Thursday, October 3, 2013

வீட்டுக்கு பின்னே படகு!!! மிகவும் கொடிய மிருகம் எது?


(கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு நாள் – 2)

என்ன நண்பர்களே! எல்லோரும் கொஞ்சம் இளைப்பாறி விட்டு தயாராகி விட்டீர்களா? வாங்க நாம இப்போ தென்னிந்திய கலை மற்றும் பண்பாட்டை விளக்கும் ஒரு இடத்துக்கு போகலாம். போன பகுதியில், நம்ம வல்லிம்மா சொன்ன மாதிரி அந்த இடம் தக்ஷிண் சித்ராதான்.

மிகப்பெரிய இடத்தில் மாநில வாரியாக வீடுகள், அந்த ஊரின் பொருட்களை விற்கும் கடைகள், நடன நிகழ்ச்சிகள் நடைபெற இடம் என சிறப்பாக செய்திருக்கிறார்கள். ரிசப்ஷனில் நம்முடைய நுழைவுச்சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். முதலில் கேரள வீடுகளை பார்க்க ஆரம்பித்தோம். திருவனந்தபுரம், கோழிக்கோடு, கோட்டயம் போன்ற இடங்களில் இருந்த அந்த கால வீடுகளைப் போல் உருவாக்கி அந்த குடும்பத்தினர் பயன்படுத்திய பொருட்களோடு இங்கு வைத்திருக்கிறார்கள். ஓட்டு வீடு, மாடி வீடு, வீட்டுக்குள்ளேயே பரணுக்கு ஏணி போட்டு ஏறுவது போல் சென்றால் அங்கும் பல அறைகள். அவர்களின் பூஜையறை, வரவேற்பறை, அறைக்குள் அறை, சமையலறை, வெப்பத்தை தணிக்க வெட்டிவேர் தொங்கவிட்ட படுக்கைகள் என ஆச்சரியப்படுத்துகின்றன. இதே போல் வீட்டுக்கு பின்னேயே படகை தொங்கவிட்டு வைத்திருக்கிறார்கள்.
அடுத்து தமிழகத்துக்கு சென்றோம். அங்கு திருநெல்வேலி அக்ரஹார வீடு, பாய் முடைபவரின் மண் வீடு, செங்கல்பட்டு குயவர் வீடு, காஞ்சிபுரத்து நெசவாளர் வீடு, தஞ்சாவூர் விவசாயியின் வீடு, செட்டி நாட்டு வீடுகள் எனப் பார்க்க நிறைய வீடுகளும், கோயில் தேர், நெசவு கண்காட்சி, கிராமத்து அய்யனார் என நிறைய இருக்கிறது. அனைத்தையும் ரசித்தபடியே சுற்றி வந்தோம்.

ஒவ்வொரு மாநிலத்தவரின் பொருட்களில் எவ்வளவு ரகங்கள். சமையலறைக்கு சென்று எட்டி பார்த்தால், அகப்பை, பாத்திரங்கள், கரண்டி மாட்டும் ஸ்டாண்டுகள், தேங்காய் துருவி, அஞ்சறைப் பெட்டி, முறம், சொளகு (இது மதுரைக்காரர்களின் முறம்), பானை, குடம் என அழகு வாயந்த பொருட்கள் கண்களைக் கவர்கின்றன. அடுத்தடுத்து ஆந்திர வீடுகளும், கர்நாடக வீடுகளும் பார்த்தோம். இவையிரண்டிலும் இரண்டிரண்டு மாடல்கள் தான் இருந்தன.

கைவினைப்பொருட்களின் கடைகளும், துணியில் சித்திரங்களை ஒருவர் வரைந்து கொண்டிருக்க அங்கு சென்று பார்த்தோம். அடுத்து கண்ணாடியில் அழகான சிற்பங்களை ஒருவர் செய்து காண்பித்தார். பள்ளிச் சிறுமிகள் மாட்டு வண்டியில் சுற்றி வர அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு கிளம்பினோம். இங்கு வந்து விட்டால் அரைநாள் ஓடி விடுகிறது. நிதானமாக பார்க்கலாம். உணவருந்த இங்கு ரெஸ்டாரண்ட்டும், குழந்தைகள் விளையாட இடமும், பூக்களும், வெளிநாட்டவர்களும் என கண்ணுக்கு விருந்து தான்.


நாங்கள் இங்கு நுழையும் போது ஒரு புதுமணத் தம்பதிகளை பூக்களின் நடுவில் வைத்து போட்டோகிராஃபர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் சுற்றிப் பார்த்து விட்டு வெளியே வரும் போதும் அதே நிலை தான்….:))


சரி! அடுத்து நாங்கள் சென்றது முட்டுக்காடு படகு குழாமுக்கு. நீங்களும் வாங்க! உள்ளே செல்லலாம். படகில் சவாரி செய்வதற்கான நமக்கான சீட்டை வாங்கிக் கொண்டு எங்களுக்கான படகுக்கு சென்றோம். நாங்க மூன்று பேர் தான் என்பதால் துடுப்பு படகை என்னவர் தேர்வு செய்தார். மோட்டார் படகை விட இதில் தான் த்ரில்லிங்காக இருக்கும் எனச் சொன்னதால் அதில் சென்று அமர்ந்தோம். அரை மணிப் படகில் சந்தோஷமாக பயணம் செய்தோம். பாலத்திற்கு அடியில் செல்லும் போதும், அங்கிருந்த பறவைகளின் அருகில் செல்லும் போதும் அருமையாக இருந்தது. உற்சாகமான எங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஆளுக்கொரு குல்ஃபியை ருசித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.அடுத்து நாம் செல்லப் போவது ஒரு பண்ணைக்கு…. ஆமாங்க! முதலைப் பண்ணைக்கு தான் சென்றோம். எங்கெங்கு காணினும் முதலைகளும், அதன் குட்டிகளும் தான். ஒருசில ஆமைகளும் இருந்தன. மரங்களடர்ந்த மிகப்பெரிய இடத்தில் பலவகையான முதலைகளையும், அதன் வயது, உணவு, எண்ணிக்கை, அதன் இருப்பிடம் போன்ற தகவல்களோடு பராமரித்து வருகிறார்கள். கடல் முதலை, சதுப்பு நில முதலை, சைமீஸ் முதலை, நைல் முதலை, மலேஷியன் கரியால் என பலவகைப்பட்ட முதலைகள், தண்ணீருக்குள்ளேயும், வெளியேயும், வாயைத் திறந்த நிலையிலும் இருந்தன.

அவைகளை துன்புறத்தக் கூடாது என்பதை விளக்கும் படங்கள் ஆங்காங்கே இருந்தன. நம்மை அவற்றின் நிலையில் வைத்து பார்க்கும் படங்கள் நம்மை நிச்சயம் யோசிக்க வைக்கும். REPTILE HOUSEம் இங்கு இருந்தது. பாம்புகள் சமத்தாக தூங்கிக் கொண்டிருக்கவே பார்த்து வெளியே வந்தோம். இன்னொரு இடத்தில் பாம்பின் விஷத்தை எடுப்பதை காண்பிப்பார்களாம். அதைப் பார்க்கும் அளவுக்கு தைரியம் இல்லாததால் வேண்டாம் என்று வந்து விட்டேன்…..:))


இந்த பண்ணையில் ஓரிடத்தில் ஒரு மரப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதன் மேல் உலகிலேயே அபாயகரமான மிருகம் அதன் உள்ளே இருப்பதாக எழுதி வைக்கப்பட்டிருந்தது. திறந்து பார்த்தால்…… உள்ளே என்ன இருந்திருக்கும் என பின்னூட்டத்தில் சரியாக சொல்பவர்களுக்கு, ஒரு பரிசு காத்திருக்கிறது. என்ன நண்பர்களே சட்டுனு சொல்லுங்க பார்க்கலாம்….:)


அடுத்து நாம புலியை அதன் குகையிலேயே சென்று சந்திக்கப் போகிறோம்…… அது வரை…… என்ன…. சற்றே இளைப்பாறல் தான்….:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


35 comments:

 1. //உள்ளே என்ன இருந்திருக்கும் என பின்னூட்டத்தில் சரியாக சொல்பவர்களுக்கு,// உள்ளே இருப்பது கண்ணாடி, கதவைத் திறந்து பார்த்தால் பார்க்கும் ஆட்களே தெரிவோம்! கரெக்ட்டுங்களா? :))))))

  பயணத்தொடர் நல்லா இருக்கு படிக்க!

  ReplyDelete
 2. கிச்சன் பாத்திரங்கள் அழகாக இருக்கின்றன .

  ReplyDelete
 3. உலகிலேயே அபாயகரமான மிருகம் அதன் உள்ளே இருப்பதாக எழுதி வைக்கப்பட்டிருந்தது. திறந்து பார்த்தால்…… உள்ளே என்ன இருந்திருக்கும்

  முகம் பார்க்கும் கண்ணாடியா??

  மனிதனை விட கொடிய மிருகம் ஏதாவது உண்டா என்ன...
  சான்ஸே இருக்காதே..!

  அந்த பெருமைக்குரிய பரிசினை மனிதகுலம் தான் தட்டிச்செல்லும் ..!

  ReplyDelete
 4. நல்ல படங்கள்... நாங்களும் பயணப்பட்டோம்... இன்றைய மனிதனைத் தவிர பயங்கர மிருகம் எதுவுமில்லை...!!!

  ReplyDelete
 5. சகோதரி இராஜராஜேஸ்வரி சொன்னதை ஆமோதிக்கிறேன்! சரி!தானே!

  ReplyDelete
 6. நான் இப்போது கோவளம் கடற்கரை அருகில்தான் வசிக்கிறேன்.அடுத்தமுறை என் வீட்டுக்கும் வாருங்கள் வெங்கட்

  ReplyDelete
 7. மனிதன் தான் அபாயகரமான மிருகம். எல்லாரும் சொல்லி இருக்காங்களே! :)) இப்படி எல்லாம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருப்பதே இன்னிக்குத் தான் தெரியும். சென்னையிலேயே இருந்தும் இதெல்லாம் தெரிஞ்சு வைச்சுக்கலை. மஹாபலிபுரம் மட்டும் தெரியும். அதுவும் எப்போவோ 40 வருடங்கள் முன்னர் போனது.

  ReplyDelete
 8. மனுசனை விடக்கொடிய மிருகம் உலகத்தில் உண்டா?

  நிலைக்கண்ணாடிதானே வச்சுருந்தாங்க?

  நாங்க போனபோது மரப்பெட்டி எல்லாம் இல்லை. முதலைகள் நிலமை படுமோசமா இருந்துச்சு. நகர இடம் இல்லாமல் ஒன்றின் மேல் ஒன்று:(

  ஆனால் அது ஆச்சு 19 வருசம். இப்போ நிலை முன்னேறி இருக்குபோல1

  ReplyDelete
 9. முகம் பார்க்கும் கண்ணாடியில் உங்களது முகத்தையே பார்க்கும் போது சிறிது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்... நாமே அந்த கொடிய மிருகம்..... என்ன சரியா ????

  ReplyDelete
 10. ஆதி..ஈஸி ஆரை செமையக சுற்றிப்பார்த்து விட்டு அருமையாக படங்களெடுத்து பகிர்ந்து இருக்கீங்க.ரொம்ப நன்றாக உள்ளது..

  //அடுத்து நாம புலியை அதன் குகையிலேயே சென்று சந்திக்கப் போகிறோம்……// ரொம்ப சஸ்பென்சாக முடித்து இருக்கீங்க..சிக்கிரம்...

  ReplyDelete
 11. படங்களுடன் பகிர்வு அருமை
  ஆவலுடன் தொடர்கிறோம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. நல்லாயிருக்குங்க பகிர்வும் படங்களும். எல்லோரும் சொன்னது தான் எனக்கும் தோணுது.

  ReplyDelete
 13. படங்களும் கூடவே விரிவுரையும் அருமை ஆதி. அந்த அடுப்புகளைப் பார்க்கும் போது அம்மா,பாட்டிகளின் அடுப்புகள்ம் அதிலிருந்த் சமைத்த அருமையான உணவுகளும் நினைவுக்கு வந்தன.

  குயவர் குடியிருப்பில் ஏதாவது வாங்க முடிந்தததா. அழகழகான சொப்புகள் கிடைக்குமே.
  அழகான இடம்பா.. முதலைப் பண்ணையில் ஒரு இடத்துக்கும் போக மாட்டேன் மற்றவர்கள் போகும்போது வாசலிலேயே உட்கார்ந்துகொள்வேன். பல்லி ரூபத்தில் முதலை வந்து விடுமோனு பயந்து கொண்டே:)

  ReplyDelete
 14. படங்களும் பயணக்கட்டுரையும் வெகு அருமை. ரஸித்தேன். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 15. படம் ஐந்தில் அந்த கண்ணாடியில் செய்துள்ள பொம்மைகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

  என்னிடமும் அதுபோல ஓர் சைக்கிள் ஓட்டும் பெண்ணின் பொம்மை உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 16. படகில் பயணிக்கும் செல்வி. ரோஷ்ணியின் படமும் ரஸிக்கும்படியான பின்னனியுடன் உள்ளது.

  சாதாரண பின்னனி மட்டும் அல்ல.

  அழகான இரட்டைப்பின்னல் பின்னிய பின்னனியும் கூட. ;))))) வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. தக்ஷிண் சித்ரா எல்லாமே நன்றாக இருந்தது. முதலைகள், பாம்புகளை விட கொடிய மிருகம் ஒன்று என்றால் நாம் தானே?

  ReplyDelete
 18. Very yaar saatchaath naame dhaan :-)

  ReplyDelete
 19. Veery yaar saatchaath naame thaan :-)

  ReplyDelete
 20. கண்ணாடியில் பார்ப்பவர் முகம் தெரியும் ,சரியா ?

  ReplyDelete
 21. படங்களுடன் பகிர்வு அருமை...

  ReplyDelete
 22. பயனுள்ள பயணக் கட்டுரை! பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
 23. தட்சிண் சித்ரா பற்றி அறிந்தேன். வீடுகளின் படங்கள் இன்னும் நிறைய பகிர்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. படகு சவாரி செய்யும் ரோஷ்ணி அழகு. கொடிய மிருகம் அனைவரும் குறிப்பிடுவது போல் நாம்தானே...
  பகிர்வுக்கு நன்றி ஆதி.

  ReplyDelete
 24. நாங்க போயிட்டு வந்த நினைவுகளை கிளப்பி விட்டது உங்க பதிவு. அருமை தொடர்கிறேன்.

  ReplyDelete
 25. உங்களோடு சேர்ந்து நாங்களும் சுற்றி பார்த்தோம்...படங்கள் மிக அழகு!!

  ReplyDelete
 26. படங்கள் அருமை...ரொம்ப நாளுக்கப்புறம் உங்க பதிவுகள் படிக்கறன்...

  ReplyDelete
 27. நல்ல பகிர்வு.படங்கள் அருமை.

  ReplyDelete
 28. நன்றாக பயணக்கட்டுரை எழுதியிருக்கீங்க.. ‍படங்களும் அருமை. நான் தக்ஷிண் சித்ரா சென்றதில்லை.

  தங்கள் தளத்தை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

  என் பதிவில் பல பல்லாங்குழி விளையாட்டுக்களைப் பற்றி எழுதியிருந்தீர்கள்.. அதில் சிலவற்றை நான் விளையாண்டு இருக்கிறேன். ஆனால் விதிமுறைகள் மறந்து விட்டன. உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது அவற்றைப் பற்றி எழுத முடியுமா? எங்களுக்கு உபயோகமாக இருக்கும்..

  ReplyDelete
 29. வணக்கம் தோழி!
  இன்றுதான் உங்கள் வலைப்பூவிற்கு வருகிறேன்! என்றோ நினைத்தது இன்றுதான் கைகூடியது...

  உங்கள் சமையல்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாக அங்கு வந்து உங்களைக்கண்டு இங்கு வந்தேன்...:)
  அருமை இங்கு பகிரும் பதிவுகள்!

  பலவிடயங்களைக் கதம் பமலர்ச் சரமாக இணைத்து மணக்கவிட்டுள்ளீர்கள்!.. சிறப்பு!

  தொடர்வோரில் இணைந்துகொண்டேன். வருவேன் இனி!

  இனிய வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
 30. தங்கள் அனைவரின் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன். இதற்கான விடையையும், பரிசையும் அடுத்த பகிர்வில் சொல்லியுள்ளேன். படிக்காதவர்கள் சென்று படித்து விட்டு வாருங்கள்.

  ReplyDelete
 31. தக்ஷிண் சித்ரா படங்கள் எல்லாம் அழகு. உங்களுடன் நானும் பயணித்தேன்.

  ReplyDelete
 32. வாங்க கோமதிம்மா,

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 33. என்னங்க " தக்ஷிண் சித்ரா" வாயுக்குள் நுளையமுடியாத பெயராக இருக்கிறது.
  அகப்பை, கரண்டி கொழுவ ஒரே பலகையில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அந்தத் தாங்கி மிக அருமையான கருவி. நம் மக்களின் கலை உணர்வே அலாதியானது.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…