Tuesday, October 22, 2013

கல்லிலே கலைவண்ணம் கண்டார்! (கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு நாள் – 4)பண்டிகைகளை ஒட்டி சற்று இடைவேளை ஆகி விட்டது. வாங்க நண்பர்களே! நாம இப்போ அர்ஜூனன் தபசு, கிருஷ்ணனின் வெண்ணை உருண்டை ஆகியவற்றை கண்டுகளிக்கலாம். கல்லில் செதுக்கிய இந்த சிற்பங்கள் பண்டை காலத்தவரின் கலைநுணுக்கத்திற்கான சான்று. தென்னிந்திய கலாச்சாரத்தை பிரபலிக்கக்கூடிய ஒன்று. எழுதுவதை காட்டிலும் புகைப்படங்கள் தங்களுக்கு நிறைய தகவல்களை தெரிவிக்கும் என நினைக்கிறேன்…. இங்கு மும்மூர்த்திகளின் கோயிலும் உள்ளது. பெரியப் பெரிய பாறைகள், கலை நுணுக்கத்துடன் செதுக்கப்பட்ட மும்மூர்த்திகளின் உருவங்கள் என்று எல்லாமே ரசிக்க வேண்டியவை.

இந்த இடத்தில் குறி சொல்பவர்களும், கிளி ஜோசியம் சொல்பவர்களின் தொல்லைகளும் அதிகம். குறி சொல்பவர்கள் என்றதுமே எனக்கு ”இந்திரா செளந்தர்ராஜன்” அவர்களின் நாவல்கள் தான் நினைவுக்கு வந்தன. எங்களை விடாமல் துரத்தி வந்து தம்பி “கையை காமி தம்பி நல்ல வாக்கு சொல்றேன். உனக்கு சீக்கிரம் ஒரு ஆம்பிளைப் பிள்ளை பிறக்கும்” எனத் துரத்தி கொண்டிருந்தார். ஒருவழியாக அவரிடமிருந்து தப்பித்து ஒரு பாட்டியிடம் மிளகாய்த்தூள் தூவிய மாங்காய்த் துண்டங்களை வாங்கி அங்கிருந்த புல் தரையில் அமர்ந்து ரசித்து உண்டோம்… ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா….. என்ன! உங்களுக்கும் நாவில் நீர் சுரக்கிறதா…….:))

அடுத்து அங்கிருந்து கிளம்பிப் போகும் வழியில் டிரைவர் கலங்கரை விளக்கத்தின் மேல் ஏறி வ்யூ பார்க்கிறீர்களா? எனக் கேட்டார். காலையிலிருந்து சுற்றிக் கொண்டிருக்கிறோம். நிறைய நடந்து சுற்றிப் பார்த்தாச்சு. இதிலயும் ஏறினால் களைப்பில் கடற்கரையை ரசிக்க முடியாது என வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அடுத்து என்ன கடற்கரை கோயில் தான்.

கடல் ஓரத்தில் எழில் ஓவியமாக எழுப்பப்பட்டுள்ள இரண்டு சிவன் கோயில்களை உள்ளடக்கிய கடற்கரை கோவில் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் இராஜசிம்மன் காலத்தியவை. இதுவும் இந்திய தொல்லியல் துறைக்குட்பட்டது. அதனால் கட்டணத்தை செலுத்தி விட்டு உள்ளே சென்று பார்த்து ரசித்தோம். காலத்தின் கோலத்தால் அதற்கு முன்புள்ள சிற்பங்கள் சிதைந்திருந்தாலும் கலை நுணுக்கம் வியக்க வைக்கிறது. இனி அடுத்து கடற்கரைக்கு செல்லலாம் வாங்க…. கொஞ்சம் சுற்றி தான் செல்லணும். போகும் வழியெங்கும் கடல்வாழ் உயிரினங்கள் மக்களுக்கு சுவையான உணவாக மாறிக் கொண்டிருந்தன. நான் மூக்கை மூடிக் கொண்டு கடற்கரையில் ஆட்டம் போட ஓடினேன். உங்களுக்கு அந்த வாசனை பிடிக்குமானால் ரசித்துக் கொண்டு வாருங்கள். ….:))

சங்கு, கிளிஞ்சல் போன்றவையினால் செய்த அலங்காரப் பொருட்களின் கடைகள் வரிசையாக இருந்தன. ஒரு வெளிநாட்டவர் அங்கு ”ஊசி பாசி” விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் விலையைக் கேட்க அவரும் அழகாக ஆங்கிலத்தில் அவரிடம் உரையாடினார்…. அன்றாடம் பார்க்கும் மனிதர்களிடமிருந்து அவர்களது பாஷையை கூர்ந்து கவனித்து கற்றுக் கொண்டுள்ளார்… கடற்கரையில் குதிரை சவாரியும் இருந்தது. கடல் அலுக்காத சில விஷயங்களில் ஒன்று. அதனால் நாங்கள் அலைகளில் கால் நனைத்தும், ஓடியாடியும், புகைப்படங்கள் எடுத்தும் பொழுதை களித்தோம். இருட்டத் துவங்கி விட்டதால் அங்கிருந்து கிளம்பி சென்னையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். வரும் வழியில் டிரைவர் ஒரு கோவிலுக்கு போயிட்டு போகலாம் என்றார்.


அது தான் ”திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள்” கோவில். இது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். இது நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் 62வது ஸ்தலம். அமைதியான கிராமத்து சூழலில் இருந்த கோவிலின் உள்ளே நுழைந்தோம். மூலவர் ஆதிவராகப் பெருமாள் ,அகிலவல்லித்  தாயாரை தன் இடது தொடையில் இருத்தி நின்ற நிலையில் காட்சி தருகிறார். காலவ முனிவரின் 360 மகள்களை தினம் ஒருவராக திருமணம் செய்து கொண்டதால் இவர் நித்ய கல்யாண பெருமாள் என அழைக்கப்படுகிறார். தாயார் கோமளவல்லி. இங்கு ரங்கநாதர், ரங்கநாச்சியார், ஆண்டாள் எனத் தனித்தனி சன்னிதி உள்ளது.திருமணத் தடை நீங்க ஆணோ, பெண்ணோ இரண்டு மாலைகளை வாங்கி வந்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்து ஒன்றை பெருமாளுக்கு சாற்றி மற்றொன்றை கழுத்தில் அணிந்து கொண்டு கோவிலை 9 முறை பிரதட்சணம் செய்கிறார்கள். திருமணமானதும் தம்பதியாக சேர்ந்து வந்து பிரதட்சணம் செய்கிறார்கள். பட்டாச்சாரியார்கள் நிதானமாக நல்ல தரிசனம் செய்து வைத்தார்கள். அடுத்து எந்த சன்னிதிக்கு செல்ல வேண்டும் என்றும் வழிகாட்டுகின்றனர். பெருமாளுக்கு அணிவித்த மாலையை அங்கு வந்திருந்தவர்களுக்கு தந்த பட்டாச்சாரியார் எனக்கும் ஒன்றைத் தந்தார். மனசுக்கு சந்தோஷமாக இருந்தது.


மாமல்லபுரத்தில் ஒரு பெருமாள் கோவில் இருந்தது. “ஸ்தல சயனப் பெருமாள்”. நாங்கள் சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில் கோவில் திறக்கவில்லை. அதற்குப்பின் இரவு நேரமானபடியால் பார்க்காமலேயே கிளம்பி விட்டோம். இங்கு திருவிடந்தை வந்த பின் தான் பட்டாச்சாரியார் சொன்னார் அந்த கோவில் 108ல் 63வது ஸ்தலமாம். தரிசிக்காது விட்டு விட்டோமே என்றிருந்தது. நீங்கள் செல்லும் போது தவறாது தரிசியுங்கள்.

திருப்தியாக கோவிலை தரிசித்துவிட்டு  வெளியே வரும் போது முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களை சந்தித்தோம். முன்பு தில்லி தமிழ் சங்கத்தில் என்னவர் சந்தித்திருக்கிறார். நாங்கள் வணக்கம் சொல்லி விட்டு தில்லியில் என்றதுமே நினைவு கூர்ந்து, தன் குடும்பத்தினருக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார்.


அங்கு வந்திருந்த மக்கள் அவரைக் கண்டதும் இவர் சினிமாவில் நடித்தாரே என்று பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கேட்டுக் கொண்டிருந்த என்னவர் “ஐயா தமிழில் நல்ல புலமை பெற்றவர். அதை விடுத்து சினிமாவை மட்டுமே சொல்கிறீர்களே” என்றார்… அவரிடம் விடைபெற்று, ஒரு நாள் முழுதும் கிழக்குக் கடற்கரை சாலையை சுற்றிய மனத் திருப்தியுடன் சென்னைக்கு இரவு வந்தடைந்தோம்.

சர்ப்ரைஸாக இந்த பயணத்துக்கு ஏற்பாடு செய்து, அழகான படங்களையும் தந்த என்னவருக்கு நன்றியை இங்கு தெரிவித்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த ஒருநாள் பயணத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றிகள் பல…..

டிஸ்கி:-

கடைசி நான்கு படங்களை தந்த கூகிளாண்டவருக்கு நன்றி.


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.  

30 comments:

 1. சகோ மலையை தாங்கும் (தூக்கும்) படம் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. வாங்க புதுகைத் தென்றல்,

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க...

   Delete
 2. கிழக்குக் கடற்கரை சாலையை அருமையாக
  காட்சிப்படுத்தியதற்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

   Delete
 3. படங்களும் பதிவும் மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

  //முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களை சந்தித்தோம்.//

  நானும் இவரை நேரில் சந்தித்துப்பேசியுள்ளேன். அருமையான நகைச்சுவையாளர். ;)

  ReplyDelete
  Replies
  1. வாங்க வை.கோ சார்,

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

   Delete
 4. ரசிக்க வைக்கும் படங்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன்,

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க...

   Delete
 5. தங்களின் பார்வைக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-2.html

  ReplyDelete
  Replies
  1. படித்து பின்னூட்டமும் போட்டு விட்டேனே....

   Delete
 6. நல்ல ரசனையுடன் கூடிய பகிர்வு.சென்று வந்த இடங்களை திரும்பி பார்க்க வைத்து விட்டீர்கள். வெங்கட் சார் பாறையை தாங்கி நிற்பது போன்ற படம் வித்தியாசமாக உள்ளது.கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி பார்த்திருக்கலாம்.தொடருங்கள் ஆதி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆசியா உமர்,

   மிகவும் சோர்வாக இருந்ததால் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்....

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க...

   Delete
 7. வெங்கட் அண்ணா மலையை தூக்கும் ஃபோட்டோ சூப்பர். நாளைக்கு நம்ம தளத்துல இதே ஊர்தான். அவசியம் நம்ம வூட்டுக்கு வாங்கோ!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராஜி,

   உங்க பதிவு பிரமாதம். நிறைய தகவல்களை தந்திருக்கீங்க...

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க...

   Delete
 8. கிழக்குக் கடற்சாலைக்கு நானும் உங்களுடன் தெரியாமல்வந்திருந்து ரஸித்தேன்.அப்படியே படங்கள்
  அச்சு அசல். பதிவு அழகானது. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க காமாட்சிம்மா,

   ஓ! எங்களுடன் கூடவே வந்தீர்களா? சந்தோஷம்.

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

   Delete
 9. நல்லதொரு சுற்றுலா...

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜனா சார்,

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

   Delete
 10. அருமையான சுற்றுலா பயண அனுபவங்கள் ஆதி.
  படங்கள் எல்லாம் மிக அழகு..

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதிம்மா,

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

   Delete
 11. வணக்கம் நண்பரே!
  தங்களது தளத்திற்கு எனது முதல் வருகை. அழகான படங்களுடன் பதிவிட்டு சுற்றுலாவிற்கு எங்களையும் அழைத்து சென்று விட்டீர்கள். பகிர்வுக்கு உங்களுக்கும், உங்களவர்க்கும் நன்றீங்க.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அ.பாண்டியன்,

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க...

   Delete
 12. உங்கள் தலைப்பைப் படித்ததும், குமுதம் திரைப்படத்தில் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் கண்பார்வை இல்லாத சௌகார் ஜானகியை அருகில் வைத்துக் கொண்டு பாடும் ” கல்லிலே கலைவண்ணம் கண்டான்” என்ற பாடல்தான் முதலில் நினைவுக்கு வந்தது.

  நானும் சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் இரண்டு முறை மகாபலிபுரம் சென்று இருக்கிறேன். பார்க்க வேண்டிய இடம்.
  குமுதம், கலங்கரை விளக்கம், சர்வர் சுந்தரம், மணிப்பயல் திரைப் படங்களில் மகாபலிபுரக் காட்சிகளை நன்கு படமாக்கி இருக்கிறார்கள்.

  மகாபலிபுர படங்களோடு சுற்றுலா சென்ற விவரத்தினையும் சுவையாகச் சொன்னீர்கள். உங்கள் சாருக்கு நீங்களே சரியான போட்டி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி.தமிழ்.இளங்கோ ஐயா,

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

   Delete
 13. ஆதி, நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.. படங்களும் அருமை!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தியானா,

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க...

   Delete
 14. மகாபலிபுர விசிட் நன்றாக இருக்கிறது. கடற்கரையில் ஒரு பெருமாள் (இவர்தான் உண்மையான ஸ்தல சயனப் பெருமாள்) இருப்பாரே, சேவிக்க வில்லையா? கடற்கரை உப்புக் காற்றில் ரொம்பவும் பாதிக்கப்பட்ட பெருமாள்.

  பழைய கலங்கரை விளக்கத்தை ஒட்டினாற்போல திருவலவேந்தை பெருமாள் கோவில் இருக்கிறது. திருவிடவெந்தை கோவிலில் பெருமாள் தாயாரை இடது பக்கம் எழுந்தருளப் பண்ணிக் கொண்டிருக்கிறார், இல்லையா? அதேபோல இங்கு பெருமாள் தாயாரை வலது பக்கம் எழுந்தருளப் பண்ணிக் கொண்டிருக்கிறார். சின்ன கோவில் தான். சுவர்களில் நிறைய சிற்பவேலைகள் இருக்கும்.
  நிறைய பேருக்கு இந்தக் கோவில் இருப்பது தெரிவதில்லை.
  என் மாட்டுபெண்ணின் பிறந்தகத்துக் கோவில்.
  அடுத்தமுறை சேவித்துவிட்டு வாருங்கள், ஆதி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரஞ்சனிம்மா,

   உங்க தகவல்களுக்கு மிக்க நன்றிம்மா. அடுத்த முறை தான் சென்று விடுபட்டவைகளை பார்க்க வேண்டும்...

   தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete
 15. படங்களுடன் பகிர்வு அருமை...
  அண்ணன் மலையைத் தாங்குறாரு போல...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சே.குமார்,

   தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…