Thursday, October 31, 2013

தீபாவளி ஸ்பெஷல் - 4 இது தான் கடைசி ரெசிபியா!!!

நட்புகளே! இன்று நான்காவது நாளாக இனிப்பு ஒன்றை செய்து உங்களுக்கு விருந்தளிக்கப் போகிறேன்....

நான்கு பேரும் லட்டுக்காக வெயிட்டிங்!!!

என்ன இது? என்று கேட்பவர்களுக்கு.... இதன் பெயர் ”மலாய் லட்டு” "GAYATHRI'S COOK SPOT" என்ற தளத்தில் இந்த ரெசிபியை பார்த்ததிலிருந்தே இதை செய்தே தீர வேண்டும் என்று மனதிற்குள் ஒரு வைராக்கியம்....:)) சமீபத்தில் தான் இந்த தளத்தை வாசிக்க ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் சமையல் குறிப்புகளை அள்ளித் தருகிறார். படங்கள் கண்களை கவரும் விதமாக உள்ளன. இந்த சுவையான லட்டை பகிர்ந்த காயத்ரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

சுவையான மலாய் லட்டு!!!

பாலில் செய்ய வேண்டிய பண்டமாதலால் கடைசியாக இதை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து, இன்று இந்த ”மலாய் லட்டை” செய்தேன். கலரும் வாசனையும் அருமையாக உள்ளது. சுவையும் சூப்பர்....

பாலை திரித்து பனீர் செய்து அதனுடன் மில்க்மெய்டு, பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய் விட்டு அரைத்த விழுது, கலர், ஏலக்காய்ப்பொடி சேர்த்து கைவிடாமல் நன்கு கிளறி, இறுகியவுடன் அடுப்பை நிறுத்தி ஆறவிட்டு லட்டு பிடிக்கலாம். மேலே அலங்கரிக்க பிஸ்தா துணுக்குகளை வைத்துக் கொள்ளலாம்.

படிப்படியான செய்முறை படங்களுடன் பார்க்க வேண்டுபவர்கள் காயத்ரி அவர்களின் தளத்திற்கு சென்று பார்க்கவும்.

இன்றோடு இனிப்பு கார வகைகள் செய்து முடித்தாயிற்று. நாளை தீபாவளி மருந்து தான் அரைத்து கிளற வேண்டும். 2003 ல் வந்த அவள் விகடனில் ஒரு தோழி எழுதியிருந்த மருந்துக் குறிப்பை வைத்துக் கொண்டு தான் இவ்வளவு வருடமாக தீபாவளி மருந்து தயாரிக்கிறேன். எங்கிருந்தாலும் அந்த தோழிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நாளை மருந்தோடு சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்,

திருவரங்கம்.

Wednesday, October 30, 2013

தீபாவளி ஸ்பெஷல் - 3 பெயரே நீங்க தான் வைக்கணும்!!!

அன்பு நண்பர்களே,

இன்று மூன்று வித ஐட்டங்கள் தந்துள்ளேன். எல்லோரும் வந்து ருசி பார்த்து கருத்துக்களை சொல்லுங்களேன்..... அதில ஒன்றுக்கு பெயரே நீங்க தான் வைக்கணும். என்ன! எல்லோரும் ஆளுக்கொன்றா பெயர் வைங்க....பார்க்கலாம்...நேற்று செய்த பாதாம் அல்வா வீட்டிற்கு வைத்துக் கொள்ளத் தான் சரியாக இருக்கும். அக்கம் பக்கம் வீடுகளுக்கு விநியோகிக்க ஏதாவது இனிப்பு செய்ய வேண்டும் என்று யோசித்து மைதா மாவு கேக் முடிவு செய்தேன். வெறும் மைதா மாவாக இல்லாமல், அதனுடன் ஏதாவது சேர்க்கலாமா என்று யோசித்தேன். விளைவு வீட்டில் ரோஸ் மில்க் குடிக்கவென வாங்கி வைத்த பவுடர் இருந்தது. அதை மைதாவுடன் சேர்த்து பர்ஃபி செய்தேன். நன்றாகவே வந்தது. அது மட்டுமில்லாமல் நல்ல வாசனையும் சுவையும்....:))

மைதா ரோஸ்மில்க் பர்ஃபி

அடுத்து மைதாவிலேயே கோகோ பவுடர் சேர்த்து பர்ஃபி போல் இல்லாமல் அல்வா மாதிரி கட் பண்ணி சாப்பிடலாமென செய்தது தான் இது...

எனக்கு ஒரு பெயர் ப்ளீஸ்!!!


மொத்தமாக நான் செய்ததே இவ்வளவு தான். நிறைய செய்து வீணாக்ககூடாது. சுவையும் கலரும் ஜோராக உள்ளது. பெயர் தான் இல்லை.....:((
நீங்களே இதற்கு ஒரு பெயர் வைங்களேன்....

அடுத்து முதல் நாள் செய்த ஓமப்பொடியுடன், கொஞ்சம் காரமுறுக்கும், நேற்று செய்த மைதா டைமண்ட் பிஸ்கெட்டும், எண்ணெயில் வறுத்த அவல், கார்ன்ஃப்ளேக்ஸ், நிலக்கடலை, பொட்டுக்கடலை, கறிவேப்பிலை எல்லாம் போட்டு, உப்பு, மிளகாய்த்தூள், எல்லாம் சேர்த்து கொஞ்சம் போல எண்ணெயில் பெருங்காயம் பொரிய விட்டு சேர்த்து நன்கு கலந்தேன். மிக்ஸர் ரெடி.....

பூந்தியில்லாத மிக்ஸரா!!!!

இந்த மிக்ஸரில் ஒண்ணே ஒண்ணு தான் மிஸ்ஸிங்.... அது தான் பூந்தி. என்னுடைய பூந்தி தேய்க்கும் கரண்டியெல்லாம் தில்லியில் உறங்குகிறது. சென்ற வருடம் பக்கத்து வீட்டில் வாங்கி தேய்த்தேன். நன்றாகவே வரவில்லை..... சரி! பூந்தியில்லாமல் மிக்ஸர் செய்யக்கூடாது என்று ஏதாவது சட்டமா என்ன.... விட்டு விட்டேன்......:)))


நாளை முடிந்தால் மீண்டும் ஏதாவது ஒரு கண்டுபிடிப்புடன் வருகிறேன்......:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

Tuesday, October 29, 2013

தீபாவளி ஸ்பெஷல்! - 2 ஸ்வீட் எடு கொண்டாடு!!

நண்பர்களே! நேற்றைக்கு காரம் செய்து உங்களுக்கு விருந்து வைத்தாயிற்று! இன்று ஸ்வீட் எடு கொண்டாடு.....:)


இன்று பாதாம் அல்வாவும், மைதா டைமண்ட் பிஸ்கெட்டும்.....

எல்லாரும் எடுத்துக்கோங்க...

பாதாம் அல்வா

வலையில் ஒரு தளத்தில் ஒரு ரெசிபியை பார்த்து செய்யலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் அவர்கள் முந்திரியில் செய்திருந்தார்கள். என்னிடம் சிறிதளவு பாதாம் மட்டுமே இருந்தது. சரி! முந்திரிக்கு பதிலாக நாம் பாதாமில் செய்யலாம் என்று செய்தேன்.... எல்லாம் ஒழுங்காக செய்தும் ஏதோ சொதப்பலாகி செட் ஆகவில்லை...:)) அதனால் நெய் விட்டு கிளறி அல்வாவாக்கி விட்டேன்....:)) எப்பூடிடிடி!!!!  தில்லியில் இரண்டு முறை தீபாவளிக்கு பாதாம் அல்வா செய்துள்ளேன்.

அவர்கள் முந்திரியை பொடியாக்கி செய்திருந்தார்கள். நான் பாதாம் என்பதால் தண்ணீரில் ஊறவைத்து, தோலுரித்து அரைத்து செய்தேன்....:)) சரி! எப்படியும் பண்டத்தை பாழாக்காமல் மாற்றியதில் எனக்கு நிம்மதி + மகிழ்ச்சி....:))

மகள் தான் ரொம்ப எதிர்பார்ப்புடன் பள்ளியிலிருந்து வந்தவுடன் பார்த்து ஏமாந்து விட்டாள். ரொம்ப நேரம் கோபமாகவும் இருந்தாள்.....:)) வேடிக்கை தான்...:))

நான் மட்டும் என்ன சமையலில் சூரப்புலியா! ஒரு சில சமயம் சொதப்பலாகி தான் விடுகின்றன. என்னவோ சொல்லி சமாதானப்படுத்தினேன்...:))


பாதாம் அல்வா:-

பாதாம் - அரை கப்
சர்க்கரை - 1/4 கப்
பாகுக்கு தண்ணீர் - 2 மேஜைக்கரண்டி
நெய் - அரை கப் ( எவ்வளவு விட்டாலும் இழுத்துக்கும்)
ஏலக்காய்பொடி, கலர் - தேவைக்கேற்ப

பாதாமை அரைத்துக் கொண்டு, ஒற்றைக் கம்பி பதமுள்ள சர்க்கரை பாகில் போட்டு கிளறவும். ஏலக்காய்ப்பொடியும், கலரும் சேர்க்கவும். சுருண்டு வரும் போது தேவையான அளவு நெய் விட்டு கிளறி இறக்கவும்.

அடுத்து மிக்ஸரில் கலப்பதற்கும், ரோஷ்ணி தனியே சாப்பிடுவதற்காகவும் மைதாமாவில் டைமண்ட் பிஸ்கெட் செய்தேன்.... எடுத்துக்கோங்க......

மைதா டைமண்ட் பிஸ்கெட்


மைதா டைமண்ட் பிஸ்கெட்:-

மைதா - 1 கப்
பொடித்த சர்க்கரை - கால் கப்
வெண்ணை - கால் கப்

சப்பாத்தி மாவாக பிசைந்து திரட்டி, கட் பண்ணி பொரிக்கவும். மெலிதாக திரட்டினால் தான் மொறுமொறுப்பாக வரும்.

 நாளை ஏதேனும் செய்து ஒழுங்காக வந்தால் பதிவிடுகிறேன்.....:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

தீபாவளி ஸ்பெஷல்! நேற்றைய மெனு!!!

தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பட்சணங்கள் செய்யும் வேலையை நேற்றைக்குத் தான் ஆரம்பித்தேன். ரோஷ்ணிக்கு யூனிட் டெஸ்ட் வேறு தினமும் இரண்டாக உள்ளது. பாட்டு கிளாஸ், யூனிட் டெஸ்ட், கடைகளுக்கு செல்வது என்று தொடர்ந்து வேலைகள். இதனோடு இந்த பட்சண வேலையும்.....:))

நேற்றைக்கு கடலைமாவு கார முறுக்கும், ஓமப்பொடியும் செய்தேன். புத்தகங்களை பார்த்து வேலை செய்த காலம் போய், சென்ற வருடம் முதலே இணையத்தில் தேடி செய்ய ஆரம்பித்து விட்டேன். எப்போதும் தேன்குழல், மனோஉப்பு, கறிவேப்பிலை முறுக்கு என்று செய்து கொண்டிருந்தேன்.  இந்த வருடம்  ”சொல்லுகிறேன்” காமாட்சி அம்மா குறிப்புப்படி ”காரமுறுக்கு” செய்தேன். நன்றாக வந்தது. நீங்களும் இந்த வருடம் செய்து பாருங்களேன்.


நேற்றைய மெனு!


கரகர ஓமப்பொடி!காரமுறுக்கு!

காரமுறுக்குக்கு அளவை காமாட்சியம்மா பதிவு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஓமப்பொடிக்கு :-

கடலைமாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
வெண்ணை - 2 ஸ்பூன்
உப்பு, பெருங்காயம்
சிறிதளவு ஓமம் ஊறவைத்து அரைத்து வடிகட்டி சேர்க்க வேண்டும்.

வேலைகளுக்கிடையில் பதிவு போடுவதால் விலாவரியாக ரெசிபி எழுத முடியவில்லை....

நண்பர்களே! உங்க எல்லாரின் பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

Friday, October 25, 2013

சுண்டல் கலெக்‌ஷனும், பதிவர் சந்திப்புகளும்!!!!நவராத்திரி முடிந்து இத்தனை நாட்கள் கழித்து சுண்டல் கலெக்‌ஷனா!!! என்று நினைக்காதீர்கள். எழுத வேண்டியது என்று நிறைய யோசித்து மனதுக்குள் வைத்துக் கொண்டு நேரமில்லாமல் எழுதாமல் விடுபட்டவை ஏராளம்….

இந்த வருட நவராத்திரியில் சென்ற வருடத்தை விட நிறைய பேர் இல்லத்துக்கு சென்று கொலுவை கண்டுகளித்தேன். விதவிதமான பொம்மைகள் செட்டு செட்டாக கண்களைக் கவர்ந்தன. புதியது எவை என்று கேட்டு அவற்றையும் ரசித்தேன். ஒரு சிலர் வீட்டில் அந்த காலந்தொட்டு தொடர்ந்து கொலுவை அலங்கரிக்கும் பழமை வாய்ந்த பொம்மைகளையும் கண்டேன்.

வழக்கம் போல் ரோஷ்ணி ”அம்மா நம்ப வீட்டிலும் கொலு வைக்கலாம்” என்று நச்சரித்தாள். புகுந்த வீட்டில் வழக்கம் இல்லாவிட்டாலும் மகளுக்காக, மாமியாரிடமும் அனுமதியும் கேட்டு தில்லியில் ஒரு சின்ன பெட்டி கொள்ளும் அளவுக்கு பொம்மைகளை வாங்கி சேகரிக்க ஆரம்பித்தேன். இந்த சூழ்நிலையில் தான் என் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்ரீரங்கத்துக்கு வந்து தற்காலிகமாக தங்கியுள்ளோம். இங்கு புதிதாக வாங்கி அதை மாற்றி என்று…….வேண்டாம். அடுத்த வருடம் அப்பாவுடன் எங்கு இருக்கிறோமோ அங்கு வைக்கலாம். அதற்கு கடவுள் வழி செய்யட்டும் என்று சொல்லி புரிய வைத்தேன்…..:)


சரஸ்வதி பூஜைக்கு சுகியனும், சுண்டலும் செய்து பூஜையை நல்லபடியாக கொண்டாடினோம். மகள் பாட்டு கற்றுக் கொள்வதால் விஜயதசமி அன்று குருவுக்கு தட்சிணை கொடுத்து நமஸ்கரித்தாள். ஒரு சில வீடுகளில் ஓரிரண்டு பாட்டுகளும் பாடினாள். தில்லியில் இருந்ததை விட இப்போ அக்கம்பக்கம் பழகுகிறாள். 

வாசலில் பீங்கான் பொம்மைகளைத் தான் விற்றுக் கொண்டிருந்தார்கள். மண் பொம்மைகளுக்கென்று தனிப்பட்ட அழகு இருக்கிறது. ஆனாலும் பராமரிப்பு, அதிகமான விலை போன்ற காரணத்தால் பீங்கானுக்கு தங்களுக்கு ஆதரவை மக்கள் தருகின்றனர். தில்லியில் உள்ள நண்பர் ஒருவருக்காக பீங்கான் பொம்மைகள் சிலதை பேரம் பேசி வாங்கினேன். அவைகள் இதோ……


அடுத்து நம்ம சீனா ஐயாவும், மெய்யம்மை ஆச்சியும் திருச்சி வருவதாகவும் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஃபெமினா ஹோட்டலில் தங்குவதாகவும், பதிவர்களை சந்திக்க விரும்புவதாகவும் தகவல் தெரிவித்து வை.கோ சாரும், தனிப்பட்ட முறையில் சீனா ஐயாவும் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள். ஆனால் அன்று நவராத்திரிக்காக என் மகளின் பாட்டு வகுப்பில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனால் என்னால் கலந்து கொள்ள இயலாததை தெரிவித்து பதில் அனுப்பியிருந்தேன். ஃபெமினாவில் சந்திப்பு நடந்த பின் திடீரென இன்ப அதிர்ச்சியாக சீனா ஐயா தம்பதிகளும், வை.கோ சாரும் எங்கள் இல்லத்துக்கே வருகை தந்திருந்தார்கள். ரிஷபன் சாரும் உடனிருக்க எங்கள் இல்லத்திலேயே ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது. உடனடியாக அவர்கள் கிளம்ப வேண்டி இருந்ததால் என்னால் உபசரிக்க முடியவில்லை….அடுத்து சென்னையில் பதிவர் விழாவில் கலந்து கொண்ட ”பாட்டி சொல்லும் கதைகள்” என்ற வலைப்பூ வைத்திருக்கும் திருமதி ருக்மணி சேஷசாயி அம்மா, தான் திருவரங்கத்திற்கு குடி வருவதாகவும் வந்த பின் தெரிவிக்கிறேன் என்று சொல்லி இருந்தார். சென்ற வாரம் என்னவருக்கு மின்னஞ்சல் மூலம் தன் முகவரியை தெரிவித்து, என்னை சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தாராம். எங்கள் வீட்டருகில் தான் அவர் இருப்பதாக தெரிந்து கொண்டு ஒரு மாலைப் பொழுதில் அவர்கள் இல்லத்துக்கு ரோஷ்ணியுடன் சென்றிருந்தேன். ”வருக வருக” என வாய்நிறைய அழைத்து உபசரித்தார்.


சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ருக்மணி அம்மாவைப் பற்றி நிறைய விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் இதுவரை 18 புத்தகங்களை குழந்தைகளுக்காக எழுதியிருப்பதாகவும், 35 வருடங்கள் தமிழ் ஆசிரியராக பணியாற்றியதையும் தெரிவித்தார். ஓய்வு நேரங்களில் ஃபேஷன் ஜுவல்லரிகள் தயாரித்து விற்பனை செய்கிறார். இது நிஜமாகவே என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம். ஏனென்றால் அவர்கள் வயது அப்படி….. அவர்கள் இல்லத்திலும் கொலு வைத்திருக்கவே பார்த்து வெற்றிலை தாம்பூலம் பெற்றுக் கொண்டோம். ரோஷ்ணிக்கு தன் கையால் செய்த காதணிகளை பரிசளித்தார். அவர்கள் எழுதிய புத்தகங்களை இரண்டையும் எங்களுக்கு தந்தார்.


விரைவில் திருச்சி பதிவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு பதிவர் சந்திப்பு நடத்த விரும்புவதாகவும் தெரிவித்தார். இந்த வாரத்தில் ஒருநாள் மாலை எங்கள் இல்லத்துக்கும் வந்திருந்தார். இப்படியாக நவராத்திரியும், பதிவர் சந்திப்புகளும் இனிமையாக நடந்தது.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

Thursday, October 24, 2013

சுவையான பீட்ரூட் பூரியும், சன்னாவும்!வலையில் மேயும் போது இந்த பீட்ரூட் பூரியைப் பார்த்தேன். சரி, குழந்தைக்கு லஞ்ச் பாக்ஸுக்கு தரலாமே என்று முயற்சித்தேன். நன்றாக வந்தது. இதை நீங்களும் ருசிக்கலாமே என்று நினைத்ததன் விளைவே இப்பதிவு….:)

இந்த குறிப்பை தனது பக்கத்தில் பகிர்ந்த  விஜயலட்சுமி தர்மராஜ் அவர்களுக்கு என் நன்றிகள். இவர் ”விருந்து உண்ண வாங்க” என்ற வலைப்பூவில் ஆங்கிலத்தில்  எழுதி வருகிறார். சமீபத்தில் தான் இவரின் பக்கத்தை பார்க்க நேர்ந்தது. குறிப்புகளை விட அதன் படங்கள் கண்களைக் கவர்கின்றன. நாவில் நீர் சுரக்க வைக்கின்றன....:) தீபாவளி பட்சணங்களுக்கு, புதுமையாக ஏதேனும் கிடைக்க வேண்டி, இவரின் பக்கத்தில் தான் தேடி வருகிறேன்.....:))


பள்ளிக்கு தயார் செய்யும் அவசர நிலையிலும் பதிவிடுவதற்காக படங்கள் எடுத்தேன்.....:)) என்னே! எந்தன் கடமையுணர்ச்சி!!!!

பீட்ரூட் பூரிக்கு தேவையானப் பொருட்கள்:-

கோதுமை மாவு – 2 கப்
பீட்ரூட் – 1
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :-

பீட்ரூட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். துருவிய பீட்ரூட்டை மிக்சியில் போட்டு அரை தம்ளர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை நன்றாக வடிகட்டி பிழிந்து எடுக்கவும். இந்த பீட்ரூட் ஜுஸை வைத்து தான் நாம் பூரியை செய்யப் போகிறோம். கோதுமை மாவில் உப்பு சிறிதளவு எண்ணெய் சேர்த்து கலந்து கொண்டு தேவையான பீட்ரூட் ஜூஸை சேர்த்து பூரிக்குண்டான மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும். பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.

மாவை தேவையான அளவு எடுத்து உருண்டைகள் செய்து பூரியாக தேய்த்து பொரித்து எடுக்க வேண்டியது தான். கலர்ஃபுல்லான பீட்ரூட் பூரி தயார். பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளையும் இந்த பூரியின் நிறம்  சாப்பிடத் தூண்டும்.  நீங்களும் செய்து தந்து குழந்தைகளை அசத்துங்களேன்.
 
 இது முன்பு செய்த சோலே!

தலைப்பில் சன்னா என்று போட்டு விட்டு அதைப் பற்றிய குறிப்பு கொடுக்கவில்லையே என நினைத்தீர்களா? ”சன்னா என்கிற சோலே மசாலா” பற்றி முன்பே ஒருமுறை செய்முறை குறிப்பு கொடுத்திருக்கிறேன். அதைப் போய் ஒரு எட்டு பார்த்து விட்டு வாங்களேன்…

பின்குறிப்பு:-

1) பீட்ரூட் சாறு சேர்த்திருப்பதால் சுவையில் ஒன்றும் மாறுபாடு தெரியவில்லை. அதனால் தைரியமாக எவ்வளவு தேவையோ சேர்த்துக் கொள்ளலாம்.

2) கலர் குறைவாக வேண்டுமென்றால் கொஞ்சமாக சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். எப்படியோ! குழந்தைகளுக்கு காயின் சத்து சேர்ந்தால் சரி..

3) என் பெண்ணும் சூப்பராக இருந்ததும்மா... என்று லஞ்ச் பாக்ஸை காலி செய்து விட்டு வந்தாள்....:) இதை முதலிலேயே சொல்லணுமோ!!!மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

Tuesday, October 22, 2013

கல்லிலே கலைவண்ணம் கண்டார்! (கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு நாள் – 4)பண்டிகைகளை ஒட்டி சற்று இடைவேளை ஆகி விட்டது. வாங்க நண்பர்களே! நாம இப்போ அர்ஜூனன் தபசு, கிருஷ்ணனின் வெண்ணை உருண்டை ஆகியவற்றை கண்டுகளிக்கலாம். கல்லில் செதுக்கிய இந்த சிற்பங்கள் பண்டை காலத்தவரின் கலைநுணுக்கத்திற்கான சான்று. தென்னிந்திய கலாச்சாரத்தை பிரபலிக்கக்கூடிய ஒன்று. எழுதுவதை காட்டிலும் புகைப்படங்கள் தங்களுக்கு நிறைய தகவல்களை தெரிவிக்கும் என நினைக்கிறேன்…. இங்கு மும்மூர்த்திகளின் கோயிலும் உள்ளது. பெரியப் பெரிய பாறைகள், கலை நுணுக்கத்துடன் செதுக்கப்பட்ட மும்மூர்த்திகளின் உருவங்கள் என்று எல்லாமே ரசிக்க வேண்டியவை.

இந்த இடத்தில் குறி சொல்பவர்களும், கிளி ஜோசியம் சொல்பவர்களின் தொல்லைகளும் அதிகம். குறி சொல்பவர்கள் என்றதுமே எனக்கு ”இந்திரா செளந்தர்ராஜன்” அவர்களின் நாவல்கள் தான் நினைவுக்கு வந்தன. எங்களை விடாமல் துரத்தி வந்து தம்பி “கையை காமி தம்பி நல்ல வாக்கு சொல்றேன். உனக்கு சீக்கிரம் ஒரு ஆம்பிளைப் பிள்ளை பிறக்கும்” எனத் துரத்தி கொண்டிருந்தார். ஒருவழியாக அவரிடமிருந்து தப்பித்து ஒரு பாட்டியிடம் மிளகாய்த்தூள் தூவிய மாங்காய்த் துண்டங்களை வாங்கி அங்கிருந்த புல் தரையில் அமர்ந்து ரசித்து உண்டோம்… ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா….. என்ன! உங்களுக்கும் நாவில் நீர் சுரக்கிறதா…….:))

அடுத்து அங்கிருந்து கிளம்பிப் போகும் வழியில் டிரைவர் கலங்கரை விளக்கத்தின் மேல் ஏறி வ்யூ பார்க்கிறீர்களா? எனக் கேட்டார். காலையிலிருந்து சுற்றிக் கொண்டிருக்கிறோம். நிறைய நடந்து சுற்றிப் பார்த்தாச்சு. இதிலயும் ஏறினால் களைப்பில் கடற்கரையை ரசிக்க முடியாது என வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அடுத்து என்ன கடற்கரை கோயில் தான்.

கடல் ஓரத்தில் எழில் ஓவியமாக எழுப்பப்பட்டுள்ள இரண்டு சிவன் கோயில்களை உள்ளடக்கிய கடற்கரை கோவில் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் இராஜசிம்மன் காலத்தியவை. இதுவும் இந்திய தொல்லியல் துறைக்குட்பட்டது. அதனால் கட்டணத்தை செலுத்தி விட்டு உள்ளே சென்று பார்த்து ரசித்தோம். காலத்தின் கோலத்தால் அதற்கு முன்புள்ள சிற்பங்கள் சிதைந்திருந்தாலும் கலை நுணுக்கம் வியக்க வைக்கிறது. இனி அடுத்து கடற்கரைக்கு செல்லலாம் வாங்க…. கொஞ்சம் சுற்றி தான் செல்லணும். போகும் வழியெங்கும் கடல்வாழ் உயிரினங்கள் மக்களுக்கு சுவையான உணவாக மாறிக் கொண்டிருந்தன. நான் மூக்கை மூடிக் கொண்டு கடற்கரையில் ஆட்டம் போட ஓடினேன். உங்களுக்கு அந்த வாசனை பிடிக்குமானால் ரசித்துக் கொண்டு வாருங்கள். ….:))

சங்கு, கிளிஞ்சல் போன்றவையினால் செய்த அலங்காரப் பொருட்களின் கடைகள் வரிசையாக இருந்தன. ஒரு வெளிநாட்டவர் அங்கு ”ஊசி பாசி” விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் விலையைக் கேட்க அவரும் அழகாக ஆங்கிலத்தில் அவரிடம் உரையாடினார்…. அன்றாடம் பார்க்கும் மனிதர்களிடமிருந்து அவர்களது பாஷையை கூர்ந்து கவனித்து கற்றுக் கொண்டுள்ளார்… கடற்கரையில் குதிரை சவாரியும் இருந்தது. கடல் அலுக்காத சில விஷயங்களில் ஒன்று. அதனால் நாங்கள் அலைகளில் கால் நனைத்தும், ஓடியாடியும், புகைப்படங்கள் எடுத்தும் பொழுதை களித்தோம். இருட்டத் துவங்கி விட்டதால் அங்கிருந்து கிளம்பி சென்னையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். வரும் வழியில் டிரைவர் ஒரு கோவிலுக்கு போயிட்டு போகலாம் என்றார்.


அது தான் ”திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள்” கோவில். இது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். இது நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் 62வது ஸ்தலம். அமைதியான கிராமத்து சூழலில் இருந்த கோவிலின் உள்ளே நுழைந்தோம். மூலவர் ஆதிவராகப் பெருமாள் ,அகிலவல்லித்  தாயாரை தன் இடது தொடையில் இருத்தி நின்ற நிலையில் காட்சி தருகிறார். காலவ முனிவரின் 360 மகள்களை தினம் ஒருவராக திருமணம் செய்து கொண்டதால் இவர் நித்ய கல்யாண பெருமாள் என அழைக்கப்படுகிறார். தாயார் கோமளவல்லி. இங்கு ரங்கநாதர், ரங்கநாச்சியார், ஆண்டாள் எனத் தனித்தனி சன்னிதி உள்ளது.திருமணத் தடை நீங்க ஆணோ, பெண்ணோ இரண்டு மாலைகளை வாங்கி வந்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்து ஒன்றை பெருமாளுக்கு சாற்றி மற்றொன்றை கழுத்தில் அணிந்து கொண்டு கோவிலை 9 முறை பிரதட்சணம் செய்கிறார்கள். திருமணமானதும் தம்பதியாக சேர்ந்து வந்து பிரதட்சணம் செய்கிறார்கள். பட்டாச்சாரியார்கள் நிதானமாக நல்ல தரிசனம் செய்து வைத்தார்கள். அடுத்து எந்த சன்னிதிக்கு செல்ல வேண்டும் என்றும் வழிகாட்டுகின்றனர். பெருமாளுக்கு அணிவித்த மாலையை அங்கு வந்திருந்தவர்களுக்கு தந்த பட்டாச்சாரியார் எனக்கும் ஒன்றைத் தந்தார். மனசுக்கு சந்தோஷமாக இருந்தது.


மாமல்லபுரத்தில் ஒரு பெருமாள் கோவில் இருந்தது. “ஸ்தல சயனப் பெருமாள்”. நாங்கள் சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில் கோவில் திறக்கவில்லை. அதற்குப்பின் இரவு நேரமானபடியால் பார்க்காமலேயே கிளம்பி விட்டோம். இங்கு திருவிடந்தை வந்த பின் தான் பட்டாச்சாரியார் சொன்னார் அந்த கோவில் 108ல் 63வது ஸ்தலமாம். தரிசிக்காது விட்டு விட்டோமே என்றிருந்தது. நீங்கள் செல்லும் போது தவறாது தரிசியுங்கள்.

திருப்தியாக கோவிலை தரிசித்துவிட்டு  வெளியே வரும் போது முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களை சந்தித்தோம். முன்பு தில்லி தமிழ் சங்கத்தில் என்னவர் சந்தித்திருக்கிறார். நாங்கள் வணக்கம் சொல்லி விட்டு தில்லியில் என்றதுமே நினைவு கூர்ந்து, தன் குடும்பத்தினருக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார்.


அங்கு வந்திருந்த மக்கள் அவரைக் கண்டதும் இவர் சினிமாவில் நடித்தாரே என்று பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கேட்டுக் கொண்டிருந்த என்னவர் “ஐயா தமிழில் நல்ல புலமை பெற்றவர். அதை விடுத்து சினிமாவை மட்டுமே சொல்கிறீர்களே” என்றார்… அவரிடம் விடைபெற்று, ஒரு நாள் முழுதும் கிழக்குக் கடற்கரை சாலையை சுற்றிய மனத் திருப்தியுடன் சென்னைக்கு இரவு வந்தடைந்தோம்.

சர்ப்ரைஸாக இந்த பயணத்துக்கு ஏற்பாடு செய்து, அழகான படங்களையும் தந்த என்னவருக்கு நன்றியை இங்கு தெரிவித்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த ஒருநாள் பயணத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றிகள் பல…..

டிஸ்கி:-

கடைசி நான்கு படங்களை தந்த கூகிளாண்டவருக்கு நன்றி.


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.  

Wednesday, October 16, 2013

கமிஷனருக்குக் கடிதம்!பங்களூரு உப்பாரப்பேட்டை காவல் நிலையத்தில் இளம்பெண் மாயா என்பவள் ஏ.எஸ்.பியாக புதிதாக பணியில் சேருகிறாள். அங்கே இவளுடன் ஐ.பி.எஸ் அதிகாரிகளாக சுதாகரும், ரமேஷூம் பணிபுரிகிறார்கள். பணியில் சேர்ந்த அன்றே ஹிட் அண்டு ரன் கேஸ் ஒன்றை பார்வையிடச் செல்கிறாள். அடுத்து தற்கொலை ஒன்று. இப்படி பணியில் சேர்ந்த அன்றே விபத்து, தற்கொலை, ரத்தம் எனப் பார்த்து மிகவும் சோர்வடைகிறாள்.
தங்களுடன் ஒரு பெண் பணிபுரிவதில் கமிஷனரான சுதாகருக்கு வெறுப்பு ஏற்படுத்தியது. அதனால் மாயாவுக்கு இப்படிப்பட்ட கேஸ்களைக் கொடுத்து அவளே ராஜினாமா செய்து விட்டுச் செல்லும் படி செய்தார். ஆனால் மாயாவோ கொஞ்சம் பயந்தாலும், சமூகத்தை திருத்த தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததாக நினைத்து தனக்கு கிடைத்த கேஸ்களில் அக்கறை வைத்து பணிபுரிந்தாள்.

அதன் பின் சுதாகர் மாயாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டுகோள் வைக்கிறார். ஆனால் சுதாகர் விவாகரத்தானவர் என்பதையும், அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும், மாதமொரு முறை அவள் தந்தையை காண வருவதாகவும் சொல்லி, ரமேஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் சொல்கிறார். ஆனால் மாயாவுக்கோ திருமணம் பற்றிய எண்ணமேயில்லை…

இப்படியிருக்க இவர்களுக்கு விதவிதமான கேஸ்கள் கிடைக்கின்றன. மூவரும் இணைந்து செயல்படுகிறார்கள். இடையில் வக்கீல் மூலமாகவும், பத்திரிக்கையாளர் மூலமாகவும் நிறைய பிரச்சனைகள் வந்து மாயாவிற்கு பணியில் நிலைத்து இருக்க முடியுமா என்கிற நிலை ஏற்படுகிறது. சுதாகரும் ரமேஷும் வேறு தங்களை திருமணம் செய்து கொள்ள நிர்பந்திக்க, மாயா யோசிக்க ஓரிரு நாட்கள் கேட்கிறாள். இதற்கிடையில் சுதாகரின் மகளும் கடத்தப்படுகிறாள். எங்கு சென்றாள்? என்ன ஆனாள்? என யாருக்கும் தெரியவில்லை. தொடர்ந்து ”கமிஷனருக்குக் கடிதம்” என நான்கு கடிதங்களை அனுப்புகிறார்கள். அதில் தங்களின் வேண்டுகோளை வைக்கிறார்கள்.இது தான் நான் சமீபத்தில் வாசித்த சுஜாதா அவர்களின் ”கமிஷனருக்குக் கடிதம்” என்கிற புத்தகத்தின் கதை. க்ரைம் நாவலாக ஆரம்பித்த இந்த கதையில் காதலும் உண்டு. இடையில் கேஸ்களை கண்டுபிடிக்க மாயா லேப்க்கு செல்லும் போது நம்மாலும் அறிவியல் பூர்வமாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. படித்துக் கொண்டே வந்தீர்களா? இனி…..

கமிஷனரின் மகள் கிடைத்தாளா? யார் கடத்தினார்கள்? மாயா யாரைத் தேர்ந்தெடுத்தாள்? வேலையை தக்க வைத்துக் கொண்டாளா? சமூகத்தை திருத்த எடுத்த முயற்சி வெற்றி பெற்றதா? போன்ற உங்களின் கேள்விகளுக்கான விடையை அந்த புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

விசா பப்ளிகேஷன்ஸ்
புதிய எண்: 16, பழைய எண்: 55
வெங்கட்நாராயணா ரோடு,
தி.நகர், சென்னை – 600017.
தொலைபேசி எண் – 2434 2899, 2432 7696
புத்தகத்தின் விலை – ரூ 70.
மொத்த பக்கங்கள் - 144

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

Monday, October 14, 2013

பெருங்கடலில் தத்தளித்தேன்....

பட உதவி: கூகிள்.பெருங்கடல் என்றதும் நான் ஏதோ நீச்சல் தெரியாது நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தத்தளித்தேன் என்று நினைத்தீர்களானால் நான் அதற்கு பொறுப்பல்ல….:)))முதலில் திருச்சியில் ஏது கடல்? இங்கு நான் கடல் என்று சொன்னது ஜவுளிப் பெருங்கடல்…..:)) அதாங்க! தீபாவளி ஷாப்பிங் செய்ய திருச்சியின் புகழ்பெற்ற ஜவுளிக்கடலான ”சாரதாஸ்”க்கு சென்றிருந்தோம். நீங்களும் எங்களுடன் தத்தளிக்க வாங்களேன்.....…:))மகள் புதுத்துணி எடுக்க என்னை நச்சரிக்க ஆரம்பித்தாள். இன்னும் ஒரு மாதம் இருக்கே, அதனால் ஒரு பதினைந்து நாள் கழித்து செல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவங்கப்பாவோ இப்போவே போயிட்டு வந்துடு…. இல்லையென்றால் அந்த ரோட்டிலேயே கால் வைக்க முடியாது என்று பயமுறுத்தவே…. ஷாப்பிங் செய்ய ஏற்ற நாளாக, விடுமுறைநாளான காந்தி ஜெயந்தியை தேர்ந்தெடுத்தேன்.மகளையும் அழைத்துச் சென்றால் தான் அவளுக்கேற்ற உடைகளை அளவு வைத்து பார்த்து வாங்க முடியும். பக்கத்து வீட்டிலும் சாரதாஸ்க்கு செல்ல வேண்டும் என்று சொல்லவே, அன்று காலையில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு கிளம்பினோம். மெயின் கார்டில் இறங்கி N.S.B ரோடில் நுழைந்தோம். நல்ல கும்பல். இந்த சாலை தி.நகர் ரங்கநாதன் தெருவை விட மோசம்..... எப்போதும் கும்பல் தான். துணிக்கடைகள், நகைக்கடைகள், உணவகங்கள், சாலை வியாபாரிகள், நடுநாயகமாக மலைக்கோட்டை தாயுமானவசுவாமி, உச்சிபிள்ளையார் கோயில்….கிளம்பும் போதே சாரதாஸ்க்கு மட்டும் தான் செல்ல வேண்டும். வேறு எங்கும் இப்ப வேண்டாம்னு முடிவெடுத்திருந்ததால் நேராக சாரதாஸ் உள்ளே நுழைந்தோம். குளிர்சாதன வசதியுடன் இரண்டு தளங்களைக் கொண்டது. தளம் தான் இரண்டே தவிர, அது இருக்கும் இடம் மிகப் பெரியது. ஒரே சமயத்தில் ஆயிரக் கணக்கில் மக்களை இங்கே பார்க்க முடியும். கீழே ஆண்களுக்கும், சிறுவர்களுக்கும், மற்றும் புடவைப் பிரிவு…. மேலே குழந்தைகளுக்கு, சிறுமிகளுக்கு, மற்றும் சுடிதார் பிரிவு…முதலில் பசங்க வேலையை முடித்து திருப்திபடுத்தி விட்டால் நம்மளை தொந்தரவு பண்ண மாட்டாங்க என்று நினைத்து……. தேடுதல் வேட்டையில் இறங்கினோம். பக்கத்து வீட்டில் அவங்க பையனுக்கும், என் மகளுக்கும் முதலில் தேர்வு செய்ய ஆரம்பித்து ஒருவழியாக முடித்தோம். மகள் ஒரு பிங்க் ராணி. எல்லாமே அவளுக்கு பிங்க்கில் தான் வேண்டும்……:)) வேறு எந்த கலரை எடுத்து வைத்து அழகு பார்த்து எடுத்துச் சொன்னாலும், மண்டையை ஆட்டி விட்டோ, அல்லது முகத்தை தூக்கி வைத்துக் கொண்டோ, கடைசியில் பிங்க்கைத் தான் தேர்வு செய்வாள். வழக்கம் போல இம்முறையும் அதுவே நடந்தது……:))மேல் மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே பார்த்தால் அப்பப்பப்பா…… இந்த கும்பலிலிருந்து தப்பித்து எப்படி வீட்டுக்குப் போகப் போகிறோமோ தெரியலையேன்னு மலைப்பாக இருந்தது……:)) அடுத்து வீட்டுப் பெரியவர்களுக்கும், என்னவருக்கும் தேர்வு செய்தேன். அது போலவே  என்னுடன் வந்த தோழியும் அவர்கள் குடும்பத்தாருக்கு தேர்வு செய்து முடித்தார்கள். அடுத்து என்ன? இறுதியாக புடவைப் பிரிவுக்குள் நுழைந்தோம்.இருப்பதிலேயே அதிக கும்பலே இங்கு தான் இருந்தது…..:)) எந்த மாதிரிப் புடவை எடுக்கலாம் என்று எந்த யோசனையும் எங்களிடம் இல்லை…..:)) பார்த்துக் கொண்டே கும்பலில் நகர்ந்தோம். பக்கத்து வீட்டில் அவர்கள் ஒரு இடத்தில்  பார்க்கத் தொடங்க, நான் ஒரு இடத்தில் பார்க்க ஆரம்பித்தேன். கல்யாணத்திற்காக உறவினர்களுக்கு வைத்துக் கொடுக்கவென்று புடவைகள் வாங்க ஒரு கூட்டம் என்னருகில் வந்து நின்று கொண்டு, அவர்கள் பாட்டுக்கு அடுக்கி வைத்துக் கொண்டே வந்தார்கள். அவ்வளவு கும்பலிலும் “இந்த புடவையை கொஞ்சம் காட்டுங்க” என்ற என் மெல்லிய குரல் காதில் கேட்டவுடன் அதெல்லாம் அவங்க எடுத்து வெச்சுட்டாங்கம்மா! என்ற பதில் வந்தது….. இப்படியே மூன்று நான்கு முறை…. கடைசியில் சடாரென்று ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன்…..இங்குள்ள பில் போடும் தொந்தரவுக்காகவே நான் இங்கு வரத் தயங்குவேன். காரணம்…. ஒவ்வொரு துணி எடுத்ததுமே பில் போட எடுத்துச் செல்வார்கள். அவர்கள் பின்னேயே சென்று கார்டா, கேஷா என்று சொல்லி பணத்தை அல்லது கார்டை குடுத்ததும், அடுத்து இன்னொரு இடத்தில் பில்லை கொடுத்து இன்னொரு இடத்தில் துணியை வாங்க வேண்டும். அலுத்துக் கொண்டாலும், இந்த கும்பலில் இப்படிப்பட்ட பில்லிங் இல்லாவிட்டாலும் கடினம் தான். இப்படி ஒவ்வொரு துணிக்கும் அலைந்து அலைந்து ஒருவழியாக ஆகி விட்டோம். கடைசியில் எல்லாவற்றையும் சரிபார்த்து எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம்.மதியமாகி விட்டது. பசி வேறு வயிற்றை கிள்ளுகிறது. அருகில் இருந்த உணவகத்துக்கு சென்று சாப்பிட நினைத்து, உள்ளே பார்த்தால் அங்கேயும் வரிசை……:)) சரி! இது வேலைக்கு ஆகாது என்று அடுத்துள்ள வசந்த பவனுக்கு சென்றோம். சாப்பாடு என்றால் மேல் மாடியிலாம். டிபன் கீழே….. என்னுடன் வந்தவர்கள் எல்லாம் டிபனுக்கு ஜே சொல்ல… நான் மட்டும் என்ன மேலே சென்று தனியாக சாப்பிடுவது என்று நானும் டிபனையே சாப்பிட்டேன். ஜூஸ் ஆர்டர் செய்து குடித்து விட்டு வெளியே வந்து பேருந்தை பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்….பத்து நாட்கள் கழித்து சென்றிருந்தால் நிச்சயம் நெருக்கடியில் அவ்ளோ தான்……:))


என்ன நண்பர்களே! உங்க வீட்டிலும் ஷாப்பிங் எல்லாம் முடிந்து தீபாவளி வந்துடுச்சா?
மீண்டும் சந்திப்போம்,ஆதி வெங்கட்

திருவரங்கம்.

Wednesday, October 9, 2013

புலியைப் பார்ப்போமா? A2B! பரிசு என்ன? (கிழக்குக் கடற்கரை சாலையில் ஒரு நாள் - 3)நண்பர்களே! சென்ற பதிவில் கேட்டிருந்த கேள்விக்கு எல்லோருமே சரியாக பதில் சொல்லியிருந்தீர்கள்… மனிதனை விட கொடிய மிருகம் இந்த உலகத்தில் எதுவுமேயில்லை….:) அந்த பெட்டியின் உள்ளே இருந்தது கண்ணாடி தான்.  என்னவர்  என்னை அழைத்து கேட்ட போது நானும் உங்களைப் போல் தான் சரியாகச் சொன்னேன்…..:)) உங்கள் அனைவருக்குமான பரிசு இதோ….


 கூகிளுக்கு நன்றி

அடுத்து நாம் போகப் போவது TIGER’S CAVE என்று சொல்லப்படுகிற புலிக்குகைக்கு. ஆமாங்க! புலியை அதன் குகையிலேயே சந்திக்கலாம் என்று சொல்லியிருந்தேன் அல்லவா! வாங்க! உள்ளே நுழையலாம். கடற்கரையை ஒட்டிய இடத்தில் அலைகளின் ஓசைக்கு நடுவில் செதுக்கப்பட்ட பெரிய பெரிய பாறைகள் விதவிதமான வடிவத்தில் அழகாக காட்சியளித்தன. நடுநாயகமாக குகை போன்ற அமைப்பில் புலியின் முகங்களோடு யானையும் ஒன்று சேர அழகோ அழகு தான். இரண்டு பாறைகள் வெட்டுபட்டு அதன் நடுவில் சிறு இடைவெளியுடன், பெரிய பாறை, சிறு குன்று போன்ற அமைப்பு என எங்கெங்கும் விதவிதமாக வடிவமைக்கப்பட்ட பாறைகள் தான்.
பட உதவி - கூகிள்


புலிக்குகை என்றதும் புலியைத் தான் சந்திக்கப் போகிறோம். என்ற ஆவலோடு வந்திருக்கும் என் போன்றவர்கள் , இங்கு காண்பதெல்லாம் காதல் ஜோடிகள் தான்……:)) எங்கெங்கு காணினும் அவர்கள் தான்…..:)) பாறைகளை பார்த்துக் கொண்டே வந்த நான் இன்னும் சற்று உள்ளே தள்ளி இருந்த கோவில் போன்ற அமைப்புடன் சிவலிங்கமும் இடம் பெற்றிருக்கும் இடத்திற்கு செல்ல எத்தனிக்க, என்னவர் அங்கிருந்த காதல் ஜோடிகளை கண்டதால், "வேண்டாம் வா….. குழந்தையோடு செல்ல லாயக்கில்லை" என்று அழைத்து வந்து விட்டார்….

V.G.P, தக்ஷிண் சித்ரா, முதலைப் பண்ணை என சென்ற இடமெல்லாம் பள்ளிக் குழந்தைகள் தென்பட்டனர். இங்கு நல்லவேளை அவர்கள் இல்லை… தில்லியில் GARDEN OF FIVE SENSES என்ற இடத்தில் இப்படித்தான், ஏதேனும் திருவிழா இல்லாத நாளில் சென்றால், குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் நேராக மட்டும் தான் பார்த்து செல்ல வேண்டும். அங்கே இங்கே பார்த்து விட்டால் அவ்வளவு தான்…..:( காதல் என்ற பெயரில் இவர்கள் செய்வது அநியாயம். என் தில்லித் தோழியும் ஒருநாள் தன் கணவருடன் சென்று விட்டு வந்து புலம்பினார்.

சரி! வாங்க! நாம அடுத்து எங்கே போகப் போகிறோம்? மகாபலிபுரத்துக்குத் தான். ஆனால் மதியமாகி விட்டதே! அதற்கு முன்பு ஒரு ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் எங்களைப் போன்ற சைவ உணவு வேண்டுபவர்களுக்காக அடையார் ஆனந்த பவன் இங்கே திறந்திருக்கிறார்கள். காலையிலேயே சித்தப்பாவும், சித்தியும் ஓட்டுனரிடம் மதியம் இங்கே அழைத்துச் செல்லும்படி சொல்லி அனுப்பியிருந்தார்கள். உள்ளே போகலாமா? குளிர்சாதன வசதியுடன் உணவகத்தை சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். வாசலிலேயே அன்றைய மெனு எழுதி வைக்கப்பட்டிருந்தது.

கூகிளாண்டவருக்கு நன்றி!

என்னவரும் ஓட்டுனரும் முழுச் சாப்பாடு ஆர்டர் செய்ய, மகளுக்கு சப்பாத்தி ஆர்டர், நான் மினி மீல்ஸ் தேர்வு செய்தேன். கிண்ணங்களில் சாம்பார் சாதம், தயிர்சாதம், எலுமிச்சை சாதம், சேமியா பாயசம், முட்டைக்கோஸ் கறி போன்றவற்றுடன் அப்பளம், வடாம், மோர் மிளகாய். இவற்றோடு ஒரு சப்பாத்தி குருமாவுடன். எலுமிச்சை சாதம் மட்டும் கொஞ்சம் கசப்படித்தது. மற்றபடி சாப்பாடு மிகவும் நன்றாகவே இருந்தது. எல்லோரும் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம்.

இனி நேராக மாமல்லபுரத்துக்குத் தான். முதலில் ”ஐந்து ரதங்கள்” இருக்கும் இடத்திற்கு சென்றோம். இந்திய தொல்லியல் துறைக்குட்பட்ட இந்த இடத்திற்கு, நமக்கான நுழைவுச்சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். பள்ளிச் சிறார்களும், வெளிநாட்டவர்களும், விடுமுறையை கழிக்க வந்த மக்களும் என அந்த இடமே நமக்கான உற்சாகத்தை அள்ளித் தந்தது.
முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனின் அரிய படைப்பான ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட தேர் போன்ற வடிவமைப்புடைய ஐந்து இரதங்களையும், யானை, சிங்கம், நந்தி போன்றவற்றையும் பார்க்க ஆரம்பித்தோம். பஞ்சபாண்ட ரதங்கள் என்று அழைக்கப்படுகிற இவற்றுக்கும் மகாபாரதத்துக்கும் எவ்வித சம்பந்தமில்லை என்று அங்குள்ள பலகைச் சொல்கிறது.

தர்மராஜ ரதம், பீம ரதம், த்ரெளபதி ரதம், நகுல சகாதேவ ரதங்கள் என கல்லில் செதுக்கப்பட்ட அரிய பொக்கிஷங்களை கண்டு களித்தோம். ஒவ்வொன்றையும் பார்க்கும் போதே பிரமிப்பை தோற்றுவித்தது. காலத்தால் ஒருசில உருவங்கள் சிதிலமடைய ஆரம்பித்தாலும் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. அடுத்து நாங்கள் சென்றது. அர்ஜூனன் தபசு, கிருஷ்ணனின் வெண்டை உருண்டை ஆகிய இடத்திற்கு…..

நீங்களும் கண்டு களித்தீர்களா? அடுத்த இடத்திற்கு செல்லும் வரை சற்றே ஓய்வு தான்…..:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

Thursday, October 3, 2013

வீட்டுக்கு பின்னே படகு!!! மிகவும் கொடிய மிருகம் எது?


(கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு நாள் – 2)

என்ன நண்பர்களே! எல்லோரும் கொஞ்சம் இளைப்பாறி விட்டு தயாராகி விட்டீர்களா? வாங்க நாம இப்போ தென்னிந்திய கலை மற்றும் பண்பாட்டை விளக்கும் ஒரு இடத்துக்கு போகலாம். போன பகுதியில், நம்ம வல்லிம்மா சொன்ன மாதிரி அந்த இடம் தக்ஷிண் சித்ராதான்.

மிகப்பெரிய இடத்தில் மாநில வாரியாக வீடுகள், அந்த ஊரின் பொருட்களை விற்கும் கடைகள், நடன நிகழ்ச்சிகள் நடைபெற இடம் என சிறப்பாக செய்திருக்கிறார்கள். ரிசப்ஷனில் நம்முடைய நுழைவுச்சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். முதலில் கேரள வீடுகளை பார்க்க ஆரம்பித்தோம். திருவனந்தபுரம், கோழிக்கோடு, கோட்டயம் போன்ற இடங்களில் இருந்த அந்த கால வீடுகளைப் போல் உருவாக்கி அந்த குடும்பத்தினர் பயன்படுத்திய பொருட்களோடு இங்கு வைத்திருக்கிறார்கள். ஓட்டு வீடு, மாடி வீடு, வீட்டுக்குள்ளேயே பரணுக்கு ஏணி போட்டு ஏறுவது போல் சென்றால் அங்கும் பல அறைகள். அவர்களின் பூஜையறை, வரவேற்பறை, அறைக்குள் அறை, சமையலறை, வெப்பத்தை தணிக்க வெட்டிவேர் தொங்கவிட்ட படுக்கைகள் என ஆச்சரியப்படுத்துகின்றன. இதே போல் வீட்டுக்கு பின்னேயே படகை தொங்கவிட்டு வைத்திருக்கிறார்கள்.
அடுத்து தமிழகத்துக்கு சென்றோம். அங்கு திருநெல்வேலி அக்ரஹார வீடு, பாய் முடைபவரின் மண் வீடு, செங்கல்பட்டு குயவர் வீடு, காஞ்சிபுரத்து நெசவாளர் வீடு, தஞ்சாவூர் விவசாயியின் வீடு, செட்டி நாட்டு வீடுகள் எனப் பார்க்க நிறைய வீடுகளும், கோயில் தேர், நெசவு கண்காட்சி, கிராமத்து அய்யனார் என நிறைய இருக்கிறது. அனைத்தையும் ரசித்தபடியே சுற்றி வந்தோம்.

ஒவ்வொரு மாநிலத்தவரின் பொருட்களில் எவ்வளவு ரகங்கள். சமையலறைக்கு சென்று எட்டி பார்த்தால், அகப்பை, பாத்திரங்கள், கரண்டி மாட்டும் ஸ்டாண்டுகள், தேங்காய் துருவி, அஞ்சறைப் பெட்டி, முறம், சொளகு (இது மதுரைக்காரர்களின் முறம்), பானை, குடம் என அழகு வாயந்த பொருட்கள் கண்களைக் கவர்கின்றன. அடுத்தடுத்து ஆந்திர வீடுகளும், கர்நாடக வீடுகளும் பார்த்தோம். இவையிரண்டிலும் இரண்டிரண்டு மாடல்கள் தான் இருந்தன.

கைவினைப்பொருட்களின் கடைகளும், துணியில் சித்திரங்களை ஒருவர் வரைந்து கொண்டிருக்க அங்கு சென்று பார்த்தோம். அடுத்து கண்ணாடியில் அழகான சிற்பங்களை ஒருவர் செய்து காண்பித்தார். பள்ளிச் சிறுமிகள் மாட்டு வண்டியில் சுற்றி வர அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு கிளம்பினோம். இங்கு வந்து விட்டால் அரைநாள் ஓடி விடுகிறது. நிதானமாக பார்க்கலாம். உணவருந்த இங்கு ரெஸ்டாரண்ட்டும், குழந்தைகள் விளையாட இடமும், பூக்களும், வெளிநாட்டவர்களும் என கண்ணுக்கு விருந்து தான்.


நாங்கள் இங்கு நுழையும் போது ஒரு புதுமணத் தம்பதிகளை பூக்களின் நடுவில் வைத்து போட்டோகிராஃபர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் சுற்றிப் பார்த்து விட்டு வெளியே வரும் போதும் அதே நிலை தான்….:))


சரி! அடுத்து நாங்கள் சென்றது முட்டுக்காடு படகு குழாமுக்கு. நீங்களும் வாங்க! உள்ளே செல்லலாம். படகில் சவாரி செய்வதற்கான நமக்கான சீட்டை வாங்கிக் கொண்டு எங்களுக்கான படகுக்கு சென்றோம். நாங்க மூன்று பேர் தான் என்பதால் துடுப்பு படகை என்னவர் தேர்வு செய்தார். மோட்டார் படகை விட இதில் தான் த்ரில்லிங்காக இருக்கும் எனச் சொன்னதால் அதில் சென்று அமர்ந்தோம். அரை மணிப் படகில் சந்தோஷமாக பயணம் செய்தோம். பாலத்திற்கு அடியில் செல்லும் போதும், அங்கிருந்த பறவைகளின் அருகில் செல்லும் போதும் அருமையாக இருந்தது. உற்சாகமான எங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஆளுக்கொரு குல்ஃபியை ருசித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.அடுத்து நாம் செல்லப் போவது ஒரு பண்ணைக்கு…. ஆமாங்க! முதலைப் பண்ணைக்கு தான் சென்றோம். எங்கெங்கு காணினும் முதலைகளும், அதன் குட்டிகளும் தான். ஒருசில ஆமைகளும் இருந்தன. மரங்களடர்ந்த மிகப்பெரிய இடத்தில் பலவகையான முதலைகளையும், அதன் வயது, உணவு, எண்ணிக்கை, அதன் இருப்பிடம் போன்ற தகவல்களோடு பராமரித்து வருகிறார்கள். கடல் முதலை, சதுப்பு நில முதலை, சைமீஸ் முதலை, நைல் முதலை, மலேஷியன் கரியால் என பலவகைப்பட்ட முதலைகள், தண்ணீருக்குள்ளேயும், வெளியேயும், வாயைத் திறந்த நிலையிலும் இருந்தன.

அவைகளை துன்புறத்தக் கூடாது என்பதை விளக்கும் படங்கள் ஆங்காங்கே இருந்தன. நம்மை அவற்றின் நிலையில் வைத்து பார்க்கும் படங்கள் நம்மை நிச்சயம் யோசிக்க வைக்கும். REPTILE HOUSEம் இங்கு இருந்தது. பாம்புகள் சமத்தாக தூங்கிக் கொண்டிருக்கவே பார்த்து வெளியே வந்தோம். இன்னொரு இடத்தில் பாம்பின் விஷத்தை எடுப்பதை காண்பிப்பார்களாம். அதைப் பார்க்கும் அளவுக்கு தைரியம் இல்லாததால் வேண்டாம் என்று வந்து விட்டேன்…..:))


இந்த பண்ணையில் ஓரிடத்தில் ஒரு மரப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதன் மேல் உலகிலேயே அபாயகரமான மிருகம் அதன் உள்ளே இருப்பதாக எழுதி வைக்கப்பட்டிருந்தது. திறந்து பார்த்தால்…… உள்ளே என்ன இருந்திருக்கும் என பின்னூட்டத்தில் சரியாக சொல்பவர்களுக்கு, ஒரு பரிசு காத்திருக்கிறது. என்ன நண்பர்களே சட்டுனு சொல்லுங்க பார்க்கலாம்….:)


அடுத்து நாம புலியை அதன் குகையிலேயே சென்று சந்திக்கப் போகிறோம்…… அது வரை…… என்ன…. சற்றே இளைப்பாறல் தான்….:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.