Monday, October 14, 2013

பெருங்கடலில் தத்தளித்தேன்....

பட உதவி: கூகிள்.பெருங்கடல் என்றதும் நான் ஏதோ நீச்சல் தெரியாது நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தத்தளித்தேன் என்று நினைத்தீர்களானால் நான் அதற்கு பொறுப்பல்ல….:)))முதலில் திருச்சியில் ஏது கடல்? இங்கு நான் கடல் என்று சொன்னது ஜவுளிப் பெருங்கடல்…..:)) அதாங்க! தீபாவளி ஷாப்பிங் செய்ய திருச்சியின் புகழ்பெற்ற ஜவுளிக்கடலான ”சாரதாஸ்”க்கு சென்றிருந்தோம். நீங்களும் எங்களுடன் தத்தளிக்க வாங்களேன்.....…:))மகள் புதுத்துணி எடுக்க என்னை நச்சரிக்க ஆரம்பித்தாள். இன்னும் ஒரு மாதம் இருக்கே, அதனால் ஒரு பதினைந்து நாள் கழித்து செல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவங்கப்பாவோ இப்போவே போயிட்டு வந்துடு…. இல்லையென்றால் அந்த ரோட்டிலேயே கால் வைக்க முடியாது என்று பயமுறுத்தவே…. ஷாப்பிங் செய்ய ஏற்ற நாளாக, விடுமுறைநாளான காந்தி ஜெயந்தியை தேர்ந்தெடுத்தேன்.மகளையும் அழைத்துச் சென்றால் தான் அவளுக்கேற்ற உடைகளை அளவு வைத்து பார்த்து வாங்க முடியும். பக்கத்து வீட்டிலும் சாரதாஸ்க்கு செல்ல வேண்டும் என்று சொல்லவே, அன்று காலையில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு கிளம்பினோம். மெயின் கார்டில் இறங்கி N.S.B ரோடில் நுழைந்தோம். நல்ல கும்பல். இந்த சாலை தி.நகர் ரங்கநாதன் தெருவை விட மோசம்..... எப்போதும் கும்பல் தான். துணிக்கடைகள், நகைக்கடைகள், உணவகங்கள், சாலை வியாபாரிகள், நடுநாயகமாக மலைக்கோட்டை தாயுமானவசுவாமி, உச்சிபிள்ளையார் கோயில்….கிளம்பும் போதே சாரதாஸ்க்கு மட்டும் தான் செல்ல வேண்டும். வேறு எங்கும் இப்ப வேண்டாம்னு முடிவெடுத்திருந்ததால் நேராக சாரதாஸ் உள்ளே நுழைந்தோம். குளிர்சாதன வசதியுடன் இரண்டு தளங்களைக் கொண்டது. தளம் தான் இரண்டே தவிர, அது இருக்கும் இடம் மிகப் பெரியது. ஒரே சமயத்தில் ஆயிரக் கணக்கில் மக்களை இங்கே பார்க்க முடியும். கீழே ஆண்களுக்கும், சிறுவர்களுக்கும், மற்றும் புடவைப் பிரிவு…. மேலே குழந்தைகளுக்கு, சிறுமிகளுக்கு, மற்றும் சுடிதார் பிரிவு…முதலில் பசங்க வேலையை முடித்து திருப்திபடுத்தி விட்டால் நம்மளை தொந்தரவு பண்ண மாட்டாங்க என்று நினைத்து……. தேடுதல் வேட்டையில் இறங்கினோம். பக்கத்து வீட்டில் அவங்க பையனுக்கும், என் மகளுக்கும் முதலில் தேர்வு செய்ய ஆரம்பித்து ஒருவழியாக முடித்தோம். மகள் ஒரு பிங்க் ராணி. எல்லாமே அவளுக்கு பிங்க்கில் தான் வேண்டும்……:)) வேறு எந்த கலரை எடுத்து வைத்து அழகு பார்த்து எடுத்துச் சொன்னாலும், மண்டையை ஆட்டி விட்டோ, அல்லது முகத்தை தூக்கி வைத்துக் கொண்டோ, கடைசியில் பிங்க்கைத் தான் தேர்வு செய்வாள். வழக்கம் போல இம்முறையும் அதுவே நடந்தது……:))மேல் மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே பார்த்தால் அப்பப்பப்பா…… இந்த கும்பலிலிருந்து தப்பித்து எப்படி வீட்டுக்குப் போகப் போகிறோமோ தெரியலையேன்னு மலைப்பாக இருந்தது……:)) அடுத்து வீட்டுப் பெரியவர்களுக்கும், என்னவருக்கும் தேர்வு செய்தேன். அது போலவே  என்னுடன் வந்த தோழியும் அவர்கள் குடும்பத்தாருக்கு தேர்வு செய்து முடித்தார்கள். அடுத்து என்ன? இறுதியாக புடவைப் பிரிவுக்குள் நுழைந்தோம்.இருப்பதிலேயே அதிக கும்பலே இங்கு தான் இருந்தது…..:)) எந்த மாதிரிப் புடவை எடுக்கலாம் என்று எந்த யோசனையும் எங்களிடம் இல்லை…..:)) பார்த்துக் கொண்டே கும்பலில் நகர்ந்தோம். பக்கத்து வீட்டில் அவர்கள் ஒரு இடத்தில்  பார்க்கத் தொடங்க, நான் ஒரு இடத்தில் பார்க்க ஆரம்பித்தேன். கல்யாணத்திற்காக உறவினர்களுக்கு வைத்துக் கொடுக்கவென்று புடவைகள் வாங்க ஒரு கூட்டம் என்னருகில் வந்து நின்று கொண்டு, அவர்கள் பாட்டுக்கு அடுக்கி வைத்துக் கொண்டே வந்தார்கள். அவ்வளவு கும்பலிலும் “இந்த புடவையை கொஞ்சம் காட்டுங்க” என்ற என் மெல்லிய குரல் காதில் கேட்டவுடன் அதெல்லாம் அவங்க எடுத்து வெச்சுட்டாங்கம்மா! என்ற பதில் வந்தது….. இப்படியே மூன்று நான்கு முறை…. கடைசியில் சடாரென்று ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன்…..இங்குள்ள பில் போடும் தொந்தரவுக்காகவே நான் இங்கு வரத் தயங்குவேன். காரணம்…. ஒவ்வொரு துணி எடுத்ததுமே பில் போட எடுத்துச் செல்வார்கள். அவர்கள் பின்னேயே சென்று கார்டா, கேஷா என்று சொல்லி பணத்தை அல்லது கார்டை குடுத்ததும், அடுத்து இன்னொரு இடத்தில் பில்லை கொடுத்து இன்னொரு இடத்தில் துணியை வாங்க வேண்டும். அலுத்துக் கொண்டாலும், இந்த கும்பலில் இப்படிப்பட்ட பில்லிங் இல்லாவிட்டாலும் கடினம் தான். இப்படி ஒவ்வொரு துணிக்கும் அலைந்து அலைந்து ஒருவழியாக ஆகி விட்டோம். கடைசியில் எல்லாவற்றையும் சரிபார்த்து எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம்.மதியமாகி விட்டது. பசி வேறு வயிற்றை கிள்ளுகிறது. அருகில் இருந்த உணவகத்துக்கு சென்று சாப்பிட நினைத்து, உள்ளே பார்த்தால் அங்கேயும் வரிசை……:)) சரி! இது வேலைக்கு ஆகாது என்று அடுத்துள்ள வசந்த பவனுக்கு சென்றோம். சாப்பாடு என்றால் மேல் மாடியிலாம். டிபன் கீழே….. என்னுடன் வந்தவர்கள் எல்லாம் டிபனுக்கு ஜே சொல்ல… நான் மட்டும் என்ன மேலே சென்று தனியாக சாப்பிடுவது என்று நானும் டிபனையே சாப்பிட்டேன். ஜூஸ் ஆர்டர் செய்து குடித்து விட்டு வெளியே வந்து பேருந்தை பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்….பத்து நாட்கள் கழித்து சென்றிருந்தால் நிச்சயம் நெருக்கடியில் அவ்ளோ தான்……:))


என்ன நண்பர்களே! உங்க வீட்டிலும் ஷாப்பிங் எல்லாம் முடிந்து தீபாவளி வந்துடுச்சா?
மீண்டும் சந்திப்போம்,ஆதி வெங்கட்

திருவரங்கம்.

24 comments:

 1. உண்மையான நல்ல அனுபவத்தை [ஒரு சில அவஸ்தைகளை]அனுபவத்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். 1000 கடைகள் இருந்தாலும் சாரதாஸ் போல வரவே வராது. நானும் அங்கு மட்டுமே தான் செல்வேன். அங்குள்ள VARIOUS VARIETIES போல வேறு எங்கும் கிடைக்காது. கும்பல் 365 நாட்களுமே அங்கு அதிகம் தான். தீபாவளி என்றால் கேட்கவே வேண்டாம். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வை.கோ சார்,

   உங்க ஏரியாவில் உள்ள கடையைப் பற்றி முதல் ஆளாய் வந்து கருத்துரை தெரிவித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்.

   Delete
 2. காந்தி ஜெயந்தியில் தீபாவளி அலைச்சல் ...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

   தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 3. தமிழ்நாட்டில் மிக குறைந்த விலையில் ஜவுளிகள் கிடைக்கும் ஒரே இடம் சாரதாஸ்... ஏனென்றால் எங்களிடம் அப்படி வாங்குகிறார்கள்... இருக்கிற ஜவுளிகளை காசாக்க அனைவரும் நாடுவது சாரதாஸ்...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன்,

   தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 4. ஆஹா...அன்பருக்கு ஓய்வு அம்மணி கடைக்கு வர்றீங்களா வாங்க அம்மணி வாங்க .வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க கவியாழி கண்ணதாசன் சார்,

   அன்பருக்கு இவ்வளவு பொறுமையும் இருக்காது....:)) நேரமும் இல்லை...:)

   தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 5. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன்,

   டெம்ப்ளேட் மாற்றியதால் வந்த வினை. ...:( என்னவர் சரி செய்து கொடுத்து விட்டார்....:)

   தங்களின் அக்கறைக்கு மிக்க நன்றி.

   Delete
 6. ஜவுளிக்கடலில் நீந்தி கரையேறிய
  அனுபவத்தைச் சொல்லிய விதம் அருமை
  இனிய விஜய தசமி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரமணி சார்,

   தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 7. தீபாவளி வந்தாச்சா... சாரதாஸ் ஜவுளிக்கடலில் நீந்திய அனுபவத்தைச் சொன்னவிதம் அருமை.
  எங்க வீட்டம்மாவும் மதுரை போத்தீஸ்ல நீந்திட்டு வந்து கதையா சொன்னாங்க ஸ்கைப்பில்...
  பிறந்தது சிவகங்கை சீமையா... இன்றுதான் உங்கள் புரோப்பைலில் பார்த்தேன்.
  நமக்கு தேவகோட்டைக்கு அருகில் ஒரு சிறு கிராமம்தான் சொந்த ஊர் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சே.குமார்,

   தங்களுக்கு தேவகோட்டை என்று தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. ஓ! உங்க வீட்ல போத்தீஸா....

   தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 8. தீபாவளி நெருங்க எங்கும் கும்பல் தான். ஒரு மாதம் முன்னே வாங்குவது தான் நல்லது. நல்லா எழுதியிருக்கீங்க ஆதி!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தியானா,

   தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 9. ஜவுளி கடலில் நீந்தி முத்துக்கள் எடுத்து ,அதன் களைப்பு நீங்க வசந்தபவனில் உணவு அருந்திய அனுபவம் அருமை ஆதி.
  இங்கு தீபாவளி என்பதால் நாங்கள் முன்பே எடுத்து வந்து விட்டோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதிம்மா,

   நல்லவேளை! நீங்க முன்னாடியே எடுத்துட்டீங்க...:)

   தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 10. வாழ்த்துகள் ஆதி. சாரதாஸ் அந்த நாட்களிலேயே தலை சுத்தும்.
  வீராங்கனை பட்டம் தான் கொடுக்க வேண்டும்.

  தி.நகர் நல்லி தான் போகணும்னு நினைப்பேன். பிறகு எங்க ஊரில் இருக்கும் நல்லியிலேயே
  வேஷ்டி,புடவைகள் எடுத்துவிடுவேன்.

  உறையூர் தாதா கடை இன்னும் இருக்கிறதா அங்கே.?
  ஒரிஜினல் ஜரிகை அப்போது கிடைக்கும். 1974இல் என் பட்டுப் புடவை 300ரூபாதான்:)
  அதான் நெருக்கமான குயில் கண் பார்டர் சாண் அகலத்துக்கு.:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லிம்மா,

   திருச்சி பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாதும்மா.... திருமணமானதிலிருந்து தில்லியிலிருந்து விடுமுறைக்கு வருவோம். தற்போது இங்கேயே வாசம். அவ்வளவு தான்....:))

   தில்லியிலும் 2011ம் ஆண்டு தீபாவளிக்கு அங்குள்ள நல்லியில் தான் ஷாப்பிங் செய்தோம். கொள்ளை விலை....:((

   தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 11. எப்படியோ ஜவுளிக் கடலில் நீந்தி வெளியே வந்துவிட்டீர்கள் - அதுவும் தீபாவளி ஷாப்பிங் முடித்து. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரஞ்சனிம்மா,

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

   Delete
 12. எந்த பெருங்கடல் என்று பார்த்தால் ஜவுளிப் பெருங்கடலா? எந்த பூகோளப்படத்திலேயும் இல்லாத ஒரு கடல். அழகான தலைப்பு. என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க காமாட்சிம்மா,

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…