்டு நாட்கள் ஆழ்ந்தேன் .

  ReplyDelete
 16. அருமை... சீனா அய்யா இந்தியா வந்துவிட்டாரா.. வை.கோ, ரிஷபன் சாரை எல்லாம் நிச்சயம் சந்திக்க வேண்டும்...

  ருக்மணி அம்மாவை பதிவர் சந்திப்பில் பார்த்திருக்கிறேன் சந்தித்தது இல்லை...

  வாத்தியார் வெகுநாளாக என்னை திருச்சி அழைத்துக் கொண்டுள்ளார், சந்தர்ப்பம் கிடக்கும் பொழுது கிளம்பி வந்துவிடுகிறோம்

  உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள், ரோஷ்ணியை கேட்டதாகச் சொல்லுங்கள்.... :-)))))

  ReplyDelete
 17. கலெக் ஷன் நன்றாக உள்ளது. சுகியன் நானும் போட்டோ எடுதது வைத்தேன். போடலை. நல்ல ஸென்டர். திருச்சி. எல்லோரையும் பார்க்க முடிகிரது. அழகாக எழுதியிருக்கிராய். பாராட்டுகள் அன்புடன்

  ReplyDelete
 18. மிகவும் அருமை! பதிவர்களைச் சந்தித்த உங்கள் மகிழ்ச்சி எழுத்தினிலேயே தெரிகிறது.

  சந்திப்புக்கள் இன்னும் தொடரட்டும்...

  பகிர்வுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 19. படங்களுடன் பதிவு மிக மிக அருமை
  திருச்சி பதிவர் சந்திப்பெனில்
  எங்களையும் (மதுரை ) சேர்த்துக் கொள்ளுங்கள்
  உங்கள் அனைவரையும் ஒரு சேர
  சந்திக்கும் வாய்ப்பு அபூர்வம் அல்லவா /
  மனம் கவர்ந்த பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. இனிய சந்திப்புகளைப் பற்றி சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

  ReplyDelete
 21. பதிவர் சந்திப்பு பற்றிய விபரங்கள் இனிமை!

  ReplyDelete
 22. பார்க்கவே சாப்பிட ஆசையாய் ..

  ReplyDelete
 23. ருசிக்கத்தூண்டும் சுண்டல்... அருமையான பதிவர் சந்திப்பு... சீனா ஐயா இளமையாக இருக்கிறார்... வாழ்த்துக்கள்... த.ம.9

  ReplyDelete
 24. இனிய சந்திப்புக்கள்...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 26. இன்றைய வலைசர அறிமுகத்தில் நீங்களும்.. மகிழ்வுடன் வாழ்த்துக்களும்!

  என் வலைத்தளத்திலும் உங்கள் தொடர்(பு)வு கண்டேன்.. மிக்க நன்றி!

  ReplyDelete
 27. சுகியன் எல்லாம் மறந்தே போச்சு!
  நடக்கட்டும் பதிவர் சந்திப்புகள்.
  //என் உடல்நலக்குறைவு காரணமாக//
  அரங்கன் அருளால் பூரண நலம் அடைய வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 28. இதம் தரும் வகையில் இனிய சந்திப்புகள்.பகிர்வுக்கு நன்றி ஆதி.

  ரோஷ்ணியின் விருப்பம் அடுத்த நவராத்திரியில் நல்லபடியாக நிறைவேறட்டும்.

  ReplyDelete
 29. இப்பதிவை வாசித்து, கருத்திட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 30. ஆதி வெங்கட்டுக்கு, வணக்கம். என்னைப் பற்றி நண்பர்களுக்கு எடுத்துக் கூறிய தங்களின் அன்புக்கு என் நன்றி. பதிவினை சுவாரசியமாக அளித்துள்ளீர்கள். பாராட்டுகள்.

  ReplyDelete
 31. ருக்மணியம்மா - தங்களின் வரவுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. தங்களைப் பற்றிச் சொல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…